பெரியவர்களை எதிர்த்து பேசக்கூடாது என்று அடக்கியே வைத்து இருந்தார்கள். அதனால் அவளால் எதுவும் பேசிட முடியவில்லை சட்டென்று. ஆனால் தாயோடு இருக்க வேண்டும் என்று வந்து நின்றுக் கொண்டவளுக்கு தாயை அனைவரும் பேசியதை கேட்டு கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து விட்டது.
“ப்ளீஸ்.. யாரும் அம்மாவை பேசாதீங்க” என்று மட்டும் தான் சொன்னாள்.
அவர் எழுந்து நிற்கவும் தானும் எழுந்து நின்றாள் கூட.
“நீ உள்ள போ பாப்பா” என்று அவளை உள்ளே அனுப்ப,
“இல்லம்மா நானும் உங்க கூட இருக்கேன்” என்று சொன்னவள் அவரின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.
“எனக்கு ஒன்னும் இல்ல.. நீ போ” என்று அவளை உள்ளே அனுப்பியவர், மற்ற பிள்ளைகள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று ஒரு பார்வை பார்த்தார். எல்லோரும் வேலைக்கு காலேஜுக்கு என்று கிளம்பி இருப்பதை உறுதி படுத்திக் கொண்ட காமாட்சி மங்கையை தீர்க்கமாக பார்த்தார்.
“ஆமா மங்கை.. நான் இந்த பெரிய வீட்டுக்கு சரியான மருமகளா இல்ல தான்.. நான் சரியா இருந்து இருந்தா நீ இப்படி வாரத்துல மூணு நாளு இங்க விருந்து கொண்டாட வந்து இருப்பியா?” முதல் பால்லையே சிக்செர் அடித்தார் கமாட்சி.
“காமாட்சி” என்று பொன்னன் அதட்ட,
“இவ்வளவு நேரம் உங்க தங்கச்சி பேசினாளே.. அப்போ சும்மா தானே இருந்தீங்க.. இப்பவும் அதே போல தான் இருக்கனும்” என்றவர்,
மங்கை புறம் திரும்பி,
“நான் இந்த வீட்டு மருமகளா இருக்க லாயக்கு இல்லாதவ தான்.. நீ வேணா உன் அண்ணனுக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வையேன்.. யாரு வேணான்னு சொன்னது” என்று அவர் கேட்க, பொன்னன் கூசிப் போய் நின்றார்.
“நான் மங்கையை கேட்டு இருக்கணும்..” தாமதமாக எண்ணிக் கொண்டார்.
“எனக்கு இப்பவும் ஒரு பிரச்சனையும் இல்ல.. என் மகன் மலை மாதிரி இருக்கான். அவன் நிழல்ல பலப்பேர் ஒதுங்கி நிக்கிறாங்க. பெத்த தாயை கவனிச்சுக்க மாட்டானா.. இங்க இருக்கிறதை விட ராணி மாதிரி என்னை பார்த்துக்குவான்.. ஏன்னா அவனுக்கு நான்னா ரொம்ப பிடிக்கும்..” என்றவர் பொன்னனை பார்க்கவே இல்லை.
கதிரவன் தலை எடுத்த பிறகு ட்ரவல்ஸும் சரி, விவசாயமும் சரி, ஏன் கொரியரும் சரி அவ்வளவு வளர்ச்சி கண்டு இருந்தது. அதன் தலையீடு அவன் மட்டும் தான். முடிவுகள் கூட அவன் தான்.
அது மட்டுமா வீட்டில் கூட அவன் தலை எடுத்த பிறகு எவ்வளவு மாற்றம்.. ஊரே அவன் சொல்படி கேட்டு தான் நடக்கும்.
“அப்புறம் என்ன சொன்ன, பெத்த மகனோட கண்டவளையும் அனுப்புறனா..? தனியா அனுப்புனா அவங்க தப்பு பண்ண தான் போறாங்கன்னு நீ விளக்கு பிடிச்சு பார்த்தியா மங்கை” என்றார் நறுக்கென்று.
அதில் சிங்காரத்துக்கு கோவம் பொத்துக் கொண்டு வர,
“அக்கா” என்று உறும,
“மங்கை அம்மா தரம் தாழ்ந்து பேசும் போது சும்மா தானே இருந்தீங்க ப்பா.. இப்போ அத்தை கேட்கும் பொழுது மட்டும் ஏன் பொங்குறீங்க.. அவங்க சரியா தான் கேட்குறாங்க..” என்று அவரை அடக்கி விட்டார் ரேவதியின் கணவன் சேகரன்.
அவருக்கு இந்த மாதிரி பேச்செல்லாம் சுத்தமாக பிடிக்காது. சத்தம் போட்டு பேச்சினாலே பிடிக்காது.. இப்படி தரம் தாழ்ந்து பேசினால் சுத்தம்.
மாமியாரை பேசியவர்களை எதிர்த்து கேட்க ஒரு நிமிடம் ஆகாது. ஆனால் இது பெண்கள் விசயமாக இருக்க தான் போய் என்ன பேசுவது என்று அமைதியாக இருந்தார். இல்லை என்றால் இந்நேரம் பேசியவர்களை மூக்குடைய வைத்து இருப்பார் சேகரன்.
கூடவே ரேவதி கிளம்பி வேலைக்கு போய் இருந்ததால் அவருக்கு தன் தாயை இப்படி பேசியது எல்லாம் தெரியவில்லை.
“என்ன அண்ணி இப்படி பேசுறீங்க?” மங்கை திகைக்க,
“நீ பேசுனது மட்டும் சரியா? என்னவோ என் மகனையும் அந்த பிள்ளையையும் அப்படி தரம் தாழ்ந்து பேசுற.. நீ பார்த்தியா அவங்க ரெண்டு பேரும் தப்பு பண்ணுனதை.. என்னை பேச உனக்கு உரிமை உண்டு. ஆனா என் மகனோட நடத்தையை பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை. அதோட அந்த பொண்ணை பத்தி இன்னும் ஒரு வார்த்தை தவறா பேசுன நான் மனுசியவே இருக்க மாட்டேன் பார்த்துக்க.. வந்தா விருந்தாடிட்டு போயிடு. அதை விட்டுட்டு என் குடும்ப விசயத்துல தலையிடாத.. அதே போல என் மகனை குத்தம் குறை சொல்ற வேலையெல்லாம் இங்க வச்சுக்காத..” என்றவர்,
“என் மகன் உன் வீட்டுக்கு இனி எந்த காலத்துலையும் மருமகனா ஆக மாட்டான்.. நீ வெளில மாப்பிள்ளை பார்த்துக்கோ” என்று முடிவாக சொல்லி விட்டார். அதை கேட்டு அனைவரும் அதிர்ந்துப் போக,
“காமாட்சி நீ என்ன பேசுற..” என்று மாறி மாறி கேட்டனர். ஏனெனில் எல்லோரின் விருப்பமும் கதிரவன் மகா திருமணம் தான். அதையே இல்லமால் செய்து விட்டாரே காமாட்சி.
“நான் சரியா தான் சொல்றேன். என் மகன் இன்னும் ஒப்புதலே குடுக்கல.. அதுக்குள்ள இவ என் மகனை எவ்வளவு தூரம் கீழ இறக்கி பேச முடியுமோ அந்த அளவுக்கு கீழ இறக்கி பேசிட்டா.. இதுக்கு மேலையும் என் மகனை அவளுக்கு மருமகனா ஆக்குனன்னா என் மகனை நானே புதைக்குழியில தள்ளி விட்டது போல ஆயிடும்..”
“எனக்கு வரப்போற மருமகளை நானே பார்த்துக்குறேன்” என்றார் ஒரே முடிவாய்.
“அப்போ எல்லாம் முடிவு எடுத்துட்டு வந்த பிறகு தான் இங்க இந்த ஆட்டம் ஆடுறியா அண்ணி” மங்கை அப்பவும் வாயை விட,
“நீ என்ன சொன்னாலும் சரி.. என் மகன் யாரை கல்யாணம் பண்ணிக்க விரும்புறானோ அவ தான் என் வீட்டு மருமக.. அது யாரா இருந்தா உனக்கு என்ன..? இது என் குடும்ப விசயம்.. நாங்க பார்த்துக்குறோம்” என்று அவரை தள்ளி நிறுத்தி விட்டார்.
கலா பக்கம் திரும்பி,
“உன்னை தங்கச்சியா நினைச்சேன் பத்தியா அதுக்கு உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சுட்ட.. பெத்த மகன் போல தானே கதிரவன் உனக்கு. அவனை ரொம்ப அசால்ட்டா நினைச்சு அவன் மேல சாக்கடையை அள்ளி பூசிட்டல்ல..” எனும் பொழுதே அவருக்கு அழுகையில் நெஞ்சம் விம்மியது.
என் மகனை போய் இப்படி சொல்லிட்டீயே என்று.. ஆனால் தன் கண்ணீரை அவர்களிடம் காண்பித்துக் கொள்ளாமல்,





