அவளின் நீண்ட மௌனத்தை கலைத்த கதிரவன்,
“நீ என் பேச்சை நம்பலன்னு எனக்கு தெரியும்.. இட்ஸ் ஓகே.. பட் நீ எப்பவும் இந்த வீட்டு ராணி தான்” என்றான்.
அவனை மறுத்துப் பேசவில்லை பனி.
“சரி இதை சூடா குடிச்சுட்டு போய் தூங்கு.. நாளைக்கு சொன்ன மாதிரி கிளம்பி வா” என்று விட்டு கீழே இறங்கிப் போய் விட்டான்.
போகும் அவனை ஒரு நொடி பார்த்தவள், பெருமூச்சு விட்டாள்.
அடுத்த நாள் காலையிலும் மங்கையின் குடும்பமும் ரேவதியின் குடும்பமும் பெரிய வீட்டில் தான் இருந்தார்கள்.
அதனால் காலையிலேயே மத்தியத்துக்கும் சமைக்க ஆரம்பித்த காமாட்சியை தோண்டி துருவி எடுத்தார்கள் மங்கையும் கலாவும்.
“தம்பி தான் அந்த பொண்ணை கூட்டிட்டு போய் துணிமணி வாங்கி குடுக்க சொன்னாப்பல. அதுக்கு தான் இப்பவே சமைச்சு வச்சுட்டன்னா பன்னண்டு மணிக்கு போக சரியாக இருக்கும்னு” என்றவரை வெளிப்படையாக முறைத்தார் மங்கை.
“அண்ணி நீங்க ரொம்ப ஓவரா பண்றீங்க.. அந்த பொண்ணுக்கு ரொம்ப இடம் குடுக்குறீங்க” என்றார் ஏக கடுப்புடன்.
“ஆமா அக்கா.. நம்ம காசுல ஏன் அந்த பொண்ணுக்கு துணி வாங்கி குடுக்கணும். முதல்ல அந்த பொண்ணு யாரு.. முதல்ல அதுக்கு பதில் சொல்ல சொல்லுங்கா உங்கா மகனை. அதுக்கு பிறகு இந்த துணி வாங்கி குடுக்குறது மணி வாங்கி குடுக்குறதெல்லாம் பார்த்துக்கலாம்” என்று கலா வேறு வரிந்துக் கட்டிக் கொண்டு வர, காலையிலையே தலையை பிடிக்க வைத்தார்கள் இருவரும்.
“இதென்ன இப்படி பண்றாங்க.. ஒரு துணி வாங்கி குடுக்க கூட இந்த அக்காப்போரா..” மனதில் எண்ணியவருக்கு அத்தனை ஆயாசமாக இருந்தது.
“அய்யா சொன்னா அவனை போய் கேட்கிறதை விட்டுட்டு இவக்கிட்ட எதுக்குடி ரெண்டு பேரும் மல்லுக்கு நிக்கிறீங்க.. நீங்களும் வேலை பார்க்க மாட்டீங்க.. பார்க்கிற அவளையும் கூட்டி வச்சு பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்கீங்க” விசாலம் தான் சத்தம் போட்டு இருவரையும் விரட்டி விட்டவர்,
“நீ இன்கா இருந்தா இவளுங்க மறுபடியும் வம்பிழுக்க வருவாளுங்க.. நீ உன் அறைக்கு போ.. நான் இங்க ஆளுங்களை வச்சு பார்த்துக்குறேன்” என்றார்.
“நீங்க மட்டும் ஒத்தையா என்ன அத்தை பண்ணுவீங்க. நானும் இருக்கிறேன்” என்ற காமாட்சியை அதட்டி அவரின் அறைக்கு அனுப்பினார்.
“ஆளான நாள் முதல்ல இந்த அடுப்படியை கட்டி ஆண்டவா.. இடையில இவ ஒரு பத்து இருபது வருசம் வந்து செஞ்சா எல்லாம் மறந்து போயிடுவமாக்கும்.. வந்துட்டா பெருசா.. இன்னைக்கு ஒரு நாள் இதை எல்லாம் நான் கவனிச்சுக்கிட்டா கொறைஞ்சா போயிடுவேன்” என்று முணகிக் கொண்டே வேலையாட்களை வைத்து வேலையை வாங்கிக் கொண்டார்.
தள்ளாமை தான். ஆனால் அந்த அளவுக்கு எல்லாம் இல்லை. ஐம்பது வயதில் இருப்பவர் போல தான் இருந்தார் இப்பொழுதும் விசாலம். அந்த காலத்து கெட்டி உடம்பு.. அவ்வளவு சீக்கிரம் தளர்ந்துப் போய் விடுமாக்கும்.. இன்னும் ரெண்டு மூன்று தலைமுறையை கூட பார்க்கும் தெம்பு அவருக்கு இருக்கிறது.
அறைக்குள் வந்து அமர்ந்த காமாட்சியிடம் துளசி வந்தாள் அம்மா என்று.
“கிளம்பு துளசி.. மணி இப்பவே பதினொன்னு” என்றார்.
“சரிம்மா” என்றவள், “அந்த பொண்ணுக்கிட்ட சொல்லிட்டீங்களா?” கேட்டாள்.
“காலையில சாப்பிட வரும்பொழுது சொன்னேன்.. இப்ப ஒரு எட்டு நீ போய் சொல்லிட்டு வந்திடுறியா?” கேட்டார்.
அவளின் தயக்கத்தை பார்த்து,
“என்னால முடியல துளசி.. உன் அத்தையும் சித்தியும் என்னை கேள்வி மேல கேட்டு படுத்தி எடுத்துட்டாங்க” என்றார் கலங்கிய முகமாய்.
“ம்மா இதுக்கு எதுக்கு ரெக்வெஸ்ட் பண்ற மாதிரி கேக்குறீங்க. நான் போய் சொல்லிட்டு வரேன். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. அக்கா என்ன சொன்னாங்க” கேட்டாள்.
“கார்ல கிளம்பும் போது சொல்ல சொன்னா.. பேங்க்ல இருந்து அப்படியே வந்திடுறேன்னா”
“சரிம்மா.. நீங்க கொஞ்ச நேரம் படுங்க.. நேரம் இருக்கு தானே.. அதுக்குள்ள நாங்க ரெண்டு பேரும் கிளம்பி வந்திடுறோம்” என்றவள் ஏசியை ஆன் பண்ணி விட்டுட்டு வெளியே கதவை சாற்றி விட்டு மேலே சென்றாள்.
தயங்கி தயங்கி பனியின் கதவை தட்டினாள் துளசி. வேகமாய் வந்து கதவை திறந்தாள்.
வெளியே துளசி நிற்பதை பார்த்து ஒரு கணம் திகைத்தவள்,
“வா.. வாங்க” என்று விலகி நின்று உள்ளே வரவேற்றாள்.
அவளிடம் பேச துளசிக்கு பெரும் தயக்கம் தான். ஆனால் ரேவதியே காலையில் சொல்லிவிட்டு சென்று இருந்தார்.
“கதிரவனுக்கு ரொம்ப தெரிஞ்ச பொண்ணு போல துளசி.. மத்தவங்களை மாதிரி அந்த பொண்ணை ஒதுக்கி வைக்காத. தப்பாவும் நினைக்காத” என்று இருந்தார்.
அதனால் அவளை தேடி தானே வந்து விட்டாள் துளசி. என்ன மிஞ்சி போனா இவளுக்கு அவளுக்கும் ஒரு மூணு இல்ல நாலு வயசு தான் வித்யாசம் இருக்கும்..
மகா இவளை விட சின்னவ.. அவளுடனே தனக்கு ஒத்துப் போகும் பொழுது இவளுடன் நட்பு பாராட்ட என்ன தடை வந்துவிடப் போகிறது என்று எண்ணியவள், பனியை பார்த்து சிரித்தாள்.
பனிக்கு பெரும் தயக்கம் இருந்த பொழுதும் அளவாய் அவளை பார்த்து புன்னகைத்தாள்.
“என் பெயர் துளசி.. கதிரவன் அண்ணாவோட தங்கச்சி” என்றாள் தன்னை அறிமுகப் படுத்தும் நோக்கோடு.
“தெரியும் அவங்க சொல்லி இருக்காங்க” என்றாள்.
“உன் பெயர் சொல்ல மாட்டியா?” இலகுவாக அவளுடன் பழக,
“பனிநிலவு” என்றாள்.
“பனிநிலவு.. நல்ல பெயர்..” என்ற துளசி,
“நீ என்னை பேர் சொல்லியே கூப்பிடலாம் பனி.. என்னைவிட மூணு நாலு வயசு தான் கம்மியா இருப்ப.. அதனால தாராளமா பெயர் சொல்லி கூப்பிடு..” என்றாள்.
“ஹும்” என்று மட்டும் சொல்ல,
“உன் வாயில இருந்து வார்த்தையை புடுங்கனும் போலையே பனி.. இயல்பா பேசி பழகு..” என்றவளுக்கு தலையை ஆட்ட,
“சுத்தம்” என்று சிரித்த துளசி,
“பன்னண்டு மணிக்கு கிளம்பு பனி.. போகலாம்” என்றாள்.
“நான் வரலையே ப்ளீஸ்..” என்று கெஞ்சியவளை பார்த்து “அண்ணன் கிட்ட பதில் பேச முடியாது பனி.. நீ கிளம்பி தான் வரணும்.. நமக்கு அண்ணன் ஆப்ஷனே குடுக்க மாட்டாரு” என்றாள்.
அவர்களுடன் வெளியே போக தயக்கமாக இருந்தது. அதுவும் தாகமாக இருக்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கீழே இறங்கி வந்தாள். அங்கே காமாட்சியிடம் மங்கையும் கலாவும் தன்னை பற்றி பேசியதை கேட்டு மிகவும் வேதனை பட்டுப் போனாள்.
தன் வேதனையை முழுங்கிக் கொண்டு தன் அறைக்குள் அடைந்துக் கொண்டாள். இப்பொழுது துளசி வந்து கூப்பிட, அவர்களுடன் கிளம்ப மனமே வரவில்லை.
ஆனால் கதிரவனின் சொல்லுக்கு கீழ் படிந்து தான் ஆக வேண்டும் என்று கண்னுக்கு தெரியாத கட்டளை இருக்க, சரி என்று தலையை ஆட்டினாள்.
“குட்.. கிளம்பி இரு.. வந்து கூப்பிட்டுக்குறேன்” என்றவள் கிளம்பி வர துளசி சென்றாள்.
அதன் பிறகு மூவரும் கிளம்பி வெளியே வர, சரியாக கதிரவன் வந்து நின்றான்.
“தம்பி நீ” என்று காமட்சி திகைக்க,
“ட்ரைவர் வேணாம் நானே வரேன்.. வந்து ஏறுங்க” என்று சொல்ல, மூவரும் ஒன்றும் சொல்லாமல் காரில் ஏறிக் கொண்டார்கள்.
அதுவும் ஏறும்முன் “துளசி அம்மாவோட பின்னாடி உட்கார்ந்துக்க” என்றவன், பனியிடம் “முன்னாடி வந்து ஏறு” என்றான்.
இவளுக்கு தான் பெரிதும் சங்கடமாக போய் விட்டது. “இல்ல நான் பின்னாடி இருக்கனே” என்று அவள் தடுமாற,
“பின்னாடி மூணு பேரு இடிச்சு பிடிச்சுக்கிட்டு உட்கார முடியாது.. வா.. நேரமாச்சு.. ரேவதி அங்க வெயிட் பண்ணிட்டு இருப்பா” என்றான்.
அவளை மறுக்கவே முடியாத ஒரு நிலையில் வைத்து விட்டான். “ம்ம்” என்று முன்னால் ஏறி அமர்ந்து விட்டாள்.





