கதிரவன்னு பனி பெயர் சொல்லி அழைத்தது கதிரவனுக்கு ஒரு பெரிய விசயம் இல்லாதது போல அவனது அடுத்து வந்த கேள்வி இருந்தது.
“என்ன பேசணும்?” என்று கேட்டான்.
“இத்தனை பேரையும் வச்சுக்கிட்டு தான் கேட்பதா?” விழிகளாலே அவனிடம் அவள் கேட்டாள். அதுவும் அவளின் அடி பார்வையில் லேசாக முறைப்பு இருப்பதை பார்த்த கதிரவனுக்கு சிரிப்பில் உதடுகள் மெல்ல விரியும் போல இருந்தது.
“கண்ணுலையே முறைக்கிறா?” தனக்குள் சொல்லிக் கொண்டான்.
“என்ன பனி என் தம்பியை கண்ணுலையே முறைக்கிற?” அவளின் காதுக்கு அருகில் வந்து கேட்ட ரேவதியின் கேள்வியில் தூக்கி வாரிப்போட்டது.
“அய்யோ அது அப்படி இல்ல.. சும்மா தான் பார்த்தேன். நான் முறைக்கலாம் செய்யல” தட்டு தடுமாறினாள். ஏற்கனவே எல்லோரின் பார்வையும் அவளின் மீது தான். இதில் ரேவதி வேறு இப்படி சொல்லவும் உண்மைக்கும் வெலவெலத்துப் போனாள்.
“பரவாயில்ல.. என் தம்பியை அடக்க கூட ஒரு ஆளு இருக்கு பாரேன்” என்று அவர் மேலும் சிலாகிக்க,
‘இங்க என்ன நடந்துக்கிட்டு இருக்கு. இவங்க என்ன பேசிட்டு இருக்காங்க பாரேன்.. குடும்ப மொத்தமும் இப்படி தான் போல’ மனதுக்குள் புலம்பிக் கொண்டவள்,
கெஞ்சலாய் ரேவதியை பார்த்தாள்.
“சரி சரி நீ நடத்து..” என்று ஒதுங்கிக் கொண்டார். அதன் பிறகே இவளுக்கு இயல்பாக மூச்சு வந்தது.
“உன் கிட்ட தான் பேசுறேன் பனி.. என்ன பேசணும் எதை பத்தி பேசணும்” என்றான் கால் மேல் கால் போட்டு. அவனுக்கு எதிரில் தான் நின்று இருந்தாள் பனி. அவனின் ஆட்டிட்யூடில் ஏகத்துக்கும் கடுப்பு வந்தது.
“எப்படி எல்லாம் பிகேவ் பண்றாரு பாரேன்.. இந்த மனுசனுக்கு ஆனாலும் இவ்வளவு அழுத்தம் ஆகாது.. இவருக்கே இவ்வளவு ஏத்தம் இருந்தா எனக்கும் மட்டும் என்ன குறைவா இருக்கு” பல்லைக் கடித்தவள்,
‘தனியா பேச வர சொன்னா வராம சபையில இழுத்து வச்சு பேசுறீங்கல்ல அப்போ அனுபவிங்க’ எண்ணியவள்,
“நான் இருக்க போய் தானே.. துளசி கல்யாணத்துல இவ்வளவு பிரச்சனை.. நான் ஊருக்கு கிளம்புறேன்” என்றாள் அவனை அழுத்தமாக பார்த்து.
“வேற ட்ரை பண்ணு” என்றான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத குரலில்.
“வாட்..?” என்றவள், “நான் ஊருக்கு போறேன்னு சொன்னேன்” என்றாள் முன்பை விட அழுத்தமாக.
“நான் தான் வேற ட்ரை பண்ணுன்னு சொல்றேன்ல” இந்த முறை அவன் சொற்களில் அழுத்தம் குடுத்து சொல்ல, விக்கித்துப் போனாள்.
“என்னை அனுப்பி விடுங்க.. நான் கிளம்புறேன்” என்றாள் பிடிவாதமாய்.
“அப்படியா?” என்று அவளை அடிக்கண்களால் அழுத்தமாய் பார்த்தவன், பட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து அவளிடம் வந்தவன், அவளின் காதில்,
“நீ இவ்வளவு பிடிவாதமா இருக்கிறதை பார்த்து நான் தான் இறங்கி வரணும் போல..” பெரிதாக அலுத்துக் கொண்டவன்,
“அப்போ நீ யாரு என்னன்றதை சொல்லிட்டு இங்க இருந்து கிளம்பு.. உன்னை தடுக்கவே மாட்டேன்” என்றான்.
“ஏதே..” மிரண்டுப் போனாள்.
“உன் கோரிக்கையை நான் அக்சப்ட் பண்ணிக்கிட்டேன் இல்ல.. அதே போல என் கோரிக்கையை நீ அக்சப்ட் பண்ணிட்டு கிளம்பு.. டீல் னா டீல் தான். நான் டீல்ல கரெக்ட்டா இருப்பேன்” என்றவனை வாயடைத்துப் போய் பார்த்தாள்.
‘இது தான் இவன் இறங்கி வர்ற லட்ச்சனமா? சாமி பார்த்தாலும் பார்த்தேன்.. இந்த மாதிரி ஒரு மனுசனை நான் பார்த்ததே இல்லை. எந்த சூழ்நிலையா இருந்தாலும் அதை தனக்கு சாதகமா மாத்திக்கிற மனுசனாச்சே இவரு..’ புலம்பியவள் அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு ஒன்றும் பேசாமல் தன் அறைக்கு படியேறி போய் விட்டாள்.
கதிரவனை அசைக்க நினைத்தால் முடியுமா என்ன..? பனியால் கூட கதிரவனை வளைக்க முடியாது என்பதை புரிந்துக் கொண்ட பனிநிலவுக்கு ஆயாசமாக வந்தது.
நினைச்சா நினைச்சதை நினைச்ச படியே சாதிச்சு பழகியவன் அவன். அவன் எடுத்த முடிவை அவளால் அவ்வளவு எளிதாக மாற்ற முடியுமா என்ன?
பெருமூச்சு விட்டு தன் அறையில் அடைந்து இருந்தாள். எப்படியும் வீட்டில் உள்ளவர்களிடம் பேசிவிட்டு தன்னிடம் தான் வருவான் என்று அறிந்து இருந்தவள், போர்வையை எடுத்து மூடிக் கொண்டாள் தலை வரை.
சிறிது நேரத்திலே கதிரவனின் வரும் அரவம் கேட்க கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு மூச்சை அடக்கி அப்படியே படுத்து இருந்தாள்.
“நீ முழிச்சு தான் இருக்கன்னு தெரியும்..” என்றான்.
அதில் தன்னையே சாடி கொண்ட பொழுதும் அவள் அசையவே இல்லை. அடுத்த நொடி அவள் போர்த்தி இருந்த போர்வை பிடுங்கி வீசப்பட்டது அறையின் மூலைக்கு.
பதறிப்போய் எழுந்து அமர்ந்தாள் பனி. அவளின் எதிரில் முகத்தில் அடக்கப்பட்ட கோவத்தோடு நின்று இருந்தான் கதிரவன்.
அவனது கோவத்தை கண்டு லேசாக பயமாக இருந்த பொழுதும் அவளது முடிவில் தெளிவாக இருந்தாள்.
“இப்போ எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க..” இவள் தான் பேச்சை ஆரம்பித்தாள்.
“நீ பேசுற பேச்சுக்கு இதுக்கு மேலையும் செய்யலாம்” என்று முறைத்தவன்,
“முதல்ல மரியாதையா பேசி பழகு..” அடிக்குரலில் சீறினான்.
“அது.. சரி.. நான் எல்லோருக்கும் முன்னாடி அப்படி பெயர் விட்டு” அவள் ஆரம்பிக்கும் முன்பே,
“நான் அதை மென்ஷன் பண்ணல. மொட்டையா பேசிட்டு திரியாதன்னு சொன்னேன். மாமா சொல்லுன்னு எத்தனை முறைடி சொல்றது.. இன்னொரு முறை மொட்டையா பேசி பாரு.. பிறகு இருக்கு உனக்கு.. ஒரு விசயத்தை திரும்ப திரும்ப சொல்ல வைக்காத” என்றான் அத்தனை எரிச்சலாக.
“உங்களுக்கு எப்போ பாரு மாமா மாமான்னு கூப்பிட்டுக்கிட்டே இருக்கணும். அப்படி கூப்பிட்டா போதும் நிறைஞ்சுடும் இல்லையா?” ஆவேசத்துடன் கேட்டவள்,
அவனை தாண்டி போய் கதவை அழுந்த சாற்றி விட்டு அவனுக்கு எதிரில் வந்து நின்றவள்,
“மாமான்னு கூப்பிட முடியாது.. இங்க இருக்கவும் முடியாது.. நான் கிளம்புறேன் நாளைக்கு காலையில. உங்களால என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சுக்கோங்க..” என்றவள்,
“என்னை மீறி நான் யாருன்ற உண்மையை சொன்னீங்கன்னா அதுக்கு பிறகு என்னை பார்க்கிற கடைசி பார்வை இதுவா தான் இருக்கும்” என்றாள்.
“என்னடி மிரட்டுறியா?” அடக்கப்பட்ட குரலில் சீறினான்.
“சார் எவ்வளவு பெரியவங்க.. உங்களை போய் நான் மிரட்ட முடியுமா?” நக்கல் செய்தவள்,
“நான் வந்தா இந்த குடும்பத்துல மகிழ்ச்சி தளைக்குதுன்னா ஓகேன்னு இருந்து இருப்பேன். ஆனா நான் இங்க இருந்தா சிக்கலுக்கு மேல சிக்கல் தான் வந்துட்டு இருக்கு. அதை பார்க்கும் பொழுது உங்களுக்கு எப்படியோ. ஆனா எனக்கு நெஞ்சுக்குள்ள சுருக்கு சுருக்குன்னு குத்திக் கிட்டே இருக்கு.. என் இடத்துல ஒரு சென்கன்ட் இருந்து பார்த்தா உங்களுக்கு புரியும்” பெருமூச்சு விட்டாள்.
“இது தான் உன் முடிவா?” என்று கேட்டான்.
“ஆமாம்” என்றாள்.
“அப்போ ஓகே” என்றவன் எதுவும் சொல்லாமல் கிளம்பி போக,
“ஏதாவது சொல்லிட்டு போங்க” என்றாள்.
“உன்னால இந்த வீட்டு வாரிசா இந்த வீட்டுக்குள்ள இருக்க முடியலன்னு சொல்லும் பொழுது நான் என்ன சொல்றது.. நீ உன் விருப்பத்தை சொல்ற.. தட்ஸ் இட்” என்றான் வெகு இலகுவாக.
“அவ்வளவு தானா?” அவளுக்கே எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல. கதிரவன் இவ்வளவு இலகுவாக தன் முடிவை ஏற்றுக் கொள்வான் என்று.
“வேற என்ன?” என்றான்.
நெஞ்சுக்குள் சுருக்கென்று ஒரு வலி எழுந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், “வேற ஒன்னும் இல்லை” என்றாள்.





