“தப்பு தப்பு.. நீ என்னோட மருமகன்.. எனக்கு மச்சான்.. என் பேரப்பிள்ளைகளோட அப்பா” அவர் அடுக்கிக் கொண்டே போக, கீழே இருந்து கேட்டுக் கொண்டு இருந்த ரேவதிக்கும் அத்தனை நெகிழ்வு தன் தம்பியின் மீது. மகளை தன்னோடு இறுக்கமாக சேர்த்து அணைத்துக் கொண்டார். துளசியும் அவர்களோடு இணைந்துக் கொண்டாள் நெகிழ்ந்த மனதுடன்.
அடுத்த நாளும் அங்கேயே இருந்து விட்டு மூன்றாம் நாள் தான் வீடு திரும்பினான் மனைவியோடு. அடுத்த வாரமே ரிஷப்ஷன் ஏற்பாபட்டு செய்து இருந்தான்.
மிதாமான கூட்டம் வந்து இருந்தது. வைரத்தில் ஜொலித்தாள் பனிநிலவு. அவனும் கருப்பு நிற சூட்டில் வைர முகப்பு வைத்த கோர்ட் பென்டன்ட் குத்தி கம்பீரமாக நின்று இருந்தான் கதிரவன்.
ரிஷப்ஷன் இரண்டு மணி நேரம் தான் என்று சொல்லி தான் அழைப்பு விடுத்தான் அனைவருக்கும். எனவே நேரத்திலே அனைவரும் வந்து இருந்தார்கள். அவளின் முகம் வைரத்துக்கு இணையாக மின்னியது. அதுக்கு காரணம் கதிரவன் என்றால் மிகையில்லை.
அவளை உள்ளங்கையில் வைத்து அல்லவா பார்த்துக் கொள்கிறான். இந்த வீட்டுக்கு வந்த நாளில் இருந்து யாரையும் எந்த சொல்லையும் சொல்ல விடாமல் கண்ணின் மணியாக பார்த்துக் கொள்கிறான். அவனின் கவனிப்பு மட்டும் இல்லை என்றால் மங்கையின் வாய்க்கும் கலாவின் வாய்க்கும் எப்பவோ அகப்பட்டு இருப்பாள். காதால் கேட்க முடியாத கேள்விகளை எல்லாம் அவளிடம் கேட்டு இருப்பாரே மங்கை. ஆனால் கதிரவனை தாண்டி அவளிடம் அவர்களால் நெருங்க முடியவில்லை.
அதுவும் இறுதியாக ரேவதியின் மகள் தான் பனி என்று தெரிந்த பிறகு எங்கிருந்து அவளை பேசுவது. பெருமூச்சு விட்டு நடக்கும் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடிவெடுத்து விட்டார். ஆனாலும் அண்ணன் மகன் தன் மருமகன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியவில்லை. கதிரவனின் கெளரவம் ஊர் மரியாதை எதுவும் இனி தனக்கு இல்லை என்று புரிய மௌனமாகி விட்டார். அதுவும் கதிரவன் “அவளுக்கு எல்லாமுமா நான் இருக்கணும்னு ஆசை படுறேன் அத்தை.. அவ பிறந்த உடனே என் கையில கொண்டு வந்து தான் குடுத்தாங்க.. அப்ப இருந்தே என் நெஞ்சுல நிறைஞ்சு போனவ அவ.. அவ கிடைக்காம போய் இருந்தாலும் யாரையும் நான் கல்யாணம் செய்து இருக்க மாட்டேன்” என்று அவருக்கு எடுத்து சொல்லவும் இன்னும் தெளிவாகி விட்டார்.
விருந்துக்கு மனமார தான் அழைத்தார் இருவரையும். கதிரவனும் புன்னகையுடன் பனிநிலவை அழைத்துக் கொண்டு சென்று வந்தான்.
சிங்காரத்துக்கு மனம் முழுதாக சமாதனம் ஆகவில்லை. ஆனாலும் வந்தவனை பனியையும் நன்றாகவே வரவேற்றார். குற்றம் பார்த்தால் சொந்தம் இல்லையே.. மகாவுக்கு ஒரு நல்ல வரனை கொண்டு வந்து குடுத்தான்.
“அவ படிப்பு முடிஞ்ச உடன் கல்யாணத்தை வச்சுக்கலாம்.. மாப்பிள்ளையை பற்றி நல்லா விசாரிச்சுட்டேன் அத்தை.. நம்மளை மாதிரி தான் ட்ரான்ஸ்போர்ட் வச்சு இருக்காங்க.. ஐம்பது லாரி, லோக்கல்ல இருபது பஸ் ஓடுது.. இன்னும் பிசினெஸ் இருக்கு. பக்கத்து ஊர் தான் பெரிய குடும்பம்.. பெரிய பேரு” என்று கதிரவன் சொல்ல, மங்கை நெஞ்சை பிடித்துக் கொண்டார்.
“அய்யா” என்று அவர் கண்கள் கலங்க,
“நீங்க ஆசை பட்ட மாதிரி பெரிய குடும்பமா தான் பார்த்து இருக்கேன்.. பூரணமா விசாரிச்சுட்டேன். நம்பி நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணி குடுக்கலாம். அவங்களும் பெரிய தலை கட்டு தான்” என்றான்.
மங்கைக்கும் சிங்காரதுக்கும் கண்கள் கலங்கியது. என்ன தான் இருந்தாலும் மேன் மக்கள் மேன் மக்கள் தான் இல்லையா? கதிரவனின் குணத்துக்காக மட்டும் தானே அவன் இந்த அளவுக்கு பெயர் பெற்று இருக்க காரணம்.
இதோ அதற்கு இன்னொரு உதாரணத்தை காட்டி விட்டான். எல்லோருக்கும் நிறைவாக செய்தான். நல்லதாக சரிதான்.
கலாவுக்கு தான் வருத்தம். ஆனால் தேவனுக்கு பெரும் மகிழ்ச்சி. கதிரவனையே தன் மகனுக்கும் பெண் பார்க்க சொல்லி இருந்தார் ஏற்கனவே. அவனுக்கும் தோதான வரனை பார்த்து சொல்லி விட்டான். சொந்தத்துக்குள்ள வேணாம் சித்தப்பா.. சித்திக்கும் மகாவுக்கும் சேரவே சேராது. அதோட இனியவனுக்கும் மகாவுக்குமே ஒத்து வராது.
அவளுக்கு கிராமம் தான் புடிக்கும். இனியனுக்கு கிராமமே ஒத்து வராது.. என்று சொல்லியே மகாவுக்கு வெளியே பார்த்தான். அதை தேவனும் ஒத்துக் கொண்டார். அவனுக்கு சென்னையிலே வரன் பார்த்து வைத்து விட்டான் கதிரவன்.
எல்லோருக்கும் ஒரே ஹேப்பி.. ஒரே ஒருத்தியை தவிர.. வேறு யார் கதிரவனின் பனிநிலவுக்கு தான் அன் ஹேப்பி மூட்.
“போய்யா எல்லாருக்கும் எல்லாத்தையும் செய்யிற.. ஆனா என்னை மட்டும் டீல்ல விட்டுட்டு இருக்க” மரியாதை இல்லாமல் அவனை பேசி திட்டி முறைத்துக் கொண்டு திரிந்தாள்.
விசாலட்சி கூட “இது என்னடி கூத்தா இருக்கு.. கல்யாணத்துக்கு முன்னாடி கூட நகமும் சதையுமா இருந்துச்சுங்க.. இப்ப என்னன்னா என் பேரனை பார்த்து முறைச்சுக்கிட்டு இருக்கா இவ” என்று முறைத்தார்.
“அட சின்ன சிறுசுங்க அப்படி இப்படி தான் இருக்கும்.. நீ கண்டுக்காம இரேன்” மங்கை தான் சத்தம் போட்டார்.
“ம்கும்.. எனக்கு என்ன வந்துச்சு.. நானும் சீக்கிரமா எள்ளு பேத்தி பார்க்கலாம்னு பார்த்தேன் அது இப்போதைக்கு நடக்காது போல..” புலம்பினார்.
“அதை விடுங்க அத்தை. முதல்ல நீங்க வெங்காயத்தை உரிங்க.. காலை டிபனுக்கு ரேவதியும் வராலாம்..” என்று காமாட்சி பரபரப்பாக வேலை செய்தார்.
அவருக்கு எப்பொழுதும் பரபரப்பாகவே தான் போகும் போல.. ஏற்கனவே மங்கை குடும்பம் வந்து விட்டது. இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல ரேவதி குடும்பமும் வரப் போகிறது.. சனி கிழமை மதியத்துக்கு மேல துளசியும் அவளின் மாமியார் மாமனாரை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறாள். அவளின் கணவன் இரவு வேலை முடித்து இங்கே வந்து விடுவான்.. கதிரவனின் வீடு எப்பொழுதுமே ஆட்களால் நிறைந்து தான் இருக்கும் போல..
கதிரவனுக்கு தேநீரை எடுத்துக் கொண்டு போனவள் அவனுக்கு குடிக்க கொடுத்து விட்டு, குளியல் அறையில் துண்டை எடுத்து போட்டு விட்டு படுக்கையை சரி செய்து அவனுக்கு உடை எடுத்து போட்டு விட்டு, தலையை சீவி காமாட்சி நெருக்கமாக தொடுத்து வைத்த பிச்சி பூவை வைத்துக் கொண்டு கீழே போனால் அதன் பிறகு அடுப்படியில் தான் அவளுக்கு நேரம் சரியாக இருக்கும்.
கதிரவன் கிளம்பி கீழே வரும் பொழுது அவனோடு தன் பேத்தியை அமரவைத்து பரிமாறுவார் காமாட்சி. அது மட்டும் மாறுவதே இல்லை. மாறினால் கதிரவன் விழிகளாலே அவளை எரித்து விடுவான். எனவே எல்லா வேலைகளிலும் காமாட்சிக்கு உதவியாக இருப்பவள், கதிரவன் வந்து விட்டால் அவனின் பின்னோடு அலைய வேண்டும்.
இது எழுதப்படாத விதி. அவன் கூடத்தில் இருந்தால் இவள் கீழே இருக்கலாம். அதே அவன் மேலே ஏறி விட்டால் இவளும் பின்னோடு கிளம்பி மேலே வந்து விட வேண்டும்.. இல்லை என்றால் கொஞ்சமும் பாரா பட்சம் பார்க்காமல் நிலா நிலா என்று ஏலம் விட்டு விடுவான்.
இதோ இப்பொழுதும் அப்படி தான்..





