“அழகா இருக்கே கண்ணு.. உனக்கு எது பிடிச்சு இருக்கோ எடுத்துக்கடா” என்று ஆசையாக சொன்னவரின் அன்பில் சட்டென்று கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு.
துளசியும் ஒரு ஆரத்தை எடுத்து அவளின் கழுத்தில் வைத்து பார்த்து,
“உனக்கு எது போட்டாலும் அழகா இருக்கு பனி.. உனக்கு எது பிடிச்சு இருக்கோ அதை எடு. அண்ணன் அக்கா சொன்னாங்கன்னு எதையும் எடுக்காத” என்று அவளின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் குடுக்கும் சித்தியையும் அவளுக்கு ரொம்ப பிடித்துப் போனது.
“வேணாமே மேடம்” என்று அவளின் தாயிடம் சொல்ல,
“என் தம்பியை பேர் சொல்லி கூப்பிடுவ.. ஆனா நான் மட்டும் உனக்கு மேடமா?” ரேவதி அவளை உருட்ட,
“மேடம்” என்று திணறிப் போனாள்.
“மறுபடியும் மேடமா?” என்றவர் சிரிப்புடன்,
“அக்கான்னு சொல்றியா?” என்று அவர் கேட்க, கதிரவன் முறைத்தான் அதை கேட்டு.
“அதெல்லாம் அக்காவும் வேணாம் ஒன்னும் வேணாம்.. அவ உன்னை மேடம்ன்னே கூப்பிடட்டும்” என்றான்.
“போடா..” தம்பியின் தோளில் அடித்தவர்,
“வேண்ணா என்னையும் பெயர் சொல்லியே அழையேன்” என்றார்.
“ஏதே” திகைத்துப் போனாள் பனி.
“ம்ம் பெயர் சொல்லி தான் கூப்பிடுற” என்று கட்டளையே போட்டு விட்டார் ரேவதி.
“ப்ளீஸ் என்னை ரொம்ப சங்கடப் படுத்துறீங்க நீங்க..” என்றவளை தோளோடு அணைத்துக் கொண்ட ரேவதி,
“சங்கடம் எல்லாம் எதுவும் வேணாம்.. நாம தனியா இருக்கும் பொழுது ரேவதின்னே சொல்லு.. மத்தவங்க முன்னாடி வேணா மேடம்னு சொல்லிக்க” அனுமதி கொடுக்க, வேகமாய் தலையை ஆட்டினாள்.
“சரி வா உனக்கு தோடு பார்க்காலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு போனார்.
கதிரவன் கால் மேல் கால் போட்டு இருவரையும் வைத்த கண் வாங்கமால் பார்த்துக் கொண்டு இருந்தான். காமாட்சி துளசிக்கும் பனிக்கும் சேர்த்தே பார்த்தார். அவ்வப்பொழுது கதிரவனின் பார்வை பெரிய மகள் மீதும் அந்த பெண்ணின் மீதும் இருப்பதை பார்த்த காமாட்சிக்கு அடி வயிற்றை பிசைந்தது.
அவரின் மனம் என்னவோ எதோ என்று அடித்துக் கொண்டது. தாயின் பார்வையில் எதையும் மறைக்க முடியாதே.. தாயறியா சூல் உண்டோ இப்பூமியில்.. ஆனால் இன்னது என்று அவரால் சரியாக யூகிக்க முடியவில்லை..
ஆனால் நெஞ்சுக்குள் ஏதோ ஊசியாய் குத்த தொடங்கியது. அதும் பனியின் மீது படர்ந்த மெல்லிய அன்பு என்னவோ இப்பொழுது இன்னும் அதிகமாவது போலவே இருக்க, படபடவென்று வந்தது.
“அந்த பொண்ணு யாருன்னே தெரியல.. அது என் கிட்ட சரியா கூட பேசாது.. வந்த ரெண்டு நாள்ல என்ன பிடிப்பு இது” தனக்குள்ளே கேட்டுக் கொண்டவருக்கு மெல்லிய நடுக்கம் வந்தது.
“ம்ஹும்.. எந்த யூகத்துக்கும் நான் மயங்கக் கூடாது கடவுளே..” தன்னையே திடப்படுத்திக் கொண்டவர், தன் பார்வையை சாதாரணமாக வைத்துக் கொண்டார். ஆனாலும் அளவுக்கு அதிகமாகவே பனியின் மீதும் ரேவதியின் மீதும் பார்வை பதிந்தது.
யாரும் கவனிக்காமல் இருவரையும் பார்த்துக் கொண்டார். நகை எடுக்கும் வைபோகம் சிறப்பாக முடிந்தது.
தாய் இரு தமக்கைகளுக்கும் தமக்கையின் மகளுக்கும் சேர்த்தே வாங்கினான்.
“எதுக்குப்பா எனக்கு எல்லாம் இருக்குற செலவுல” என்றா காமாட்சியை ஒரு பார்வை பார்த்தான். அவர் வாயை மூடிக் கொண்டார்.
“கல்யாணத்துக்கு பொண்ணோட அம்மா நிறைவா நிக்கனும்ல” என்றான். அவர் தலையை ஆட்டிக் கொண்டார்.
“போடாத நகையே ஊருப்புட்டது இருக்கு.. இதுல இது வேறையா?” என்று எண்ணிக் கொண்டார். ஆனால் வாயை வெளியே விடவில்லை. இல்லை என்றால் அதற்கும் எதாவது பேசுவான். தேவையா என்று வாயை மூடிக் கொண்டார்.
“சாப்பிட்டுட்டு போயிடலாம்” என்று மூவரையும் அழைத்துக் கொண்டு உயர் தரம் வாய்ந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றான்.
அவரவரின் விருப்பம் கேட்டு உண்ண வைத்தவன், அவனுக்கு பிடித்தமானதை அவனும் பேசிக் கொண்டே அவர்களுடன் உண்டான்.
பனியின் பேச்சு வார்த்தை மிக மெதுவாக அதுவும் காமாட்சியுடன் மட்டும் தான். துளசி அவளை இழுத்து வைத்து பேச, கொஞ்சம் அவளுடனும் இளகுவாக பேசினாள்.
கதிரவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டானே தவிர எதுவும் பேசவில்லை. ரேவதி சில விசயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
அதோடு அவரை விடுப்பு எடுத்துவிட சொன்னான். அவரும் விடுப்பு எடுத்துக் கொண்டு இளகுவாக அவர்களுடன் அமர்ந்துக் கொண்டார்.
உணவு முடிந்து “சரி அப்படியே போய் செரீஸ் பார்த்துட்டு வந்திடலாம்” என்று புடவை கடைக்கு அழைத்துச் சென்றான்.
அங்கு பெண்களின் ராஜ்ஜியம் ஆரம்பம் ஆக, கதிரவன் போனோடு அமர்ந்துக் கொண்டான். பெரிதாக எந்த ஆர்வமும் அதில் இல்லை.
“ரேவதி அப்படியே அவளுக்கு கல்யாணத்துக்கு சேரி எடுத்துடு” என்றான் அக்காவிடம்.
“சரி கதிரவா” என்றவர் முதலில் பட்டுப்புடவை இருக்கும் செக்ஷனுக்கு அவளை அழைத்துக் கொண்டு சென்றார். அவள் மீது வண்ண வண்ண புடவைகளை வைத்து சோதித்துப் பார்த்தவர் காமாட்சி துளசி இருவரிடமும் அபிப்ராயம் கேட்டு, பனியின் விருப்பத்தை கேட்டு ஐந்து புடவை எடுத்தார்.
“எதுக்குங்க இவ்வளவு புடவை” மிரண்டுப் போனாள் பனி.
“இருக்கட்டும் கண்ணு.. குல தெய்வத்துக்கு பொங்கல் வச்சு, முகூர்த்த கால் ஊனுறதுல இருந்து, விருந்து சாப்பாடு, தாய்மாமன் சாப்படு, ஊர் சோறு, பெண்ணழைப்பு, ரிஷப்ஷன், கல்யாணம், கறி விருந்து, பொறவு மறுபடியும் குல தெய்வ கோயிலுக்கு போற வரைன்னு நிறைய நிகழ்வு இருக்கு. இதுல முக்கியமானதுக்கு மட்டும் பட்டுப்புடவை கட்டு, மித்ததுக்கு எல்லாம் இன்னும் கொஞ்சம் புடவை ரேவதி துளசி கட்டுற மாதிரி எடுத்துக்க” என்றார்.
“ஹாங் இவ்வளவுக்குமா?” என்று வாயை பிளந்தாள்.
“ஆமா ஆமா.. வா” என்று சொன்ன துளசி டிசைனர் சேரி பக்கம் கூட்டிக்கொண்டு போனாள்.
அங்கு போய் ஒரு நாலு சேரி எடுத்த ரேவதி, கூடவே துளசிக்கும் எடுத்தார். காட்டன் சேரி பக்கம் போய் தங்கள் எல்லோருக்கும் நாலு நாலு சேரி எடுத்துக் கொண்டார்.
கூடவே எடுத்த புடவைகளுக்கு மேட்சாக லைனிங், பாவாடை, மற்ற உடைகள் என எல்லாமும் எடுத்தார் அவளுக்கும் சேர்த்தே.
“ஆத்தாடி இவ்வளவா?” என்று முழி பிதுங்கிப் போனாள்.
“சுடி எதுவும் பார்க்குறியா? புது டிசைன் வந்து இருக்காம். இப்ப தான் சொன்னாங்க” என்ற ரேவதி அந்த பக்கம் கூட்டிக்கொண்டு சென்று மூன்று செட் எடுத்து குடுக்க மூச்சை அடைத்தது அவளுக்கு.
அவளுக்கு மறுக்க வாய்ப்பே யாரும் குடுக்கவில்லை. “வாயை மூடிக்கோ.. பிடிச்சா தலையை ஆட்டு இல்லன்னா கம்முன்னு இரு..” என்று அதட்டல் போட்டு அவளை அமர வைத்து விட்டார் ரேவதி.
அவரின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேச முடியாமல் அமைதியாக இருக்க வேண்டிய நிலை. அவள் மிரட்சியுடன் இருப்பதை பார்த்த கதிரவனுக்கு மெல்லிய புன்னகை அரும்பியது. அதையும் கற்றை மீசையின் அடியில் புதைத்துக் கொண்டான் யாரும் அறியாமல்.
“என் கிட்ட மட்டும் மல்லுக்கு நிற்க வேண்டியது.. இதே அவ அம்மாக்கிட்ட பேசுனா வாயை பசை போட்டு மூடி வச்சுக்க வேண்டியது” என்று தனக்குள் முணகிக் கொண்டவன் பில்லை செட்டில் பண்ணி விட்டு வீட்டுக்கு விட்டான் வண்டியயை.
வீட்டுக்கு வந்த உடனே மங்கையும் கலாவும் அவர்களை பிடித்துக் கொள்ள, கதிரவன் பனியை தன்னோடு மேலே அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.





