Notifications
Clear all

அத்தியாயம் 14

 
Admin
(@ramya-devi)
Member Admin

“இட்ஸ் ஓகே” என்ற தாரா தாய் தகப்பன் பக்கம் திரும்பி போட்டோ எடுக்க, தேவகியோ கேமராவை பார்க்காமல் நேத்ரா தூக்கிக் கொண்டு போகும் குட்டி தீராவையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

“ம்மா” என்று அவரை கலைத்தாள்.

“ம்ம்ம்...” என்றாரே தவிர அவரின் பார்வை மொத்தமும் குட்டியின் மீதே இருந்தது.

“என்ன தேவகி, பாப்பா கூப்பிடுறா பாரு..” ஆளவந்தானும் அவரை கலைக்க,

“காலையில நம்ம தீரன் தூக்கி வச்சு இருந்த பையன் ங்க” என்று கை காட்டினார்.

“என்ன?” என்று அதிர்ந்துப் போனார் ஆளவந்தான்.

“நீ என்ன சொல்ற தேவகி.. இப்ப வைரையிலுமா உனக்கு ஞாபகம் இருக்கு?” என்றார்.

மகன் என்று வந்து விட்டால் தேவகி எதையும் புறம் தள்ள மாட்டார் என்று தெரிந்தாலும் இந்த அளவுக்கு ஞாபகம் வைத்து இருந்து அதை இப்பொழுது உணர்த்தவும் செய்ய திகைத்துப் போய் விட்டார் ஆளவந்தான்.

“எப்படி மறக்க முடியும்? தூக்கி வச்சு இருந்தது என் மகனாச்சே” என்ற தேவகி தீராவையே விழி எடுக்காது பார்த்துக் கொண்டு இருந்தார்.

“சரி உன் மகன் தூக்கி வச்ச பையன் தான். யாரும் இல்லன்னு சொல்லல.. ஆனா அதுக்காக நீ அவனை இப்படி விடாம பார்க்கணும்னு எந்த அவசியமும் இல்லை..” என்றார் கேலியாக.

“எனக்கு அந்த பையனை பார்த்தா நம்ம தீரனை சின்ன வயசுல பார்த்தது போலவே இருக்குற மாதிரி இருக்குங்க”

“உன் கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா.. உன் மகன் தூக்கி வச்சா உடனே அவனை போலவே இருந்துடுவனா? என்ன பேசுற தேவகி?” சற்றே அதட்டி விட்டார்.

“இல்லங்க நான்” என்று தடுமாறினார்.

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. நீ பேசுற பேச்சு உன் மகனின் கண்ணியத்தையும் முகம் தெரியாத ஒரு பெண்ணின் கண்ணியத்தையும் கீழ இறக்குற மாதிரி பேசுற” அதட்டியவர்,

“நாம இங்க எதுக்கு வந்தோம். போட்டோ எடுக்கவும் சுத்தி பார்க்கவும் தானே. வந்தா வந்த வேலையை மட்டும் பார்த்துட்டு போகணும். அதை விட்டுட்டு தேவை இல்லாம எல்லாம் பேசக்கூடாது. நீ பேசுற விசயம் உன் மகனுக்கு தெரிஞ்சுதுன்னா என்ன ஆகும்னு முதல்ல யோசி..” என்றவர் தேவகியை திசை திருப்பினார்.

ஆனால் தேவகியோ தீராவின் எண்ணத்தில் இருந்து அவ்வளவு எளிதாக அவரால் வெளி வர முடியவில்லை. 

இந்த பையனை பார்க்கும் பொழுது கிட்டத்தட்ட அதே சாயல் தான் தீத்திரள் தீரன் சின்ன வயதில் இருக்கும் பொழுது. ஏன் நான் சொன்னா யாரும் நம்ப மாட்டிகிறாங்க என்று உள்ளுக்குள் புழுங்கிப் போனார்.

ஆனால் அவரின் மகனை பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். அதற்கு எல்லாம் சாத்தியமே இல்லையே எனவே தன் சிந்தனையை சற்றே மாற்றிக் கொண்டார்.

“ம்மூ...” என்று நேத்ராவின் இடுப்பில் இருந்து நழுவி ஓடப் பார்க்க,

“நோ நீ ரொம்ப குறும்பு பண்றடா.. உன்னை கீழ இறக்கி விட மாட்டேன்” சொன்னவள் தன் அக்காவிடம் கொண்டு போய் விட்டுட்டு,

“உன் மகன் ரொம்ப சேட்டை.. தாங்க முடியல.. இவனை வச்சிரு நான் சாப்பிட ஏதாவது இருக்கான்னு பார்த்துட்டு வரேன் க்கா” என்று மகனை அவளின் கையில் கொடுத்து விட்டு சென்றாள்.

“அப்படியா செல்லம்.. சித்தி உன்னை சேட்டைன்னு சொல்லிட்டு போறா..” என்று மடியில் வைத்து மகனை கொஞ்சியவள்,

“சாக்கி தரவா கண்ணா?” என்று கேட்டு தன் பையில் இருந்ததை எடுத்து அவனிடம் நீட்டினாள்.  

கண்கள் மின்ன அதை வாங்கியவன் வேகமாய் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டு,

“ம்மா” என்று சொல்லி தன் வாயில் இருந்ததை அவளிடம் காட்டி,

“நீயும்” என்று அன்னைக்கு ஊட்டி விட்டான்.

“டேய் இப்படி எல்லாம் பண்ணக் கூடாதுடா..” சொன்னாலும் மகனின் பிடிவாதத்தில் அவன் நாக்கு வழியாக நீட்டிய இனிப்பை வாங்கி சுவை பார்த்து விட்டு மீண்டும் தன் நாக்கில் வைத்து அவனுக்கு ஊட்ட, கிளுக்கி சிரிக்கும் ஒரு சிரிப்போடு வாங்கி சாப்பிட ஆரம்பித்து விட்டான்.

இந்த பழக்கம் வந்ததுக்கு காரணம் ஒரு நாள் தெரியாத்தனமாக குட்டி குருவிக்கு அதனுடைய அன்னை வாயில் உணவை வைத்து ஊட்டி விட்ட காட்சியை காட்டி விட்டாள்.. அன்றிலிருந்து அவன் அதை பிடித்துக் கொண்டு விட்டான். நல்ல வேலைக்கு உணவை பழகிக்கொள்ளவில்லை. வெறும் சாக்லேட் கொடுத்தால் மட்டும் அவன் முதலில் தன் வாயில் போட்டு சுவை பார்த்த பின் தாய்க்கு கொடுத்து அதன் பிறகு அவளிடம் இருந்து இவன் வாங்கி வாயில் போட்டுக் கொள்வான்.

இதே போல வேற யாரிடமும் இந்த பழக்கத்தை பழகவில்லை. நேத்ராவிடம் கூட அவன் இந்த பழக்கத்தை வைத்துக் கொள்ளவில்லை.

அவளே ஆசையுடன் கேட்டால் கூட “நோ” என்று மறுத்து விடுவான்.

அதே போல முத்தம் கூட அவனின் அன்னைக்கு தான் அழுத்தி அழுத்தி கொடுப்பான். நேத்ராவுக்கு லைட்டா தான் தருவான். இத்தனைக்கும் அன்னையை விட அதிகமாக சித்தியிடம் தான் இருப்பான். ஆனாலும் தாயிடம் இருக்கும் அந்த உரிமை வேறு யாரிடமும் வைத்துக் கொள்ள மாட்டான்.

அதில் நேத்ராவுக்கு சிறிது வருத்தம் என்றாலும் தன் பிள்ளையும் தன்னை இப்படி தானே சிறப்பாக உணரவைக்கும் என்ற எண்ணம் வந்தது அவளுக்கு. அதனாலே புன்னகையுடன் அவனின் செயலை பார்த்து மகிழ்வாள்.

மகன் மறுபடியும் அன்னைக்கு ஊட்ட வர, “வேணாண்டா கண்ணா...” மறுத்த பொழுதும் பிள்ளை நாக்கில் இனிப்பை வைத்துக் கொண்டு நீட்டிக் கொண்டே இருக்க,

“வர வர ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறடா” என்று அவன் நீட்டிய இனிப்பை தன் நாக்கால் எடுத்த நேரம் ஏதோ உள்ளுணர்வு உந்த நிமிர்ந்துப் பார்த்தாள் மகனின் பின் புறம் நீண்ட நெடிய உயரத்தில் நின்று இருந்தான் தீத்திரள் தீரன்.

--

ஏதோ உள்ளுணர்வு உந்த மகனின் பின்புறமாக விழிகளை உயர்த்தி பார்த்த பொழுது உயர்ந்த ஹல்க் மனிதன் போல நின்று இருந்தான் தீத்திரள் தீரன்.

அவனை கொஞ்சமும் அங்கு எதிர் பார்க்காத அதிரல் முற்றிலும் அதிர்ந்துப் போனாள். அவள் நாக்கில் இருந்த இனிப்பு நழுவப் பார்க்க பட்டென்று அவளின் குட்டி மகன் தீராவோ தன் வாயில் எடுத்துக் கொண்டு,

“ம்மா யா கிச்சு...” என்று சொல்லி கை தட்டி சிரித்தான்.

“ஹாங்.. கண்ணா” என்றவளுக்கு தொண்டை தண்ணீர் வற்றிப் போனது.

பார்வை மொத்தமும் தன்னை எரித்துக் கொண்டு இருந்த தீத்திரள் தீரன் மீதே இருந்தது.

இங்கே இவ்வளவு தூரம் தன்னை தேடி வருவான் என்று அவள் கொஞ்சமும் யோசித்து இருக்கவே இல்லை. திடுத்திப்பென்று அவன் இப்படி வந்து நிற்கவும் மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : September 26, 2026 10:06 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top