எந்த முகத்தை வைத்து கதிரவனையும் பனியையும் அவர் பார்ப்பார். ஒதுங்கியே இருந்துக் கொண்டார். அவரின் விலகளை பார்த்த கதிரவன் பெருமூச்சு விட்டான்.
அவரை சமாதனம் செய்ய என்ன இருக்கிறது என்று எண்ணி விட்டானோ என்னவோ..
“இதென்னடி மாயாம இருக்கு.. இவங்களே ஒளிய வச்ச மாதிரி இத்தனை வருசம் கழிச்சு கண்டு பிடிச்சு கூட்டிட்டு வந்த மாதிரியில்ல இருக்கு” கலாவிடம் கிசுகிசுத்தார் மங்கை.
“அது தான் அண்ணி எனக்கும் ஒன்னும் புரியல.. யாரு கண்டா அப்படியும் இருக்கும். இல்லன்னா இத்தனை வருடம் கழிச்சு சரியா கண்டு பிடிச்சு கூட்டிட்டு வர முடியுமா?” எலும்பு இல்லாத நாக்கு கண்ட மேனிக்கு பேசியது. இதுக ரெண்டும் இப்படி தான் என எல்லோருக்கும் தெரியுமே எனவே யாரும் அவர்களை சட்டை செய்யவில்லை.
ஒரு மாதிரி கனத்துப் போய் இருந்தது அந்த சூழல்.. அதை கலைத்தான் கதிரவன்.
“வர்ற மூணாம் நாள்ல நிலாவை அறிமுகம் செய்து வைக்கும் விழா ஏற்பாடு செய்து இருக்கேன்.. இன்னையில இருந்து பத்திரிகை குடுக்கலாம்னு இருக்கேன்” என்றவன்,
“இதுல உங்க யாருக்கும் ஆட்சேபனை இருக்கா?” என்று எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தான்.
“எனக்கு இருக்கு” என்று மங்கை சொல்ல வர,
“யாருக்கு ஆட்சேபனை இருந்தாலும் அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை.. இந்த விழா சிறப்பாக நடக்கும்..” என்று இறுதியாக அழுத்தமாக அவன் சொல்லி விட மங்கைக்கு அத்தனை ஆத்திரம் வந்தது.
பின்ன இவ்வளவு செலவு செய்கிறானே இவளுக்கு போய் அந்த ஆத்திரம் அவரை பிடித்து ஆட்டியது.
‘இத்தனை செலவு செய்து இவளை அறிமுகம் செய்து வைக்கலன்னா என்ன கேடு வந்தது.. ஒன்னும் இல்லாதவளா வந்து இந்த வீட்டையே ஆள வந்துட்டாளே..’
கலாவுக்கும் அத்தனை எரிச்சல் வந்தது. “யார் வீட்டு காசை எடுத்து யாருக்கு செலவு பண்றது..” மனம் வெந்துப் போனார்.
ஆனால் அவரால் வாய் திறக்க முடியாதே.. முதல் எதிரியே அவருக்கு அவரின் கணவன் தான். எனவே வாயை மூடிக் கொண்டு மங்கையிடம் மட்டும் புலம்பி தள்ளினார்.
ரேவதிக்கும் சேகரனுக்கும் அப்படி ஒரு சந்தோசம். அறிந்தவர் தெரிந்தவர் என யாரையும் விட்டு வைக்கவில்லை. எல்லோருக்கும் பத்திரிக்கை குடுத்து அன்புடன் வரச்சொல்லி சொன்னார்கள்.
அதோடு முறைப்படி தன் தகப்பனின் வீட்டுக்கு சென்று அவருக்கும் பெருமிதத்தோடு பத்திரிக்கை வைத்து,
“என் மக எங்களுக்கு கிடைச்சுட்டா.. அதை கொண்டாட தான் இந்த விழா.. மறக்காம வந்திடுங்க.. ஏன்னா இது உங்க தலைமையில தான் நடக்கணும்னு என் மச்சான் கம் மருமகன் ஆசை படுறான்.. அவனோட ஆசையை நிறைவேற்றுவது மாமனாரான என்னோட தலையாய கடமை இல்லையா? அதனால எந்த வேலையா இருந்தாலும் அதை தள்ளி வச்சுட்டு மறக்காம வந்திடுங்க.. உங்களுக்காக அங்க எல்லோரும் காத்துக்கிட்டு இருப்பாங்க..” என்று சொன்னவர் கிளம்பி விட்டார்.
வாசல் வரை சென்றவர் மீண்டும் உள்ளே வந்து,
“என் மச்சான் உங்க கிட்ட ஒன்னு சொல்ல சொன்னான்..” என்றவரை முறைத்துப் பார்த்தார் அவரின் அப்பா.
“அது என்னன்னா நீங்க தான் ஸ்பீச் குடுக்கணுமாம்.. அதனால பக்காவா உங்களை ரெடி பண்ணிக்க சொன்னான். அதை சொல்ல மறந்துட்டேன்” என்று கிழட்டு சிங்கத்தை இன்னும் சொரிந்து விட்டு போனார் சேகரன்.
அவர் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் அமர்ந்து இருந்தார். “என்னவே எனக்கு வயசாக்கிடுச்கின்னு எல்லா பயலும் சீண்டி பாக்குறியலோ.. இப்ப நினைச்சா கூட உங்க அத்தனை பேரையும் உண்டு இல்லன்னு ஆக்கிப்புட்டுவேன்.. அந்த அசிங்கத்தை மூட்டை கட்டி குழி தோண்டி புதைச்சுடுவேன்... இந்த சதாசிவத்தை பத்தி யாருக்கும் தெரியல” என்று அவர் கர்ஜிக்க,
“சாரி சாவியை மறந்துட்டேன்” என்று உள்ளே வந்த ரேவதியும் சேகரனும்,
“மூட்டை கட்டி வைக்க என் மக என்ன புளியஞ்சோறா.. ஐயோ தகப்பா நீர் இப்ப பல்லு பிடுங்குன பாம்பு.. உம்மால ஒன்னத்தையும்” என்று தன் தலை முடியை இழுத்து காட்டிய சேகரன்,
“புடுங்க முடியாது.. ஏன்னா என் மகளுக்கு அரணா நிக்கிறது கதிரவன். அவனை தாண்டி நீ முதல்ல என் மகளை பார்த்திரும்.. அதுக்கு பிறகு அவளை நீ பொட்டலம் கட்டலாம்..” என்று சொன்னவர்,
தகப்பனி வெகு அருகில் வந்து “உம்ம பத்தி அக்குவேறு ஆணிவேரா என் மாப்பிள்ளைக்கு தெரியும்.. அவன் முன்னாடி உம்ம முடி கூட அசையாது.. அதனால இந்த வெட்டி வீராப்பு பசப்பு பேச்சை விட்டுட்டு விழாவுக்கு தலைமை தாங்க வந்து சேரும்” என்று விட்டு கார் சாவியை எடுத்துக் கொண்டு போய் விட்டார் சேகரன் தன் மனைவியை கையை அழுத்தமாக பற்றிக் கொண்டு.
ஒரு காலத்தில் மனைவியின் கையை பிடிக்க கூட எத்தனை பேச்சு இந்த வீட்டில் வாங்கி இருப்பார் சேகரன். அதை எல்லாம் நினைக்கும் பொழுதே நெஞ்சுக்குழி வெந்துப் போனது.
மிக ஆடம்பரமாக அழகாக தயார் ஆனது விழா மேடை. அதில் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக பெண்ணவள் அழைத்து வரப்பட்டாள்.
நடுநாயகமாக அவளை அமரவைத்து அவளுக்கு இரு புறமும் கதிரவன், சித்து, சேகரன், ரேவதி அமர்ந்துக் கொண்டார்கள். மற்ற யாரையும் மேடைக்கு அழைக்கவில்லை. எல்லோருக்கும் மேடைக்கு கீழேயே வரிசையாக இருக்கை போடப்பட்டது.
சேகரனின் அப்பாவும் தன் மானத்தை காப்பாத்திக் கொள்ள வேண்டி வர வேண்டியதாய் போனது. ஆனால் அவரை தலைமை தாங்க சொல்லி கதிரவன் அழைக்கவே இல்லை இறுதி வரை. அவரும் இப்போ கூப்பிடுவாங்க அப்போ கூப்பிடுவாங்க என்று காத்திருந்து காத்திருந்து ஏமாந்துப் போனார்.
மாதவன் நிகழ்ச்சியை ஆரம்பிக்க, அவனை தொடர்ந்து கதிரவனும் சேகரனும் தான் மாற்றி மாற்றி பேசினார்கள். பரிசுகளை எல்லாம் காமாட்சி மற்றும் ரேவதி கையாலே வழங்கப்பட்டது. துளசியும் கோபாலும் முதல் நாள் இரவு தான் வந்து இருந்தார்கள்.
அவளும் இவர்களுக்கு உதவி செய்ய வந்து விட்டாள். மூன்று பெண்களும் கதிரவன் வாங்கி வைத்த பரிசு பொருளை கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள் அனைவரையும்.
“என்னடா கூட்டிட்டு வந்து அவமானப் படுத்துறியா?” கதிரவனிடம் எள்ளும் கொள்ளும் வெடிக்க கேட்டவரை பார்த்தவன்,
“நான் எது சொன்னாலும் அப்படியே நம்புனா நான் என்ன பண்றது மாமா.. நீங்க தான் யோசிச்சு இருந்து இருக்கணும். இந்த பயலை நம்பலாமா நம்ப கூடாதான்னு..” தோளை உலுக்கியவன்,
“அப்புறம் அடுத்த மாசம் எனக்கும் என் அக்கா பொண்ணு பனிநிலவுக்கும் கல்யாணம். மறந்துடாம அதுக்கும் நீங்க தான் வந்து தலைமை தாங்கனும்.. ஏன்னா நீங்க வயசுல பெரியவர் இல்லையா? உங்களுக்கு குடுக்க வேண்டிய மரியாதையை நான் கண்டிப்பா குடுக்கணும் இல்லையா?” என்று நக்கலாக சொன்னவனை எவ்வளவு முறைக்க முடியுமோ அந்த அளவுக்கு முறைத்து விட்டு போனார் சதாசிவம்.
“என்ன மச்சான் உன் மாமாவை சுத்தி சுத்தி அடிக்கிற?” மாதவன் சிரிப்புடன் கேட்டான்.
“எல்லாத்தையும் எவ்வளவு பாடு படுத்தி இருக்காரு.. இனி வாங்குற நேரம். அதனால அதிகமாவே வாங்குவாரு” என்றவன் விழாவை அவனோடு சேர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.





