“அவனை அதுக்காக எல்லாம் கொல்ல முயற்சிக்கல மச்சான்... எவ்வளவு தைரியம் இருந்தா அவன் நம்ம வீட்டு பெண் மேலையே கை வைப்பான். கல்யாணம் செய்துக்க கேட்டு வந்து இல்லன்னு நாம மறுத்து பேசிய பிறகும் நம்ம பெண்ணையே வளைத்து போட்டு கல்யாணமும் செய்துக்கிட்டான். அது போதாதுன்னு நமக்கு மட்டும் உரிமையான வழி வழியா தலைமுறை தலைமுறையா வந்த சொத்துல பங்கு போட்டு எடுத்துக்கிட்டான். அவனோட பிறப்பு என்ன, குலம் என்ன, கோத்திரம் என்ன.. பணம் இருந்துட்டா குடும்ப பாரம்பரியம் எதுவும் வேணாமா?
எங்கயோ தெருவுல கிடந்த அனாதை பயலுக்கு நம்ம வீட்டு பெண்ணையும் குடுத்து சொத்தையும் குடுக்கணுமா? நம்ம குடும்ப கெளரவம் இப்போ சந்தி சிரிச்சு போய் கிடக்கு...”
“நம்ம சாதி சனம் எல்லாம் நம்மளை தான் பெரிய தலைக்கட்டு ன்னு ஊருல முக்கிய பஞ்சாயத்துக்கு எல்லாம் பஞ்சாயத்து பண்ண கூப்பிடுது. ஆனா இப்போ எவனோ ஒருவனை மாப்பிள்ளையா ஏத்துக்கிட்டதுனால அவனுங்க எல்லாம் கொஞ்சமும் மதிக்க மாட்டேங்குறானுங்க... போன மானம் போனது தானே...”
“இந்த டவுனுக்குள்ள பிழைக்கிறது எல்லாம் பெரிய விசயம் இல்ல.. நம்ம ஊருல நாம தான் அசைக்க முடியாத ஆலமரம். ஆனா அந்த ஆலமரத்தையே அடியோட சாய்க்க பார்த்துட்டான் அந்த ராசசிங்கன். அப்படி பட்டவனை வேரோட அழிக்காம விட்டா முகரையில் மயிறு என்னத்துக்கு... அது தான் அவனை அடியோட அழிக்கணும்னு திட்டம் போட்டு கவிழ்த்தாச்சு” என்றார் கண்களில் இனவெறி மின்னியது.
“அது மட்டும் போதாது ண்ணா... இழையாளை கூட்டிட்டு போய் வயித்த கழுவ சொல்லணும்... நமக்கு தெரியாம அவ வயித்துல அவனோட வாரிசு வளரக்கூடாது... அவனோட வாரிசே இல்லாம பண்ணிடனும்” என்று இழையாளின் அப்பா சுந்தரம் சொல்ல,
ஏந்திழையாளுக்கு பகீரென்று ஆனது... ஏற்கனவே காலின் இடையில் ஏற்பட்ட உதிர கசிவு இப்பொழுது அதிகம் ஆக இங்கே இவர்களின் பேச்சு அவளை இன்னும் அதிர்வுக்கு உள்ளாகி உதிர கசிவு மேலும் மேலும் அதிகம் எடுத்தது.
“அய்யோ கடவுளே... என் வீட்டு ஆட்கள் இவ்வளவு கொடூரமானவர்களா? இது தெரியாமலா நான் இவர்களோடு இவ்வளவு நாள் வாழ்ந்து இருக்கேன்” என்று உள்ளம் மறுகிப் போனாள்.
“நல்ல முடிவு சின்ன மச்சான்.. இதை நானே சொல்லனும்னு இருந்தேன்.. கண்டவனோட வாரிசு நம்ம வீட்டு பெண் வயித்துலையா? முடியவே முடியாது” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே,
“ஒரு வேலை அவனோட வாரிசு நம்ம இழையாள் வயித்துல வந்தும் கலைக்க முடியாத லெவலுக்கு போயிடுச்சுன்னா என்ன பண்றது” என்று கேள்வி வைக்க கண்ணனும் சுந்தரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“என்ன மச்சான் ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க? பதில் சொல்லுங்க” என்றவருக்கு இருவரும் ஒரு சேர,
“வேற என்ன பிள்ளையோடு சேர்த்து அம்மாவையும் கலைச்சிட வேண்டியது தான்..” என்றார்கள் நிதானமாக.
அதை கேட்ட ஏந்திழையாள் விக்கித்துப் போனாள்.
“அது தானே ஊருக்கு ஒரு நியாயம் நம்ம வீட்டுக்கு நியாயமான்னு பார்த்தேன்” என்றார் பெரிய மாமா.
“அதெப்படி நம்ம இனத்துல வேற ஒருத்தர் தடம் மாறிப் போனாலே விட்டு வைக்க மாட்டோம். இப்போ நம்ம வீட்டுக்குள்ளயே அப்படி நடந்தா விட்டுடுவமா? ரெண்டு பேரையும் தீர்த்துக் கட்டிட்டு தான் மறுவேலை” என்றார் சுந்தரம்.
இன வெறி பழிவெறி அவரின் முகத்தில் தாண்டவம் ஆடியது.
“அவனை கோமாவுக்கு அனுப்புனதோட விடக் கூடாது ண்ணா” என்றார் சுந்தரம்.
“எனக்கும் அப்படி தான் தோணுது.. ஆனா இந்த கதிர் பய அவனோட முதலாளியை எங்க வச்சு இருக்கான்னு தெரியலையே... தெரிஞ்சு இருந்தா அவனை வேரோட வெட்டி சாச்சிடலாம். கோமாவுல இருந்து எழுந்தா அவன் எவ்வளவு வீரியமா இருப்பான்னு நம்மால கணிக்கவே முடியாது. அவன் கையில நாம மாட்டுறதுக்குள்ள அவனை போட்டு தள்ளிடணும்” என்றார் கண்ணன்.
“ஆம்மாம் ண்ணா... நம்ம ஆளுங்க எல்லோரையும் ஏவி விட்டு இருக்கேன். எவன் கையில சிக்கினாலும் போட்டு தள்ளிட சொல்லிட்டேன்” என்றார் சுந்தரம்.
தன் தந்தை மற்றும் பெரியப்பனின் இன்னொரு முகம் முற்றும் முழுதும் தெரிய ஆடிப்போய் விட்டாள். இப்படி வெறி பிடிச்சு இருப்பாங்கன்னு இவள் கனவில் கூட நினைத்து இருக்கவில்லை. என் கணவனை உயிரோடு பார்ப்பனா என்று கதறிக்கொண்டு அழுகை முட்டியது.
“இவங்க கையில இருந்து என் கணவனை காப்பாத்தணுமே கடவுளே எனக்கு தெம்பை குடு. முதல்ல இந்த வீட்டுல இருந்து வெளிய போகணுமே.. எப்படி போறது’ என்றவளுக்கு உதிரம் இன்னும் கசிய ஆரம்பிக்க,
“வேறு வழியில்லை வயிறு வலி என்று சொல்லி விட்டு வெளியே போக வேண்டியது தான்” என்று எண்ணிக் கொண்டவள்,
“முதலில் குளிக்கலாம்” என்று அங்கிருந்து சத்தமில்லாமல் தன் அறைக்குப் போனவள் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டவள்,
தன்னுடைய போனை எடுத்து கதிர் சொன்ன மருத்துவமனையை தேடிப் பார்த்தாள். அவளின் வீட்டுக்கு கொஞ்சம் அருகே தான்.
அதென்ன அவன் வீட்டு பக்கத்தில் இருக்கிற மருத்துவமனையை எல்லாம் விட்டுட்டு இங்க இவ்வளவு தூரம் தள்ளி வந்து அட்மிட் பண்ணி இருக்காங்க என்று யோசித்துக் கொண்டே அந்த மருத்துவமனைக்கு போன் காலிலே கைனோ மருத்துவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டாள்.
அப்பாயின்ட்மென்ட் பிக்ஸ் ஆனப்பிறகே மூச்சு விட முடிந்தது. இல்லை என்றால் விசாரணை செய்பவர்களிடம் சிக்கிக் கொள்ள நேரிடும். கூடவே தனக்கும் அவசியம் ஆயிற்றே. பிள்ளை வேறு வயிற்றில் இருக்கிறது. இந்த நேரம் உதிரம் கசிகிறது என்றால் கண்டிப்பாக செக் செய்து தானே ஆக வேண்டும்.
வயிற்றில் பிள்ளை இருக்கும் பொழுதே உதிரம் கசிவது எல்லாம் இப்போது சகஜமாகி விட்டது. அதனால் ஏந்திழையாள் அதிகம் பயப்படவில்லை. ஆனால் அவளின் கணவன் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறானே... நெஞ்சமெல்லாம் சுருங்கிப் போனது போல மூச்சு விடவே அவ்வளவு கடினமாக இருந்தது. வலி வலி நெஞ்சம் முழுக்க அவ்வளவு வலி. ஏதோ இதயத்தை வெளியே எடுத்து வைத்து ஊசிக் கொண்டு குத்தி எடுப்பது போல வலித்தது.
அழுகையில் கண்கள் சிவந்துப் போய் இருந்தது.. அதோடே கிளம்பி கீழே வந்தாள். வந்தவளை அத்தனை பேரும் சூழ்ந்துக் கொண்டார்கள்.
“எங்க? எதுக்கு? ஏன் போற? போகணும்னு என்ன அவசியம்... தேவையில்லை.. வீட்டுக்கே வர சொல்லிக்கலாம்” என பல கேள்விகள் அவர்களே பதிலகளையும் சொல்லிக் கொண்டார்கள்.
“இல்ல அந்த வீட்டுல அவரோட இருக்கும் பொழுதே ஸ்கேன் பண்ணனும்னு சொன்னாங்க... என்னவோ கற்பபையில ஒரு கட்டி மாதிரி இருக்கு.. அது வளர்கூடாதுன்னு சொல்லி அதை ஆபரேட் பண்ணி எடுக்கனும்னு சொன்னாங்க.. அது இந்த ப்ரீயட்ஸ் அப்ப தான் செக் பண்ணி பார்த்துட்டு அந்த கட்டில இருந்து செம்பில்க்கு அனுப்பணும்னு சொல்லி சொன்னாங்க.. ஆனா எனக்கு அந்த அவரு கூட்டிட்டு போன ஹாஸ்பிட்டல் போக விருப்பம் இல்ல. நம்ம வீட்டுக்கிட்ட இருக்க ஹாச்பிட்டளுக்கே போகலாம்னு அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கேன்” என்று அவர்கள் எல்லோரும் நம்பும் படி பொய் சொன்னாள்.
“என்னது கட்டியா? அதுவும் கற்பபையில போயா... கடவுளே என் பிள்ளைக்கு மட்டும் இவ்வளவு சோதனை” என்று தாய்மார்கள் கலங்க,
தந்தையோ ரிபோர்ட் இருக்கா என்று கேட்டார்.
“நான் அங்க இருந்து எதையும் எடுத்துட்டு வரல ப்பா.. இங்க வந்ததுக்கு பிறகு பார்த்துக்கலாம்னு வந்துட்டேன்” என்றாள். அப்பா என்று சொல்லவே நா கூசியது. ஆனால் வேறு வழியில்லையே...
“ம்ம்” என்ற பெரியவர்கள் இருவருக்கும் யோசனையாக இருந்தது.
“ப்ரீயட்ஸ் ன்னா அப்போ நாம நினைச்ச மாதிரி கரு எதுவும் உருவாகவில்லை அப்படி தானே?” என்று சுந்தரமும் கண்ணனும் இரகசியம் பேசிக் கொண்டார்கள்.
“எனக்கும் அப்படி தான் தோணுது” என்ற கண்ணன் அவளை ஆழ்ந்து ஊடுருவினார்.
அவரது பார்வையில் பக்கென்று ஆனது என்றாலும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அமைதியாக நின்றாள். லவ லேசாக தான் பதட்டப் பட்டாலும் பிறகு இந்த வீட்டை விட்டு வெளியே போவதை பற்றி நினைக்க கூட முடியாது.
அதனால் எவ்வளவு இயல்பாக இருக்க முடியுமோ அந்த அளவுக்கு இயல்பாக இருந்தாள்.
“ஆமா உன் புருசன் கோமாவுக்கு போயிட்டதா சொல்லி சொன்னாங்க.. உனக்கு எந்த பதட்டமும் இல்லையா?” கண்ணன் அவளை ஊடுருவி கேட்டார்.
‘பதட்டமா...? செத்து போற மாதிரி மூச்சை அடைச்சுக்கிட்டு வருது பெரியப்பா... ஆனா அதை நான் சொன்னா நீங்க அவரோட சேர்த்து எனக்கும் சங்கு ஊதிடுவீங்கன்னு தெரியும்’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டவள்,
“யார் எப்படி போனா எனக்கு என்ன.. என்னை எவ்வளவு கொடுமை படுத்தி இருக்கான்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அப்படி பட்டவன் எப்படி இருந்தா என்ன எந்த நிலைக்கு போனா தான் எனக்கு என்ன... யாரை பத்தியும் என்கிட்டே சொல்ல வேணாம் ப்ளீஸ்...” என்று சொன்னவளை குடும்பமே ஊடுருவி பார்த்தது.





