Notifications
Clear all

அத்தியாயம் 28

 
Admin
(@ramya-devi)
Member Admin

இங்கோ “கண்ணா கொஞ்சமாச்சும் சாப்பிடுடா தெம்பா இருக்கும்” என்று குழந்தையோடு மல்லுக்கட்டி இரண்டு வாய் ஊட்டி விட்டாள் அதிரல். ஆனால் அடுத்த நிமிடமே மொத்தத்தையும் வாந்தி எடுத்து விட்டான் பிள்ளை.

“கச்சு கச்சு” என்று பிள்ளை சொல்ல,

“காய்ச்சல் வந்தா அப்படி தான் கண்ணா கசக்கும்.. அதுக்காக சாப்பிடாம இருக்க முடியுமா? கொஞ்சமா சாப்பிடுடா.. அம்மா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக மாட்டேன்..” என்று தலைகீழாக அவள் நின்றாலும் ஒரு வாய் சோற்றை வாயில் வைக்கவில்லை அவளின் பிள்ளை.

“பிடிவாதம் பிடிவாதம்.. எங்க இருந்துடா உனக்கு மட்டும் இவ்வளவு பிடிவாதம் வருது.. யார் கிட்ட இருந்து கத்துக்கிட்ட” என்று அவள் புலம்பி தள்ளினாலும் மகனை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை. முன்பை விட இன்னும் அவன் சுருண்டுக் கொள்ள இவளுக்கு மனம் தாளவில்லை. கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

அவன் வாந்தி எடுத்ததை எல்லாம் சுத்தம் பண்ணி விட்டு, அவனை குளிக்க வைத்து, தானும் குளித்து மீண்டும் மருந்து வைத்து அவனை தூங்க வைக்க, சிறிது நேரமே தூங்கினான். மீண்டும் அனத்த ஆரம்பித்து விட இதற்கு மேல் முடியாது என்று நேரத்தை பார்த்தாள்.

நான்கு மணி ஆகி இருந்தது. இனிமேலும் இவனை வீட்டில் வைத்து இருப்பது நல்லதுக்கு இல்லை. இப்பவே சுருண்டு போயிட்டான். இனியும் மருந்து குடுத்து ஆகாது. பெட்டர் மருத்துவரிடம் போய் காண்பித்து விட்டு வரலாம் என்று எண்ணி பிள்ளையை கிளப்பினாள்.

தானும் கிளம்பி தங்கைக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லி விட்டு மகனை தூக்கிக் கொண்டு கைப்பையில் மகனுக்கு தேவையான ஒரு செட் உடை, ஸ்வெட்டர், ஹாட் வாட்டர், மருந்து என எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

இப்பொழுதும் ஸ்வெட்டர் போட்டு விட்டிருக்கிறாள் தான். ஆனால் இடையில் வாமிட் செய்து விட்டால் என்ன செய்வது என்று வேற ஒரு ஸ்வெட்டரையும் எடுத்து வைத்துக் கொண்டாள்.

பிள்ளை இருக்க இருக்க சோர்ந்துப் போய் கொண்டே இருக்க அவனை பார்த்து இவளுக்கு மிகவும் தவிப்பாய் போனது.

“இதோ ஆச்சுடா கண்ணா.. போயிடலாம்” என்று கதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டவள், வெளியே வர  தீரன் காரில் சாய்ந்துக் கொண்டு இவளின் வீட்டையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

இருந்த கடுப்பில் காரில் ஏறி கிளம்பி போய் விடலாம் என்று தான் எண்ணினான். ஆனால் அவனால் அப்படி கிளம்பி போக முடியவில்லை. ஏதோ ஒன்று தடுத்தது.

அவனை அங்கு பார்த்ததும் அதிரலுக்கு திக்கென்று ஆனது. காலை பதினோரு மணிக்கு வந்து இருந்தான் வீட்டுக்கு. அப்போதிருந்து போகாமல் மணி நான்கு வரை இங்கேயே எதற்கு இருக்க வேண்டும்.. அவனின் காத்திருப்பில் அதிரலுக்கு கிலி பிடித்துக் கொண்டது. அவனை நிமிர்ந்துப் பார்க்காமல் பேருந்து நிலையம் வரை நடந்துப் போக, அவளின் வழியை மறைத்துக் கொண்டு வந்து நின்றான் தீரன்.

குழந்தை கொஞ்சமும் தெம்பு இல்லாமல் அவளின் கழுத்தில் படுத்து இருந்ததை பார்த்து, “குட்டிக்கு என்ன ஆச்சு?” என்று அவன் விசாரிக்க வர,

“ப்ளீஸ் சார்.. இப்ப நான் பேசுற நிலையில இல்லை. என்னை தேவை இல்லாம டிஸ்ட்ரப் பண்ணாதீங்க.. அவனுக்கு ஒன்னும் இல்ல. நல்லா தான் இருக்கான். நாங்க வெளில போகணும். வழியை விடுங்க” என்றவள் அவனை சுற்றிக் கொண்டு போய் வருகிற பேருந்தில் ஏறி விட்டாள்.

“இவரு எதுக்கு இப்படி இலவு காத்த கிளி போல வெயிட் பண்ணிட்டு இருக்காரு.. இதெல்லாம் கொஞ்சமும் சரியில்லையே..” யோசித்தவளை அவளின் மகன் அனத்தி திசை திருப்பி விட்டுவிட தீத்திரள் தீரனை பற்றி முற்றிலுமாக மறந்துப் போனாள்.

மருத்துவமனை சென்று பிள்ளையை காண்பிக்கும் வரை உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தாள்.

“விட்டுட்டு காய்ச்சல் வருதா? என்ன சாப்பிட்டான்? மழையில நனைஞ்சானா? வேற பிள்ளைங்க கூட விளையாண்டானா?” என்று கேள்வி மேல் கேட்டு எடுத்தார்.

“உடனடியா காய்ச்சல் குறையிற மாதிரி மருந்து குடுக்குறேன். அதக்கு பிறகும் காய்ச்சல் வந்தா பார்த்துக்கலாம். மூணு மணி நேரம் அப்செவேஷன்ல இருக்கட்டும்” என்று ட்ரீட்மென்ட் பண்ண ஆரம்பித்தார் மருத்துவர்.

அதன் பிறகு படிப்படியாக காய்ச்சல் குறைந்தாலும் மீண்டும் வந்து விட,

“வைரஸ் பீவரான்னு செக் பண்ணிடலாம்” என்று குழந்தையின் இரத்த மாதிரிகளை சேகரித்து அனுப்பி விட்டு இவளை ரிசல்ட் வாங்கி வர சொல்ல, பிள்ளையை தனியாக விட்டுட்டு செல்ல முடியவில்லை.

தங்கைக்கு போன் பண்ணி பார்த்தாள்.

“அக்கா இன்னைக்குன்னு ஓவர் டைம் குடுத்து வீட்டுக்கு போக விடாம பண்ணிட்டு இருக்காங்க க்கா” என்று அவளும் கலங்கிப் போன குரலில் சொல்ல,

“உனக்கு மட்டுமாடி?” பெண்ணாய் உள்ளம் பதறியது.

“இல்லக்கா எங்க பேச் எல்லோரையும் தான்” என்றாள்.

 அதில் சற்றே நிம்மதியானவள், “சரி நீ வேலையை முடிச்சுட்டு கவனமா வீட்டுக்கு போ.. நான் இங்க தம்பியை பார்த்துக்குறேன்” என்றவளுக்கு உள்ளம் நொந்துப் போனது.

தாயின் முந்தானையை விடாமல் இறுகப் பற்றிக் கொண்டு இருக்கும் மழலையை விட்டு எங்கிருந்து போய் ரிசல்ட் வாங்குவது.

அதோடு நேர்ஸ் வேற வந்து,

“இதுல இருக்க மெடிசன், இன்செக்ஷன், காட்டன் எல்லாம் வாங்கிட்டு வாங்க. பீஸ் இன்னும் கட்டல போல. பீசும் ரிஷப்ஷன்ல கட்டிடுடுங்க. ரிசெல்ட் சீக்கிரம் வாங்கிட்டு வாங்க. ரொம்ப டிலே பண்ணிடாதீங்க. பிறகு டாக்டர் வெளில கிளம்பிடுவாங்க” என்று அவர் சீட்டை நீட்டிவிட்டு போக, பிள்ளையை விட்டு நகர முடியாமல் திண்டாடிப் போனாள்.

“இது தான் நீ வெளில போற லட்சனமா? பிள்ளை கண்ணை திறக்காம கிடக்கிறான். என்ன வீம்பு வேண்டி கிடக்கு.. ஆமா எங்க போனான் உன் அருமை புருசன்? பிள்ளையை கூட பார்க்காம” என்ற குரல் காதில் விழ, திகைத்து திரும்பி பார்த்தாள். அவளுக்கு எதிரில் நின்று இருந்தான் தீரன். அதோடு அவள் கையில் இருந்த சீட்டை வெடுக்கென்று பிடுங்கியவன்,

“நான் வாங்கிட்டு வரேன். நீ ஸ்மால் மேன் கூடவே இரு. அவனை தவிக்க விட்டுட்டு எங்கும் போகாத” சொன்னவன் படுக்கையில் துவண்ட கொடியாய் படுத்து இருந்த சின்னவனின் தலையை தடவிக் கொடுத்து விட்டு சென்றான்.

“இல்ல வேணாம் சார்.. நானே பார்த்துக்குறேன்” என்று அவனை தடுக்கப் பார்த்தும் முடியாமல் போனது.

“என்னத்தை நீ பார்த்துப்ப.. அவன் பாரு உன் முந்தானையை விடக்கூட மாட்டிக்கிறான்.. இந்த லட்சனத்துல நீ எப்படி போய் மருந்து வாங்கிட்டு வருவ..” பல்லைக் கடித்தவன்,

--

“பிள்ளை பெத்துக்கிட்டா மட்டும் போதாது. அதை கண்ணும் கருத்துமா வளர்க்கவும் செய்யணும். அவனை தவிக்க விட்ட உன்னை உண்டு இல்லன்னு செஞ்சிடுவேன் பார்த்துக்க..” அடிக்குரலில் உருமியவன், அவளின் பிடிவாதத்தை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்.

அவனை எவ்வளவு மறுத்தாலும் கேட்காமல் திரியும் அவனின் உதவி அதிரலுக்கு மிக மிக வேண்டியதாய் இருந்தது என்பதே உண்மை. ஆனால் அதற்காக அவனை தங்களுக்குள் அனுமதிக்க அவளுக்கு மனம் வரவில்லை. மௌனமாக மகனோடு அமர்ந்துக் கொண்டாள்.

“அப்போ இவ்வளவு தூரம் எங்களை பாலோ பண்ணி வந்திருக்கிறாரா?” நெஞ்சுக்குள் பயம் வந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : October 10, 2026 11:19 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top