“பேர் சொல்லாதடி”
“சரி சொல்லல.. ஆனா எனக்கு நீங்க வேணும்” என்றவளை வன்மையாக முத்தமிட்டவன்,
“உனக்கு இல்லாம நான் எங்க போறேன். ஆனா இப்போ வேணான்டி உன் காலை நினைச்சா எனக்கு பீலிங்க்சே வர மாட்டிக்கிது” என்றான்.
“ம்கும்..” நொடித்துக் கொண்டவள்,
“இன்னைக்கு காலையில எல்லோரும் கேட்பாங்களே.. நான் என்ன சொல்ல” அவனிடம் இன்னும் சலுகையாக முரண்டு பிடித்தாள்.
“கால் வலின்னு சொல்லு”
“அதெல்லாம் சொல்ல முடியாது..” என்றவள், “எங்காவது கடத்திட்டு போயிடட்டுமா?” அவனிடம் கேட்டாள். அதை கேட்டு முறைத்தவன்,
“நான் இங்க இருந்தா நீ சுத்தப்பட மாட்ட.. நான் போய் என் அம்மாவையும் உன் அம்மாவையும் அனுப்பி வைக்கிறேன்” என்று அவளிடம் இருந்தது எழுந்துக் கொண்டு உடை மாற்றி கீழே போய் விட்டான்.
“அடப்பாவி” நொந்துக் கொண்டவளுக்கு கால் வலி உயிர் போனது. கதிரவன் போன வேகத்திலே அவளுக்கு குடிக்க தேனீர் எடுத்துக் கொண்டு வந்தவன் அவளிடம் குடிக்க குடித்து விட்டு, கூடவே வேலையாள் எடுத்து வந்த சுடுநீரை துணியில் நனைத்து அவளின் காலுக்கு ஒத்தடம் வைக்க ஆரம்பித்து விட்டான்.
வீட்டில் இருந்த அத்தனை பேரும் ஆவென்று பார்த்தார்கள். பின்ன முதன் முதலில் கல்யாணம் ஆகி அடுத்த நாள் காலையில் பொண்ணு தான் கீழே இறங்கி வரும். இங்கே கதிரவன் இறங்கி வந்து அவளுக்கு தேநீர் எடுத்துட்டுப் போகவும் அதிர்ந்து போய் பார்த்தார்கள்.
அவன் யாரையும் சட்டை செய்யாமல், மேலே போய் விட்டான். அவன் போன சிறிது நேரம் கழித்தே ரேவதியும் காமாட்சியும் வந்தார்கள்.
“கொஞ்சம் கூட உடம்புல ஸ்ட்ரெந்தே இல்லடி.. இப்படி இருந்தா எப்படி.. ஒழுங்கா சாப்பிடுறதே இல்ல.. நேத்திக்கு என்னவோ அணில் கொறிக்கிற மாதிரி கொறிச்சுக்கிட்டு இருக்க” திட்டிக் கொண்டே கதிரவன் அவளின் காலுக்கு பதமாக ஒத்தடம் கொடுத்தான்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம் அம்மாச்சி ஏதாவது கை வைத்தியம் பண்ணுவாங்க..” சிணுங்கினாள்.
“கொன்னுடுவேன்டி உன்னை”
“அம்மாச்சி அம்மா பாருங்கா இவரை.. சும்மா கால் வலிக்கிதுன்னு சொன்னதுக்கு இந்த அக்கப்போரு பண்றாரு” கதிரவனை கம்ப்ளைன்ட் பண்ணினாள்.
“என்ன கண்ணு இப்படி வீங்கி போய் இருக்கு” காமாட்சி அதிர்ந்துப் போனார். ரேவதிக்கு கண்கள் கலங்கிக்கொண்டு வந்தது.
“நேத்திக்கே சொல்லி இருந்து இருக்கலாம் இல்லையா பாப்பா” ஆதங்கத்துடன் கேட்ட ரேவதி, காமாட்சியை பார்த்து ஆறுதலாக சிரித்தவள்,
“வலி இல்ல வீக்கம் மட்டும் தான்” என்று சொல்ல, அவர்கள் சமாதானமே ஆகவில்லை.
“கதிரவா” என்று இருவரும் ஒரு சேர அழைக்க,
“டாக்டரை வர சொல்லிட்டேன்.. முதல் முறையா ரெண்டு பேரும் ஒண்ணா டாக்டர் கிட்ட போக வேணான்னு யோசிச்சேன்” என்ற பிறகே அம்மா மகள் இருவருக்கும் நிம்மதியாக இருந்தது. அவர்களும் இதை பற்றி தான் யோசித்தார்கள். பேத்திக்கு முகம் சுறுங்கிப் போனது.
“ம்கும்.. இதுல மட்டும் தான் அக்கறை” யாருக்கும் தெரியாமல் கதிரவனை முறைத்தாள். அதன் பிறகு மருத்துவர் வந்து க்ரீம் குடுத்து மசாஜ் செய்ய சொல்லி விட்டு போனார்.
காலையில் இருந்து அவளை கீழே காலை ஊன்றவிடவே இல்லை. படி ஏற முடியாத விசாலம் கூட வந்து அவளை பார்த்து விட்டு நலம் விசாரித்து விட்டு போனார்.
அடுத்த நாளே கால் குணமானது. ரேவதியும் சேகரனும் மறு வீட்டு விருந்துக்கு அழைக்க, துளசி கோபாலோடு இவர்களும் சென்றார்கள்.
சதாசிவம் வீட்டில் தான் விருந்து நடக்கணும் என்று முடிவாக கதிரவன் சொல்லி விட, அதே போல அங்கயே விருந்து ஏற்பாடு செய்தார் சேகரன்.
விருந்து முடித்து ஒரு நாள் அங்கு தங்கியவன் பிறகு தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் அக்கா வீட்டுக்கு வந்து விட்டான் தன் மனைவியோடும் மனைவியின் குடும்பத்தோடும்.
அங்கு இருந்த வரை சதாசிவத்தை நொண்டி நொங்கு எடுத்து விட்டான். அதன் பிறகே அவனுக்கு நிம்மதியானது போலும்.
அக்கா வீட்டில் மறுபடியும் விருந்து தடாபுடாளாக ரெடியானது. மாதவனையும் வரவைத்துக் கொண்டான்.
அன்றிரவு பெண்கள் எல்லோரும் கீழே இருக்க நான்கு ஆண்களும் மேலே மொட்டை மாடியில் தஞ்சம் ஆனார்கள்.
“மச்சான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்டா” என்றார் சேகரன்.
“இருக்கணும்ல.. பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. இனி என்ன கவலை” மாதவன் வாயை விட, அவனை முறைத்துப் பார்த்த சேகரன், அவனின் தலையிலே நங்கென்று கொட்டினார்.
“வாயை திறந்த கொன்னுடுவேன் உன்னை” மிரட்டினார். அதில் கப் சிப் என்று வாயில் கைவைத்து அமைதியாகி விட்டான்.
“தேவையா இது” என்று கோபால் சிரிக்க,
“தேவை தான்.. இந்த தவளை தன் வாயாலே கெடும்னு கேள்வி பட்டு இருக்கீங்கல்ல அதுக்கு நல்ல உதாரணம் நான் தான்” என்றான் வெம்பி போய். அதில் இன்னும் சிரித்தான் கோபால்.
“மச்சான்” என்று சேகரன் ராகம் போட ஆரம்பிக்க,
“மாமா நீங்க இன்னும் சரக்கே அடிக்கல.. அதுக்குள்ள அலம்ப ஆரம்பிச்சுட்டீங்க” மீண்டும் அவன் வாயை விட, இந்த முறை அவனை குனிய வைத்து மொத்து விட்டார் சேகரன்.
கலைந்த தலையுடன் கிழிந்த சட்டையுடன் ஓரமாக அமர்ந்து விட்டான் மாதவன். கதிரவனுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்து விட்டது.
“சிரிங்க எசமான்.. நீங்க இன்னும் சிரிங்க.. பல்லு தெரியிற மாதிரி சிரிங்க, வயிறு வலிக்க சிரிங்க” என்றவனை கண்களை உறுட்டி பார்த்தார் சேகரன்.
“நான் செத்துட்டேன்” என்று கண்களை மூடி கழுத்தை பட்டென்று சாய்த்துக் கொண்டான்.
“அது” என்று மிரட்டியவர்,
“கதிரவா” என்றார்.
“அப்பாவுக்கும் மகளுக்கும் நான் கதிரவா தானா” தனக்குள் சிரித்துக் கொண்டான் கதிரவன்.
“ஹேப்பியா இருக்கேன் மச்சான்.. தூக்கி சுமக்கவே முடியாத என் நெடுங்கால பாரத்தை இறக்கி வச்கிட்டடா” என்று அவர் சொல்ல, மௌனமாக கேட்டுக் கொண்டு இருந்தான். ஏன்னே தெரியாது சேகரனின் மீது அவ்வளவு மதிப்பும் மரியாதையும் அவனுக்கு உண்டு.
சிறுவயதில் எல்லோரும் அவரை போட்டு பாடாய்ப்படுத்தி எடுத்து, நிம்மதிக்காக ஓடி கொண்டு இருந்தவரை கண்டவனுக்குள் பச்ச தாபம் எழும். துணையாய் நிற்க வேண்டிய உறவுகள் எல்லாம் அவரை விட்டு போய் நின்ற காலத்தில் “மாமா” என்று அவரின் கையை பிடித்துக் கொண்டவன் தான் கதிரவன்.
இதோ இப்பொழுது வரை அந்த கையை அவன் விடவே இல்லை. இனி விடவும் மாட்டான். என்ன மிஞ்சி போனா அவனை விட அவருக்கு ஐந்து வயது இல்லன்னா ஆறு வயது தான் வித்யாசம். ரேவதியை பெயர் சொல்லி அழைப்பவன் ஏனோ இவரை மட்டும் மாமா என்ற சொல்லுக்கு மறு சொல்லு சொல்ல மாட்டான்.
ரேவதியை கேடயமாய் காத்து நின்ற பாங்கா என்ன என்று தெரியவில்லை. சேகரன் என்றாலே அவனுக்கு உள்ளுக்குள் பொங்கும். அவர் மனம் விட்டு பேசுவதை காது நிறைய மனம் நிறைய கேட்பான்.
இதோ இப்பொழுதும் அவர் பேச ஆரம்பிக்க அவன் கவன சிதறல் இல்லாமல் முழுமையாக கேட்க ஆரம்பித்தான்.
“என் நெஞ்சு நிறைஞ்சு போய் கிடைக்கு மச்சான்.. ரொ...ம்ப காலமா எரிஞ்சுக்கிட்டு இருந்த என் நெஞ்சு இன்னைக்கு குளிர்ந்து போய் கிடக்குன்னா அதுக்கு காராணம் நீ மட்டும் தான் ய்யா..” அவர் பேச பேச அவரின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.
மாதவனும் சரி கோபாலும் சரி அவர்களுக்கு இடையில் இடைப்புகவே இல்லை. அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தார்கள். ஏனெனில் அவரின் மனக்காயங்களை இருவருமே அறிந்து இருந்தார்கள். துளசி கோபாலிடம் சொல்லி இருக்க, சேகரனின் மீது மதிப்பும் மரியாதையும் கூடியது. அதோடு கதிரவனின் மீது அத்தனை அன்பும் மரியாதையும் பெருகியது.
சேகரன் தன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி கவிழ்த்தார். “உன் கிட்ட நான் கோரிக்கையா கூட கேட்டது இல்ல.. என் மகளை கண்டு பிடிச்சு குடுன்னு.. ஆனா நீ கண்டு பிடிச்சு குடுத்ததோட இல்லாம அவளுக்கு உரிய அங்கீகாரத்தை வாங்கி குடுத்து, உன்னோட மனைவியாவும் ஆக்கிக்கிட்ட.. உன்னை போல மச்சான் யாருக்கு கிடைக்கும்.. நீ என் படை தளபதிடா” என்றவர்,
“தப்பு தப்பு.. நீ என்னோட மருமகன்.. எனக்கு மச்சான்.. என் பேரப்பிள்ளைகளோட அப்பா” அவர் அடுக்கிக் கொண்டே போக, கீழே இருந்து கேட்டுக் கொண்டு இருந்த ரேவதிக்கும் அத்தனை நெகிழ்வு தன் தம்பியின் மீது. மகளை தன்னோடு இறுக்கமாக சேர்த்து அணைத்துக் கொண்டார். துளசியும் அவர்களோடு இணைந்துக் கொண்டாள் நெகிழ்ந்த மனதுடன்.





