Notifications
Clear all

அத்தியாயம் 27

 
Admin
(@ramya-devi)
Member Admin

“இந்த நேரத்துல யாரா இருக்கும்” முணகிக் கொண்டே கதவை திறந்தாள் அதிரல். அங்கே தீத்திரள் தீரன் நிற்பதை பார்த்த அதிரலுக்கு நெஞ்சம் தூக்கிவாரிப் போட்டது.

“சார் நீங்க இங்க” என்று அவள் திகைத்துப் போய் கேட்டாள்.

“ப்ச் உன் மகனை பார்க்க தான் வந்தேன்.. எங்க உன் வீட்டுக்காரர்” கேட்டபடி உள்ளே நுழைய வர, அதிரலோ வழி விடாமல் அப்படியே நின்று இருந்தாள். ஏனெனில் அவளை தவிர வீட்டில் வேறு யாரும் இல்லையே.. பிறகு எப்படி ஒரு ஆடவனை வீட்டுக்குள் விடுவது.

“என்ன பண்ற? வழியை விடு” என்றான் சற்றே கோவமாக. அவள் வழிவிடாமல் அடைத்துக் கொண்டு நின்றதில் தீரனுக்கு அவமானமாக இருந்தது. ஏனெனில் இது போல யாரும் அவனை நடத்தியது இல்லையே. எங்கு போனாலும் இரத்தின கம்பளம் விரித்து அல்லவா வரவேற்பார்கள்.

அதை இவளிடமும் எதிர்பார்த்தான் போல. ஆனால் அதிரல் அவ்வளவு இலகுவாக எல்லாம் அவனுக்கு வழி விடவில்லை.

“என் பையனை நீங்க எதுக்கு சார் பார்க்கணும்?” கைகளை கட்டிக் கொண்டு அவனை நிமிர்வாக பார்த்தாள். அவனது நிறுவனத்தில் வேலை செய்யும் பொழுது அவனிடம் பணிந்து போய் இருக்கிறாள் தான். அது முதலாளி என்கிற அடையாளத்திற்காக. ஆனால் இப்பொழுது பணிய வேண்டிய எந்த அவசியமும் இல்லையே. முன்பு இவன் அவளின் வீட்டுக்கு வந்த போது பணிந்தது கூட இவனுக்காக அல்ல. இவனோடு கூட வந்து இருக்கும் பெண்ணுக்காகவும் பெரியவர்களுக்காகவும் மட்டுமே..

“ப்ச் இதென்ன கேள்வி.. எனக்கு உன் மகனை பார்க்கணும் போல இருக்கு. ஜஸ்ட் மூவ் ஆன்.. நான் அவன் கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு போயிடுறேன்” என்றான் கடுப்பாக.

“சாரி சார்.. முன்ன பின்ன தெரியாத யாரையும் நான் வீட்டுக்குள்ள விட மாட்டேன். அதுவும் குறிப்பா என் மகனை பார்க்க நான் அலவ் பண்ண மாட்டேன்” என்றாள் உறுதியாக.

“என்ன என் கிட்ட நீ வேலை பார்க்கலன்ற திமிர்ல பேசிட்டு இருக்கியா? நான் நினைச்சா உன்னை இருக்கிற இடம் தெரியாம பண்ணிடுவேன் ஜாக்கிரதை” என்று மிரட்டினான்.

“நீங்க யாரா வேணா இருங்க.. எப்பேர் பட்ட கொம்பனா வேணாலும் இருங்க.. பட் நான் என் மகனை பார்க்க உங்களை அலவ் பண்ண மாட்டேன். உங்களுக்கும் என் மகனுக்கும் என்ன சம்மந்தம். நீங்க எதுக்கு என் மகனை பார்க்கணும். ஒரு துளி சம்மந்தம் கூட கிடையாது. அதனால உங்களை நான் அனுமதிக்க மாட்டேன். நீங்க இப்படியே வெளில கிளம்பலாம்” என்றவளை மேலிருந்து கீழாக உருத்துப் பார்த்தான். அவனது பார்வையில் முதுகு தண்டு சில்லிட்டுப் போனாலும் தன் உறுதியில் இருந்து அவள் கொஞ்சம் கூட விலகவில்லை.

“ஏய் என்னை பகைச்சுக்காத” என்று சொன்ன நேரமே,

“ம்மா ம்மா” என்று குட்டி தீரா அனத்த ஆரம்பித்தான். அவனது குரல் கேட்ட தீரனுக்குள் அப்படி ஒரு பரவசம் எழுந்தது. அவனை பார்க்க இவனது விழிகள் தவியாய் தவித்துப் போனது.

ஒரே ஒரு முறை அந்த குட்டி செல்லத்தை பார்த்து விட மாட்டமா என்று அவனது உள்ளம் ஏங்கியது.

ஆனால் மரம் மாதிரி ஒருத்தி எதிரில் நின்றுக் கொண்டு இருக்கிறாளே அவளை தாண்டி எப்படி பிள்ளையை பார்ப்பது என்று தவித்துப் போனான்.

அவனது தவிப்பை எல்லாம் புரிந்துக் கொள்ளாத அதிரல்,

“ப்ளீஸ் சார்.. தயவு செய்து எந்த வம்பும் பண்ணாமல் வெளில போங்க. ஏற்கனவே அவனுக்கு உடம்பு சரியில்ல. நான் அவனை பார்க்கணும். உங்கக்கிட்ட வம்பு வளர்க்க எனக்கு நேரம் இல்லை” என்றவள் அவன் நிற்பதை கூட பொருட்படுத்தாமல் கதவை மூடி தாழிட்டுவிட்டு மகனிடம் விரைந்தாள்.

“என்னடா கண்ணா ரொம்ப முடியலையா?” என்று மகனை அள்ளி மடியில் போட்டு நெஞ்சில் போட்டு ஆட்ட,

“ம்மா” என்று கண்களை திறக்க முடியாமல் பிள்ளை காய்ச்சலில் துவண்டுப் போனான்.

--

முகத்தில் அடிக்காத குறையாக தன்னை நடத்தியவளின் மீது கட்டுக் கடங்காமல் கோவம் பெருகியது தீரனுக்கு. தீத்திரள் தீரன் என்றாலே வணிக வட்டம் முழுவதும் ஒரு கணம் தலைவணங்கி அவன் கால் பணியும். அவன் தொடாத உச்சமே இல்லை.

எத்தனை கம்பெனிகள், எத்தனை நிறுவனங்கள் எத்தனை பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள்.. அத்தனையையும் சீரும் சிறப்புமாக எந்த அப்பழுக்கும் இல்லாமல் திறம்பட நடத்திக் கொண்டு வருபவனை வீட்டுக்கு வெளியே நிறுத்தி கதவடைத்து விட்டு சென்ற பெண்ணவளின் செயலில் முகம் அப்பட்டமாய் கருத்துப் போனது.

ஆக்ரோஷமாய் கோவம் பொங்கியது. வந்த கோவத்துக்கு தாழ் போட்டு இருந்த கதவை எட்டி நான்கு உதை விட்டான் தீரன்.

அவனது உதையை தாங்காமல் அதிர்ந்து குலுங்கியது கதவு.

கதவு உதைபடும் சத்தம் கேட்டு உள்ளுக்குள் நடுங்கிப் போனாள் அதிரல்.

“எவரு ஏன் இப்படி பிரச்சனை பண்ணிட்டு இருக்காரு. கடவுளே நான் இருக்கும் நிலையில் இதெல்லாம் எனக்கு தேவையா?” கலங்கிப் போனவள் மகன் வேறு அனத்தி எடுக்க,

“ஒன்னும் இல்லடா கண்ணா.. சரியா போயிடும்” என்ற போதே அதிரலுக்கு கண்கள் கலங்கிப் போனது. அவளும் நேற்றில் இருந்து மருந்து வைத்துக் கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் காய்ச்சல் குறையவே இல்லை. மருந்து வைக்கும் நேரம் குறையும். அடுத்த கொஞ்ச நேரத்திலே மீண்டும் அதிகமாகி விடுகிறது.

ஈர துணியை போட்டு அவனின் உடம்பு முழுவதும் துடைக்க பார்க்க, குட்டி வாண்டு கத்துகிறான். ஈர துணியை உடம்பில் போடவே விடமாட்டேன் என்று ஒரே அழுகை.

அதையும் மீறி அவனின் நெற்றியில் மட்டுமாவது அவ்வப்பொழுது போட்டு எடுத்துக் கொண்டு தான் இருக்கிறாள். ஆனாலும் காய்ச்சல் குறையாமல் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

பால், கஞ்சி எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. சவலை பிள்ளையாய் தாயின் மார்பில் மடியில் சுருண்டுக் கொண்டான்.

இதற்கு இடையில் இந்த தீத்திரள் தீரன் வேறு வந்து வம்பு பண்ணிக் கொண்டு இருக்கிறான் அவளிடம்.

கதவை எட்டி நான்கு உதை விட்டவனுக்கு கோவம் மட்டும் மட்டுப் படவே இல்லை. தன்னை ஒருவள் நிராகரிக்கிறாள் என்பதையே அவனால் நம்ப முடியவில்லை முதலில். அதை அவனது மூளை ஏற்றுக் கொண்டே பிறகு வந்து ஆத்திரத்துக்கு எல்லையே இல்லை.

“இப்ப மட்டும் நீ என்னோட எம்ப்லாயியா இருந்திருந்த உன் ஒட்டு மொத்த ஜெனேறேஷன் தலை எழுத்தையும்  மாற்றி இருப்பேன்” பல்லைக் கடித்தவனுக்கு இப்படி அவமானப்பட்டு ஒருத்தியின் வீட்டின் முன்பு நிற்க வேண்டுமா என்று காரில் ஏறிவிட்டான்.

இங்கோ “கண்ணா கொஞ்சமாச்சும் சாப்பிடுடா தெம்பா இருக்கும்” என்று குழந்தையோடு மல்லுக்கட்டி இரண்டு வாய் ஊட்டி விட்டாள் அதிரல். ஆனால் அடுத்த நிமிடமே மொத்தத்தையும் வாந்தி எடுத்து விட்டான் பிள்ளை.

Loading spinner

Quote
Topic starter Posted : October 10, 2026 11:18 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top