“அவளுக்கு கொஞ்சம் வேலை இருக்கும்மா” என்று தன்னோடு அழைத்துக் கொண்டு போய் விட்டான். மறக்காமல் முன் பக்கம் அமவைத்து அழைத்துக் கொண்டு சென்றான்.
இருவரும் போவதை பார்த்த காமாட்சிக்கு கண்களில் ஈரம் படர்ந்து விட்டது. நெஞ்சமும் விம்மிப் போனது.
இதழ்களை கடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த பொழுது மங்கையும் கலாவும் அவரை பிடித்துக் கொள்ள,
என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு வெடித்து சிதறி இருந்தார் காமாட்சி. ஆடி போய் விட்டார்கள் வீட்டில் இருந்த அத்தனை பேரும்.
அதுவும் வெளி வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்த பொன்னன், தேவன், அவர்களின் அப்பா, அவரின் மருமகன் சிங்காரம், ரேவதியின் கணவன் சேகரன் என எல்லோருமே இருந்தார்கள்.
ஆனால் காமாட்சி யாரையும் கண்டு கொள்ளாமல் சத்தம் போட்டு விட்டு தன் அறைக்குள் போய் அடைந்துக் கொண்டார்.
அவருக்கு வெடித்து அழ வேண்டும் போல இருந்தது. முயன்று தன்னை அடக்கிக் கொண்டு நெஞ்சோடு போராடிக் கொண்டு இருந்தார்.
மகன் அந்த பெண்ணிடம் எடுத்துக் கொள்ளும் உரிமையை பார்த்தவருக்கு நெஞ்சில் அப்படி ஒரு குடைச்சல் காமாட்சிக்கு.
இதே இது மங்கை தன்னுடைய பெண் தான் கதிரவனின் மனைவி என்று மகா பிறந்ததில் இருந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். அதற்கு யாரும் ஒப்புதல் அளிக்கவில்லை. கூடவே எதிர்க்கவும் இல்லை. பிள்ளைங்க வளரட்டும் பார்த்துக்கலாம் என்று தான் இருந்தார்கள். வீட்டின் பெரியவர்கள் கூட மகளுக்கு பரிந்துக் கொண்டு வந்தார்கள் தான். சொந்தத்துக்குள்ள முடிச்சுக்கலாமே.. மங்கைக்கும் ஒரு ஆதரவா இருக்கும்ல.. என்று பேசிய அம்மாவுக்கு தலையை மட்டும் ஆட்டி வச்சு இருந்தார் பொன்னன்.
ஆனால் வீட்டில் இப்படி ஒரு பேச்சு இருப்பது கதிரவனுக்கு தெரிந்தாலுமே மாகவை அவன் ஒரு நாள் ஒரு பொழுது கூட சிறப்பாகவோ, இல்லை தனி பட்ட முறையில் தனி கவனிப்போ எதுவுமே காட்டியது இல்லை.
ஏன் ஓரிரு வார்த்தை படிப்பை பத்தி அவளிடம் பேசுவானே தவிர அவளை தனித்து ஒரு பார்வை கூட பார்த்தது இல்லை.
கதிரவனுக்கு திருமண வயசு வந்த பிறகு இன்னும் தள்ளிப் போட வேண்டாம் என்று வரன் பார்க்க ஆரம்பிக்க, மங்கை ஆடி தீர்த்து விட்டார்.
ஆனால் கதிரவனோ திருமணமே வேணாம் என்று ஒரே பிடியில் நின்று விட்டான். அவன் எதை மனதில் வைத்துக் கொண்டு சொல்கிறான் என்று புரிந்துப் போனது காமாட்சிக்கு.
“எதையோ நினைச்சுக்கிட்டு உன் வாழ்க்கையை வீணாக் கிடாத தம்பி” என்று கண்ணீருடன் சொன்னவரை ஆழ்ந்துப் பார்த்தானே தவிர அவனிடம் இருந்து இதுநாள் வரை பதில் வந்ததே இல்லை திருமணத்துக்கு.
அதுவும் அவனது சின்ன வயதில் நடந்த நிகழ்வில் இருந்து இன்னும் அவனால் வெளிவரவே முடியவில்லை. அன்றைக்கு அவன் இறுகிப் போனது தான். இதோ இப்பொழுது வரை எல்லோரிடமும் இறுகி தான் இருக்கிறான்.
ஆனால் இப்பொழுது புதிதாக வந்த பெண்ணிடம் அவன் காட்டும் இளக்கம் தாய்க்குள் பெரும் சஞ்சலத்தை விதைத்து இருக்கிறது.
“அதுவாக இருக்குமோ” என்று எண்ணியவருக்கு உள்ளுக்குள் அப்படி ஒரு படபடப்பு, பரவசம், அன்பின் சுக ஊற்று... இப்பொழுதே பனியை தன் மடியில் போட்டு சீராட்டி பாராட்டி உச்சி முகர்ந்து நெஞ்சில் போட்டுக் கொள்ள அத்தனை பரபரப்பு அவரிடம்.
ஆனால் இது அப்படி இல்லாமல் பனி கதிரவனின் வெறும் காதலியாக மட்டுமே இருந்தால் அவரின் எதிர்பார்ப்பு கானல்நீராய் போய் விடுமே என்கிற அச்சமும் அவரை சூழ்ந்துக் கொண்டு தத்தளிக்க வைத்தது.
அந்த குழப்பத்துடன் இவர் வீட்டுக்குள் நுழைய, மங்கையும் கலாவும் ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்துக் கொண்டு,
“அண்ணி நீங்க செய்யிறது உங்களுக்கே நியாயமா படுதா.. இந்த வீட்டு மருமகளா என் பொண்ணை வளர்த்து வச்சு இருக்கேன். நீங்க என்னடான்னா கண்டவளையும் உங்க மகனோட ஜோடி போட்டு அனுப்புறீங்க.. ஒரு தாயா எப்படி உங்களால இவ்வளவு கேவலமா நடந்துக்க முடியுது.. இத்தனை வருடம் ஆகியும் பெரிய வீட்டு மருமகளா நடந்துக்க தெரியலன்னா உங்களை எதுக்காக கல்யாணம் பண்ணி எங்க அண்ணன் குடும்பம் நடத்தணும்” வார்த்தைகளை அதிகமாவே வீசி விட்டார் மங்கை.
அவரது அந்த பேச்சில் துடிதுடித்துப் போய் விட்டார் காமாட்சி. அத்தனை பேரும் பார்த்துக் கொண்டு இருக்க, இப்படி ஒரு பேச்சை எதிர் பார்க்காத காமாட்சிக்கு உயிரே போய் விட்டது.
அவரின் நிலை குலைந்த தோற்றத்தை பார்த்த விசாலம்,
“ஏய் என்னடி என்ன பேச்சு பேசுற?” என்று அதட்ட வர,
“நீ சும்மா இரும்மா.. நீ ஒழுங்கா இருந்தா இந்த அண்ணி ஏன் இப்படி பண்ண போறாங்க.. எல்லாம் நீ குடுத்த இடம்..” என்று தாயையும் பேசினார் மங்கை.
“அத சொல்லுங்க.. எப்போ பாரு பெரிய மருமக பெரிய மருமகன்னு தலையில தூக்கி வச்சு ஆட வேண்டீயது. இதோ இப்ப பாருங்க அவங்க என்ன காரியம் பண்ணிட்டு வந்து இருக்காங்கன்னு.. நம்ம வீட்டு வயசு பையனோட எங்க இருந்தோ வந்த பெண்ணை அனுப்பிட்டு வர்றாங்க..” என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார் கலா.
காமாட்சி அந்த பேச்சில் அப்படியே மூன்றாக மடிந்து கூனி குறுகி அமர்ந்து விட்டார்.
“என்ன மாதிரியான பேச்சு.. தானே தன் மகனுக்கு ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து தவறான வழியில் போ” என்று சொன்னது போல பேசியவர்களின் பேச்சில் நிலைகுலைந்து போய் விட்டார்.
அவரால் அந்த அவமானத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
தன்னை பேசியதோடு அல்லாமல் மகனையும் அந்த பெண்ணையும் அல்லவா தவறாக பேசுகிறார்கள். அதோடு அவர்களின் நடத்தையை பற்றி.
பனி உடைகளுக்கு அளவு குடுக்க தொடங்கும் முன்பே தன் மகன் எவ்வளவு நாகரீகமா அந்த இடத்தை விட்டு நகர்ந்து இருந்தான். என்னவோ அவனை தெரு பொறுக்கி அளவுக்கு கீழே இறக்கி பேசிய பேச்சில் உள்ளம் துடித்துப் போய் விட்டார் தாயாய்.
அதுவும் யாரும் இல்லாமல் அனாதையாக நிற்கும் பனியை பற்றி. அவள் மட்டும் என்ன.. தன் மகனின் நிழலை கூட மிதிக்க தயங்கிக் கொண்டு எவ்வளவு குறுகி போய் காரில் அமர்ந்து இருந்தாள்.
அவளை பற்றி பேச, அவளின் நடத்தையை பற்றி பேச இவர்கள் யார். இவர்களுக்கு என்ன உரிமை இருக்கு.
இதை இப்படியே விடக்கூடாது.. இதை அமைதியாக கடந்தால் என் மகனையும் அந்த பெண்ணையும் விட்டுக் கொடுத்தது போல ஆகிவிடும். இல்லை என்றால் அவர்களின் நடத்தை மீது குற்றம் சுமத்தியதை நானே ஒப்புக் கொண்டது போல ஆகிவிடும் என்று எண்ணியவர் அதுவரை மடிந்து அமர்ந்திருந்தவர் சட்டென்று எழுந்து நின்றார். முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார்.
அவரின் பார்வையில் இருந்த தீர்க்கம் கண்டு ஒரு கணம் திகைத்து தான் போனார்கள் அனைவரும்.
விசாலம் மட்டும் தான் மருமகளுக்காக பேச வந்தது. மற்ற ஒருவரும் வாயையே திறக்கவில்லை. துளசி சின்ன பிள்ளை என்பதால் தாயின் அருகில் வந்து நின்று அவரின் கையை பிடித்துக் கொண்டாளே தவிர அவளால் தாய்க்காக ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. ஏனெனில் அவளை அப்படி தான் வளர்த்து இருந்தார்கள்.
பெரியவர்களை எதிர்த்து பேசக்கூடாது என்று அடக்கியே வைத்து இருந்தார்கள். அதனால் அவளால் எதுவும் பேசிட முடியவில்லை சட்டென்று. ஆனால் தாயோடு இருக்க வேண்டும் என்று வந்து நின்றுக் கொண்டவளுக்கு தாயை அனைவரும் பேசியதை கேட்டு கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து விட்டது.





