Notifications
Clear all

அத்தியாயம் 74

 
Admin
(@ramya-devi)
Member Admin

“பேட்லி மிஸ் யூ கதிரவா” என்றாள் அவளின் விழிகள் கலங்கிப் போனது.

“ப்ச் கண்ணம்மா என்ன இதெல்லாம்.. நான் இங்க உன் கூட தானே இருக்க போறேன்.. ஜஸ்ட் ஒன் வீக்.. அப்புறம் முழுக்க முழுக்க நீ என் கூட தான். எனக்கு மட்டும் உன்னை விட்டு பிரிஞ்சு இருக்குறதுல வேதனை இல்லையா? ஆனா உனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கணும் இல்லையா? இப்ப நீ அந்த வீட்டுல இருக்குறது தான் சரி. ஏன்னா இனிமே உனக்கு நிரந்தரம் நம்ம வீடு தான். சோ அதுக்கு பிறகு போயெல்லாம் அங்க இருக்க நான் விட மாட்டேன்..” என்றான்.

“புரியுது மாமா.. ஆனா உங்க கூடவே இருந்து பழகிட்டனா அது தான்..” என்றவள் பின் தன்னை தேற்றி சிரித்து,

“கல்யாணத்துக்கு நான் கேட்ட வைர கிளிப் வந்திடுச்சா?” கேட்டாள்.

“நீ கேட்டு நான் வாங்காம இருப்பனா? ரெடி” என்றவன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு பாக்சை எடுத்து அவளிடம் நீட்டினான். அதை வாங்கிப் பார்த்தவள், லைட் ப்ளூ கலரில் அவளின் புடவை டிசைனிலே அந்த ஹேர் க்ளிப்பும் இருந்தது. கண்ணை பறித்தது அதில் இருக்கும் வெளிச்சம்.

“வாவ் சூப்பர் மாமா” என்று சொன்னவள்,

அவனின் கையை பிடித்து தன் கையில் இருந்த வாட்சை கட்டி விட்டாள்.

“ஹேய் இது எப்ப வாங்குன?” கேட்டான் வியந்து போய்.

“அப்பா அம்மா பைசா குடுத்தாங்க என் செலவுக்கு. அதுல வாங்குனேன்.. நல்லா இருக்கா.. உங்களுக்கு பிடிச்சு இருக்கா?” என்று ஆர்வமாக கேட்டாள்.

“சூப்பர்டி” என்றவனுக்கு தெரிந்து இருந்தது அந்த கடிகாராம் மட்டும் ஐம்பது லட்சம் இருக்கும் என்று. விலையா முக்கியம் குடுக்கும் மனசு தானே..

இதோ அதோ என்று கல்யாண நாள் வந்தது. அவள் விரும்பிய வடிவத்தில் வண்ணத்தில் முகூர்த்த சேலை அமைந்தது. அதை கதிரவனே தாய்மாமன் முறையில் மாலை போட்டு போட்டு வைத்து எடுத்து குடுத்தான்.

அவனது கையில் காதலுடன் வாங்கி கட்டிக் கொண்டு வந்தாள் பெண்ணவள் மணமேடைக்கு. கதிரவனுக்கு காமாட்சியின் அண்ணன் மாலை போட்டு முகூர்த்த துணி குடுக்க இவனும் அணிந்துக் கொண்டு வந்து மணமேடையில் வந்து அமர்ந்தான்.

மாப்பிள்ளை வந்த பிறகு தான் பொண்ணு வந்தாள் சர்வ அலங்காரத்துடன். மந்திரங்கள் ஓத, முறைப்படி எல்லா சடங்குகளும் செய்து அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வரப்பட்ட தாலியை எடுத்து பனிநிலவின் கண்களை பார்த்துக் கொண்டே கட்டினான் கதிரவன்.

இருவரின் நெஞ்சமும் பூரித்துப் போய் கிடந்தது. அவர்களுக்கு மட்டுமா சுற்றி இருந்த அத்தனை பேருக்கும் அல்லவா மனம் பூரித்துப் போய் இருந்தது.

பிறந்த உடனே தாத்தாவின் வெஞ்சினத்தால் அவமானத்தால் அனாதை ஆக்கப்பட்டு ஹோமில் சேர்த்து எங்கோ ஒரு மூலையில் யார் என்றே தெரியாமல் வளர்ந்து இருந்தவளை தேடி கண்டு பிடித்து, அவளின் பெற்றவர்களோடு சேர்த்து வைத்து, ஊரு உலகத்துக்கு அறிமுகம் செய்து, யாரால் வஞ்சிக்கப் பட்டாளோ அந்த சதாசிவத்தையே பேத்தியாக ஏற்றுக் கொள்ளும்படி செய்து, ஊர் மெச்ச அவளுக்கு தாய்மாமனாய் சீர்வரிசை செய்து, அவளின் மனதை கொள்ளியிட்டு உரிய காதலனாய் அவளை பெண் கேட்டு இதோ கல்யாணமும் செய்துக் கொண்டான் கதிரவன்.

கதிரவனின் ஒட்டு மொத்த தேடலுக்கு உரியவள் இந்த தொலைந்து போன பனிநிலவு பெண். அரும்பாடு பட்டு, தேடாத இடமெல்லாம் தேடி அலைந்து, இருபத்தி இரண்டு வருட தேடலின் இறுதியில் கண்டு பிடித்து, அவளின் மனதை மாற்றி, தன் காதலை ஏற்க வைத்து, பெற்றவர்களை ஏற்க வைத்து, இதோ இறுதியாக தன்னை அவளின் இதய சிம்மாசனத்தில் மிக அழுத்தமாக அமர வைத்து விட்டான்.

தனக்காக அவன் செய்த ஒவ்வொரு செயலிலும் கரைக்காணாத அன்பை பார்த்த பெண்ணவளுக்குள் தான் எத்தனை ஆர்பரிப்பு.. எத்தனை நேசம், எத்தனை காதல்.. எத்தனை அன்பு..

மூச்சு முட்ட வைக்கும் அவனின் அன்பை விடுத்து அவளால் இனி ஒரு நொடி கூட வாழ முடியாது. என்றைக்கோ பனிநிலவு கதிரவனின் முழு நிலவாக மாறிவிட்டாள். பனியின் மனதில் மொத்தமும் கதிரவன் மட்டும் தான் நிறைந்து இருக்கிறான். அதை ஆசையுடன் அவனிடம் அவள் வெளிப்படுத்தவும் தயங்கவில்லை. அவனுக்கு ஈடான காதலை பெண்ணவளும் கொண்டு இருக்கிறாளே..

தாலி கட்டி முடித்த அடுத்த நிமிடம் தன் மரியாதை கெளரவம் என எல்லாவற்றையும் ஓரம் கட்டி விட்டு பனியின் முகத்தை தன் பக்கம் திருப்பி அவளின் நெற்றியில் மிக அழுத்தமாக முத்தம் வைத்தான் கதிரவன்.

அவனின் நெற்றி முத்தத்தில் ஒரு கணம் திகைத்துப் போனது அந்த மண்டபமே.. பின் சுதாரித்து  எல்லோருமே ஹோ என்று சத்தம் குடுக்க பெண்ணவளின் முகத்தில் அத்தனை வெட்கம் மலர்ந்தது நொடியில்.

கதிரவன் கொஞ்சமும் அசடு வழியாமல் நிமிர்வாகவே இருந்தான். இது என்னோட உரிமை என்ற எண்ணம் போலும்.

கலா மக்களுக்கு இது கதிரவன் தானா என்று ஆச்சரியப்பட்டார்கள். அதோடு அவனுக்காக ஒன்று திரண்டு இருந்த ஊர் மக்களை, பெரும் கட்சி ஆளுங்களை, பிசினெஸ் ஆட்களை கண்டு வாயை பிளந்தார்கள்.

துளசி கல்யாணத்துலையே இவ்வளவு கூட்டம் கூடியதை பார்த்தார்கள் தான். ஆனால் கதிரவனின் வட்டம் அதை விட பெரியது அன்றோ. அவனுக்காகவே அத்தனை பேரும் ஒன்று திரண்டு இருந்தார்கள்.

மண்டபமே கொள்ளாமல் பிதுங்கி நின்றது மக்கள் கூட்டத்தால். ஊரில் இருக்கும் அத்தனை பேரின் பேச்சும் கதிரவன் பனிநிலவு கல்யாணத்தை பற்றியதாக தான் இருந்தது. 

“இனி இது போல யாரும் கல்யாணம் செய்ய மாட்டாங்க.. அப்படியே செஞ்சாலும் அது இவங்க பிள்ளைகளோட கல்யாணமா தான் இருக்கும்..” என்ற பேச்சை கேட்டு மங்கையும் கலாவும், கலாவின் பிள்ளைகளும் நெஞ்சு எரிந்துப் போனார்கள்.

சூட்டோடு சூட்டாக கலா மங்கையிடம் தன் மகனுக்கு பொண்ணு கேட்க,

“அது சரி வராது கலா.. நான் வெளியே பார்க்கலாம்னு இருக்கேன்” என்று முடித்துக் கொண்டார். கலாவுக்கு அதில் பெரும் வருத்தம். ஆனால் என்ன செய்வது எல்லோர் நினைப்பதும் நடந்து விடாதே..

யார் யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது தான் கிடைக்கும். ஊர் மரியாதை, கெளரவம், தொழில் துறை, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் கதிரவனுக்கு குடுத்த மரியாதையை பார்த்து இனியவனுக்கு முதல் முறையாக பரம்பரை தோளில் மீது ஆசை வந்தது.

அதுவும் பேராசை வந்தது. ஆனால் அதை சரியாக நடத்த அவனுக்கு திறமை இல்லையே.. எனவே தேவனே உனக்கு இந்த தோளில் சரிவராது என்று சென்னைக்கு அனுப்பி வைத்து விட்டார். கலா இந்த விசயத்தில் தேவனுடன் சண்டை போட்டார்.

ஆனால் தேவனோ ரொம்ப தெளிவாக,

“உன் மகன் வெறும் கிணத்து தவளை.. தொழிலை பற்றிய எந்த அறிவும் கிடையாது.. அவனை நம்பி எங்க பரம்பரை தொழிலை எல்லாம் குடுக்க முடியாது.. அரியணை ஏற ஆசை இருக்குன்றதுக்காக அப்படியே தூக்கி குடுத்துட முடியாது.. இதெல்லாம் இரத்தத்துல ஊறி வரணும்..” முடித்துக் கொண்டார். அதில் இன்னும் கலாவுக்கு வயிறும் மனதும் வெந்துப்போனது.

சதாசிவம் வீட்டுக்கு தான் பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிச் சென்று பால் பழம் குடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். இதெல்லாம் கதிரவனின் சொல் படி தான் நடந்தது.

சேகரன் கூட இதுக்கு மேல அங்க எதுவும் வேணாமே மச்சான். என்றான்.. ஆனால் கதிரவன் விடாபிடியாக அங்க போய் பனிநிலவை விளக்கேற்ற சொல்லி உடன் இருந்து சாமி கும்பிட்டு விட்டு, பால் பழம் சாப்பிட்டு விட்டு தான் கிளம்பினான்.

“உன் புருசனுக்கு ரொம்ப பிடிவாதம் பாப்பா” என்றார் சேகரன்.

“நீங்க தானே வளர்த்தீங்க ப்பா” என்று நமட்டு சிரிப்பு சிரிக்க,

“அதை சொல்லு” என்று நொந்துக் கொண்டவரின் முகம் பிரகாசமாய் இருந்தது. அது பெருமிதம் அல்லவா.. நான் வளர்த்த பிள்ளை.. என்னை பெருமை பட வைக்கிறதே..

Loading spinner

Quote
Topic starter Posted : July 19, 2026 11:19 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top