“பின்னாடி மூணு பேரு இடிச்சு பிடிச்சுக்கிட்டு உட்கார முடியாது.. வா.. நேரமாச்சு.. ரேவதி அங்க வெயிட் பண்ணிட்டு இருப்பா” என்றான்.
அவளை மறுக்கவே முடியாத ஒரு நிலையில் வைத்து விட்டான். “ம்ம்” என்று முன்னால் ஏறி அமர்ந்து விட்டாள்.
காமாட்சி இருவரையும் ஒரு பார்வை பார்த்தாரே தவிர எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. துளசிக்கு தான் உள்ளுக்குள் ஒரு குடைச்சலாக இருந்தது.
இதுவரை கதிரவன் பெரிதாக எதற்கும் அலட்டிக் கொண்டதே இல்லை. ஆனால் இந்த பெண்ணின் மீது அவன் காட்டும் தனி கவனம் எல்லோரையும் போல இவளையும் உறுத்தியது. இருந்த பொழுதும் அண்ணின் மீது இருந்த நம்பிக்கை அந்த உறுத்தலை எல்லாம் உதறி தள்ளியது. இயல்பாகவே இருந்தாள் பனியிடம்.
அதே போல ஆராய்ச்சி கண்ணை போட்டு இருவரையும் துளைக்கவில்லை.
கடை வந்து விட்டது. எப்பொழுதும் அவர்கள் வந்து போகும் கடை. முதலில் நகையை பார்த்து விட்டு பிறகு துணி பார்க்க போகலாம் என்று நகை கடைக்கு முதலில் வந்து விட்டான். ரேவதியும் வந்து விட்டார்.
துளசிக்கு ரேவதியும் காமாட்சியும் ஒவ்வொரு நகையாக வைத்து பார்த்துக் கொண்டு இருக்க, துளசி பொம்மை போல அமர்ந்து அனைத்தையும் போட்டு காட்டிக் கொண்டு இருந்தாள்.
பனிக்கு தான் என்ன செய்வது என்று தெரியவில்லை. சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“கண்ணு நீயும் நாலு நகை பாரு... பிடிச்சு இருந்தா எடுத்துக்கலாம்” என்று காமாட்சி அவளை கலைக்க,
“எனக்கு இதை பத்தி எல்லாம் எதுவும் தெரியாது ஆன்டி.. நீங்களே பாருங்களேன்” என்றாள்.
ரேவதி அப்பொழுது தான் அவளை ஆராய்ந்தார். அவளின் கழுத்தில் மட்டும் ஒரு சின்ன சங்கிலி. அதுவும் ஒரு பவுன் தான் இருக்கும். மற்றபடி எல்லாமே பேன்ஸி ஐட்டம் தான். ஆனால் அதுவே அவளுக்கு அவ்வளவு அழகை வாரி குடுத்து இருந்தது..
கதிரவனை திரும்பி பார்த்தார். அவன் தீவிரமாக வேறு செக்ஷனில் நின்று இருந்தான். இவர்களின் பக்கம் வரவே இல்லை.
மெல்ல பனியின் கவனத்தை கவராமல், கதிரவனிடம் வந்து நின்றவர்,
“கதிரவா அந்த பொண்ணுக்கு சங்கிலியை தவிர வேற ஜுவல் எதுவும் இல்லையா?” என்று கேட்டார்.
“ஆமாக்கா.. இதெல்லாம் பாரு..” என்று தான் தேர்ந்து எடுத்து இருந்த நகைகளை காட்டினான்.
எல்லாமே செட் செட்டாக இருந்தது. வளையல், தோடு, சின்ன ஆறம், கழுத்தை ஒட்டிய நெக்லஸ், மோதிரம், ப்ரைச்லேட் என இருந்ததை பார்த்தவர்,
“உனக்கு நகை எல்லாம் செலக்ட் பண்ண தெரியும்னு எனக்கு இப்ப தான் தெரிய வருது பாரேன்” என்று தம்பியை கிண்டல் செய்தவர்,
“தங்கம் வாங்கி குடுக்குற அளவுக்கு முக்கியமான பொண்ணா?” அவரால் கேட்காமல் இருக்க முடியவில்லை. கேட்டுவிட்டார். கேட்டவரை ஆழ்ந்துப் பார்த்த கதிரவன்,
“இந்த தங்கம் எல்லாம் அவ கால் தூசிக்கு சமம் ரேவதி.. இந்த தங்கத்தை போட்டா அவளுக்கு மதிப்பு இல்ல.. இதுக்கு தான் மதிப்பு.. ஏன்னா வைரத்தை தாங்குறதுக்கு தங்கம் தானே பெருமை படணும்” என்றவனின் பேச்சில் மலைத்து நின்றார் அவர்.
என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இந்த அளவுக்கு தம்பியின் மனதில் இடம் பிடித்து இருக்கிறாளா இவள் என்று தோன்றியது.
“நிஜமாவே இது காதல் இல்லையா கதிரவா..?” அவருக்கு விளக்கம் தேவை பட்டது.
“இது அதுக்கும் மேல உள்ள பந்தம் க்கா.. காதல்னு சொல்லி கீழ இறக்கிடாத” என்றான் கண்டிப்புடன். அவனது கண்களில் தெரிந்த உண்மையில் சட்டென்று தன் சந்தேகத்தை விடுத்து,
“இரு நானும் அவளுக்கு பாக்கிறேன்” என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.
“உன் தங்கச்சிக்கு பார்க்க வந்தோம்” என்றான் சன்ன புன்னகையோடு..
“அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதுவும் ஒரு பக்கம் இருக்கட்டுமே.. இப்ப என்னவாம் நானும் அவளுக்கு எடுக்குறேன்.. அவ உன் சொந்தத்தை மட்டும் தான் ஏத்துக்குவாளா? நான் உன் அக்கா தானே.. அதனால நானும் கொஞ்சமே கொஞ்சம் அவளை பங்கு போட்டுக்குறேன்” என்று சிரித்தவர் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தார் பனிக்கு.
--
ரேவதி ரெண்டு செட் எடுத்தார். “இது பாரு கதிரவா” என்று அவனிடமும் ஆலோசனை கேட்டார்.
“அவ கழுத்துல வச்சு பாருக்கா” என்றான்.
“இரு அவளை கூட்டிட்டு வரேன்” என ரேவதி போக,
“தேவையில்லை நீ இரு” என்றவன்,
“பனி” என்று இருந்த இடத்தில் இருந்தே அழைத்தான். அந்த ப்ளோரே அமைதியில் மிதந்து இருக்க, அதில் இவன் அழைத்த சத்தம் மட்டும் இடியென கேட்டது.
அவன் அழைக்கவும் திடுக்கிட்டுப் போனார்கள் எல்லோரும். அனைவரும் கதிரவனை திரும்பி பார்த்தார்கள்.
பனியும் திடுக்கிடலுடன் திரும்பி பார்த்தாள். “இங்க வா..” என்றான்.
“தேவையா இது” என்பது போல அவள் பார்க்க,
“போம்மா தம்பி கூப்பிடுறான் பாரு” என்று அவளை அனுப்ப, எழுந்துப் போனாள்.
வந்தவளிடம் இதெல்லாம் அவன் காட்ட,
“எனக்கு இதை பத்தி எதுவும் தெரியாது.. நீங்களே பாருங்களேன்” என்றவளை சட்டை செய்யாது,
“இதை போட்டு பாரு” என்றான்.
“ஹாங்..” திகைத்தவள்,
“சித்...” என்று சொல்ல வந்தவள், அருகில் ரேவதி நிற்பதை பார்த்து, “து.. துளசி தானே போட்டு பார்க்கணும். இருங்க அவங்களை கூப்பிடுறேன்” என்றவளை மறித்து,
“இதெல்லாம் உனக்கு செலக்ட் பண்ணது நிலா.. போட்டு பாரு” என்றான்.
“வாட்?” என்று அதிர்ந்தவள்,
“திசிஸ் டூ மச் கதிரவன்.. உங்க லிமிட்டை நீங்க அளவுக்கு அதிகமாவே க்ராஸ் பண்றீங்க..” பட்டென்று கோவப்பட்டவளை பார்த்தார் ரேவதி.
“என் லிமிட் எதுன்னு எனக்கு தெரியும் நிலா. நீ சொன்னதை செய்” என்றான்.
“என்ன விளையாடுறீங்களா? சேரி மட்டும் தானே வாங்க கூட்டிட்டு வந்தீங்க.. இப்ப என்ன நகை அது இதுன்னுட்டு.. இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை கதிரவன்” என்றவளை இடை மறித்து,
“என் தம்பியை நீ பேர் சொல்லி தான் கூப்பிடுவியா பனி” என ரேவதி அவளிடம் நேரடியாக கேட்க, திகைத்துப் போனாள்.
“அது சாரிங்க.. இனி கூப்பிடல” என்றாள் உடனடியாக.
“நான் கூப்பிட வேணான்னு சொல்லையே.. பேர் சொல்லி கூப்பிடுவியான்னு தான் கேட்டேன்” என்றவர் அவளுக்கு பின்னாடி வந்து நகைகளை போட்டு விட ஆரம்பிக்க,
“ஐயோ ப்ளீஸ்.. மேடம் இதெல்லாம் வேணாமே.. ஒரு மாதிரி இருக்கு.. ப்ளீஸ்” என்றவளின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல்,
“அந்த ஷாலை ஒன் சைடா போடு” என்றவர் அவளுக்கு அவரே போட்டு விட்டுட்டு நகைகள் எப்படி அவளின் கழுத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறதா என்று பார்த்தார்.
“இந்த இரண்டு சரம் இருக்க நெக்லஸ் அழகா இருக்கு இல்ல கதிரவா” தம்பியிடம் கேட்டார்.
“மேடம் ப்ளீஸ்..” என்றவளை, இருவரும் சட்டை செய்யவே இல்லை.
“அதை விட இந்த ஒற்றை வரி வைர நெக்லஸ் அழகா இருக்கும் ரேவதி” என்று தன் கையில் எடுத்து, “இத போட்டு பாரு” என்றான்.
இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு பனி தான் முழித்துக் கொண்டு இருந்தாள்.
பனியின் கழுத்தில் நகை வைத்து பார்க்கவும் துளசியும் காமாட்சியும் வந்து விட்டார்.
“அழகா இருக்கே கண்ணு.. உனக்கு எது பிடிச்சு இருக்கோ எடுத்துக்கடா” என்று ஆசையாக சொன்னவரின் அன்பில் சட்டென்று கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு.





