ராசசிங்கன் இப்படி தன்னை விட்டு செல்வான் என்று கொஞ்சமும் எதிர் பார்க்காதவள் வேர் வரை ஆடிப் போனாள். முன்பு அவனிடம் சொன்னது எல்லாம் சும்மா தான். ஆனால் ராசசிங்கன் இப்படி தன்னை அம்போ என்று வயிற்று பிள்ளையுடன் போக சொல்லுவான் என்று கனவு கூட காணவில்லை.
தன்னை இத்தனை நாள் அவன் தேடவில்லை... நாடவில்லை... தனக்காக நேரம் ஒதுக்கவில்லை என்ற கோவத்தில் தான் அவனிடம் அப்படி வெடித்தாளே தவிர அவனை மனப்பூர்வமாக அல்லாவா மனதில் சுமந்து நின்றாள். அப்படி பட்டவளை யூஸ் அண்ட் த்ரோவாக தூக்கி எரிய எப்படி அவனுக்கு மனம் வந்தது...
அவ்வளவு தானா... எல்லாமே அவ்வளவு தானா...? இனி எங்களுக்குள் எந்த பாச பந்தமும் இல்லையா..? அப்போ என் கழுத்துல இருக்கிற தாலிக்கு பொருள் என்ன..? என் மனதில் இருக்கும் அவன் மீதான காதலுக்கும் தான் பொருள் என்ன...? என்று தனக்குள் கேட்டுக் கொண்டவளுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.
அதித அதிர்வில் அவளுக்கு எல்லாமே மறுத்துப் போனது போல ஆனது...! காலையில் உண்ணாதது வேறு பிள்ளை உண்டானது வேறு கணவனின் பாராமுகம் வேறு என மூன்றும் சேர்ந்து அவளை மயக்கத்துக்கு ஆளாக்கியது.
அவனது சட்டையை பிடித்து கேள்வி கேட்க எண்ணியவளை மயக்கம் வந்து ஆட்கொள்ள வேரறுந்த மரமாய் அப்படியே தரையில் வீழ்ந்தாள்.
அவள் தரையை தொடும் முன்பே மூவரும் சுதரித்துக் கொண்டு ஏந்திழையாளை பதறி தாங்கிக் கொண்டார்கள் தமையன்கள்..
கண்களை பிரிக்கவே முடியாமல் மிகவும் சிரமப்பட்டு மெல்ல கண் விழித்தாள் ஏந்திழையாள்... மிகவும் பழக்கப்பட்ட அவளது அறை. அவளை சுற்றிலும் அவளது அன்னைமார்களும் அத்தைமார்களும் பாட்டிகளும் சூழ்ந்து இருக்க அவளது விழிகளை சுழட்டி பார்த்தாள். அவளின் தேடுதலுக்கு உரியவன் அங்கு இல்லாமல் போக மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.
“இழை... அம்மாடி கண்ணு” என்று பாக்கியம் அழைக்க, “ம்ம்ம்” என்றவளுக்கு நாக்கு வறண்டுப் போனது.. பேச முடியவில்லை. கண்களையும் திறக்க முடியவில்லை.
“கொஞ்சம் தண்ணி குடுங்க” என்று யாரோ சத்தம் குடுக்க, தேவகி அவசரமாய் அவளுக்கு நீரை புகட்ட மெல்ல ஏந்திழையாளுக்கு தெம்பு வந்தது.
அதன் பிறகே நன்றாக கண்விழித்துப் பார்த்தாள் அனைவரையும். ஈர இதழ்களை பிரித்து அனைவரையும் பார்த்து சிரித்தாள்.
அவளின் சிரிப்பை கண்ட பிறகே அனைவருக்கும் போன உயிர் திரும்பி வந்தது.
“எப்படி டி ராசாத்தி இருக்க” என்று பாக்கியம் அவளை உருவி முத்தம் வைக்க,
“எனக்கு என்ன பாட்டி நான் நல்லா தான் இருக்கேன்... உங்களை எல்லாம் இத்தனை நாள் பார்த்து பேச முடியலன்னு தான் வருத்தம். இனி அதுக்கு வேலையே இல்லை” என்று கண் சிமிட்டி சிரித்தாள்.
அவள் கொண்ட வேதனை கடலளவு. அதை மற்றவர்களிடம் காட்டவா முடியும். தனக்குள் குழித் தோண்டி புதைத்து விட்டு எல்லோரிடமும் இயல்பாக இருக்க முயன்றாள்.
அவளின் இயல்பை பார்த்த பிறகு தான் அனைவருக்கும் பிடித்து வைத்து இருந்த மூச்சையே விட்டார்கள்.
“உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையேடா” என்று சின்ன பாட்டி கேட்க,
“எனக்கு என்ன பாட்டி... நான் நிம்மதியா மூச்சை விடுறேன்... அங்க இருக்கும் போதும் எந்த தொல்லையும் இல்லை. என்ன உங்களை எல்லாம் பார்க்க விடலையே தவிர வேற எந்த வருத்தமும் இல்லை.. நிம்மதியா தான் இருக்கேன்... இருந்தேன்” என்றாள்.
அதை வெளியே இருந்து கேட்டுக் கொண்டு இருந்த கண்ணனும் சுந்தரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“மச்சான் கதிருக்கு நாள் குறிச்சாச்சு...” என்று கண்ணனின் காதில் பெரிய மாமா சொன்னார். அதை கேட்டுக் கொண்ட சுந்தரத்தின் முகம் சிறிது அமைதியானது.
“சீக்கிரம் முடிச்சுடுங்க” என்றார் இவர்.
இரண்டு அண்ணிகளும் ஏந்திழையாளை நலம் விசாரித்து அவளின் கையை பிடித்துக் கொண்டார்கள்.
அவளின் தங்கைகளும் அக்காகக்களும் அத்தை மகளுங்களும் நலன் விசாரிக்க நேரம் ஓடிப்போனதே தெரியவில்லை.
அதிர்ச்சியில் தான் மயக்கமாகினாள் என்று எண்ணிக் கொண்டவர்களுக்கு அவள் கருவுற்று இருக்கிறது யாருக்கும் தெரியாமலே போனது. அதுவும் நல்லதுக்கு தான் என்று எண்ணிக் கொண்ட ஏந்திழையாள் அமைதியாகிப் போனாள் அடுத்து வந்த நாட்கள் எல்லாம்.
தன்னுடைய தனி அறையில் அவள் அசோக வனத்தின் சீதையாக அவள் தவம் இருந்தாள். அவளின் தவத்துக்கு உரியவனோ அவளை திரும்பி கூட பார்க்கவில்லை.
“நான் போனதுக்கு பிறகு ரொம்ப நிம்மதியா இருப்பாரு... என் தொல்லை எதுவும் இல்லாம ஆபிஸ் ஆபிஸ் ன்னு ஆபிசை கட்டிக்கிட்டு அழுவாரு... அது தான் சொத்து எல்லாமே கிடைச்சிடுச்சே இனி நான் எதுக்கு” என்று எண்ணி எண்ணியே தன் கண்ணீரை சிந்தினாள்.
“நான் அவரு மேல வச்ச காதல் அவருக்கு ஏன் என் மேல வரல...” என்று விடை இல்லாத கேள்வியை கேட்டு தன்னை தானே வருத்திக் கொண்டாள்.
தகுதி இல்லாத இடத்தில் தன் மனம் சிக்கிக்கொண்டு அலைப்புருவதை கண்டு தன்னை தானே வெறுத்துக் கொண்டாள். ஆனாலும் சிங்கனின் நினைவுகளில் இருந்து அவளால் மீளவே முடியவில்லையே அவள் என்ன செய்வாள்.
எங்கு காணினும் அவனின் உருவம் அல்லவா அவளுக்கு தென்படுகிறது. எந்த பொருளை பார்த்தாலும் அவனது நினைவு தான் முகிழ்த்து நிற்கிறது. உப்பரிகையில் வந்து நின்ற நேரம் காற்று சற்று அலுத்தமாக வீசினால் கூட ஆணவனின் தொடுகையை அல்லாவா கிளறி விட்டு செல்கிறது.
முற்றிலும் தன் வயம் இழந்து காணப்பட்டாள் இழையாள். ஆனால் அதை மற்றவருக்கு காட்டாமல் இயல்பாய் இருப்பது போல பார்த்துக் கொண்டாள். அவளின் நினைவுகள் எல்லாம் அவளின் தனிமையில் மட்டுமே..
வயிற்றில் இருக்கும் பிள்ளை அவளுக்கு எந்த தொந்தரவும் செய்யாமல் இருக்க மற்றவர்களுக்கு அவள் அவளாகவே இருக்கிறாள் என்று எண்ணினார்கள். ஆனால் அவளின் உள்ளே இருப்பது ராசசிங்கனின் வாரிசு ஆயிற்றே...
எப்பொழுது தன் இருப்பை காண்பிக்க வேண்டுமோ அப்பொழுது உச்ச நிலையில் அதிக வீரியத்துடன் காண்பிப்பான் என்று அறியாமல் போனார்கள்.
மேற்கொண்டு ஒரு வாரம் கடந்த நிலையில் யுகேஷின் மனைவி ஷெண்பாவுக்கு வளைகாப்பு செய்ய நேரம் கூடி வர வீட்டு ஆட்கள் எல்லோரும் அதற்கு உண்டான வேலைகளில் ஈடு பாட்டார்கள்.
வீடே திருவிழா கோலம் பூண தன் வயிற்றை தடவி பார்த்துக் கொண்டாள் இழையாள். என்னவோ சொல்லாத துக்கம் நெஞ்சை கவ்வியது.
கொஞ்ச நாள்களுக்கு முன்னாடி இழையாளுக்கு திருமணம் நடை பெற்றது. அப்பொழுது யாரும் இவ்வளவு பரபரப்பு காட்டவில்லையே.. என்னவோ நெஞ்சம் வாடிப் போனது.
தான் எங்குமே தேவையில்லாத பொருளாக இருப்பது போலவே தோன்றியது. பெரிதாக அறையை விட்டு அவள் வரவில்லை. அறைக்குள்ளே இருந்தாள்.
எவ்வளவு நாட்கள் அப்படியே இருக்க முடியும்... என்னவோ மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது... அடுத்த நாள் காலையில் கோயிலுக்கு போக மனம் உந்தியது...
குளித்து விட்டு புலாரத வேலையில் கதவை திறந்துக் கொண்டு அவள் வெளியே போக,
“எங்க போற இழையாள்” என்று கார்த்திக் வந்து நின்றான் எதிரில்.





