அவனின் தோளை தட்டி கொடுத்தவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. இரவெல்லாம் கண்முழித்து கிடந்தான். ஒரு பொட்டு தூக்கம் வரவில்லை. மனமெல்லாம் ஒரு மாதிரி பாரமாக இருந்தது.
பிள்ளை ஜனித்ததா இல்லையா என்பதே பெரும் கேள்வி குறியாக அவனின் முன்பு வந்து நின்றது. இல்லாத பிள்ளைக்கு பெயர் வைக்கிறமோ என்று ஒரு பக்கம் தோன்றியது.
ஆனாலும் உள்ளுக்குள் ஒரு தேடல் அவனை போட்டு பாடாய் படுத்தி எடுக்க ஆரம்பிக்க, இரவெல்லாம் தூக்கமில்லாமல் கழித்தவன் அலுவலகமே கதி என்று கிடந்தான்.
அவன் படும் வேதனை தீராது குட்டி தீரா வேறு அவனின் நினைவில் எழுந்து பாடாய் படுத்தி எடுக்க தொடங்கினான்.
யார் பிள்ளையையோ நான் ஏன் நினைக்க வேண்டும்.. என்று எண்ணி குட்டியின் நினைவில் இருந்து மிகவும் கடினப்பட்டு வெளியே வந்து என் பிள்ளை எப்படி இருப்பான், ஒரு வேளை மகள் பிறந்து இருந்தால் எப்படி இருப்பாள் என்று அவனின் கற்பனை அங்கும் இங்குமாய் அலைந்தது. ஆனால் இறுதியில் குட்டி தீராவின் மழலை சிரிப்பில் வந்து நின்று விட தலையை பிடித்துக் கொண்டான் தீரன்.
--
அலுவலகத்தில் தலைக்கு மேல் வேலை இருக்க எதையும் பார்க்க முடியாமல் குட்டி தீராவின் நினைவு தீத்திரள் தீரனை போட்டு பாடாய் படுத்தி எடுத்தது.
“டேய் ஏன்டா இப்படி என்னை போட்டு டார்ச்சர் பண்ற..? கண்ணை மூடுனா முன்னாடி இருக்குற உன் நாலு பல்லோட நீ சிரிக்கிற சிரிப்பு தான்டா வருது..” தலையை பிடித்துக் கொண்டவனுக்கு இப்பொழுதே அந்த குட்டி தீராவை பார்க்க தோன்றியது.
அதிரல் வேலை விட்டு போன பிறகு அவளை பற்றி இவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை. அவ திமிர் எடுத்துப் போனா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது என்ற எல்லையிலே நின்றான். எனவே அவளை பற்றி பெரிதாக யோசிக்க வில்லை.
ஆனால் அவள் தொட்டப்பெட்டா சிகரத்தின் உச்சியில் நின்று ஓடியாடும் முகில் கூட்டத்துக்கு இணையாக இவளும் குடுகுடுவென்று ஓடியது நினைவில் எழும்.
அப்பொழுது அவளின் முகத்தில் இருந்த புன்னகையும், அவளை வயதுக்கு தகுந்த மாதிரி நடந்துக் கொள்ள மாட்டியா என்று தான் அதட்டிய பொழுது அந்த முகத்தில் விரவி இருந்த புன்னகை சடுதியில் உதிர்ந்துப் போய் தொங்கிப் போன முகத்துடன் அந்த இடத்தை விட்டு அவள் விலகிச்சென்றது மட்டும் எப்பொழுதாவது நினைவுக்கு வரும்.
அப்படி அவளின் நினைவு வரும் பொழுது “எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு என் வீட்டுக்காரர் போலீஸ்” என்று அவள் சொல்லிய வாக்கியமும் நினைவுக்கு வரும். அதோடு அதிரலின் நினைவு முற்றுபெற்று விடும். ஆனால் குட்டி தீராவின் ஒவ்வொரு செயலும், சொல்லும் அவனுடனே பயணித்துக் கொண்டு இருக்கிறது.
முன்பற்கள் நான்கு மட்டும் பச்சரிசி போல தெரிய அவன் சிரித்த சிரிப்பு, “பிக்மேன்” என்று மழலைக் குரலில் அவன் அழைக்கும் விதம், இறுதி நாளன்று, தாயிடம் “ங்கா” கேட்டு அதிரலின் நெஞ்சோடு முட்டியது என மீண்டும் மீண்டும் நினைவில் வந்துக் கொண்டே இருந்தது.
அவனுடன் கீழே அமர்ந்த பொழுது அவனின் மடியில் உரிமையாக ஏறி அமர்ந்துக் கொண்டு, தன் மீசையை பிடித்து இழுத்து விளையாண்டது என தீத்திரள் தீரனை ஒரு வழியாக்கியது.
எதுவும் செய்யாமல் அப்படியே கண்களை மூடி இருக்கையின் பின்னால் சாய்ந்து அமர்ந்துக் கொண்டான். குட்டி தீராவை இப்பொழுதே பார்க்க வேண்டும் போல அவனின் மனம் உந்தி தள்ளியது. வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மீண்டும் ஊட்டிக்கு கிளம்பி விட்டான் அன்று இரவே.
அடுத்த நாள் காலையில் ஊட்டியில் வந்து இறங்கியவன் நேராக அலுவலகம் வந்தான். விஜயன் அவனை வரவேற்று வணக்கம் வைக்க தலையை மட்டும் ஆட்டி தன் இருக்கையில் போய் அமர்ந்தவன்,
“அதிரல் ரீஜாயின் எதுவும் பண்ணாங்களா?” என்று கேட்டான் எடுத்த எடுப்பிலே.
“இல்லங்க சார்.. அவங்க ரிசைனிங் லெட்டர் குடுத்ததோட சரி அதுக்கு பிறகு வரல. ஆனா அவங்க சிஸ்டர் நம்ம கம்பெனியில இன்டெர்வியூ அட்டென் பண்ணி செலெக்ட்டும் ஆக்கிட்டாங்க சார்” என்றான்.
“ஓ.. எந்த டிப்பார்ட்மென்ட்?” கேட்டுக் கொண்டான் தீரன்.
“வர சொல்லவா சார்?” பவ்யமாக கேட்டான்.
“நாட் நேசசரி” சொன்னவன் பின் என்ன நினைச்சானோ “வர சொல்லு விஜி” என்றான்.
“சரிங்க சார்” என்றவன் நேத்ரா வேலை செய்யும் டிப்பார்ட்மென்ட்டுக்கு போன் போட்டு வரச்சொன்னான்.
நேத்ராவும் அடுத்த சில நிமிடங்களில் வந்து நின்றாள். தீரன் விஜயனை பார்க்க அவன் கிளம்பி விட்டான்.
“குட் மார்னிங் சார்” விஷ் பண்ணினாள். ஏற்கனவே தங்களின் வீட்டில் அவனை பார்த்து இருக்கிறாள். அதோடு இந்த கம்பெனியின் சீனியர் ஆபிசெர் விஜயனே நிற்கும் பொழுது அவர் அமர்ந்து இருப்பதிலே புரிந்துப் போனது வந்து இருப்பவர் கம்பெனி ஓனர் என்று. அதனால் மரியாதையாக நடந்துக் கொண்டாள்.
தலையை ஆட்டி அவளின் விஷை அங்கிகரித்தவன்,
“உன் அக்கா இப்ப என்ன பண்ணிட்டு இருக்கா?” என்று கேட்டான்.
“சார்” என்று விழித்தாள். நிறுவனத்தை பற்றி ஏதாவது கேட்பார் என்று நினைத்து இருக்க அக்காவை பற்றி கேட்கவும் திகைத்துப் போனாள்.
“உன் அக்கா இதுக்கு முன்னாடி இங்க என் கிட்ட தானே வேலை பார்த்துட்டு இருந்தாங்க. அதனால தான் இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு கேட்டேன்” என்றான்.
“அது அக்கா வீட்டுல தான் இருக்காங்க சார்” என்றாள்.
“ஓ.. உன் அக்கா புருசன் வீட்டுக்கு வந்துட்டாரா? நீங்க டெல்லி போயிட்டு வந்துட்டீங்களா?” என்று கேட்டான்.
“ஹாங்” என்று ஒரு கணம் முழித்தாள். பின் சுதாரித்துக் கொண்டு, “ஆமங்க சார் டெல்லி போயிட்டு வந்துட்டோம்.. அக்கா வீட்டுக்காரர் இப்போ வீட்டுல தான் இருக்காரு” என்றாள்.
“ஏன் டியூட்டி போகலையா?” புருவம் சுறுக்கி கேட்டான்.
“அது வந்து சார்.. மா...மாவுக்கு இன்னும் வேற எந்த அசைங்மென்டும் வரல போல அதனால வீட்டுல தான் இருக்காங்க” என்று இல்லாத மாமாவை முறை வைத்து பேச தயக்கமாக இருந்தது. ஆனாலும் அக்கா சொன்ன பொய்யை அச்சு பிசகாமல் தொடரனுமே. அதனால் சரியாக மேக் பண்ணினாள்.
“ஓ..” என்று கேட்டுக் கொண்டவன் விரல் அசைவில் அவளை போக சொன்னான். மேசையில் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு தாடையை பதித்தவன் அடுத்தட நிமிடம் கார் கீயை எடுத்துக் கொண்டு அதிரலின் வீட்டுக்கு விரைந்தான்.
“அவளோட வீட்டுக்காரர் தான் வீட்டுல இருக்கானே. பிறகு என்ன குட்டி தீரனோட கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வரலாம்” என்று கிளம்பிப் போனான்.
அதிரலின் வீட்டுக்கு வந்து விட்டான் தான். ஆனாலும் கதவை தட்ட சற்று தயக்கமாக இருந்தது. அவனே எப்போதாவது தான் வீட்டுக்கு வரான். ரெண்டு பேரும் அப்படி இப்படி இருந்தால் என்ன பண்றது என்று யோசனை வந்தது.
அவங்க ரொமான்ஸ் தான் பண்ணட்டும் இல்ல என்னமாச்சும் பண்ணிக்கட்டும் எனக்கு தீராவை பார்க்கணும் அவ்வளவு தான். என்று முடிவெடுத்தவன் கதவை பலமாக தட்டினான்.
“இந்த நேரத்துல யாரா இருக்கும்” முணகிக் கொண்டே கதவை திறந்தாள் அதிரல். அங்கே தீத்திரள் தீரன் நிற்பதை பார்த்த அதிரலுக்கு நெஞ்சம் தூக்கிவாரிப் போட்டது.
“சார் நீங்க இங்க” என்று அவள் திகைத்துப் போய் கேட்டாள்.




