“நீங்க வேற ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனாலும் இதை தான் சொல்லுவாங்க. அதோட இப்ப அந்த கட்டி ரொம்ப சிவியரா இருக்கு. பேஷன்ட்டுக்கு ப்ளீடிங் வேற ஸ்டாப் ஆக மாட்டிக்கிது.. இந்த ப்ராபலமோட நீங்க அவங்களை வெளில கூட்டிட்டு போறது அவங்களோட உயிருக்கே ஆபத்த முடியலாம்” என்று எச்சரித்தார்.
“டாக்டர் என்ன சொல்றீங்க?” தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடியது சுந்தரத்துக்கு.
“எஸ்... ப்ளீடிங் ஹெவியா போயிட்டு இருக்கு. இதுக்கு எல்லாம் காரணம் அந்த கட்டி தான். அதை ரிமூவ் பண்ணிட்டா ஒரு ப்ராப்ளமும் இல்லை. அதனால எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமா ஆபரேஷன் பண்றமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது” என்று அவர் முடித்துக் கொண்டார்.
“பொண்ணு எங்க இருக்கா டாக்டர்...” கண்ணன் கேட்டார்.
“இங்க ஸ்க்ரீன்க்கு பின்னாடி.. நீங்களே போய் பாருங்க.. முன்னாடி ரிஷப்ஷன்ல போய் பார்தாரா ப்ரோசிட் பண்ணிடுங்க. நான் இவங்களை ரூம்க்கு ஷிபிட் பண்ண சொல்லிடுறேன். தென் கொஞ்சம் டிரஸ் எடுத்துட்டு வர சொல்லி சொல்லுங்க... இமிடியட்டா மாத்தணும்” என்றார்.
டாக்டருக்கு தலையை ஆட்டியவர்கள், உள்ளே நுழைந்து ஏந்திழையாளை பாத்தார்கள்.
அவள் ஓய்ந்து போய் படுத்து இருப்பது போல இருந்தது. அவள் மீது போர்வை போர்த்தி இருந்தாள்.
“இழை” என்று அவர்கள் கூப்பிட, மெதுவாக விழித்தாள். இருவரையும் பார்க்க கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை. ஆனால் வேறு வழியில்லையே... கொஞ்சமும் அவர்களுக்கு சந்தேகம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தனக்குள் எழுந்த அத்தனை ஆக்ரோஷத்தையும் அடக்கிக் கொண்டு இருந்தாள்.
“ப்பா” என்று அவள் மெதுவாக அழைக்க,
என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவர்களின் மனம் முழுவதும் ராசசிங்கனை பற்றிய எண்ணமே மீதூறி இருக்க இங்கே பெண்ணவள் வேதனை படுவது ஏதோ ஒரு மூலையில் உறைத்தது.
அதனால் இருவராலும் அதிகமாக ரியாக்ட் பண்ண முடியவில்லை. இருந்தாலும் ஒப்புக்கு அவர்கள்
“உடம்புக்கு முடியலையா?” என்று கேட்டார்கள்.
“வயிறு எதுவும் வலிக்கிறதா?” மேலும் கேட்க, ஆமாம் என்று சொன்னவள்,
“ப்பா அம்மாவை வரச்சொல்லி சொல்றீங்களா?” அவர்களிடம் கேட்டாள்.
“இல்லம்மா அது” என்று அவர்கள் தடுமாற,
“உங்க கிட்ட சில விசயம் சொல்ல முடியல ப்பா” என்று தடுமாற, அவளின் சூழலை புரிந்துக் கொண்டவர்கள்,
“சரி நீ இரு.. நான் அம்மாவை வர சொல்லி சொல்றேன்” என்று போனை எடுத்துக் கொண்டு வெளியே போய் விட்டார் சுந்தரம். ஏந்திழையை இவர்களின் கண் பார்வையிலே வைத்துக் கொள்ள எண்ணினார்கள்.
தேவகி வந்து விட்டால் இவர்கள் இங்கு தேவையில்லை அல்லவா. அதோடு யுகேஷையும் தடுக்க முடியாது. நான் பார்த்துக்குறேன் நீங்க போங்க என்று முகத்தாட்சண்யம் என்று எதுவும் பார்க்க மாட்டான்.
இன்னும் இவர்களால் ஏந்திழையாளை முழுமையாக நம்ப முடியவில்லை. அவள் அவ்வளவு எளிதாக எதையும் மறக்க மாட்டாள். அதனாலே கண்கொத்தி பாம்பாக அவளை கண்காணிக்க ஆரம்பித்து இருந்தார்கள்.
இடையில் இப்படி ஒரு சிக்கல்..
கண்ணன் அவளின் தலையை தடவி விட்டார். அவளுக்கு நெருப்பு பட்டது போல இருந்தது. ஆனாலும் கொஞ்சம் கூட காட்டிக் கொள்ளவே இல்லை. அப்படியே இருந்தாள்.
அதற்குள் அவளை இடம் மாற்ற வைக்க செவிலியர்கள் வந்து விட யாருடைய முகத்தையும் பார்க்காமல் கண்களை மூடிக் கொண்டாள்.
அது சோர்வு என்று எண்ணிக் கொண்டார்கள் தந்தையர்கள் இருவரும். அதுவும் நல்லதுக்கு தான் என்று எண்ணிக் கொண்டவள் அமைதியாகிப் போனாள். எதுவும் பேசவில்லை.
சிறிது நேரத்திலே யுகேஷை கூட்டிக்கொண்டு தேவகி வந்துவிட்டார்.
“இதுக்கு தான் சொன்னேன்.. நாங்க போறோம்னு சொன்னா கேட்கணும்” என்று வந்த யுகேஷ் தந்தையை கடிந்துக் கொண்டு,
“முக்கியமான மீட்டிங் இருக்கு... நம்ம க்ளைன்ட்ஸ் எல்லோரும் மீட் பண்ற டே. சோ நீங்க ரெண்டு பேரும் கார்த்தி வருணை வச்சு நம்ம டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் எல்லாம் பேசி முடிங்க.” என்று அவர்களுக்கு இன்றைக்கு இருந்த வேலையின் முக்கியத்துவத்தை பற்றி சொல்லி கையேடு கிளப்பியும் விட்டுவிட்டான்.
“ஏன்டா அவங்களும் இருக்கட்டுமே” என்று தேவகி சொல்ல,
“ம்மா நீ கொஞ்சம் சும்மா இரு... அவங்க ரெண்டு பேரும் இருந்தா நொச்சு நொச்சுன்னு ஏதாவது சொல்லிட்டே இருப்பங்க. பாப்பாவை நிம்மதியா ரெஸ்ட் கூட எடுக்க விட மாட்டாங்க.. நீ வா நாமலே பார்த்துக்கலாம்” என்று தாயை அடக்கி விட்டு தங்கையை பார்க்க சென்றான்.
அங்கே ஓய்ந்து போன நிலையில் இருந்தவளை கண்டு இருவருக்கும் உள்ளம் வாடிப் போனது.
“ஏன் தங்கம் உனக்கு மட்டும் ஒன்னும் மாத்தி ஒன்னு வந்துக்கிட்டே இருக்கு... இதுக்கு முன்னாடி வயிறு வலின்னு ஒரு நாள் கூட நீ சொன்னதே இல்லையே பாப்பா... இப்ப இப்படி திடுதிப்புன்னு வந்து படுத்துக்கிட்டியே... உன்னை கண்ணுல வச்சு பார்த்துக்க முடியாம போயிடுச்சே...” என்று கண்கள் கலங்கினார்.
“ம்மா” என்று ஏந்திழை சோர்வுற அழைக்க,
“அச்சோ என் பிள்ளைக்கு பேசக் கூட தெம்பு இல்லையே” என்று அதற்கும் அவர் அழ ஆரம்பிக்க,
“ண்ணா” என்று தன் தமயனை பார்த்தாள்.
“ம்மா நீ இப்படி அழுதுக்கிட்டே இருந்தா உன்னையும் வீட்டுக்கு போகச்சொல்லிடுவேன் பார்த்துக்க” என்று எச்சரித்தான்.
“ஏன்டா வாய் விட்டு என் மனதை கொட்ட கூட விடமாட்டியா..? வீட்டுல தான் எல்லோரும் அடக்கி வைக்கீறீங்க. இங்க வந்தும் இப்படி பண்றீங்க” என்று தன் மகளை கண்கள் கலங்கியவர் தன் மகனை நொடித்துக் கொண்டார்.
“ப்ச் ம்மா” என்று அவரை தோளோடு அணைத்துக் கொண்டவன்,
“இங்க தானே இருக்க போற.. உன் பெண்ணை நீ கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்க. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று சமாதனம் செய்தவன் தங்கையிடம் நலம் விசாரித்து விட்டு மருத்துவரை பார்த்து விட்டு வருவதாக சொல்லி வெளியே போய் விட்டான்.
“ம்மா அப்பா எங்கம்மா?” என்று இயல்பா விசாரிப்பது போல விசாரித்தாள்.
“உங்க அண்ணன் நாங்க வந்த உடனே போக சொல்லி சொல்லிட்டான் பாப்பா. இவனுக்கு என்ன தான் அவசரமோ” என்று அலுத்துக் கொண்டவர் அவளின் கையை பிடித்து வைத்துக் கொண்டு அவளுக்கு அருகில் அமர்ந்துக் கொண்டார்.
“இன்னும் என் பிள்ளை என்னனென்ன துன்பத்தை தான் அனுபவிக்கனுமோ தெரியலையே. கண்ணார நீ வாழுறதை நான் பார்க்க குடுத்து வைக்கல போல தங்கம்” என்று அவர் புலம்பிக் கொண்டே அவளின் தலையை வருடி விட்டார்.
நர்ஸ் வந்து உடைமாற்ற சொல்லி உதவி செய்ய தேவகி ஏந்திழையாளுக்கு இலகுவான உடையை அணிவித்து விட்டு பழைய உடையில் இருந்த உதிரக் கரையை கண்டு அய்யோ இவ்வளவு உதிரமா என்று பயந்துப் போனார்.





