--
“நான் எப்படியும் என் பிள்ளையை நல்லபடியா வளர்த்துடுவேன், எந்த குறையும் அவனுக்கு இல்லாம தெரியாம வளர்த்துடுவேன்னு இறுமாப்புடன் இருந்தேன்” என்று அவன் தன்னை மறந்து அவளிடம் புலம்ப,
“ப்ளீஸ் ரிலாக்ஸ் கங்குவன்.. கண்ணா உங்களை தான் பார்த்துட்டு இருக்கான்.. ப்ளீஸ் உடைஞ்சி போயிடாதீங்க. ஸ்டே ஸ்ட்ராங்” என்றாள்.
“இப்போ நான் அவனை எப்படி பேஸ் பண்ணுவேன். எப்படி நான் அவன் முகத்தை ஏறெடுத்துப் பார்ப்பேன்.. ஐயோ என் நெஞ்சே வெடிக்கிற மாதிரி இருக்குடி.. இதெல்லாம் தெருஞ்சுக்க வேண்டிய வயசா அவனோட வயசு.. இன்னும் எழுந்து நடக்கவே தெரியாத வயசுடி அவனோடது.. காட்.. என் பிள்ளை எப்படி தவிச்சு போய் இருப்பானோ” கண்கள் கலங்க தலையை இறுக்கமாக பற்றிக் கொண்டவனுக்கு இந்த நிமிடங்களை அவன் கடந்து வரவே முடியவில்லை.
அவனை இப்படி உடைந்து போன நிலையில் பார்க்க பார்க்க வேரலுக்கு தாங்க முடியவில்லை.
“கங்குவன் இங்க பாருங்க” என்று அவனை தேற்ற பார்க்க, அவனால் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொண்டு வெளியே வரவே முடியவில்லை.
“ப்ச் இப்படி பண்ணா அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க முடியாது. உங்க மகனை இந்த நிலைக்கு கொண்டு வந்தவங்களை சும்மா விட போறீங்களா? இல்ல உங்க மனம் குளிர அவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போறீங்க?” அவனை திசை திருப்பி விட்டாள்.
“ஆமால்ல” என்று கண்களை அழுத்தமாக துடைத்துக் கொண்டவன்,
“நீ நீ கொஞ்ச நேரம் உன் வீட்டுல என் மகனை வச்கிக்குரியா?” அதை கேட்கவே அத்தனை தயக்கமாக இருந்தது.
“இதென்ன கேள்வி... இன்னைக்கு ஒரு நாள் இவன் என் கூடவே இருக்கட்டும். நாளைக்கு வந்து நீங்க கூப்பிட்டுக்கோங்க” என்றவள்,
“அவங்க சாக்கடை” என்றாள்.
“இவ்வளவு நடத்தி இருக்காங்களே பின்ன அவங்க சாக்கடை இல்லாம வேற யாரா இருக்க முடியும்” என்று சொன்னவன்,
“சரி நீ கிளம்பு” என்றான்.
“ம்ம்” என்றவள் சமரனை வெளியே அழைத்து அவனிடம் என்ன சொன்னாளோ வேகமாய் அவனின் தந்தையிடம் ஓடி இரு கையையும் நீட்டினான் பிள்ளை.
அது எதற்கான அறிகுறி என்று தெரியாதா? உடனே பிள்ளையை தூக்கிக் கொண்டான்.
தந்தையின் உயரத்துக்கு வந்த பிள்ளை அவனின் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு திரும்பி வேரலை பார்த்தான்.
சொன்னதை செய்யும் கிளி பிள்ளை போல வேரல் சொல்லிக் கொடுத்ததை அப்படியே அச்சு பிசகாமல் செய்து விட்டு அவளை திரும்பி பார்த்தான்.
கங்குவன் முதல் முறையாக தன் மகனிடம் இருந்து கிடைத்த முத்தத்தில் தன்னையே தொலைந்துப் போய் மகனை தன் தோளோடு இறுக்கமாக அணைத்து நின்றான் சில நிமிடங்கள்.
“போகணும்” என்றான் தந்தையிடம். கங்குவனுக்கு பிள்ளையை இறக்கி விட மனமே வரவில்லை.
“வலிக்கிது” என்றான். அப்பொழுது தான் பிள்ளையை மிக இறுக்கமாக பற்றி இருக்கிறோம் என்று உணர்ந்து அணைப்பை தளர்த்தினான். அதில் கிடுகிடுவென்று இறங்கி வேரலிடம் ஓடி விட்டான்.
போனவன் அவளின் முகத்தை பார்த்து நிற்க, அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.
“சொன்னதை செஞ்சதால சாருக்கு கிஸ் வேணுமா?” என்று அவனின் உயரத்துக்கு மண்டியிட்டு அமர்ந்தாள்.
“தரேன்னு சொன்னீங்க தானே” மழலையில் அவன் பாவம் போல கேட்க உருகிப் போனாள் வேரல்.
“உனக்கு இல்லாததா கண்ணா வாரி தரேன்” என்று அவனின் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமாய் பொழிந்தாள்.
இருவரின் பிணைப்பையும் ஒரு கணம் நின்று பார்த்தவன், காரில் பட்டென்று ஏறிக் கொண்டான்.
ஏறியவனுக்கு காரை நகர்த்த முடியவில்லை. இருள் சூழ்ந்த இடத்தில் இருவரையும் தனியே விட மனமில்லை.
“போதும் கொஞ்சுனது கார்ல ஏறுங்க” அதட்டினான்.
உடனே மகனின் முகம் வாடிப் போனது.
“இல்லடா கண்ணா இருட்டு நேரம் இல்லையா? பாம்பு பூச்சி எதுவும் வந்தா என்ன பண்றதுன்னு தான் டேடி கார்ல ஏற சொல்லி சொன்னாங்க. சமத்தா ஏறுவியாம். ஆன்டி உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சு இருக்கேன். அதை ரிவில் பண்ணுவேனாம்” என்று சொன்ன உடனே பிள்ளை ஏறி அமர்ந்துக் கொண்டான்.
அவனை ஒரு பார்வை பார்த்த வேரல்,
“நான் பார்த்துக்குறேன் சார்... நீங்க பீனிஷ் பண்ணிட்டு சொல்லுங்க..” என்று காரில் ஏறி தன் வீட்டுக்கு சென்றாள்.
இங்கே வீட்டுக்கு அதி வேகத்துடன் வந்த கங்குவன் அந்த வீடே அதிரும்படி முழங்க,
“காம் மிஸ்டர் கங்குவன்..” என்றபடி ஒரு ஆடவன் உள்ளே நுழைந்தான்.
“நீ.. நீங்க” என்று கங்குவன் தன் சினத்தை ஓரம் கட்டி விட்டு அவனை விசாரிக்க,
“ஐ ஆம் இளந்திரையன்.. ஏசிபி” என்றபடி கையை நீட்டினான்.
அவனிடம் கையை கொடுத்த கங்குவன்,
“வேர்ல அண்ணனா” என்றான்.
“ம்ம் கார்ல் வரும் பொழுதே போன் பண்ணி இன்பாம் பண்ணா.. அது தான் ஹாப் டியூட்டில இருந்து அப்படியே வந்துட்டேன்” என்றான் சிநேகமாய்.
“ஆனா” என்று அவன் தடுமாற,
“நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன் கங்குவன்.. இத நீங்க ஹேண்டில் பண்ணி உங்க கையை கரையாக்கிக்க வேண்டாம்..”
“திரையன் ஆனா அவங்களை எப்படி சும்மா விடுறது”
“யாரு சும்மா விடப்போறா.. நான் என்ன செய்யிறேன்னு என் கூட இருந்து பாருங்க”
“ப்ச் எனக்கு நரம்பெல்லாம் முறுக்கிக்கிட்டு வருது திரையன்”
“வெயிட் பண்ணுங்க.. இப்படி குழந்தையை வச்சு அப்யூஸ் பண்ற கேஸ் நிறைய இருக்கு.. அவங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வீட்டுல அதுக்கு துணை போன ஆளுங்களையும் பிடிச்சு லாடம் கட்டிடலாம்..” என்றவன் அதற்கு உண்டான வேலைகளை பார்க்க தொடங்கினான்.





