Notifications
Clear all

அத்தியாயம் 28

 
Admin
(@ramya-devi)
Member Admin

மயூவுக்கு உடம்பு சரியில்லை என்றவுடன் அமர்ந்து இருந்த ஆதி அடுத்த நொடி எழுந்து மயூவின் அறைக்குள் நுழைந்தான்.

அங்கு போர்வையை போர்த்திக்கொண்டு மனம் முழுக்க வேதனையுடன் கண்களை மூடிக்கொண்டு படுத்து இருந்தாள் மயூ... அவளின் அருகில் சென்றவன், அவளது நெற்றியை தொட்டு பார்த்தான்.

சூடே இல்லை... நன்றாக குளிர்ந்து போய் தான் இருந்தது... அவளது இயல்பான உடல் சூட்டுடன் தான் இருந்தாள். அதை உணர்ந்தவன்,

“சோ... உன்னால எனக்கு சாப்பாடு போட முடியாது இல்லையா...?” என்ற கேள்வியில் அதுவரை அழுத்தி மூடி இருந்த கண்களை பட்டென்று திறந்துக்கொண்டவள் பாவமாய் அவனை பார்த்தாள்.

“இப்படி பார்த்தா என்னடி அர்த்தம்...” கூர்மையாய் அவளை அளவிட்டான். அவனது பார்வையில் முதுகு தண்டில் ஜில்லென்று ஒரு பயம் ஊடுருவி சென்றது.

“இல்ல... ஆதி...” பெரிதாய் தடுமாறினாள்.

“போட முடியுமா முடியாதா...?” அதிலே நின்றவனை கண்டு அவளது உடல் பயத்தில் தூக்கிவாரிப்போட்டது... இந்த ஆதி அவளுடைய அந்த மலையில் இருந்த காதலன் ஆதி கிடையாது. இவன் பக்கா பிசினெஸ் மேன் ஆதி...

தனக்கு என்ன வேண்டுமோ அதை எந்த எல்லைக்கு சென்று வந்தாவது சாதித்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவனாய் இருந்தான்.

வேகமாய் தான் போர்த்தி இருந்த போர்வையை விலக்கிவிட்டு “வாங்க ஆதி...” என்று அவனுக்கு முன் சென்று உணவு மேசையில் வந்து பரிமாற... பார்த்துக்கொண்டு இருந்த சீதாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

ஆதி வேகமாய் எழும்பும் போதே அவருக்கு தெரிந்து தான் இருந்தது. ஆதி எப்படியும் மயூவை அழைத்து வருவான் என்று... இருந்தாலும் அவருள் ஒரு வீம்பு வந்தது. மயூவை அழைத்து வந்த பொழுது,

“ஆதி அவளுக்கு தான் காய்ச்சல்னு சொன்னனே... பின்ன எதுக்காக அவளை தொந்தரவு பண்ற...” கோவமாய் சடைத்தார்.

“அவ உடம்பு சூடு எப்படி இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்... இப்போ தான் செக் பண்ணி பார்த்துட்டு வர்றேன்... உங்க முன்னாடியும் செக் பண்ணனுமா...?” என்று கேட்டவன் சடுதியில் மயூவை இழுத்து அணைத்தவன் மிக பொறுமையாய் அவளை விடுத்து

“சூடு சரியா தான் இருக்கு... காய்ச்சல் இல்லை...” என்று தெனாவட்டாக சொன்ன ஆதியின் செயலில் திகைத்து போனாள் மயூ... அதுவும் சீதாவின் முன்னிலையில் அவன் நடந்துக்கொண்ட செயல் அவளை பெரிதும் தடுமாற வைத்தது..

“என்ன ஆதி இது...” என்று வார்த்தை கூட சத்தமில்லாமல் அவனது அதிரடியில் ஒலி குன்றியே வந்தது... சீதாவுமே ஆதியிடமிருந்து இப்படியா பட்ட ஒரு செயலை எதிர் பார்க்கவே இல்லை... ஒரு நொடி அவருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

முகம் கோவத்தில் சிவந்ததா... இல்லை வெட்கத்தில் சிவந்ததா என்று அவருக்கே தெரியவில்லை... ஒட்டு மொத்த உதிரமும் அவரது முகத்தில் ஒருங்கே பாய்ந்து இருந்தது... அதில் அவரது முகம் இன்னும் அதிகமாய் சிவந்து போனது. அதை கண்ட ஆதி நக்கலாய் அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“இப்போ சாப்பாடு போடுடி..” என்று அதிகாரம் செய்ய மயூவுக்கும் வேறு வழியில்லாமல் போக அவனுக்கு பரிமாறினாள். ஆனால் சீதாவை தான் அவளால் பார்க்கவே முடியவில்லை. வெட்கம் ஒரு பக்கம் குற்ற உணர்வு ஒரு பக்கம் அவளை வதைத்தது..

ஆதியின் இந்த அடாவடி செயலில் சீதா தீட்டி இருந்த யோசனைகள் எல்லாம் அதிவேகம் எடுத்தது...

ஆதி உண்டு மேலே செல்ல.. சீதா அவனது கவனத்தை கவராமல் மெல்ல மயூவின் காதில்

“உனக்கு இன்னும் அதிக நேரமெல்லாம் குடுக்க முடியாது... ஆதி இருக்குற வேகத்துக்கு என்னை பாட்டி ஆக்காம விட மாட்டான். அதனால நாளைக்கு காலையில உன்னோட முடிவை சொல்ற...” என்று சொல்ல...

“மயூ...” என்று வீடே அதிர அவளை அழைத்தான் ஆதி. அதில் மயூவுக்கு தூக்கி வாரிப்போட்டதோ இல்லையோ சீதாவிற்கு உடல் தூக்கி வாரிப்போட்டது.

“மூக்கு வேர்த்துடுச்சு... போ அவன் கூப்பிடுறான்...” என்று அவர் இடத்தை காலி பண்ண... மயூ வேகமாய் ஆதியிடம் வந்தாள்.

“ஆதி...”

“அங்க என்ன உன் மாமியார் குசுகுசுக்குறாங்க... எனக்கு தெரியாம ரெண்டு பேரும் ஏதாவது செய்ய போறீங்களா...?” தீட்சயத்துடன் கேட்டவனிடம் உண்மையை மறைக்க உடம்பு நடுங்கி போனது.

உண்மை தெரியவந்தால் அவன் உருத்திர தாண்டவம் ஆடப்போவது உறுதி... ஆனால் அவனிடம் இப்பவே சீதா சொன்ன விஷயத்தை பகிர முடியாமல் சீதாவின் வாக்குறுதி கண் முன்னால் வந்து நிற்க... தளர்ந்து போனாள் பொய் சொல்ல...

“கேக்குறேன்ல என்ன விஷயம் உங்க ரெண்டு பேருக்கும் இடையில நடந்துக்கிட்டு இருக்கு...” கர்ஜனையாய் கேட்டவனிடம் மெல்லி முணங்கினால் நொடியில் கணித்து விடுவான் என்று அறிந்து,

“அது காலையில அவங்க ஷாப்பிங் போகணுமாம்.. எப்பவும் நாங்க ரெண்டு பேரும் தானே போவோம்.. அதான்.. வர சொன்னாங்க...” என்றாள்.

“காலையில எப்பவும் நீ என் கூட தானே ஆபிஸ் வருவ... இப்போ என்ன புதுசா சாப்பிங்... அதும் காலையிலயே... அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிடு...” என்றவன் அவள் சொல்லும் முன்பே, இருந்த இடத்தில் இருந்தே தன் அன்னையை அழைத்து, 

“அவ எங்கயும் வர முடியாது... வேணும்னா இவினிங் போய்க்கோங்க...” என்றான். அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் மயூவை பார்த்தார் சீதா.

‘என்ன மயூ..’ என்று கண்களிலே அவளிடம் கேட்க... “சரின்னு சொல்லுங்க..” என்று இவளும் கண்ணை காட்ட,

“அதெல்லாம் முடியாது... நாங்க காலையில தான் போவோம்...” என்று ஆதி பேசிய பேச்சில் இருந்து பாயிண்ட்டை பிடித்து அவர் பேச, ஆதிக்கும் சீதாவுக்கும் இடையே சிறிய வாக்குவாதம் நிகழ்ந்தது.

“முடியவே முடியாது. காலையில அவ என்னோட அலுவலகம் வரணும். நீங்க அவளை கூட்டிட்டு சாயங்காலம் சாப்பிங் போங்க.” என்றான் உறுதியாய். அவன் அப்படி பேச, அப்பொழுது தான் சீதாவுக்கு விசயமே புரிந்தது. புரிந்தவுடன் இன்னும் அழுத்தமாய் தன் தரப்பில் உறுதியாய் இருந்தார்.

“முடியவே முடியாது. எப்பவும் அவ உன்னோட தானே ஆபிஸ் வரா.. அதனால் என்னோட சாப்பிங் வரட்டும்.” என்று சீதாவும் விட்டு கொடுக்காமல் பேச,

“எப்படி என்னை தாண்டி நீங்க இவளை கூட்டிட்டு போறீங்கன்னு நானும் பார்க்கிறேன்...” சவால் விட்டான் ஆதி. அதில் பொங்கிய சீதா,

“நானும் அதையே தான்டா சொல்றேன். நீ எப்படி அவளை ஆபிஸ் கூட்டிட்டு போறன்னு நானும் பார்க்கிறேன்.” என்று சொல்ல... இருவரது சண்டையிலும் மயூ தான் மாட்டிக்கொண்டு அவஸ்த்தை பட்டுப்போனாள்.

“நான் இப்பவே இவளை என்னோட வச்சுக்குறேன்.” என்று சொல்லி அவளை அலேக்காக தூக்கியவன் தன்னுடைய தளத்துக்கு செல்ல,

“டேய் அவ இன்னும் சாப்பிடல.. அவளை விடு. அவ சாப்பிட்டு வரட்டும்” சீதா சொல்ல,

“ஒண்ணும் தேவையில்லை... எல்லாத்தையும் நான் பார்த்துக்குவேன்.” என்றவன் அவனது தளத்துக்கு சென்று தளத்திற்கு உள் நுழையும் பாஸ்வேர்டை மாற்றி போட்டுவிட்டு அவளை சிறை செய்ய, மயூவிற்கு ‘ஐயோ’ என்று வந்தது.

“ஆதி... அத்தையோட எதுக்கு இவ்வளவு போட்டி... நாளைக்கு ஒரு நாள் தானே...” இவள் தன்மையாய் ஆரம்பிக்க,

சுடும் சூரியன் போல அவளை முறைத்து பார்த்தான்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 15, 2026 9:40 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top