Notifications
Clear all

அத்தியாயம் 60

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அண்ணா” வெற்றியின் குரல் பரபரப்புடன் கதவுக்கு பின்னால் ஒலிக்க, புருவம் சுறுக்கியவன் வெளியே வந்தான் தீத்திரள் தீரன்.

வந்தவனின் கண்களில் விழுந்தான் செல்வா. அவனது முகத்தை உற்றுப் பார்த்தான் தீரன். முகத்தில் ஏகத்துக்கும் திமிர் தெரிந்தது. பலமுறை அவனை தனியா கூப்பிட்டு எச்சரித்து இருந்தான் தீரன். ஆனாலும் கொஞ்சமும் அடங்காமல் இப்பொழுது அனைவரையும் கூட்டிக்கொண்டு வந்து நடு கூடத்தில் இருப்பவனை எந்த சலனமும் இல்லாமல் பார்த்தான்.

“தனியா இருக்கும் பொழுது தானே என்னை விரட்டி அடிச்ச.. இப்ப உன் தங்கச்சி வாக்கப்பட்டு வந்த என் மொத்த குடும்பத்தையும் கூட்டிட்டு வந்து இருக்கேன். இப்போ உன்னால எதுவும் செய்ய முடியாது தீரன்.. உன் முதல் தங்கச்சி வாழ்க்கைக்காக நீ உன் இரண்டாவது தங்கச்சியை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சே ஆகணும். அதை நடத்தி காட்டுவேன். அது மூலமா உன் மொத்த சொத்தும் எனக்கு தான் தீரா..” மனதுக்குள் கொக்கரித்துக் கொண்டு இருப்பவனின் எண்ணம் தீரனுக்கு நன்றாகவே புரிந்தது.

ஆனாலும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சாவகாசமாக வந்து அமர்ந்தவன்,

“வாங்க..” என்று பொதுவாக  அவர்களை வரவேற்றவன்,

“அம்மா இப்ப தான் சொல்லிட்டு இருந்தாங்க.. ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க..” என்றவன் தன் அறைக்குள் நுழைந்து தயாராகி வந்தான்.

ஆளவந்தான் எனக்கென்ன என்று அவன் படுக்கையில் படுத்து இருந்ததை பார்த்த தீரன்,

“கிளம்புங்க ஒரு இடத்துக்கு போகணும்” என்றான்.

“நான் எங்கயும் வரல..” என்றார்.

“ப்ச்.. வாங்கன்னா வாங்க.. உங்க ரெண்டாவது பொண்ணை கேட்டு செல்வா வந்து இருக்கான்” என்றான் கடுப்பாக.

“அவனுக்கு எல்லாம் என் பொண்ணை கட்டி குடுக்க முடியாது” இடைப்பட்ட நாட்களில் அவனை கொஞ்சம் கொஞ்சம் புரிந்துக் கொண்டார் ஆளவந்தான். எனவே அவருக்கும் அவனை பிடிக்கவில்லை.

“அதனால தான் கிளம்புங்கன்னு சொன்னேன்” என்றான் அழுத்தமாக. மகனின் பேச்சில் இருந்த அழுத்தம் எதை உணர்த்தியதோ சட்டென்று கிளம்பி விட்டார்.

இருவரும் வெளியே வர வெற்றியும் தேவாவும் பேசிக் கொண்டு இருந்தார்கள். தேவகி சம்மந்திகளோடு பேசிக் கொண்டு இருக்க, செல்வா தனித்து நின்று இருந்தான் அவனது கண்களில் பேராசை மின்னியது.

“தீரா..” என்று செல்வா ஆரம்பிக்க,

“இங்க வச்சு எதுவும் பேச வேண்டாம்.. கிளம்புவோம்” என்றான் தீரன் அழுத்தமாக.

“இல்ல நாங்க எதுக்கு வந்து இருக்கோம்னு” என்று அவன் மேலும் ஆரம்பிக்க,

“அது தான் மச்சான் சொல்றாரு ல்ல.. கிளம்பு செல்வா.. அங்க போய் எதா இருந்தாலும் பேசிக்கலாம்” என்று தேவா தம்பியை அடக்கப் பார்த்தான்.

ஆனால் அவன் அடங்காமல் தீராவிடம் பேச வர, அவனது கண்களில் இருந்த அலுத்தத்தில் செல்வாவால் மேற்கொண்டு எதுவும் பேசமுடியவில்லை.

அவனது பேச்சுக்கு எதிர் பேச்சு யாராலும் பேச முடியாதே.. எனவே அனைவரும் அவரவர் காரில் கிளம்பினார்கள். செல்வாவுக்கு தான் கடுப்பாக இருந்தது.

“ஏன் இங்கயே வச்சு பேசுனா என்னவாம்” என்று இருந்தது. பிறகு ஒரு வேளை பெரிய வீட்டுல வச்சு பேச பேசுவானோ என்று தோன்றியது.. அதுவும் நல்லதுக்கு தான்.. உள்ளுக்குள் மகிழ்ச்சி பூக்கள் வெடித்தது.

“எப்படியோ இந்ந்த கல்யாணம் உறுதி ஆனா ஓகே..” என்று எண்ணியவன் முன்னாடி போன தீரனின் காரை பாலோ பண்ணி சென்றான்.

தீரன் கால் மணி நேரம் கழித்து ஒரு வீட்டின் முன்னாடி நிறுத்தினான். அவனை தொடர்ந்து எல்லாரும் காரை நிறுத்தி விட்டு இறங்க, ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால் தேவகிக்கு அந்த வீட்டை பத்தி தெரிந்து இருக்க, முகத்தில் அத்தனை மகிழ்ச்சி பொங்கியது.

மனைவியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியே ஆளவந்தானுக்கு இது யார் வீடு என்று தெரிந்து போனது.

“எப்படியோ என் மகன் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டானே அதுவே போதும்” எண்ணியவரிடம்,

“இது யார் வீடு சம்மந்தி.. இங்க எதுக்கு வந்து இருக்கோம்” செல்வாவின் அம்மா கேட்க,

“இது தீரனுக்கு பார்த்த பொண்ணு வீடு சம்மந்தி. தீரன் கல்யாணம் பண்ண இப்ப தான் ஒத்துக்கிட்டான். அது தான் இன்னைக்கே பொண்ணு பார்க்க வரோம்னு சொல்லி இருந்தோம். அது தான்” என்றார் ஆராவாரமாய்.

“அப்படியா சம்மந்தி ரொம்ப நல்லது..” என்றவருக்கு தன் மகனின் சம்மந்தத்தை பற்றி  எப்போ பேசுவது என்று இருந்தது.

அது செல்வாவின் காதிலும் விழ, “இப்போ இவனுக்கு கல்யாணம் ஒன்னு தான் கேடாக்கும்.. என் கல்யாணத்தை பத்தி பேச வந்தா, அதை விட்டுட்டு இவன் கல்யாணத்துக்கு நாள் குறிக்க கூட்டிட்டு வந்து இருக்கானே” பல்லைக் கடித்தான் செல்வா.

வந்திருந்த அத்தனை பேரையும் வரவேற்றார்கள் பெண் வீட்டார்கள்.

பெண் காபி கொண்டு வந்து கொடுக்க, சரியாக செல்வாவிடம் நீட்டும் பொழுது,

“அவர் தான் மாப்பிள்ளை.. நல்லா பார்த்துக்க ம்மா” என்றான் தீரா.

அதை கேட்ட எல்லோருமே ஆடிப் போனார்கள். பெண் வீட்டார்கள் அதற்கு மேல் அதிர்ச்சி ஆனார்கள்.

“தீரா..” என்று தேவகி அதிர்ந்துப் போனார்.

“என்ன தேவகி மேடம்.. உங்க மகனுக்கு தானே பெண் கேட்டதா சொன்னீங்க?” பெண்ணோட அம்மா கேள்வி கேட்க, தேவகியால் எந்த பதிலுமே சொல்ல முடியவில்லை.

இப்படி கூட்டிட்டு வந்து அசிங்கப் படுத்திட்டானே என்று நொந்துப் போனார் தேவகி.

“இல்ல.. அவங்க அப்படி சொல்லி இருக்க மாட்டாங்க.. போன்ல பேசுனதுனால உங்களுக்கு தவறா விழுந்து இருக்கும். மாப்பிள்ளை செல்வா தான். என் தங்கச்சியோட கொழுந்தன். ரெண்டு இரும்பு பேக்டரி வச்சு இருக்கார். லெதர் கம்பெனி ஒன்னு இருக்கு. அது போக கூர்க்ல நூறு ஏக்கர் காபி தோட்டம் இருக்கு. அவங்க ஊர்ல பாதி இவர் பேர்ல தான் இருக்கு. உங்க மகளுக்கு எந்த குறையும் வராது. ஏன்னா என் தங்கச்சி கட்டி குடுத்து இத்தனை வருடம் ஆகியும் ஒரு நாள் கூட கண் கலங்கி எங்க வீட்டுக்கு வந்தது இல்ல.. உங்களுக்கு பெட்டர் சாய்ஸ் செல்வா” என்றவன் செல்வாவை பார்த்தான்.

அவனது கண்களில் யாருக்கும் தெரியாத நக்கல் ஒளிந்து இருந்தது. அதை உணர்ந்த செல்வாவுக்கு நாடி நரம்பு எல்லாம் துடித்தது.

‘என்ன நினைச்சு நான் வந்தேன்.. ஆனா இப்போ என்னை என்ன செய்ய வைக்கிறான் இந்த தீரன்.. இவனை உண்டு இல்லன்னு பண்ணா தான் என் ஆத்திரம் தீரும்...’ பல்லைக் கடித்தவனால் எதையும் செய்ய முடியவில்லை.

ஏனெனில் அவனின் தாய் தந்தை ரகசியமாக,

“இதுக்கு மேல தீரன் தங்கச்சியை கேட்டு எங்களால அவமானப் பட முடியாது செல்வா.. ஒழுங்கா இந்த பெண்ணையே கட்டிக்க. பார்க்க லட்ச்சனமா தான் இருக்கா.. தீரனுக்கு உன்னை மாப்பிள்ளையாக்க பிடிக்கல போல. அவனும் பல வழில சொல்லிட்டான். ஆனா நீ பிடிவாதமா இருக்க.. உன் பிடிவாதம் பாரு எங்க வந்து நிறுத்தி இருக்குன்னு..” அவனின் பெற்றவர்கள் இறுதியாக சொல்லிவிட, அதற்கு மேல் அவனால் எதையுமே யோசிக்க முடியவில்லை.

கொந்தளிக்கும் மனதுடன் அவன் இருக்க, தீரனே எல்லாவற்றையும் முன் நின்று பேசி திருமணத்துக்கு தேதியும் குறித்து விட்டான்.

Loading spinner

Quote
Topic starter Posted : November 26, 2026 6:36 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top