aththiyaayam 44

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ரைட்...” என்றவன் காட்ஸிடம் சைகை செய்ய ஏந்திழையாள் குடும்பம் மேலே வந்தது. அவர்கள் ஒரு பக்கம் மேடை ஏற இன்னொரு பக்கம் ராசசிங்கன் மணமேடையை விட்டு கீழே இறங்கி போய் விட்டான்.

அதை எதிர்பார்க்காதவள் விக்கித்துப் போனாள். அவன் விலகி போவதை அவளது குடும்பம் கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளவே இல்லை. அவன் அவர்களுக்கு ஆகாதவன் ஆயிற்றே..

அதனால் அவனை இவர்கள் பொருட்படுத்தவே இல்லை. ஏந்திழையாளை சூழ்ந்துக் கொண்டு அவளுக்கு பரிசு பொருளும் பொன்னும் நகையும் ஆபரணமும் வைரமும் பரிசளித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து என என்னென்ன செய்ய தோன்றியதோ அது அத்தனையும் செய்துக் கொண்டார்கள். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாக இதே கொட்டம் தான்.

இவர்கள் எல்லாம் அவளோடு இருந்தாலும் அவளின் மனம் என்னவோ ராசசிங்கனை தான் தேடியது. மூன்று முடிச்சோட மகிமையோ என்னவோ...

ராசசிங்கனும் கீழே ஒரு தூணின் பின்பு கொஞ்சம் மறைந்த படி அமர்ந்து இருந்தான். அவனது பார்வை மொத்தமும் பெண்ணவளின் விழிகளில் தான் நிலைத்து இருந்தது.

அவளது வீட்டு ஆட்கள் எல்லோரும் அவளை சுற்றி இருந்தாலும் அவளின் கண்கள் தன்னை மட்டுமே தேடுவதை உணர்ந்தவனுக்கு எதையோ சாதித்து விட்டதில் முழு திருப்தி பிறந்தது. தன்னையறியாமல் அவனது கை கற்றை மீசையை முறுக்கியது.

“நான் நினைச்சது வெகு சீக்கிரமா நடந்திடும் போலையே...” என்று முணுமுணுத்துக் கொண்டவனின் கண்களில் இருந்தது என்னவோ கர்வம் மட்டுமே... நினைத்ததை சாதித்து விட்ட முறுவல் அவனிடம் அதிகமாகவே இருந்தது. 

“இனி ஒரு பயலும் என் பிறப்பை பற்றி பேச மாட்டான். குடும்ப கெளரவத்தை இழுத்து வைத்து பேச மாட்டான்” என்று எண்ணிக் கொண்டவனுக்கு இது நாள் வரை தன் முதுகுக்கு பின்னால் பலர் பேசிய ஏளன சொற்கள் கண் முன் எழுந்து சினத்தை அள்ளி வீசியது.

“உங்க அத்தனை பேருக்கும் பதிலடியாக தான்டா இந்த திருமணம்... இனி எவனாவது நான் அனாதை, என் பிறப்பு தவறுன்னு பேசுங்க... பேசுற வாயை கிழிக்கிறேன்... எவ்வளவு பேர் புகழ் எடுத்தாலும் இந்த குடும்ப கெளரவம் மட்டும் தான் இல்லாமல் இருந்தது. இன்றைக்கு அதையும் என் சாமர்த்தியத்தால் வாங்கி விட்டேன்” என்று நெஞ்சை நிமிர்த்தி இறுமாந்தான்.

அவனது இறுமாப்பில் ஒரு பெண்ணின் மனம் புண் பட்டு போய் கிடப்பதை அவன் அறியவே இல்லை. அறிந்தாலும் அவனுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல தான் நடந்துக் கொள்வான்.

ஏந்திழையாளின் வீட்டு ஆட்களுக்கு போதிய நேரம் கொடுத்தவன் காட்ஸ்க்கு தகவல் தர அவளின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் கீழே இறக்கினார்கள்.

அடுத்த நொடி ராசசிங்கன் அவளின் அருகில் நின்றான். போட்டோ சூட் ஆரம்பம் ஆனது. நாகரீகமான முறையிலே அது நடைபெற ஏந்திழைக்கு நிம்மதியாக இருந்தது.

ஆனால் ராசசிங்கனுக்கும் தன் குடும்பத்துக்கு பாலமாக இருக்க முடியாமல் போனதில் வேதனை சூழ்ந்தது அவளுக்கு. ஒருத்தர் மேட்டுக்கு இழுத்தால் இன்னொருத்தர் பள்ளத்துக்கு இழுக்க இவளால் இரு பக்கமும் சமன் செய்ய முடியவில்லை.

தன் கல்யாண புகைப் படத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்க முடியாமல் போனதில் நெஞ்சம் கலங்கிப் போனது. ராசசிங்கனிடம் அதை பற்றி பேசவே முடியாது. தனக்காக தான் அவன் ஒதுங்கி நின்று அவர்களை மேடைக்கு வர விட்டான்.

இதில் நீங்களும் இருக்கணும் என்றால் அவன் அவனது புத்தியை காட்டி விடுவான் என்பதால் அமைதியாகிப் போனாள்.

எல்லா சடங்குகளும் முடித்து விட்டு ராசசிங்கனுடன் அவனது காரில் ஏற இருந்த சமயம் தன் தாயினை திரும்பி பார்த்தாள். அவரை வெளிப்படையாக கட்டிக் கொண்டு தன் அழுகையை கொட்ட கூட முடியாமல் ராசசிங்கனின் கையில் இறுக்கிப் பிடித்து இருந்த தன் கையை பார்த்தவளுக்கு எல்லாமே கானல் நீராய் போனது.

தலையை மட்டும் அவரிடம் அசைத்து விட்டு தன் தமையன் மார்களை பார்க்க கூட இல்லாமல் காரில் ஏறி அமர்ந்து விட்டாள். அவளின் உள்ளக் கொதிப்பை உணர்ந்த தமையன் மார்களின் கண்கள் இரத்தமென சிவந்துப் போனது. 

யுகேஷ்க்கு சொல்லவே வேணாம்... வெந்நீரில் போட்ட அரிசி போல கொதியாய் கொத்தித்துப் போனான். யாராலும் இவனை சமாதனம் செய்யவே முடியவில்லை.

“இது எல்லாத்துக்கும் நீ அனுபவிப்ப ராசசிங்கன். உன்னையும் இது போல உறவுக்காக துடிக்க விடல நான் யுகேஷ் இல்லடா. இப்போ உனக்கான நேரம் நீ ஆடுற... எனக்கும் ஒரு நேரம் வரும் அப்போ உன் கண்ணுக்குள்ள என் விரலை விட்டு ஆட்டுறேன்” என்று மனதுக்குள் சூளுரைத்தவன்,

“போகலாம்” என்று காரில் ஏறிக் கொண்டான்.

அவனை தொடர்ந்து அனைவரும் கிளம்பினார்கள். வேல்முருகன் மட்டும் ராசசிங்கனிடம் போனில் மறுவீட்டு விருந்தை பற்றி பேசினார்.

“உங்க பிச்சை சோறு எனக்கு வேணாம்” என்று பட்டென்று வைத்து விட்டான்.

முகத்தில் அறைந்தது போல இருந்த அவனது பேச்சில் தன் பேத்தியை எண்ணி மனம் கலங்கினாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“ஆமா நீங்க பார்த்து வச்ச மாப்பிள்ளை எப்போ நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வராராம்” என்று அவரின் தம்பி நக்கலாக கேட்டார்.

வேல்முருகனால் பதில் சொல்ல முடியவில்லை.

“இதுக்கு தான் தராதரம் பார்த்து கல்யாணம் பேசணும்னு சொல்றது...” என்ற தம்பியை அடிபட்ட பாவனையுடன் பார்த்தவரை கண்டு துடித்துப் போனார் அவரின் தம்பி.

“உங்களை குத்தி காட்டணும்னு நான் இதை சொல்லல ண்ணா. ஆனா நம்ம பேத்திக்கு அவன் கொஞ்சம் கூட ஈடு இல்லண்ணா” என்றார் வேதனையுடன்.

“அது எனக்கு தெரியாதுன்னு நீ நினைக்கிறியா வெங்கடேசா?” என்று கேட்டு பெருமூச்சு விட்டவர்,

“சூழ்நிலை...” என்று விட்டு பின்னால் சாய்ந்துக் கொண்டார்.

காரை ஒட்டிக் கொண்டு இருந்த யுகேஷ்க்கு மனம் பொறுக்கவில்லை.

“அப்படி என்ன தாத்தா சூழ்நிலை... என் தங்கச்சியை அவனுக்கு கட்டி குடுக்கணும்னு.. அவன் எவ்வளவு பெரிய பொருக்கி தெரியுமா? அவனுக்கு போய் என் தங்கச்சி போண்டாட்டியன்னு மனசு கொதிக்கிறது” என்றான் ஆத்திரத்தில்.

“நீ ஈசியா சொல்லிட்ட தம்பி.. ஆனா என் சூழ்நிலை அப்படி இல்லை” என்றவர்,

தான் மாட்டி இருந்த சிக்கலை முதல் முறையாக குடும்பத்தாரிடம் பகிர்ந்தார்.

“ஒரே ஒரு நாள் தான் என் பேத்தி அவனோட இருந்தா.. ஆனா அதுக்கே உன் அப்பா அவ சுத்தமா தான் இருக்காளான்னு தெரியலன்னு சந்தேகப் பட்டான். பெத்த அப்பனே சந்தேகப் படும் பொழுது நாளைக்கு கட்டிக்க போறவனுக்கு இந்த சந்தேகம் வராதுன்னு நாம உறுதியா சொல்ல முடியுமா யுகேஷ்...” என்று வேதனையுடன் சொல்ல திரும்பி தன் தந்தையை ஒரு பார்வை பார்த்தான்.

அந்த பார்வை நக்கீரனை எரித்த ஏகனின் பார்வையை ஒத்து இருந்தது.

“நீயாடா இப்படி எல்லாம் நடந்துக்கிட்ட” என்று வெங்கடேஷ் மாய்ந்துப் போனார்.

சுந்தரம் தலையை நிமிரவே இல்லை.

அந்த காரில் இரு தாத்தாக்களும் இரு தந்தை மார்களுடன் யுகேஷ் வருண் கார்த்திக் மட்டும் இருந்தார்கள். அதனால் மனம் விட்டு எல்லாவற்றையும் சொன்னார் வேல்முருகன்.

வீட்டு மாப்பிள்ளையே ஆனாலும் சில விசயங்களை சொல்லக் கூடாது என்பதில் வேல்முருகன் தெளிவாக இருக்க இந்த தனிமையை பயன்படுத்திக் கொண்டார்.

வீட்டு மாப்பிள்ளைகள் அவர்களின் மனைவி மார்களுடன் பெண் பிள்ளைகளுடன் வேறு காரில் வந்துக்கொண்டு இருந்தார்கள்.

வருணை நம்பி எந்த விசயம் வேணாலும் பேசலாம். அவன் எங்கும் மூச்சே விட மாட்டான். ஆனால் மற்றவர்கள் அப்படி இல்லை. எனவே அந்த நம்பிக்கையில் வேல்முருகன் தன் நெஞ்சை கொய்துக் கொண்டு இருந்த விசயங்களை எல்லாம் கொட்ட ஆரம்பித்தார்.

“அது மட்டும் இல்லை நம்ம இழையோட சேர்ந்து அவன் சில வீடியோ எடுத்து வச்சு இருக்கான்” என்று கண்கலங்கினார்.

Loading spinner

Quote
Topic starter Posted : April 16, 2026 9:51 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top