Notifications
Clear all

அத்தியாயம் 34

 
Admin
(@ramya-devi)
Member Admin

அதே போல வேண்டாம் என்றால் அது எதுவாக இருந்தாலும் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் அது வேணாம் தான். இவனுக்கு மட்டும் என்றால் சரி தான். இவன் தான் மொத்த குடும்பத்துக்கும் சேர்த்து முடிவு எடுக்கிறானே..

அதனால் தான் இவர்களுக்கு பயமே.. கலாவுக்கு ஒரே கொண்டாட்டம் தான் அம்மா மகள் இருவரும் கண்ணீர் விட்டு கலங்கி நிற்பதை பார்த்து.

விசாலம் தான் இருவரையும் அதட்டி, “அப்படி எல்லாம் என் அய்யா எதுவும் செய்துட மாட்டான். ஊருக்கே பத்திரிக்கை வைக்க போறோம். இப்ப போய் இந்த கல்யாணத்தை நிறுத்தி வேற கல்யாணத்தை செய்வானா? கவலை படாம அய்யா சொன்னதை செய்ங்க” என்று அவர்கள் இருவருக்கும் உதவியாக இருந்து மெல்ல மெல்ல தேற்றி எடுத்தார்.

சிறிது நேரத்திலே ரேவதி, சேகரன், தேவன் மற்றும் பொன்னன் என வீட்டு ஆட்கள் எல்லோரும் வந்து விட, காமாட்சிக்கு காய்ச்சலே வந்து விட்டது.

“இப்ப எதுக்கு ரேவதி எல்லோரும் வந்து இருக்கீங்க?” என்று பயத்துடனே விசாரித்தார்.

“எனக்கு என்ன ம்மா தெரியும். கதிரவன் தான் வீட்டுக்கு வர சொல்லி இருந்தான். அது தான் கிளம்பி வந்தோம்.. அதோட உங்க நாத்தனார் குடும்பத்தையும் வர சொல்லி சொல்லி இருக்கான். அதனால அரிசிய சேர்த்தே போடுங்க” என்றார் ரேவதி.

“ஏதே..” என்று நெஞ்சை பிடித்துக் கொண்டார்.

“என்னம்மா இதுக்கே நெஞ்சை பிடிச்கிக்குறீங்க.. உங்க மகனை எந்த நேரத்துல பெத்து போட்டீங்களோ.. எல்லாம் ஆடர் தான். தகவல் கூட மத்தவங்க கிட்ட சொல்றது கிடையாது..” என்று அலுத்துக் கொண்டவர், “துளசி ரெடியாகிட்டாளான்னு பார்த்துட்டு வரேன். நீங்க இங்க பார்த்துக்கோங்க” என்று துளசிடம் போய் விட்டார்.

“என்ன செய்தின்னு எதுவும் தெரியுமா பொன்னா?” மெய்யப்பன் மகனிடம் கேட்டார்.

“இல்லப்பா ஒன்னும் தெரியலயே” என்றார் சங்கடமாக.

வீட்டில் ஏதோ ஒன்று நடக்கிறது. ஆனால் ஒருவருக்கு கூட என்ன ஏது என்று தெரியவில்லை. தெரிய விடவில்லை கதிரவன்.

‘அப்படி என்ன அழுத்தமோ..’ வாய்க்குள் திட்டிக் கொண்டே தான் வந்தாள் பனி.

பின்ன வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் என்னவோ ஏதோ என்று அல்லவா பதை பதைத்துப் போய் இருப்பார்கள். அந்த கவலை கொஞ்சமும் இல்லாமல் இருப்பவனை காண காண பத்திக் கொண்டு வந்தது பனிக்கு. சரி யாரிடமாவது சொல்லலாம் என்றால் கதிரவனின் போன் எண்ணை தவிர வேறு யார் எண்ணும் அவளிடம் இருக்கவில்லை.

அல்லி ஒரு படி மேலே போய் வருகிற வழியில் இருந்த நகை கடையில் பதினைந்து பவுனுக்கு நியூ மாடல் ஆரமும், அதற்குரிய தோடு, வளையல் ஒட்டியாணம் என்று இன்னும் இருபது முப்பது பவுனுக்கு எடுத்துக் கொண்டு வந்தார்.

அவரின் நாத்தனார்கள் இருவருக்கும் காதில் புகை வராத குறை தான். மற்றபடி வயிறு எல்லாம் காந்தி எடுத்தது அவர்களுக்கு.

அதுவும் மகனை பணம் கட்ட சொல்லாமல், கணவனை கட்ட சொல்ல, பாவமாக பார்த்தார் அவர்.

“இப்படி பாவமா பார்த்தா உங்களை அப்படியே விட்டுடுவேன்னு நினைச்சீங்களா? கும்பலா போய் என் மருமகளை நோகடிச்சீங்கள்ள அதுக்கு தெண்டம் கட்டுங்க.. நான் அங்க வாய் திறக்கக் கூடாதுன்னு தான் சிவனேன்னு இருந்தேன். இல்ல உங்களோட சேர்த்து உங்க அக்கா தங்கச்சி மூணு பேரையும் உண்டு இல்லன்னு அக்கி இருப்பேன்” கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் அல்லி கறுவியதில், தலையை பூம்பூம் மாடாக ஆட்டினார் அவரின் கணவர்.

“இந்த வயசுலயும் தம்பியை எப்படி ஆட்டி வைக்கிறா பாரு. இந்த சாமார்த்தியம் எல்லாம் நமக்கு வருமா சொல்லு” என்று அல்லியின் நாத்தனார்கள் இருவரும் புலம்பிக் கொண்டே வந்தார்கள்.

வீட்டு வாசலில் இரண்டு காரும் ஒரு வேனும் வந்து நிற்க வேகமாய் எல்லோரையும் முந்திக்கொண்டு காமாட்சி தான் ஓடி வந்து பார்த்தார். அவரின் கண்களில் இருந்த பயத்தையும் அடித்து பிடித்துக் கொண்டு வந்த வேகத்தையும் பார்த்த பனி கதிரவனை அப்படி ஒரு முறை முறைத்தாள் என்றாள், அல்லிக்கோ பதறியடித்துக் கொண்டு வந்த வருங்கால சம்மந்தியை பார்த்து மனம் கணத்துப் போனது.

வேகமாய் எல்லோரையும் தள்ளி விட்டுட்டு, “ஐயோ என்ன சம்மந்தி இது.. இப்படி வேர்த்து விறுவிறுத்துப் போய் இருக்கீங்க.. தம்பி விருந்து செய்ய சொன்ன உடனே நீங்களே முன்னாடி நின்னு எல்லாத்தையும் செஞ்சிங்கலாக்கும். நல்லா இருக்கு போங்க.. பொண்ணு வீட்டுன்னு கெத்தா இருக்க வேண்டாமா? இப்படி தான் வியர்த்து போய் இருக்கிறதா? என் மருமக எங்க உள்ள இருக்காளா?” வேகமாய் பேசிக் கொண்டே காமாட்சியின் கைகளை பற்றிக் கொண்டார் ஆதரவாக.

அவரின் வேதனை அறியாதவரா அல்லி. அதனால் தான் பேச்சோடு பேச்சாக சம்மந்தி, மருமகள் என்று போட்டார். அல்லியின் பேச்சில் காமாட்சிக்கு வயிற்றிலும் நெஞ்சிலும் பால் வார்த்தது போல இருக்க, கண்களே கலங்கிக் கொண்டு வந்தது.

அதை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு,

“எல்லோரும் வாங்க” என்று கைக்கூப்பி வரவேற்றார். அவரை பார்க்கவே பாவமாக இருந்தது கோபாலுக்கு.

எல்லோரையும் வரவேற்று அமரவைத்து, கொறிக்க, குடிக்க குடுத்து முடித்த நேரம்,

“மருமகளை கூட்டிட்டு வாங்க சம்மந்தி” காமாட்சியிடம் சொன்னார் அல்லி.

தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றவர் ரேவதியை கூட்டிக்கொண்டு வரச்சொன்னார்.

ரேவதிக்கு தயக்கமாக இருந்தது. நேற்றைக்கு பனியை பற்றி பேசும் பொழுது இவரின் பழைய வாழ்க்கையை பற்றியும் பேச்சோடு பேச்சாக வரம்பு மீறி பேசி இருந்தார்கள் கோபாலின் அத்தைமார்கள்.

அதனால அவரை வைத்து தங்கையின் வாழ்க்கையை இப்படி எடை போட்டு விட்டார்களே என்று குற்ற உணர்வில் இருந்தார். அதுவும் திருமணத்தை நிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்று இருந்தார்கள். இன்று தானே எப்படி சபையில் தங்கையை கூட்டிக்கொண்டு போவது என்று மலைத்து நின்றார்.

“என்னம்மா ரேவதி.. தயங்கிக்கிட்டு இருக்க.. போ போய் உன் தங்கச்சியை கூட்டிட்டு வாம்மா. நீ கூட்டிட்டு வராம வேற யார் கூட்டிட்டு வருவா” சொன்ன அல்லி, அங்கு ஒரு ஓரமாய் நின்று இருந்த பனியை பார்த்து,

“உனக்கும் தனியா சொல்லணுமா பனி.. போ போய் துளசியை கூட்டிட்டு வா.. நீங்க ரெண்டு பேரும் தானே  மணப்பெண் தோழிகள். அப்ப நீங்களே இப்படி தயங்கி ஓரமா நிர்க்கலமா? போய் கூட்டிட்டு வாங்க என்று அவர் சொல்ல, ரேவதி அப்பவும் தயங்கினார்.

சட்டென்று எழுந்து நின்ற அல்லி,

“நேற்றைக்கு நடந்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் உங்க அத்தனை பேர் கிட்டையும்” என்று அல்லி கையை கூப்ப, சட்டென்று அவரின் கையை கூப்ப விடாமல் பிடித்துக் கொண்ட காமட்சி,

“என்ன சம்மந்தி இதெல்லாம்.. பெரிய பெரிய காரியம் எல்லாம் செய்துக்கிட்டு. நீங்களும் எங்க குடும்பம் தான். நமக்குள்ள என்ன மன்னிப்பு வேண்டி கிடக்கு” என்று பதறிப்போய் விட்டார்.

“இருக்கட்டும் அண்ணி.. எங்க மேல தவறு இருக்குல்லையா? பனிக்கு எப்படி சுருக்குன்னு இருக்குமோ அது மாதிரி தானே ரேவதிக்கும் இருக்கும். ரெண்டு பொண்ணுங்களையும் தேவையில்லாம பேசிட்டாங்க. அதனால என் மருமக எப்படி கலங்கி போய் இருப்பா. பொண்ணு குடுக்குற நீங்க எப்படி கலங்கி போய் இருப்பீங்க” தங்களின் உணர்வுகளுக்கு மரியாதை குடுத்த சம்மந்தியை இன்னும் பிடித்துப் போனது காமாட்சிக்கு.

Loading spinner

Quote
Topic starter Posted : May 13, 2026 1:25 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top