Notifications
Clear all

அத்தியாயம் 31

 
Admin
(@ramya-devi)
Member Admin

“இனி காய்ச்சல் படி படியா குறையும். டெம்பரேச்சர் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை செக் பண்ணிட்டே இருங்க.. சப்போஸ் இடையில அதிகமான டெம்பரேச்சர் காட்டுச்சுன்னா இன்பார்ம் பண்ணுங்க. நான் கேபின்ல தான் இருப்பேன்” என்று சொல்லி விட்டு மிகுந்த அயர்வுடன் மருத்துவர் அவரின் அறைக்கு சென்றார்.

அந்த சின்ன அறையையே போர்க்களமாக்கி இருந்தான் தீத்திரள் தீரன் இந்த இடை பட்ட நேரத்தில். அதிரலோ எதுவும் பேசாமல் பிள்ளையின் கையை பற்றிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

பிறந்ததில் இருந்து ஒரு நாள் கூட இப்படி பிக்ஸ் வந்ததே இல்லை அவனுக்கு. முதல் முறையாக இந்த மாதிரி வரவும் பெரிதும் கலங்கிப் போய் விட்டாள்.

அவளின் கண்களில் வழிந்த கண்ணீரை பார்த்த தீரனுக்கு என்னவோ போல் இருந்தது.

“அது தான் பிள்ளைக்கு ஒன்னும் இல்லல்ல.. அப்புறம் என்ன அழுதுக்கிட்டு இருக்குற.. அவனுக்கு சாப்பிட வீட்டுல இருந்து இட்லி எடுத்துட்டு வா” என்றான்.

“இல்ல இப்ப எப்படி  போக முடியும். நான் இங்க கேண்டீன்ல வாங்கிக்கிறேன்” என்று அவள் சொல்ல,

“ஏற்கனவே அவனுக்கு முடியல. இதுல வெளில வாங்கிட்டு வந்து ஊட்டி விட்டா இன்னும் உடம்பு கெடுறதுக்கா” முறைத்தவன், யாருக்கோ போன் போட்டான்.

அவனது செயலில் அதுவரை அடக்கி வைத்து இருந்த கோவம் பொங்கி எழ, மகனை ஒரு பார்வை பார்த்தாள். அவன் தூங்கி இருந்தான்.

அவனிடம் கோவத்தை காட்ட முடியாத இயலாமையுடன், “போதும் சார் நீங்க எங்க மேல காட்டுன அக்கறை. மொத்தமா ஒரு தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். ஆனா இதுக்கு மேல நீங்க எங்க விசயத்துல தலையிடாதீங்க.. உங்களை கை எடுத்து கும்பிடுறேன்.. நீங்க இங்க இருந்து போங்க..” என்று அவனை பார்த்து கை எடுத்து கும்பிட்டாள்.

“ஏய் யார் கிட்ட பேசிட்டு இருக்கன்னு தெரியுமா?” கண்கள் சிவந்துப் போய் அவன் கேட்க,

“மிஸ்டர் தீத்திரள் தீரன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்க பவருக்கும் பகட்டுக்கும் ஆளு நாங்க இல்ல.. நாங்க ரொம்ப சாதாரமானவங்க. உங்க அதிகாரத்துக்கு எங்களை வளைக்கப் பார்க்காதீங்க சார்.. முதல்ல மருத்துவம் பார்க்கிற டாக்டர் கிட்ட இப்படி தான் நடந்துக்குறதா? நீங்க இன்னைக்கு வருவீங்க நாளைக்கு போயிடுவீங்க.. ஆனா நான் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா இந்த டாக்டர் கிட்ட தான் வந்து ஆகணும். நாளை பின்ன உங்க மேல உள்ள கோவத்துல என் பிள்ளைக்கு மருத்துவம் பார்க்கலன்னா நான் எங்க போவேன். ப்ளீஸ்.. உங்களை சேர்ந்தவங்கக்கிட்ட உங்க அதிகாரத்தையும் பண பலத்தையும் காட்டுங்க. எங்க கிட்ட வேணாம். நாங்க ரொம்ப சாதாரனமானவங்க. எங்களுக்கு நீங்க போடுற எலும்பு துண்டு வேண்டாம். இன்னும் ஒரு நிமிடம் நீங்க இங்க இருந்தாலும் நான் கண்டிப்பா போலீஸ்க்கு போவேன்” என்று திட்டவட்டமாக அவள் சொல்லி விட,

தீத்திரள் தீரனுக்கு நெருப்பில் இருப்பது போல தகதகவென்று ஆனது. அதுவும் அவள் சொன்ன எலும்பு துண்டு, போலீஸ் இரண்டு சொற்களிலும் அவனது தன்மானமும் கோவமும் அதிகமாக சீண்டப்பட்டு விட,

“என்ன ஆணவம்டி உனக்கு.. எலும்பு துண்டுன்னா சொல்ற.. ச்சீ மனிதனோட உணர்வுகளை புருஞ்சுக்க தெரியாத நீயெல்லாம் ஒரு மனுசி.. போலீசை கூப்பிடுவியா? நீ என்னடி கூப்பிடுறது நானே கூப்பிடுறேன்.. என்னையவே வெளில போக சொல்றியா? நான் நினைச்சா உன்னை இந்த நிமிடமே காலி பண்ணிடுவேன் பார்த்துக்க..” அவனது சொற்களை காதில் வாங்கிக்கொள்ளாமல்,

அவன் போகாமல் மீண்டும் பேச்சை வளர்க்க, “நீங்களே இங்க இருந்துக்கோங்க.. என் பிள்ளையை தூக்கிக்கிட்டு இந்த ஹாஸ்பிட்டல் விட்டு வெளில போயிக்கிறேன்” என்று சொல்லி விட்டு மகனின் கையில் ஏறிக்கொண்டு இருந்த ட்ரிப்சை பிடுங்கிப் போட போக,

“ஏய்” என்று கர்ஜித்தான்.

அவனது கர்ஜனையில் உடம்பு தூக்கிவாரிப் போட்டது என்றாலும் அவளால் அவனை தங்களுக்குள் அனுமதிக்கவே முடியவில்லை. அவனின் அதிகாரம் அனைத்தும் இவளுக்குள் ஒரு வித பயத்தையே விளைவித்தது.

தங்களை விட்டு அவன் விலகி இருப்பது தான் நல்லது என்று எண்ணியவள் அதற்கு உண்டான வேலையை அந்த நிமிடமே தொடங்கி விட்டாள்.

டிரிப்சை பிடித்த கைகள் அப்படியே நின்று விட்டது அவன் போட்ட கர்ஜனையில்.

“என்னையவே போக சொல்றல்ல.. நான் யாருன்னு உனக்கு காட்டுறேன்டி” என்று ஆத்திரத்தில் அங்கிருந்து போய் விட்டான்.

ஆனால் போகும் முன்பு, குட்டி தீராவிடம், “ஸ்மால் மேன் ரொம்ப பிரேவ். இதெல்லாம் ஜுஜுப்பி.. சீக்கிரம் ரெக்கவர் ஆகி இந்த பிக் மேனை பார்க்கணும்” என்று தூங்கும் பிள்ளையின் காதோடு சொல்லி விட்டு அவனின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தவன் விடுவிடுவென்று கிளம்பி வெளியே போய் விட்டான். அதோடு சரி அவனை எங்கும் பார்க்கவில்லை அதிரல்.

இரவெல்லாம் ஒரு பொட்டு கண்ணு மூடாமல் கண் விழித்து பிள்ளையை பார்த்துக் கொண்டாள் அதிரல். அதிகாலையில் பிள்ளையின் உடல் முற்றிலும் சூடு தணிந்து ஜில்லென்று ஆகியது.

மருத்துவர் அதிகாலையில் வந்து பார்த்தார்.

“சாரி டாக்டர்” என்று தீரனின் செயலுக்காக இவள் அவரிடம் மன்னிப்பு கேட்டாள். அவர் ஒன்றுமே சொல்லவில்லை. இதுமாதிரி அவரின் அனுபவத்தில் எத்தனையோ பேரை பார்த்து இருப்பார் தானே..

“குழந்தை சரியாக்கிட்டான். இனி கவலை பட வேண்டாம். நீங்க கூட்டிட்டு போங்க” என்று சொன்னார்.

தலையை ஆட்டியவள் பணம் கட்ட போக, அங்கு ஏற்கனவே கணக்கு முடிக்கப்பட்டு விட்டதாக சொல்ல எரிச்சல் வந்தது அவளுக்கு.

பிள்ளையை தூக்கிக் கொண்டு வந்த அதிரல் நன்றாக அவனை குளிக்க வைத்து கஞ்சி சோறு வைத்து ஊட்டி விட்டாள். அரை கிளாஸ் கூட குடித்து இருக்க மாட்டான். போதும் என்று விட்டான்.

“கொஞ்ச நேரம் கழித்து குடிக்கணும்” என்று சொல்லியவள் தங்கையை எழுப்ப வந்தாள். ஓவர் டைம் பார்த்து விட்டு இரவு வெகு நேரம் கழித்தே வந்ததால் அவள் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தாள்.

அவளை எழுப்பி அலுவலகம் கிளப்பி விட, நேரம்  சரியாக இருந்தது.

அவள் போய் கொஞ்ச நேரத்திலே அவளிடம் இருந்து போன் வந்தது.

“அக்கா என்னை சென்னை ப்ராஞ்சுச்சு மாத்தி இருக்காங்க க்கா” என்று அவள் சொல்ல,

“என்ன பாப்பா சொல்ற?” என்றாள்.

“ஆமாக்கா.. அதுவும் இன்னைக்கே போகணுமாம். பிளைட் டிக்கெட் கூட போட்டு குடுத்து இருக்காங்க” என்று அவள் சொல்ல,

“ஆனா உனக்கு அங்க போனா சேராதேடி. அதுவும் தனியா எப்படி உன்னை விட முடியும்” என்று கவலை பட்டாள்.

“வேற வழியில்ல க்கா நான் போய் தான் ஆகனும். இந்த வேலையை விட முடியாது. வீட்டுல யாராவது ஒருத்தவங்க வேலைக்கு போய் தானே ஆகணும். இருக்கிற இந்த வேலையையும் விட்டுட்டா ரொம்ப கஸ்ட்டமா போயிடும் க்கா” என்று குடும்ப சுமையை உணர்ந்து அவள் சொல்ல,

“யார் உன்னை போக சொன்னது.. விஜி சாரா இல்லை” என்று அதிரல் கேட்க,

“தீரன் சார்” என்றாள் தங்கை.

அதிலே புரிந்துப் போனது.. நேற்று இரவு அவனை வெளியே போகச் சொன்னதற்கு தன்னை விட்டு தன் தங்கையை பிரித்து வைக்கப் பார்க்கிறான் என்று. அடுத்த நிமிடம் குழந்தையை அழைத்துக் கொண்டு அலுவலகம் வந்தவள் நேராக அவனை பார்க்க சென்றாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 15, 2026 9:50 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top