“தீரன் சார்” என்றாள் தங்கை.
அதிலே புரிந்துப் போனது.. நேற்று இரவு அவனை வெளியே போகச் சொன்னதற்கு தன்னை விட்டு தன் தங்கையை பிரித்து வைக்கப் பார்க்கிறான் என்று. அடுத்த நிமிடம் குழந்தையை அழைத்துக் கொண்டு அலுவலகம் வந்தவள் நேராக அவனை பார்க்க சென்றாள்.
அப்பாயின்ட்மென்ட் இல்லாததை காரணம் காட்டி காலையில் இருந்து மத்தியம் வரை அவளை உள்ளே விடாமல் அவனின் அரை வாசலிலே காக்க வைத்து குரூரமாக வேடிக்கைப் பார்த்தான் தீத்திரள் தீரன்.
--
நேற்றைக்கு துரத்தி அடிக்காத குறையாக அவனை அந்த மருத்துவமனையில் இருந்து துரத்தி அடித்தாள் அல்லவா அதற்கு இப்பொழுது பழிவாங்கிக் கொண்டான் தீத்திரள் தீரன்.
நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. இரவு தீரன் போனதுக்கு பிறகு ஒருவர் உணவு கொண்டு வந்து வைத்து விட்டு போனார்.
அது யாருடைய ஏற்பாடு என்று தான் அவளுக்கு தெரியுமே.. அதனால் “வேணாம் எடுத்துட்டு போயிடுங்க” என்றாள்.
“சாரி மேடம் இது சாரோட உத்தரவு” என்று வைத்து விட்டு போக, அதை தொடக்கூட இல்லை. ஆனால் மகனை விட்டுட்டு கேண்டீன் போக முடியாத காரணத்தினால் பிள்ளைக்கு மட்டும் அதில் இருந்த இட்லியை எடுத்து ஊட்டி விட்டு இவள் பட்டினியாக கிடந்தாள்.
காலையிலோ மருத்துவமனையில் இருந்து வந்து பிள்ளையை கவனித்து விட்டு தங்கையை அலுவலகம் கிளப்பி விட்டுட்டு சாப்பிட அமர்ந்த நேரம் தான் நேத்ரா போன் பண்ணினாள். அதுவும் இன்றைக்கே போகணும் என்று சொல்ல, தட்டில் போட்ட உணவை அப்படியே வைத்து விட்டு பிள்ளையை தூக்கிக் கொண்டு வந்து விட்டாள் இவனை பார்க்க.
இவனோ வாசலிலே அவளை நிற்க வைத்து விட்டான். கையில் இருந்த பிள்ளை வேறு தூக்கத்துக்கு சிணுங்கி அழ, தோளில் போட்டு தட்டிக் குடுத்துப் பார்த்தும் அவன் சிணுங்கிக் கொண்டே இருந்தான்.
“கொஞ்ச நேரம்டா தங்கம் அவரை பார்த்துட்டு நாம உடனே வீட்டுக்கு போயிடலாம்” என்று அவள் சொல்லிய சமாதனம் எதுவும் எடுபடவில்லை.
“வீயிக்கு வீயிக்கு” என்று அவன் மேலும் சிணுங்கி வைக்க, அதிரலுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தங்கை வேறு பிளைட் டிக்கெட்டுடன் நிற்கிறாள். இவரு வேற வெளிலையே நிற்க வைக்கிறாரு. பிள்ளை வேற சிணுங்குகிறான் தத்தளித்து நிற்கும் நேரம்,
“சார் உங்களை உள்ள கூப்பிடுறாங்க” என்று சொல்ல சின்ன நிம்மதியுடன் உள்ளே நுழைந்தாள்.
வந்தவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அவன் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான்.
“சார்” என்று அவள் அழைக்க,
“செலரி பேலன்ஸ் எதுவும் பெண்டிங் இருக்கா?” நறுக்கென்று கேட்டான்.
“சார் ப்ளீஸ்.. நான் அதுக்காக வரல.. நான் ஏன் வந்தேன்னு உங்களுக்கே நல்லா தெரியும்” என்று வாய்சை குறைத்து பேசினாள்.
“நான் என்ன வெத்தலையில மை போட்டு ஜோசியம் பார்க்கிறவனா.. எதுக்கு வந்தன்னு தெரிஞ்சுக்க” நக்கலாக சொன்னவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனின் கண்களில் அடக்கப்பட்ட கோவம் நன்றாகவே தெரிந்தது.
“பிக் மேன்” என்று ஈனஸ்வரத்தில் பிள்ளை அவனிடம் வரப் பார்க்க,
“தூக்கம் வருதுன்னு சொன்ன தானே.. தூங்குடா” என்று அவனின் பின் கழுத்தில் கை வைத்து தோளில் தூங்க வைக்க, பிள்ளை திமிறினான்.
அதை பார்த்தானே தவிர தீத்திரள் தீரன் எதுவும் செய்யவில்லை. அவனுக்கு கைக்கால்கள் பரபரத்தது பிள்ளையை தூக்கிக் கொள்ள. ஆனால் அதை செய்யாமல் அமைதியாக அமர்ந்து இருந்தான்.
“சார் ப்ளீஸ்.. என் மேல உள்ள கோவத்தை என் தங்கச்சிக்கிட்ட காட்டாதீங்க. அவளுக்கு எதுவும் தெரியாது. இப்ப தான் டிகிரியே முடிச்சு இருக்கா” என்றவளை புரியாமல் பார்ப்பது போல பார்த்த தீரன்,
“வாட் யூ மீன்” என்றான் அத்தனை நக்கலாக.
அவனது நக்கலில் இவளுக்கு புடைத்துக் கொண்டு வந்தது. இப்பவே தங்கைக்கான ரேஜிக்னேஷன் லெட்டரை நீட்டி விட மனம் துடித்தது. ஆனால் அவளின் எதிர்காலம் கருதி மௌனமாக போக வேண்டி இருந்தது.
இவள் என்றால் கவலை இல்லை. எந்த வேலை வேண்டுமானாலும் செய்து விடுவாள். ஆனால் தங்கை அப்படி இல்லையே. அவளுக்கு நோகாத வேலை தான் செய்ய முடியும். ஹார்ட் ஆப்ரேஷன் செய்யப்பட்டு இருக்கிறது அல்லவா? அதோடு இங்கே வேலை செய்கிறாள் என்றால் மாப்பிள்ளை பார்க்கவும் எளிதாக இருக்கும்.
இவ்வளவு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைப்பது அரிது. பெண் பார்க்க வருகிறவர்களுக்கு நகையை விட இந்த வேலை மிக அவசியமாக படும் அல்லவா? எனவே தலைந்துப் போக முடிவெடுத்து அமைதியாக நின்றாள்.
“சார் ப்ளீஸ்.. அவளை இங்கேயே வேலை பார்க்க விடுங்க. சென்னை எல்லாம் வேண்டாம் சார்” என்றாள் பணிவாக.
“இந்த நிறுவனத்துக்கு நீ முதலாளியா இல்லை நான் முதலாளியா?” பேச்சை அத்தனை குத்தல் இருந்தது. கண்களை மூடி நின்றவள்,
“நீங்க தான்” என்றாள்.
“அப்போ யார் டிசிஷன் எடுக்கணும்?” என்று கேட்டான். தலையை குனிந்துக் கொண்டவள்,
“நீங்க மட்டும் தான்” என்ற பொழுதே கண்கள் கலங்கி விட்டது.
“உங்களுக்கு மட்டும் தான் பாசம் இருக்கும் போல. மத்தவங்களுக்கு எல்லாம் எதுவும் இருக்கக் கூடாது இல்லையா? நேத்திக்கு உன் மகனை விட்டு என்னை வெளியே போகச் சொன்னியே.. இன்னைக்கு நீ உன் தங்கையை விட்டு பிரிஞ்சு தான் ஆகணும். அதுவும் ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல.. ஒரு வருடம்” என்றான் ஆத்திரமாக.
“சார்” என்று அதிர்ந்துப் போய் அவனை பார்த்தாள்.
“என்ன பார்க்கிற? யா அப்சலூட்லி உன்னை நான் பழி தான் வாங்குறேன்” என்று சொன்னவன் விருட்டென்று எழுந்து,
“நீயும் உன் தங்கச்சியை விட்டு பிரிஞ்சி இரு. அப்போ தான் நேத்திக்கு நான் பட்ட வலி உனக்கு புரியும்” என்றான் அத்தனை கோவமாக.
“சார் அவன் என் குழந்தை”
“சோ வாட்.. அதனால எனக்கு அவன் மேல அன்பு வரக்கூடாதுன்னு சொல்ல நீ யாரு. நாளைக்கு உன் மகன் ஸ்கூலுக்கு போவான். அங்க அவனுக்கு வகுப்பு எடுக்குற ஆசிரியர் மீது அன்பு வரும். அப்போ அவனை ஸ்கூலுக்கு விடாம கூட்டிட்டு வந்துடுவியா?” நறுக்கென்று கேட்டவனின் பேச்சை கேட்டு இவளுக்கு கிறுக்கி பிடித்தது.
இப்படி பேசுகிறவனிடம் என்னத்தை பேச, ஆனால் தங்கையை அப்படி விட முடியாதே..
“நீங்க என்னை பழி வாங்கி தான் ஆகணும்னா பழி வாங்கிக்கோங்க. ஆனா அவள் இங்கையே இருக்கட்டும் நான் சென்னைக்கு போறேன்” என்றாள்.
“நீ தான் வேலையை ரிசைன் பண்ணிட்டியே” அதற்கும் அவன் நக்கலாக சொல்ல,
“நான் ரிசைன் லெட்டரை வாபஸ் வாங்கிக்கிறேன்” தலை குனிந்து சொன்னவளை கூர்ந்துப் பார்த்தவன்,
“ரீஜாயின் பண்ணனும்ன்னா சில கண்டிஷன்ஸ் இருக்கு” என்று அவளை சுத்தி சுத்தி அடித்தான்.
“பரவாயில்ல.. நான் சைன் பண்றேன்” என்றாள்.




