“உங்க தகுதிக்கு இதெல்லாம் தேவையா மிஸ்டர்?” கதிரவன் சற்று கடுமையாகவே கேட்டான்.
“அப்படி இல்ல சார்.. என்ன தான் நான் பெரிய பதவியில இருந்தாலும் நானும் குடும்பம் பிள்ளைங்கன்னு வாழனும் இல்லையா? அதுக்கு உங்க தங்கச்சி தான் வேணும். உங்க தங்கச்சி மேல என் மனசை வச்சு மூணு வருடம் ஆச்சு.. எனக்கு உங்க தங்கச்சியை குடுத்தா அவளை கண் கலங்காம பார்த்துக்குவேன் ப்ளீஸ். எனக்கு தர்றீங்களா?” என்றவனின் நேர்மையான கோரிக்கை கதிரவனின் மனசை அசைத்தது.
“சப்போஸ் நான் குடுக்கலன்னா?” கேள்வியாக நிறுத்தினான் கதிரவன்.
“சிம்பிள் கடைசி வரை தனியாவே இருந்து விடுவேன்” என்றவனின் உறுதியில் உள்ளுக்குள் அவனை மெச்சிக்கொண்டான்.
“இது நான் மட்டும் எடுக்கிற முடிவு கிடையாது மிஸ்டர் கோபால். வீட்டுல கலந்து பேசி எடுக்க வேண்டிய முடிவு.. சோ வெயிட் பண்ணுங்க” என்று சொன்னவன் கிட்டத்தட்ட ஒரு வருடம் அதை கிடப்பிலே போட்டு வைத்து இருந்தான் எமகாதகன்.
இதில் அடிக்கடி கோபாலோடு சேர்ந்து நண்பன் என்கிற பெயரில் அவனது வீட்டுக்கு வந்து போவான். அப்படி வரும் போது எல்லாம் அல்லி அவனை சிறப்பாக கவனிப்பார். அவருக்கு ஆரம்பத்தில் எந்த உண்மையும் தெரியாது.
ஒரு நாள் கதிரவனே விசயத்தை ஓப்பேன் செய்ய, அல்லிக்கு தன் காதை நம்பவே முடியவில்லை.
“என்ன தம்பி சொல்றீங்க? உங்க தகுதிக்கு நாங்க ஏணி வச்சாலும் எட்ட முடியாது.. இந்த வசதி எல்லாம் என் மகன் தலை எடுத்த பிறகு தான். ஆரம்பத்துல இருந்து எங்கக்கிட்ட எதுவும் இருந்தது இல்ல.. ஆனா எங்களை போய் உங்க சம்மந்தியாக சொல்றீங்க?” அல்லிக்கு கைகால் எல்லாம் உதறியது.
“அத்தை” என்றான் அழுத்தமாக. அவனது அழைப்பில் இன்னும் திகைத்துப் போன அல்லிக்கு மயக்கமே வராத குறை தான்.
கதிரவன் பெரிய வீட்டு பையன்னு தெரியும். ஏதோ மகனோடு நட்பா பழகுறாப்ள போல என்று தான் எண்ணி இருந்தார். ஆனால் அந்த வீட்டுக்கே சம்மந்தம் பேச கேட்க மயக்கம் வருமா வரதா? அப்படி ஆச்சரியப்பட்டு, ஆராவரப்பட்டு ஊரே வியந்து போய் பார்க்க துளசியை பெண் கேட்டு வந்து, இருவருக்கும் உறுதி செய்து, இதோ இன்னும் இருபத்தி ஐந்து நாளில் கல்யாணம் ஆக இருக்கும் நிலையில் உப்பு சப்பு இல்லாத விசயத்தை பெரிதாக்கி இருக்கும் கணவனை காய்ச்சி எடுத்து விட்டார் அல்லி.
அதுவும் கதிரவனின் ஒட்டாத பேச்சில் கணவனை விழிகளாலே எரித்து பஸ்ப்பம் ஆக்கி விட்டார்.
மனைவியின் கண்களில் பறந்த நெருப்பு சுடரில் சுதாரித்துக் கொண்ட ராஜன்,
“வாங்க தம்பி” என்று வரவேற்று அவனை மேலே மாடிக்கு அழைத்துச் சென்று கண்ணீர் விடாத குறையாக மன்னிப்பு கேட்டு,
அக்கா தங்கச்சி செய்த செயலில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று தெளிவு செய்து, இப்பொழுதே அவனுடன் உடன் வந்து அவனது வீட்டில் இருப்பவர்களிடம் பேசி விடுகிறேன் என்ற பிறகே விட்டான் கதிரவன்.
“நான் வரேன் அத்தை” என்று அவன் கிளம்பி விட,
“இருய்யா.. எனக்கு பதறுது.. கூறு கெட்ட தனமா இப்படி நடந்துடுச்சு.. அதுக்காக முகத்தை இப்படி தூக்கி வச்சுக்காத. கோபால் மாதிரி தான் நீயும் எனக்கு.. உன் மனம் வாடிப்போனா என் மனசும் வாடிப்போகும்.. நேத்திக்கே எல்லோரையும் ஒரு போடு போட்டுட்டேன்.. பொண்ணை பார்க்க வரேன்னு தான் முதல்ல சொன்னாங்க இவங்க எல்லாம். ஆனா அதுக்கு பிறகு உன் அத்தை கிட்ட இருந்து போன் வரவும் அங்க போய் பிரச்சனை ஆகிடுச்சு.. நிலைமையை சமாளிக்க முடியல.. எல்லாமே கை மீறி போயிடுச்சு தம்பி” சொன்னவரை அதுக்கு மேல கோவித்துக் கொள்ளாமல்,
“நான் பார்த்துக்குறேன் அத்தை. பனியை பத்தி விளக்கம் எதுவும் சொல்லணுமா?” அவன் கேட்க, அல்லிக்கு மளுக்கென்று கண்ணீர் வந்து விட்டது.
“நீ என்ன இன்னும் நம்பள தானே” தேம்பியே விட்டார் அல்லி.
“ப்ச் கதிரவன் என்ன இது” அவனை அதட்டிய பனி, வேகமாய் அல்லியின் கையை பிடித்துக் கொண்டாள் ஆதரவாக.
“விடும்மா தம்பி பேசுற அளவுக்கு கொண்டு வந்தது நாங்க தானே.. தம்பிக்கும் ஆதங்கம் இருக்கும் தானே” என்று அவர் கலங்கிப் போய் சொல்ல,
கோபால் எதிலையும் தலையிட்டுக் கொள்ளவில்லை. அவன் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தான்.
கதிரவனுக்கும் அல்லிக்கும் நடுவில் போனால் தன்னை இருவரும் ஓரம் கட்டி விடுவார்கள் என்று தான் அவனுக்கு தெரியுமே. அதனால் அமைதியாக அமர்ந்து விட்டான்.
“உனக்கு இன்னும் நம்பிக்கை வரல தானே.. இப்பவே வா.. எல்லோரையும் கூட்டிட்டு உங்க வீட்டுக்கு வந்து பேசுறேன்” என்று சொன்னவர் பேச்சோடு மட்டும் இல்லாது எல்லோரையும் கிளப்பி விட்டார்.
அல்லியின் வேகத்தை கண்டு சிரித்த கதிரவன், காமாட்சிக்கு போனை போட்டு,
“இருபது இருபத்தி அஞ்சு பேருக்கு விருந்து ஏற்பாடு பண்ணுங்க” என்றான்.
“தம்பி” என்று அவர் அதிர,
“விருந்து தடாபுடால இருக்கணும் ம்மா..” என்றான்.
“யாருப்பா” என்று கூட அவரால் கேட்க முடியவில்லை. இரண்டாவது மகளின் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குவது போல இருக்க அவருக்கு கொஞ்சமும் சுரத்தே இல்லை. இரவெல்லாம் ஒரு புலம்பல் தான். கண்ணீரில் மிதந்தவர் தன் மகனுக்கு பயந்து தலையணையில் புதைத்துக் கொண்டார்.
காலையில் இயல்பு போல எல்லாம் செய்தாலும் அவரின் நெஞ்சு கணத்துப் போய் இருந்தது. தன் மாமியாரிடம் தான் சொல்லி புலம்பிக் கொண்டு இருந்தார்.
இப்பொழுது மகன் விருந்து அது இது என்று சொல்ல, இன்னும் கலங்கிப் போனார். தான் இருக்கும் நிலையில் எப்படி விருந்தை ஏற்பாடு செய்ய முடியும் அவர் மேலும் நிலை குலைந்துப் போனார்.
காமாட்சியின் உணர்வுகள் இன்னது தான் என்று அறிந்தும் அவரிடம் உண்மையை சொல்லவே இல்லை கதிரவன்.
பனி கூட “அம்மாச்சி கிட்ட சொல்லிடுங்களேன் என்னவோ ஏதோன்னு வேதனை பட்டுக்கிட்டு இருப்பாங்க.. இந்த செய்தி தெரிஞ்சா பீல் ப்ரீயா இருக்கும் இல்லையா?” என்று காரில் வரும் பொழுது சொல்ல, அவனோ அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் வண்டியை ஓட்டினான்.
“இதென்ன பிடிவாதம்” முணுமுணுத்துக் கொண்டவளுக்கு கதிரவனின் செயலில் கொஞ்சமும் உடன்பாடே இல்லை. அவளின் புலம்பலை காதில் வாங்கியவன், மீண்டும் தாய்க்கு அழைத்தான்.
“ம்மா துளசியை புடவை கட்டி ரெடியா இருக்க சொல்லுங்க” என்று விட்டு போனை வைத்து விட்டான். மீண்டும் என்ன தகவல் என்று உருப்படியாக எதுவும் சொல்லவில்லை. ஆடர் மட்டும் போட்டான்.
இங்கே செய்தியை கேட்ட துளசிக்கு நெஞ்சை அடைக்காத குறை தான்.
“என்னம்மா சொல்றீங்க? விருந்து ஒரு பக்கம் ஏற்பாடு, என்னைய வேற கிளம்பி இருக்க சொல்றாரு அண்ணன்.. எனக்கு என்னவோ பயமா இருக்கும்மா. மாப்பிள்ளை வீட்டு மேல இருக்கிற கோவத்துல எனக்கு இன்னொரு இடத்துல கல்யாணம் பேசி இருக்காறோன்னு” கண்கள் கலங்கிப் போய் அவள் பேச,
“அப்படி எல்லாம் எதுவும் இருக்காது துளசி.. நீ கவலை படாத..” என்று சொல்லும் பொழுதே அவருக்கும் நெஞ்சுக்குள் ஒரு உறுத்தல் இருக்க தான் செய்தது. ஏனெனில் கதிரவனின் கோவம் அந்த மாதிரி தான் இருக்கும். ஒன்னு வேணும்னு நின்னா அது வேணும். அதுக்காக எந்த எல்லை வரைக்கும் வேணாலும் செல்வான்.
அதே போல வேண்டாம் என்றால் அது எதுவாக இருந்தாலும் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் அது வேணாம் தான். இவனுக்கு மட்டும் என்றால் சரி தான். இவன் தான் மொத்த குடும்பத்துக்கும் சேர்த்து முடிவு எடுக்கிறானே..
அதனால் தான் இவர்களுக்கு பயமே..





