Notifications
Clear all

அத்தியாயம் 72

 
Admin
(@ramya-devi)
Member Admin

அடுத்து வந்த நாட்கள் அனைத்தும் றெக்கைக் கட்டிக் கொண்டு வெகு விரைவாக ஓடியது. தங்களுக்கு திருமண நாள் பார்த்ததை கதிரவன் வீட்டில் சொல்ல பொன்னனுக்கு பெரும் வேதனையாகிப் போனது.

இதை எல்லாம் பார்த்து செய்ய வேண்டியது பெற்றவர்களான என் கடமை தானே. அதை கூட என்னை செய்ய விட மாட்டானா உள்ளுக்குள் ஆதங்கப் பட்டு போனார். தாத்தாவுக்கும் அதே அளவு வேதனை எழுந்தது. ஆனால் அவனிடம் கேள்வி கேட்கும் அளவுக்கு தங்களின் நடத்தை இல்லையே என்று அமைதி காத்தார்கள்.

தேவனுக்கு மிகவும் மகிழ்ச்சி.

“அப்படியா தம்பி... ரொம்ப மகிழ்ச்சி.. என்ன செய்யணும்னு சொல்லு நான் செய்யிறேன்” என்றார் மனப்பூர்வமாக.

“சரிங்க சித்தப்பா” என்று மட்டும் சொன்னவன், ரேவதி சேகரன் புறம் திரும்பி,

“கல்யாணத்துக்கு முன்னாடி நிலாவுக்கு தட்டு சுத்தணும்” என்றான்.

“பாரேன் நானே மறந்துட்டேன்.. அய்யா சொல்றது சரி தான். முதல்ல நம்ம நிலாவுக்கு தட்டு சுத்திட்டு அதுக்கு பிறகு உறுதி பண்ற நிகழ்ச்சி வச்சு, முகூர்த்த கால் ஊனலாம்” விசாலம் சொல்ல, அதன் படியே எல்லா நிகழ்ச்சியும் நடந்தேறியது.

ஊர் மெச்ச தன் அக்கா மகளுக்கு சீர் வரிசை தட்டுகளை அடுக்கினான். பட்டு புடவை தட்டு மட்டும் ஐந்து. நகைகள் மட்டும் ஒரு பெரிய தட்டு முழுதுமாக வைத்தான். அதன் பிறகு பூ, மாலை, பழங்கள், தேங்காய், பலகாரம் என அத்தனையும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போனார்கள் உறவினர்கள்.

எல்லாம் சேர்த்து நூறு தட்டுக்கு மேல் இருக்கும். அது போதாது என்று அவளுக்கு அவள் விரும்பிய கருப்பு நிற ஜீப், அவளின் பெயரில் ஐந்து ட்ரவல்ஸ் பஸ், இரண்டு லோக்கல் பஸ் என குடுத்தான் கதிரவனின் கம்பெனி பெயரிலே.

ரேவதிக்கே ஆவென்று போனது.

“இருந்தாலும் உன்னை விட உன் மவ மேல தான் உன் தம்பிக்கு பாசம் அதிகம் போல” என்று நக்கல் பண்ணினார் சேகரன்.

“பரவாயில்ல இருந்துட்டு போகட்டும்.. எனக்கு ஒன்னும் பொறாமை இல்லை.. ஆனா பாவம் உங்க மூஞ்சில தான் பொறாமை தாண்டவம் ஆடுது...” நொடித்துக் கொண்டவருக்கு அத்தனை மகிழ்ச்சி. அதை கேட்ட சேகரனுக்கும் சிரிப்பு தான் வந்தது.

லோக்கல் சேனலில் இருந்தது மட்டும் அல்லாது பெரிய சேனலில் இருந்து கூட ஆட்கள் வந்து சீர் வரிசை பொருட்களையும் கூட்டத்தையும் படம் பிடித்துக் கொண்டு சென்றார்கள்.

தாய் மாமன் சீராக குடுத்த புடவை, நகைகளை அணிந்துக் கொண்டு வந்து மனையில் அமரவைக்கப் பட்டாள் பனிநிலா. பரிபூரண நிலாவாக அவள் அத்தனை அழகாக ஜொலித்தாள்.

லைட் மேக்கப், ஜுவெல்ஸ், பட்டு சேரி, மல்லிப்பபூ சரத்தில் மூச்சடைக்க வைத்தாள் கதிரவன். அத்தனை பேரின் மத்தியிலும் தன்னை அடக்கிக் கொண்டு தாய் மாமனாய் அவளின் கன்னத்தை தொட்டு சந்தனம் குங்குமம் என நலுங்கு வைத்து அவளின் கழுத்தில் உரிமையாக மாலை போட்டான்..

மாலையோடு தன் கழுத்தில் எப்பொழுதும் அணிந்து இருக்கும் ஐந்து பவுன் சங்கிலியை அவளின் கழுத்தில் அத்தனை பேரின் முன்னிலையிலும் பரிசம் போட்டு விட்டான்.

“ஐயோ இந்த கதிரவன் என்னை கொல்லாம கொன்னுட்டு இருக்காரு.. மனுசனா அவரு எல்லாம்.. ப்பா நேசத்துனால மூச்சு அடைக்க வச்சிடுறாரு.. கடவுளே.. இவ்வளவு முரட்டு தனமா அன்பு வச்சா என் நிலை என்னத்துக்கு ஆகும்...” என்று உள்ளுக்குள் அத்தனை உணர்வுகள் அவனின் மீது பொங்கி பெருகியது.

இதற்கு முன்பு எத்தனையோ நகைகளை வாங்கி குடுத்து இருக்கிறான் தான். ஆனால் இந்த கழுத்து சங்கிலி குடுத்த பீல் அந்த நகைகளை அணியும் பொழுது அவளுக்கு வந்து இருக்கவில்லை.

அத்தனை பேரின் முன்னிலையிலும் எங்கே அவனை கட்டிக் கொண்டு விடுவோமோ என்று பயந்துப் போனாள்.

அதை யாருமே எதிர் பார்க்கவில்லை. கதிரவனின் இந்த செயலில் ரேவதி, துளசி, மாதவன், சேகரன், மகா, மனு மற்றும் கோபால், அல்லி எல்லோரும் ஹோ வென்று கத்தி கூச்சல் போட்டு தங்களின் மகிழ்ச்சியை வானம் முட்ட காட்டினார்கள்.

காமாட்சிக்கு கண்கள் எல்லாம் கலங்கிக் கொண்டு வந்தது. அவரின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டார் பொன்னன்.

அவரை நிமிர்ந்து பார்த்தார் காமாட்சி. “பிள்ளைங்க இதே மகிழ்ச்சியோட என்னைக்கும் இருக்கணும் வேண்டிக்க.. நம்ம கண்ணே பட்டுடும் போல” என்றார் நெகிழ்வுடன்.

பட்டென்று தன் மன பாரம் அதில் நீங்கியவராய் அவரின் தோளில் சாய்ந்துக் கொண்டார் காமாட்சி. அதை எதிர் பாராத பொன்னன் முதலில் திகைத்துப் போனாலும் பின் பட்டென்று அவரின் தோளோடு கைப் போட்டு தன் தோளில் சாய்த்துக் கொண்டார்.

தேவன் அதை பார்த்து மனம் நிறைந்தவர் சிரிப்புடன் மேடையை பார்த்தார். கலா தான் அந்த காட்சியை பார்த்து ஏங்கிப் போனார். தேவன் அவரை கண்டுக் கொள்ளவே இல்லை.

மங்கைக்கு வயிறோடு மொத்த உடலும் பற்றி எரிந்து. “காலம் போன கடைசியில இதெல்லாம் தேவையா? இதெல்லாம் வேணும்னு யார் அழுதா? காசு இருந்தா என்ன வேணாலும் செய்யலாமா? ரொம்ப தான் ஆடிட்டு இருக்குங்க. என்னைக்கு அடங்கப் போகுதுங்களோ..” தன் வயிற்றெரிச்சலை கொட்டினார். ஆனால் அதை காது குடுத்து கேட்க தான் கலாவை தவிர ஆளில்லை.

சேகரனின் அப்பா சதாசிவத்துக்கு இந்த காட்சியை எல்லாம் பார்க்க பார்க்க பீப்பி அதிகரித்துக் கொண்டே இருந்தது. யாருக்கும் தெரியாமல் சேகரன் அவரின் கையில் பீப்பி மாத்திரயை கொடுத்து விட்டு நக்கலாக சிரித்து விட்டு சென்றார்.

அதை தூக்கி எறிந்தவர் மண்டபத்தை விட்டு வெளியே போக பார்க்க,

“சாரி சார் உங்களுக்கு மட்டும் வெளியே போக அனுமதி இல்லை.. இந்த பங்க்ஷன் முடியிற வரை நீங்க இருந்து பார்த்துட்டு தான் போகணுமாம். இது எங்க கதிரவன் சாரோட கட்டளை” என்று அவருக்காகவே போட்டு இருந்த  காட்ஸ் நால்வரும் அவரை சிறை செய்து மண்டபத்தில் விட்டார்கள். வேறு வழியில்லாது அத்தனை கொட்டத்தையும் அவர் பார்த்தார் விழி எடுக்காது.

இந்த நிகழ்ச்சி மட்டும் இல்லாது அதன் பிறகு வந்த அத்தனை நிகழ்ச்சிக்கும் அவரை கண்காணித்து தப்பித்து போக முடியாத அளவுக்கு காட்ஸ் போட்டு விட்டான் கதிரவன். கிட்டத்தட்ட சிறை செய்தது போல தான்.

இந்த நிகழ்ச்சி இனிதாக முடிய அடுத்த வாரத்திலே நிச்சியத்தை வைத்து விட்டான். அதை கொஞ்சம் சிம்பிளாக செய்தவன், கல்யாணத்தை எவ்வளவு ஆடம்பரமாக செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு ஆடம்பரமாக செய்தான்.

தன் அக்கா மகளுக்கு மறுத்த அத்தனையையும் பல மடங்காக திருப்பிக் கொடுத்தான். நிச்சையத்தை சதாசிவம் வீட்டில் தான் நடக்கணும் என்று உறுதியாக சொன்னவன் அதே போல அங்கேயே நடத்தியும் காட்டினான்.

“நீ என்னை ரொம்ப சீண்டி விடுறடா” என்றார் பல்லைக் கடித்தார்.

“நீர் செஞ்ச தப்புக்கு பரிகாரம்னு கம்முன்னு கிட” நக்கலாக சொன்ன கதிரவன், சேகரனின் மூலம் தான் நினைத்தை அத்தனையையும் நடத்திக் கொண்டான்.

சேகரனும் ரேவதியும் நீண்ட வருடங்களுக்கு பிறகு அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தார்கள். இந்த முறை அத்தனை கம்பீரத்துடன் யாரும் துரத்தி அடிக்கா வகையில் தங்களின் உயரத்தை வளர்த்துக் கொண்டு கம்பீரமாக உள்ளே வந்தார்கள்.

Loading spinner

Quote
Topic starter Posted : July 19, 2026 11:16 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top