எவ்வளவு நாட்கள் அப்படியே இருக்க முடியும்... என்னவோ மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது... அடுத்த நாள் காலையில் கோயிலுக்கு போக மனம் உந்தியது...
குளித்து விட்டு புலாரத வேலையில் கதவை திறந்துக் கொண்டு அவள் வெளியே போக,
“எங்க போற இழையாள்” என்று கார்த்திக் வந்து நின்றான் எதிரில்.
அந்த நேரம் அவனை எதிர் பார்க்காதவள், “கோயிலுக்கு போறேண்ணா” என்றாள்.
அதை அந்த பக்கம் கேட்டுக் கொண்டு இருந்த நடாஷ்,
“இவ்வளவு நாள் நீ கோயிலுக்கு போய் இழுத்துக்கிட்டு வந்தது எல்லாம் பத்தாதா... முதல்ல உள்ள போ” என்று அதட்டினான்.
“நடாஷ்” என்று இழையாள் அதிர,
“அவன் சொல்றது சரி தான் இழை... உள்ள போ” என்று பிரகாஷ் சொன்னான்.
விழிகளில் நீர் நிறைந்து விட்டது. கோயிலுக்கு போக கூடாவா தடை... மூச்சு முட்டுதுன்னு தானே கோயிலுக்கு போக பார்த்தாள். அதற்கும் தடா என்றால் அவள் எங்கு தான் செல்வது.
என்னவோ அடக்கி ஒடுக்கப்பட்டது போல ஒரு உணர்வு. அவர்களை மீற முடியாமல் உள்ளேப் போக பார்த்தவளுக்கு தூரத்தில் கதிர் நின்றுக் கொண்டு இருப்பது தெரிய நெஞ்சம் பக்கென்று ஆனது.
“இல்லண்ணா நான் நல்லபடியா திரும்பி வந்துட்டா கோயிலுக்கு பதினோரு வாரம் வருவதா வேண்டி இருக்கேன். அதனால நான் கோயிலுக்கு போய் தான் ஆகணும். வேண்ணா துணைக்கு நீங்களும் வாங்க” என்று கொஞ்சம் திடமாகவே சொல்லி விட்டு கேட்டை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள்.
“எவ்வளவு நெஞ்சழுத்தம் பாருடா இவளுக்கு. நாம இவ்வளவு தூரம் சொல்றோம். ஆனா இவ கொஞ்சம் கூட காதிலே வாங்கிக்காம போறதை பாரேன்” என்று நடாஷ் சொல்ல பிரகாஷ் அதை அமோதித்தான்.
“ப்ச்... சும்மா புலம்பாம உள்ள போங்க.. நான் அவளுக்கு துணையா போயிட்டு வரேன்” என்று யுகேஷ் கிளம்பி விட்டான்.
“அவ விருப்பத்துக்கு ஆடாதடா அண்ணா” என்றான் பிரகாஷ்.
“பதினோரு வாரம் தானே பார்த்துக்கலாம்” என்று வருனிடம் கண்ணை காண்பித்து விட்டு யுகேஷ் தங்கையுடன் நடந்தான்.
தன்னுடன் யார் வருகிறார்கள் என்றெல்லாம் பார்க்கவில்லை அவள். அவளது மொத்த கவனமும் கதிரிடம் மட்டுமே இருந்தது.
கதிர் இழையாள் வருவதை பார்த்து விட்டு வேகமாய் கோயிலை நோக்கி சென்றான் யாருடைய கவனத்தையும் கவராமல். கதிர் கோயிலுக்கு உள்ளே செல்வதை பார்த்தவள் தானும் நடையை எட்டிப் போட்டாள்.
காரணமின்றி கதிர் தன்னை தேடி வரமாட்டான் என்று புரிந்துக் கொண்டவளுக்கு ஏனோ நெஞ்சம் துடியாய் துடித்துக் கொண்டு இருந்து.
“என்னவா இருக்கும்? ஒருவேளை அவருக்கு எதுவுமா? கடவுளே...” என்று உள்ளுக்குள் கதிகலங்கிப் போனாள்.
“எதுக்கு இழை இவ்வளவு வேகமா போற?” என்று அண்ணன் குரல் கேட்கவும் தான் சுதாரித்தாள்.
“இல்லண்ணா கும்பல் வருவதற்கு முன்னாடியே போயிட்டு வந்திடலாம்னு தான்” என்றாள்.
“அதுக்கு பேசாம கார்லயே வந்து இருக்கலாமே...” என்று அவன் சொல்ல,
“இல்லண்ணா நடந்து வந்தே பழக்கமாகிடுச்சு” என்றவளிடம் இனமறியா ஒரு படபடப்பு தென்பட்டது. அதை சாதூரியமாக மறைத்துக் கொண்டவள், தன் நடையை கொஞ்சம் மட்டுப் படுத்தினாள்.
ஆனாலும் உள்மனம் படபடத்துக் கொண்டே இருந்தது. அண்ணன் வேற கூட வரானே எப்படி கதிரிடம் பேசுவது என்று அயர்ந்துப் போனாள்.
கோயிலை வேறு நெருங்கியாச்சு... என்ன செய்வது என்ன செய்வது என்று படபடத்தவள் அங்கு இருந்த பூக்கடையை பார்த்தாள்.
“அண்ணா பூ இல்ல வாங்கிட்டு வர்றியா...?” என்று கேட்டாள்.
“சரி நீ போ.. நான் வாங்கிட்டு வரேன்” என்றவன் கடைக்கு போனான். இது தான் சமயம் என்று கோயிலுக்கு உள்ளே நுழைந்துக் கொண்டாள்.
உள்ளே நுழைந்தவள் கதிரை தேடினாள். அவளுக்கு அதிக சிரமம் வைக்காமல் அவனே அவளின் எதிரி வந்து நின்றான்.
“என்ன ஆச்சு கதிர்? ஏன் இவ்வளவு காலையில வந்து நிக்கிற? போன் பண்ண வேண்டியது தானே...” என்று அவள் படபடத்து கேட்க,
அவளை கூட்டிக்கொண்டு வாசல் தெரியும் படி போய் நின்றவன்,
“உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? ஏன் இப்படி பண்றீங்க? உங்க கிட்ட இருந்து இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்கல” என்று எடுத்த எடுப்பிலே அவன் எகிறினான்.
“ஷட்டப் கதிர்...” என்று இரைந்தவள், “என்னடா நீயா என்னவோ உளர்ற.. நான் என்ன பண்ணினேன்?” என்றாள் கோவமாக.
“ஆமா நீங்க சின்ன பிள்ளை உங்களுக்கு அப்படியே ஒண்ணுமே தெரியாது பாரு” என்று அவன் கடுப்படித்தான்.
“கதிர்... மரியாதையா பேசு... இப்போ எதுக்கு என்னை தேடி வந்த.. முதல்ல எங்க அண்ணன் கண்ணுல படமா கிளம்பி போ” என்றாள்.
அவனிடம் தன் கணவனை பற்றி விசாரிக்க மனம் உந்தி தள்ளினாலும் இப்படி பேசுபவனிடம் என்னத்தை விசாரிப்பது என்று மௌனம் காத்தாள்.
“அப்படி தான் அண்ணி என் அண்ணனை வேதனை படுத்தினா நான் இதுக்கும் மேல பேசுவேன்” என்றான் அடக்கிய கோவத்துடன்.
“யாரு யாரை வேதனை படுத்துறான்னு தெரியாம பேசாத... மரியாதையா இங்க இருந்து கிளம்பு” என்றாள் முகம் சிவந்து கோவத்துடன்.
“போறேன் கண்டிப்பா போயிடுவேன்... ஆனா எங்க அண்ணனுக்கு நீதி கிடைக்காம நான் போக மாட்டேன்” என்றான் பிடிவாதமாய்.
“என்ன நீதி.. பெரிய நீதி... ரோட்டுல நிற்கதியா வயித்து பிள்ளையோட நிக்க வச்சிட்டு போன உங்க அண்ணன் உனக்கு உசத்தி தான்டா” என்று கண்கள் கலங்கிப் போனாள்.
“அண்ணி” என்றான் அதிர்ச்சியாய்.
“ஏன் எல்லாத்தையும் சொன்ன உன் நொண்ணன் அவரு அப்பாவா ஆகப்போறதை சொல்லலையா?” என்று ஆவேசத்துடன் கேட்டவள்,
“தெரியும் அண்ணி” என்றான் அமைதியாக.
அவனது அமைதியில் கடுப்பனவள், “இனி என்னை பார்க்க வராத கதிர்... போதும். நான் இப்ப தான் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியா இருக்கிறேன். அதை கெடுக்க வேணாம்” என்று அவள் நகரப்போக,
“அப்போ எங்க அண்ணன் நிம்மதியா இருக்க வேணாமா அண்ணி?” என்று வேதனையுடன் கேட்டான்.
“உங்க அண்ணனுக்கு என்ன... அது தான் அவரு நினைச்சது எல்லாம் கிடைச்சிடுச்சே” என்று பொரிந்தாள்.
“அப்படின்னு நீங்களே நினைச்சுக் கிட்டா நான் என்ன பண்றது” என்றவனின் கண்களில் கலங்கி இருக்க, ஏந்திழையாளுக்கு நெஞ்சம் கசங்கிப் போனது.
“என்ன ஆச்சு?” என்று நெஞ்சம் நடுங்க அவனிடம் கேட்டாள்.
“அவரு அவராவே இல்ல அண்ணி... நீங்க போனதுக்கு பிறகு அதிகமா போதை பொருள யூஸ் பண்ணி இப்போ ஹாஸ்பிட்டல்ல இருக்காரு...” என்றான்.
“வாட்?” என்று அவள் அதிர,
“ம்ம் உங்களை மறக்க முடியல போல.. ஏற்கனவே கொக்கின் மருந்து போல தினமும் எடுத்துட்டு தான் இருந்தாரு. நீங்க வந்ததுக்கு பிறகு அதை தொடல. இப்போ மறுபடியும் அவர் எடுத்துட்டு இருக்காரு. டாக்டர் கீர்த்தி கூட சொன்னாங்க இப்படியே போனா அவரோட உயிருக்கே ஆபத்தா போயிடும்னு” என்றான்.
“கதிர்” என்று அவள் அச்சப்பட்டுப் போனாள்.
“அவரு உங்களை ரொம்ப அதிகமா காதலிக்கிறாரு அண்ணி. ஆனா சொல்ல மாட்டிக்கிறாரு... உங்களை எங்கயோ பார்த்து உங்க மேல நேசத்தை வளர்த்துட்டாரு. உங்களை கல்யாணம் பண்ணிக்க உங்க வீட்டுல பொண்ணு கேட்டு போகும் பொழுது ரொம்ப அசிங்கமா அண்ணனை பேசி வச்சுட்டாங்க. அதனால வந்த ஆத்திரத்துல தான் இப்படி எல்லாம் நடந்துக்கிட்டாரு. மத்தபடி உங்களை திருமணம் செய்ய பேச்சு ஆரம்பித்த நாளில் இருந்து உங்களுக்கு எந்த குறையும் இல்லாம அவரு வச்கிக்கிட்டாரு...” என்றான்.
அது தான் அவளுக்குமே தெரியுமே... யாருமே கல்யாண வேலையை செய்ய முன்வராத நேரத்தில் அவனே அவளது வீட்டு வேலையையும் இழுத்து போட்டு செய்து நகை புடவை என எல்லாமே அவன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தானே.. ஊட்டியில் அவள் தனியாக இருக்கும் பொழுது கூட கூட துணைக்கு வந்து இருந்தானே... அதெல்லாம் அப்பொழுது வேற ஒரு பிம்பத்தை கொடுக்க இப்பொழுதோ அவனது காதலை அல்லவா அவளுக்கு உணர்த்துக்கிறது... என்று கலங்கிப் போனாள்.





