“நீயாச்சு அவளாச்சு.. உங்க ரெண்டு பேருக்கும் இடையில என் தலையை உருட்டாதீங்கடா” என்ற திரையன் சமரனை தூக்கி தன் அருகில் அமர்த்திக் கொண்டு, உணவு பட்டியல்களை பார்வை இட்டான்.
வேரலும் கங்குவனும் அருகருகே உட்கார நேர்ந்தது.
“என்னடா சொல்லட்டும்..?”
“நீயே பார்த்து சொல்லு மச்சான்” என்றான் கங்குவன் தன் போனை நொண்டியபடி.
“அப்ப ஒரு டம்ளர் கழனி தண்ணீர் சொல்லுண்ணா” என்றாள் வேரல்.
“சொல்ற உனக்கே அதை பார்சல் கட்டி தர சொல்றேன்” கடுப்படித்தான் கங்குவன்.
“ஏன்டா மாப்பிள்ளை இதுங்க இப்படி தான் எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுட்டே இருக்குமா? எப்படிடா இத்தனை நாளா இதுங்களை சமாளிக்கிற” என்று சமரனிடம் கேட்டவன் எல்லோருக்கும் ஆடர் குடுத்தான்.
“சாம்க்கு மட்டும் கொஞ்சம் காரம் இல்லாம சொல்லிடுண்ணா” வேரல் சொல்ல, ஸ்பெஷல் மேன்ஷன் பண்ணி விட்டான் திரையன் வெயிட்டரிடம்.
கங்குவனும் திரையனும் பேச, சமரன் வேரலிடம் தாவிக் கொண்டு வர, கங்குவன் எழுந்து திரையனிடம் போய் அமர்ந்துக் கொண்டான்.
அதன் பிறகே சமரனின் முகத்தில் புன்னகை வந்தது. அவனை தூக்கி தனக்கு அருகில் அமர்த்திக் கொண்டவள் உணவு வர அதை எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டபடி சாப்பிட,
“அவனை கெடுக்காத.. அவனே அள்ளி சாப்பிடட்டும்” என்றான்.
“ஹையோ உங்களோட பெரும் ரோதனையா போச்சு.. சின்ன பிள்ளை.. இன்னும் பால்குடி கூட மாறாம இருக்கான். இப்ப போய் அவனுக்கு ஊட்டி விடாத அத பண்ணாத இத பண்ணாதன்னு ஏதாவது சொல்லிட்டே இருக்கீங்க.. எங்க விசயத்துல நீங்க எதுக்கு சார் எப்போ பாரு இண்டர்பியர் ஆகிட்டு இருக்கீங்க..” குரலில் தன் முழு கடுப்பையும் கொட்டியவள்,
“இன்னொரு முறை எங்களை ஏதாவது சொல்லுங்க.. சுடு சாம்பாரை மூஞ்சி மேலையே ஊத்துறேன்” கடுப்பிடுத்தவள்,
“நீ சாப்பிடு கண்ணா.. அந்த ஆளுக்கு வேற வேலையே இல்ல.. எப்ப பாரு நம்மளையே நோண்டிக்கிட்டு இருக்குறது தான் வேலை” கங்குவனை முறைத்துப் பார்த்தவள்,
சாமிடம் புன்னகைத்து கதை பேசியபடி ஊட்டி விட, அதை பார்த்த கங்குவன், திரையனின் பக்கம் திரும்பி,
“சாரி திரையன்.. இவ பண்ற வேலையால எவ்வளவு இக்கட்டு வரும்னு தெரியாம பண்ணிட்டு இருக்கா..” சொல்ல,
“ப்ச்.. அதை அப்புறம் பார்த்துக்கலாம் கங்குவா.. எதையும் யாரும் திட்டமிட்டு செய்யல.. அவங்கவங்க இயல்புல இருக்காங்க.. நீயும் சரி என் தங்கச்சியும் சரி.. சோ அதை விட்டுட்டு நீ சாப்பிடு. எதுவும் தப்பா போகாது.. அப்படியே தப்பா போனாலும் எனக்கு நோ அப்ஜெக்ஷன்” என்றவனை அதிர்ந்துப் போய் பார்த்தான் கங்குவன்.
“டேய் நீ அவளுக்கு அண்ணன். அண்ணன் மாதிரி யோசிடா” அதட்டினான்.
“இருக்கட்டும்.. நீயும் ரொம்ப நல்லவன் தான்டா.. உன்னோட என் தங்கச்சி லைப் ஸ்டார்ட் ஆனா எனக்கு ஹேப்பி தான்” நேரடியாகவே தன் சம்மதத்தை சொல்லி விட்டான் இளந்திரையன்.
“இதெல்லாம் எப்பவும் ஒத்து வராது திரையன்.. இதை பற்றி இதுக்கு மேல பேச வேண்டாம்” உறுதியாக சொன்னவனின் முகம் இறுகிப் போனது.
“டேய் அதுக்கெதுக்கு இவ்வளவு இறுகிப் போற.. நார்மலா இரு.. முதல்ல சோல்டரை இறக்குடா” நார்மலுக்கு அவனை கொண்டு வந்தவன் உணவு உண்ண வைத்தான். அவர்கள் இருவரையும் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் இவர்கள் இருவரும் தன் உலகில் இருந்தார்கள் சாமும் வேரலும்.
“ரெண்டு பேருக்குள்ள பாண்டிங் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு” மனதோடு எண்ணிக் கொண்டான் திரையன்.





