அதிரல் ஒன்றுமே பேசவில்லை. மௌனமாக இருந்தாள். அவளின் மௌனம் அவனுக்கு உருத்தியதோ என்னவோ
“ஏதாவது பேசு..” என்றான்.
“ஐ குவைட் மை ஜாப்” என்றாள்.
“வாட் த ...” அவன் பேச வரும் முன்பே,
“நான் என் ஜாபை ரிசைன் பண்றேன்.. அதுக்குண்டான பார்மளிட்டிசை நான் நாளைக்கு வந்து பார்த்துக்குறேன் சார். இன்னைக்கு நான் லீவ். சோ என்னை எந்த விதத்துலையும் நீங்க கார்னர் பண்ண முடியாது. என் மேல் அதிகாரிக்கிட்ட பிராப்பரா இன்பார்ம் பண்ணிட்டேன். மறுபடியும் மறுபடியும் என்னை ப்ளேம் பண்ண பார்க்காதீங்க..” என்றவள் கோவமாக போனை கட் பண்ணி ஸ்விச்சும் ஆப் பண்ணி போட்டவள், மகன் மற்றும் தங்கை இருக்கும் இடத்துக்கு விரைந்தாள்.
போகும் முன்பு முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு வந்தாள். வந்தவளிடம் மகன் வேகமாய் தாவினான்.
“நாலு வயசு வந்திடுச்சு.. இன்னும் அம்மா முந்தானையை விட மாட்டிக்கிறியேடா” அவனின் சித்தி கிண்டல் பண்ண,
“ம்மூ” குட்டி விழிகளை வைத்து முறைத்துப் பார்த்தான்.
“என்னடா வாண்டு பையா... சொன்ன உடன் ரோஷம் வந்திடுச்சாக்கும்” என்று நேத்ரா அவனை வம்பு இழுக்க,
“ம்மா” என்று தாயின் முகத்தை பார்த்தான். அப்படி பார்க்கிறான் என்றால் அடுத்து அவனின் சித்தியை போட்டு அடி வெளுக்கப் போகிறான் என்று பொருள்.
“தீரா நோ” என்று அதிரல் சொல்லும் முன்பே, நேத்ராவின் முடியை பிடித்துவிட்டான்.
“தீரா இஸ் குட் பாய்.. அம்மாவோட சமத்து பையன்..” என்று அவனுடன் பேசிக்கொண்டே நேத்ராவின் முடியை அவனின் கையில் இருந்து லாவகமாக பிரித்து எடுத்தாள் அதிரல்.
தன் கையில் இருந்து முடி போவதை உணர்ந்து,
“நோ ம்மா” சிணுங்கினான்.
“சித்திக்கு வலிக்கும் கண்ணா” சொன்னவள், “இன்னைக்கு முழுதும் கண்ணா கூட தான் அம்மா. நோ கிரச்..” அவனுக்கு மிகவும் இனிப்பான விசயத்தை அவனின் அம்மா சொல்லவும் அந்த குட்டி கண்களில் ஆயிரம் மகிழ்ச்சி முளைத்தது சடுதியில்.
“உமையா?” அவன் நம்பாமல் தாயிடம் கேட்டான்.
“உண்மையாவேடா கண்ணா.. அம்மா இன்னும் கொஞ்ச நாள் உன்னோட தான் இருப்பேன்” என்று வாக்கு கொடுத்தவள் அன்றைய நாள் முழுக்க அந்த ஊட்டியை மகனுக்கு சுற்றி காண்பித்தாள்.
ஊட்டியில் இருக்கும் பூங்காவுக்கு அழைத்துச் சென்றாள். அழகாய் பூத்து குலுங்கும் வண்ண மலர்களை அவனுக்கு காட்டி குடுக்க, ஒரே இடத்தில் அத்தனை வண்ண மலர்களை கண்டவுடன் அவனுக்கு குதூகலம் ஆக, புல்வெளியில் உருண்டு புரண்டு ஆடி ஓடி குதித்து விளையாடினான்.
அம்மாவை ஓட சொல்லி இவன் துரத்தி பிடித்தான். சித்தியை வம்பிழுத்து விட்டு அம்மாவின் முந்தானைக்குள் ஓடி ஒளிந்துக் கொண்டு கண்ணாமூச்சி விளையாண்டான்.
அன்றைய நாள் முழுக்க குட்டி தீராவை கையில் பிடிக்க முடியவில்லை. அவனின் தாய் அவனுடன் உடன் இருக்கிறாளே.. அது போதாதா அவனது மகிழ்ச்சிக்கு.
சட்டை அழுக்காகுமே டா.. என்று கவலை பட்டாலும் மகனின் மகிழ்ச்சிக்கு முன் பெறிதாக எதுவும் படவில்லை.
உருண்டு பிரண்டு கீழே விழுந்து எழுந்து ஓட,
“அடிபடாம கண்ணா” தாயாய் பதை பதைத்துப் போனாள்.
“நான் பார்த்துக்குறேன் க்கா” என்று நேத்ரா அவனுடன் சேர்ந்து விளையாட, இருவரையும் தன் கண் பார்வையில் வைத்துக் கொண்டு புல்வெளியில் அமர்ந்து இருந்தாள்.
தீரன் பேசிய பேச்சில் வேலையை ரிசைன் பண்ணுகிறேன் என்று வீம்புக்கு சொல்லி விட்டாலும் எந்த சேமிப்பும் இல்லாமல் எப்படி அடுத்த பொழுதை கழிப்பது என்று மலையாய பிரச்சனை அவளின் கண் முன் எழுந்தது.
அடிப்படை தேவைகளை போக்கிக்கொள்ள கொஞ்சம் சேமிப்பு இருக்கிறது. கையிருப்பை வைத்து இரண்டு மாத காலம் ஓட்டிவிடலாம். ஆனால் அதன் பிறகு.. வேறு வேலை தேடவேண்டும்.
ஆனால் இப்பொழுது வேறு வேலைக்கு செல்ல செர்டிபிசெட்ஸ் வேணும். ஆனால் செர்டிபிகேட்ஸ் எல்லாம் கம்பெனியில் மாட்டிக் கொண்டு உள்ளது. அதை கேட்க போனால் அவன் ஏதாவது இக் வைப்பான். கடவுளே.. என்று மலைத்து நின்றாள் அதிரல்.
--
அதிரலின் மலைப்பு எல்லாம் அவளின் பிள்ளைக்கோ தங்கைக்கோ இல்லை. மகிழ்ச்சியாக அந்த தாவரவியல் பூங்காவில் ஆடி ஓடி விளையாடிக் கொண்டு இருந்தார்கள். ஒருவரை ஒருவர் துரத்தி பிடித்து ஓடிக் கொண்டு இருந்தார்கள்.
அவர்களை கண் பார்வையில் வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தவளுக்கு வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் சிக்கலாக்கி கடினமாக்கி கொண்டே இருந்தது. பிறந்ததில் இருந்து இன்று வரை அவள் வாழ்க்கையில் பல தடைகளை தகர்த்து எறிந்து முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறாள்.
ஆனால் வாழ்க்கை விடாமல் அவளை துவம்சம் செய்துக் கொண்டே தான் இருக்கிறது. எவ்வளவு தூரம் ஓட முடியுமோ ஓடிக்கொண்டே இருக்கிறாள். நிலையாக ஒரு இடத்தில் நிலைக்க விடாமல் விதி சுழற்றி அடிக்கிறது. இவளும் அடிக்கும் திசையில் நகர்ந்துக் கொண்டே இருக்கிறாள். என்றைக்கு நிலையாக ஒரு இடத்தில் இருக்கப் போகிறாளோ தெரியவில்லை.. தன் யோசனைக்குள் மூழ்கிப் போய் இருந்தாள் அதிரல்.
அந்த நேரம் அதே பூங்காவுக்குள் தீராவின் குடும்பம் நுழைந்தது. அங்கிருந்த மலர் கண்காட்சியை பார்த்துக் கொண்டே அவர்கள் வர,
“ம்மா இங்க ஒரு போட்டோ எடுக்கலாம்” என்று தாரா சொல்ல,
“சரி எடுப்போம்” என்று தீரனின் அம்மா தேவகியும் ஆளவந்தானும் இணையாக நின்றார்கள். அவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தவளின் காலில் ஓடி வந்து ஒளிந்துக் கொண்டான் தீரா.
“டேய் அங்க என்னடா பண்ற? அவங்களை விட்டு தள்ளி வா.. மத்தவங்களை டிஸ்ட்ரப் பண்ண கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல” அதட்டலுடன் நேத்ரா வந்தாள்.
“மாத்தேன்.. வவ்வவவ்வ... போதி” என்று தாராவின் காலை இறுக்கமாக கட்டிக் கொண்டு சித்தியை குறும்பாக பார்த்தான்.
“பொடியா சொல்ற.. இரு இப்பவே உன் அம்மா கிட்ட சொல்றேன்” என்று சொன்னவள்,
“அக்கா” என்று குரல் கொடுக்க, அடுத்த நிமிடம்,
“ம்மூ” செல்ல சிணுங்கலுடன் அவளிடம் வந்து தலையை குனிந்துக் கொண்டு நின்றான்.
அவனின் இந்த செயலில் சிரிப்பு வந்த பொழுதும் அதை அடக்கிக் கொண்டு,
“அம்மான்னு சொன்னவுடனே அது எப்படிடா அமைதியின் சிகரமா ஆயிடுற?” கேட்டவள், அவனை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு,
“சாரிங்க.. உங்களை தொந்தரவு பண்ணதுக்கு” என்று தாராவிடம் சொல்லி விட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டாள்.
“இட்ஸ் ஓகே” என்ற தாரா தாய் தகப்பன் பக்கம் திரும்பி போட்டோ எடுக்க, தேவகியோ கேமராவை பார்க்காமல் நேத்ரா தூக்கிக் கொண்டு போகும் குட்டி தீராவையே பார்த்துக் கொண்டு இருந்தார்.





