அத்தியாயம் 68

 
Admin
(@ramya-devi)
Member Admin

ஒவ்வொரு தளமா போய் பார்க்கணுமே என்று யோசித்தவள் அந்த கட்டிடத்தின் ப்ளூ பிரிண்ட் ஒவ்வொரு தளத்தின் ரிஷப்ஷனிலும் இருந்தது நினைவுக்கு வர வேகமாய் அவ்விடம் நோக்கி சென்றாள்.

எமேர்செஞ்சி வார்ட் எங்க இருக்கிறது என்று டிம் வெளிச்சத்தில் தேட மிகவும் கடினமாக இருக்க, சட்டென்று தன் போனை ஆன் செய்து லைட் அடித்து பார்த்தவளுக்கு இவள் இருந்த தளத்துக்கு மேல் தளத்தில் தான் எமெர்ஜென்சி வார்டு இருப்பதை கண்டுக் கொண்டவள்,

வேகமாய் லிப்ட்டை நோக்கி பயணித்தாள்.

தன் வயிற்றில் கையை வைத்து,

“டேய் சிங்கக்குட்டி உன் அப்பாவை பார்க்க போறோம்... உனக்கு ஒன்னும் ஆகக்கூடாது.. ஸ்ட்ராங்க இருடா. எனக்கு நீயும் வேணும். உன் அப்பனும் வேணும். அதனால எந்த சேதாரம் வந்தாலும் நீ தாங்கி தான் ஆகணும் சரியா?” என்று பிள்ளையிடம் பேசியவள் சத்தமில்லாமல் லிப்ட்டுக்குள் ஏறி மேல் தளத்தின் பொத்தனை அழுத்தினாள்.

நெஞ்சமெல்லாம் படபடவென்று அடித்துக் கொண்டது. வயிற்றில் வலி எதுவும் இருக்கவில்லை. அதனால் துணிச்சலாகவே தன் கணவனை தேடி போனாள். வலி இருந்தால் கண்டிப்பாக அது குழந்தைக்கு ஆகாது என்று மருத்துவர் எச்சரித்து இருந்தார்.

லிப்ட் நிற்க அச்சத்துடனே அந்த தளம் முழுக்க பார்வையை ஓட்டினாள். ரிஷப்ஷனில் இருந்த நர்ஸ் தலை கவிழ்ந்து நன்றாக தூங்கிக்கொண்டு இருக்க, இது தான் சமயம் என்று எமெர்ஜென்சி வார்டு நோக்கி சந்தடி எதுவும் செய்யாமல் நடந்துப் போனாள்.

வார்டு கதவு சாத்தி இருக்க, அதை சத்தம் வராமல் மெல்ல திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். உள்ளே நிறைய அறைகள் இருக்க அயர்ந்துப் போனாள். இந்த வேலை செய்யவே அவளால் முடியவில்லை. இனி ஒவ்வொரு அறையாக தன்னவனை தேட வேண்டும். மனதில் இருந்த வலு அவளை செயல்பட வைத்தது.

அதற்கு முன்பு நர்ஸ் டியூட்டி டாக்டர்ஸ் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தாள். அனைவரும் தூக்கத்தில் இருக்க இவளுக்கு மிக வசதியாகிப் போனது.

 

ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தாள். ம்ஹும் அவளின் தேடலுக்கு உரியவன் மட்டும் சிக்கவே இல்லை. கடவுளே இன்னும் ஒரே ஒரு அறை தான் மிச்சம் இருக்கிறது.

“அந்த ஒன்றில் என்னவன் இருக்க வேண்டும்...” மனதில் இருந்த தைரியத்துடன் கதவை திறந்துக் கொண்டு உள்ளேப் போனாள்  இழையாள். நெஞ்சமெல்லாம் இருந்திருந்த வாக்கில் படபடவென்று அடித்துக்கொண்டது.

நாவெல்லாம் வறண்டுப் போனது போல ஆனது. அவளின் உள்மனம் கூக்குரல் எழுப்ப,

“இது நிச்சயம் என்னவன் தான்” என்று ஆழ்மனம் அடித்துக் கூற மெல்ல அடி எடுத்து அங்கு கட்டிலில் படுத்து இருந்த உருவத்தை நெருங்கினாள்.

கொஞ்ச தூரம் போன உடனே கட்டிலில் படுத்து இருந்த உருவத்தின் முகம் தெளிவாக தெரிய பார்த்த நொடியிலே பக்கென்று ஆனது அவளுக்கு.

ஆம் அங்கு படுத்து இருந்தவன் ராசசிங்கன் தான். ஆனால் நெற்றியில் அடிபட்டு இரத்தம் உறைந்து போய் இருந்தது. முகம் எங்கும் சின்ன சின்னதாய் ஒரு கீறல் இருந்தது.

ஏன் என்று எண்ணும் பொழுதே முணுக்கென்று கண்களில் நீர் நிறைந்துப் போனது.

கொஞ்சமும் அசைவின்றி படுத்து இருந்தவனை கண்டு மூச்சடைத்துக் கொண்டு வந்தது. ஒரு நேரமாவது அமைதியா இருந்து இருப்பானா.. எவ்வளவு ஓட்டம் கால்களில் சக்கரம் கட்டிக் கொள்ளாத குறையாக எவ்வளவு ஓட்டம்... இன்னைக்கு அப்படி எந்த அவசரமும் இல்லாமல் ஓய்ந்து போய் எதுவும் நினைவில் இல்லாமல் தன் நினைவே இல்லாமல் படுத்து இருந்தவனை கண்டு விம்மல் தெரித்தது.

மெல்ல அவனை இன்னும் நெருங்கிப் போனாள்.

அவனது முகத்தை தன் விரல்களால் வருடி விட, பட்டென்று கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அதிர்ந்துப் போனவள் எச்சில் விழுங்க உள்ளே வந்த டாக்டரை பார்த்தாள்.

கீர்த்தியின் அம்மா தான் வந்து இருந்தார்.

“ஏன் பொண்ணே நான் அவ்வளவு தூரம் சொல்லியும் நீ இப்படி வந்து இருக்க.. நீ என்ன பெரிய சூப்பர் உமனா. உனக்கு உன் கண்டிஷன் தெரியுமா? தெரியாதா? இப்படி தான் ரிஸ்க் எடுப்பியா நீ?” என்று அவர் வந்த உடனே காய்ச்சி எடுக்க,

“ப்ளீஸ் டாக்டர் எதுவும் சொல்லாதீங்க.. எனக்கு அவரை பார்க்கணும். அவ்வளவு தான். என் தவிப்பு என் பிள்ளைக்கும் இருக்கும். அவன் எதுவும் ஆக மாட்டான். ஏன்னா அவன் ராசசிங்கனின் மகன். இவருக்கு இருக்குற அதே கட்ஸ் அவனுக்கும் இருக்கும்” என்றவளை என்ன செய்வது என்று பார்த்தார்.

“உன் பாசத்துல தீயை வைக்க...” என்று எரிந்து விழுந்தார்.

“டாக்டர்... அவரு எப்போ கண் முழிப்பாரு..” என்று அவனுக்கு அருகில் ஏறி அமர்ந்துக் கொண்டவள் அவனின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு அவனை பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“ம்ம் காலையில கண் முழிப்பான்... ஏன்னா அவன் தூக்கம் வரலன்னு தூக்க மாத்திரை போட்டு தூங்குறான் பாரு” என்று அவர் கடுப்படிக்க,

“ஏன் டாக்டர் இப்படி எல்லாம் பேசுறீங்க.. அவரே பாவம்..” என்று ஏந்திழையாள் சொல்ல,

“பொண்ணே” என்று பல்லைக் கடித்தார்.

“சரி நீங்க எதுவும் சொல்ல வேணாம்” என்று சொல்லியவள் அங்கு நின்றவரை அதன் பிறகு கண்டுக்கவே இல்லை. அவளின் மொத்த கவனமும் அவளின் கணவனிடம் மட்டும் தான் இருந்தது.

“ஏங்க இங்க உங்க பிள்ளை என்ன சேட்டை எல்லாம் செய்யிறான் தெரியுமா? உங்களை இப்பவே பார்க்கணுமாம். உங்களை பேச சொல்லி என்னை எட்டி உடைதைக்கிறான் தெரியுமா? எழுந்து வந்து அவனை என்னன்னு கேளுங்க.. அவனோட அக்கப்போரு தாங்க முடியல.. நீங்க எப்படி என்னை உருட்டி மிரட்டுனீங்களோ அதை விட அதிகமாக என்னை படுத்தி எடுக்கிறான்” என்று சொன்னவள் அவனின் ஒரு கையை எடுத்து தன் உடையை விலக்கி வெற்று வயிற்றில் வைத்தாள்.

உள்ளே துடித்த உயிர் அவனையும் உணரவைத்ததோ என்னவோ மெல்ல அவனின் கையில் லேசான நடுக்கம். அதை உணர்ந்தவளுக்கு விழிகளில் நீர் ஊற்றெடுத்தது... அவனது அசைவை மன்ப்பூர்வமாக உணர்ந்து அதிர்ந்தவள் “டாக்டர்” என்று அலறினாள்.

“என்னம்மா?” என்று அவர் பதறிப் போய் அவளின் அருகில் வந்து கேட்க,

அவனது கையை பேச்சுகலற்று சுட்டிக் காட்ட, அவரின் விழிகளில் வியப்பு முகிழ்த்தது.

“அமேசிங் ஏந்திழையாள்” என்றவருக்கு குரல் கரகரத்துக் கொண்டு வந்தது.

“டேய் சிங்கா” என்று அவர் அவனிடம் பேச எந்த ரியாக்ஷனும் அதன் பிறகு குடுக்கவே இல்லை. ஏந்திழையாளும் அன்று இரவு முழுவதும் எவ்வளவோ மூச்சு போட்டும் ராசசிங்கனிடம் வேறு எந்த ரியாக்ஷனும் எழவே இல்லை.

மரக்கட்டை போல போட்டது போட்டபடியே இருந்தான். அவனது கையை எடுத்து ஆயிரம் முறை அவளின் வயிற்றில் வைத்து இருப்பாள் அவனின் மனைவி. ம்ஹும் அவனிடம் நோ ரியாக்ஷன்.

“உங்க மகன் என்னை படுத்துறான்... நீங்க என்னன்னு கேளுங்க” என்று சொன்ன வாசகத்தையே ஐநூறு முறை சொல்லி இருப்பாள். ஆனால் ராசசிங்கனிடம் எந்த உணர்வுமே வெளிப்படவே இல்லை.

மிகவும் ஏமாந்துப் போனாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : May 5, 2026 6:31 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top