“ச்சீ உயிரோட இருக்குற மனுசனை போய் எரிக்க சொல்றானே.. இவனெல்லாம் ஒரு மனுசனா.. அந்த மனுசருக்காக ஒரு கூட்டமே வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கிட்டு இருக்காங்க. இவன் என்னன்னா இப்படி சொத்துக்கு ஆசைப்பட்டு எரிக்க சொல்றானே..” என்று மனம் குமைந்துப் போனாள்.
“என்னம்மா இங்க என்ன பண்ற.. அங்க உன் தங்கச்சி கூப்பிடுறா பாரு” நர்ஸ் வந்து சொல்ல, வேகமாய் ஓடினாள் அதிரல். அதன் பிறகு செல்வா பேசியதை பத்தி யோசிக்கவே இல்லை.
தங்கை முழுமையாக ரெக்கவர் ஆகி வர, இங்கே இவளுடைய ப்ரீயட் டேட்ஸ் பார்த்து செக் பண்ணி எக் சரியாக வளர்ந்து வருவதை விடாமல் மானிட்டர் செய்து என ட்ரீட்மென்ட் ஆரம்பம் ஆனது. சரியாக அவளின் ப்ரியட்சில் இருந்து பதிமூன்றாம் நாள் எக் வெடிக்கும் நிலையில் இருந்தது.
அன்று இரவு ப்ராசஸ் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட இரவுக்காக காத்துக் கொண்டு இருந்தாள் அதிரல்.
தங்கையை தூங்க வைத்து விட்டு அவள் அமர்ந்து இருக்க, அந்த மருத்துவரே நேராக வந்து அவளை அழைத்துக் கொண்டு போனார்.
“ஜஸ்ட் ஒரு மணி நேரம் தான்” என்று மருத்துவர் சொல்ல, தலையை ஆட்டிக் கொண்டாள்.
அவளை நார்மல் ஆக்க கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்தவர், நர்சை அழைத்து தயார் படுத்த சொல்ல, எழுந்து சென்றாள் அதிரல்.
“மேடம் பேண்டை கழட்டிட்டு படுங்க” என்று நர்ஸ் சொல்ல, நெஞ்சுக்குள் பயம் பிடித்துக் கொண்டது.
“சிஸ்டர்” என்று அவள் தயங்க,
“இங்க எல்லாருமே கேர்ல்ஸ் தான். பயப்படாதீங்க.. ஐவிஎப் பண்ணனும்னா பேன்ட் ரிமூவ் பண்ணி தான் ஆகணும்” என்றவர்,
“ஆமா உங்க ஹஸ்பென்ட் வரலையா?” என்று கேட்டார்.
“இல்ல சிஸ்டர்..” என்று அவள் சொல்ல,
“எப்படி உங்க ஹஸ்பென்ட் வராம ஐவிஎப் பண்ண டாக்டர் சம்மதிச்சாங்க” வியந்துப் போனார்.
வெற்றி, ஐவிஎப் செய்யும் குழந்தை பேறு மருத்துவர் என இவர்கள் இருவருக்கு மட்டும் தான் தெரியும். தீரனின் உயிரணுவை அதிரலின் கர்ப்பப்பையில் செலுத்தப் போகிறார்கள் என்று.
மற்றபடி வேறு யாருக்கும் தெரியாது. அவளின் பைலை தானே பார்த்துக் கொண்டார் மருத்துவர்.
அதிரலை ஐ.வி.எப் செய்யும் சீட்டில் படுக்க வைத்து விட்டு, மருத்துவரிடம் வந்து “மேடம் அந்த பேஷண்ட்டோட பைல்” என்று கேட்க,
“நான் வரும் பொழுது கொண்டு வரேன்.. பேஷண்ட்டை ரெடி பண்ணிட்டீங்களா?” கேட்டவர், அதிரலின் பைலில் சில குறிப்புகளை எழுதி விட்டு தன் கையோடு எடுத்துக் கொண்டு அதிரல் இருக்கும் அறைக்கு வந்தார்.
இதோ அதோ என்று அதிரல் பயந்துக் கொண்டு இருந்த நேரம் வந்தது. நீண்ட ஊசியின் மூலம் தீரனின் உயிரணுவை எடுத்து அதிரலின் கர்ப்பையில் செலுத்தி மானிட்டரை பார்த்தார்.
ஒன்றுக்கு மூன்று நான்கு உயிரணுக்கள் உள்ளே இருப்பதை உறுதி செய்துக் கொண்டு, அதை அதிரலிடமும் காட்டினார்.
இங்கே இந்த ப்ராசஸ் போய்க் கொண்டு இருக்க, அங்கே தீரனின் உடல் நிலை இன்னும் மோசமாக மாறியது. அவனின் உடல் தூக்கி தூக்கிப் போட மருத்துவர்கள் எல்லோரும் கையை விரித்து விட்டார்கள் இனி எதுவும் செய்ய முடியாது என்று.
--
அதிரலின் வயிற்றுக்குள் தீரனின் உயிரணுவை செலுத்திய நேரத்தில் தீரனின் உடல் நிலை இன்னும் மோசமாகி தூக்கி தூக்கிப் போட ஆரம்பிக்க பரபரப்பாய் அந்த கட்டத்தில் உள்ள அத்தனை மருத்துவர்களும் விரைந்து வந்து தீரனை பரிசோதித்துப் பார்த்தார்கள்.
ஆனால் ஒருவரால் கூட தீரனை காப்பாற்ற முடியவில்லை..
“சாரு இறுதி கட்டத்துல இருக்காரு.. இனி கடவுளை மட்டும் தான் நாம நம்பனும்” என்று வயதில் மூத்த மருத்துவர் சொல்ல,
“அப்போ டாக்டர் கோட் போட்ட நீங்க எதுக்கு இருக்கீங்க.. நாலஞ்சி பட்டம் வாங்குனீகளே அதெல்லாம் பொய்யா.. என் அண்ணனை காப்பாத்தி தரலன்னா உங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன்” ஆத்திரத்தில் வெற்றி குதித்தான்.
அவனை அடக்கவே பெரும்பாடு பட்டுப் போனார்கள் வீட்டில் உள்ளவர்கள்.
“உங்க வேதனை புரியுது சார். ஆனா பெரிய சாரை காப்பாற்ற நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டோம். நாங்க குடுக்குற எந்த மருந்தையும் பெரிய சாரோட உடம்பு ஏத்துக்க மாட்டிக்கிதே. மருந்து உள்ள போய் வேலை செஞ்சா இந்த பிரச்சனையே இல்லையே சார்..” என்று அவரும் வேதனையுடன் சொல்ல, வெற்றிக்கு கண்களில் இருந்தது கண்ணீர் வந்து விட்டது.
“அப்போ இனி என் அண்ணன் எனக்கு இல்லையா?” நெஞ்சை கவ்விப் பிடித்தது துக்கம்.
“ப்ளீஸ் டாக்டர் எங்களோட ஒரே ஆதரவு எங்க அண்ணன் மட்டும் தன். இப்போல இருந்து உங்க எல்லோருக்கும் டபிள் பேமென்ட் தரேன்.. எங்க அண்ணனை எப்படியாவது காப்பத்தி குடுங்க” என்று கூறும் மகனை கண்டு ஆளவந்தானுக்கு கண்கள் கலங்கியது. தீரனின் இரண்டு தங்கைகளும் கண்ணீரில் தான் மிதந்துக் கொண்டு இருந்தார்கள்.
தேவகியோ அரை குறை உயிரோடு நடந்துக் கொண்டு இருப்பதை கொஞ்சமும் அவதானிக்கக் கூட முடியாமல் முற்றும் உடைந்துப் போய் அமர்ந்து இருந்தார்.
சித்த பிரம்மை பிடித்தது போல அவரின் நிலை இருந்தது. அவரை மீட்டு எடுக்கும் சக்தி “உங்க மகனை காப்பாத்திடலாம்” என்கிற சொற்கள் மட்டுமே. அந்த சொற்களை யாராவது உதிர்த்து விட மாட்டாங்களா என்று ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.
“சார் நீங்க இதெல்லாம் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லை. பெரிய சார் எங்களுக்கு என்ன வேணுமோ அதில் எந்த குறையும் வைத்தது இல்லை. எல்லாவற்றையும் நிறைவாக செய்து இருக்கிறார்” என்ற மருத்துவர்,
“கடைசி முயற்சி ஒன்னு இருக்கு சார், நாளைக்கு இங்க ஒன்பது மணிக்கு ஒரு கான்பரென்ஸ் மீட்டிங் இருக்கு. அதுல வெளிநாட்டுல இருந்து ஒரு மருத்துவர் தலைமை தாங்க வராரு.. அவரை பிடிச்சா ஒரு சான்ஸ் இருக்கு. ட்ரை பண்ணலாம்” என்றார்.
“இப்போ அவரு எங்க இருக்காரு” வெற்றி அவசரமாக பரபரப்புடன் கேட்டான்.
“அவரு இன்னும் லேண்டு ஆகல சார்.. மே பீ நைட் டுவல்க்கு வருவாருன்னு நினைக்கிறேன்” என்றவரிடம் அவரை பற்றிய முழு தகவலும் வாங்கிக் கொண்டவன்,
“ப்பா இங்க அண்ணனை பார்த்துக்கோங்க.. நான் போய் அந்த டாக்டரை கூட்டிட்டு வரேன்” என்று சிட்டாய் பறந்து விட்டான் வெற்றி.
“ஆனா சார் இப்பவும் நம்பிக்கை குடுக்க முடியாது” என்று மருத்துவர் சொல்ல,
“அப்படி சொல்லாதீங்க டாக்டர்.. எங்க வாழ்க்கையே எங்க மகனை நம்பி தான். அவன் இல்லாத ஒரு வாழ்க்கையை எங்களால நினைச்சுக் கூட பார்க்க முடியாது. அவன் எப்படியும் பிழைச்சு வருவான். ஏன்னா அவன் ஒரு போராளி. அவன் வாழ்க்கையில எவ்வளவோ போராட்டங்களை பார்த்து எதிர் நீச்சல் போட்டு தான் இந்த இடத்துல இவ்வளவு பெரிய பொசிஷன்ல வந்து நின்னுருக்கான். அதனால அவன் கிட்ட இயல்பாவே போராட்ட குணம் இருக்கு. அவ்வளவு ஈசியா எல்லாம் அவன் உயிரை விட்டுட்ட மாட்டான்” கண்கள் கலங்கி சொன்ன ஆளவந்தானின் கூற்றில் இருந்த உண்மையை அனைவரும் ஒப்புக் கொண்டார்கள்.
ஏனெனில் தீத்திரள் தீரனின் குணமே அது தான். எதை அடைய வேண்டும் என்றாலும் அவனுக்குள் இருக்கும் போராட்ட குணம் அவனை தூங்கவே விடாது. அதை அடைந்த பிறகு தான் ஓய்வே எடுப்பான். அப்படி பட்டவன் தன் உயிரை அவ்வளவு எளிதாக விட்டு விடுவானா என்ன..





