ஆதி தேவன் பறித்து சென்ற தாலியை எண்ணி எண்ணி கரைந்தவள், அவன் வீசி சென்ற சொற்களில் உயிரை குடிக்கும் வலியை உணர்ந்தாள்.
வெறும் கழுத்தாய் இருந்த கழுத்தை தடவி விட்டுக்கொண்டிருந்தவளின் கைகள் வெறுமையை உணர்ந்து, கண்கள் அருவியென கண்ணீர் வர சோர்ந்து போய் அப்படியே தரையில் சரிந்துக்கொண்டாள்.
ஆதியிடமிருந்து இப்படி ஒரு செயலை அவள் எதிர் பார்க்கவே இல்லை. அதுவும் அவன் கட்டிய தாலியை பறித்து செல்லுவான் என்று சுத்தமாக எண்ணி இருக்கவில்லை.
அவளது கழுத்தில் தாலி ஏரிய நாளை எண்ணி பார்த்தவளுக்கு மேலும் மனம் தடுமாறி போனது. அந்த நாள் எவ்வளவு மகிழ்வாக ஆரம்பித்தது. ஆனால் அதையும் தான் தானே சொதப்பி வைத்தோம் என்று எண்ணி பார்த்தவளுக்கு குற்ற உணர்வு பெருக மேலும் குறுகி போனாள்.
இதே வலியை தானே அன்று ஆதியும் உணர்ந்து இருப்பான் என்று எண்ண இன்னும் இன்னும் அவளுக்கு கண்கள் கலங்கியது.
எப்போ ரஞ்சனியை பற்றி பேச்சு வந்ததோ அப்பொழுதே இது வேண்டாம் இது சரி வராது என்று ஆதி தேவன் சொல்லிக்கொண்டு இருந்தான்.
ஆனால் மயூ தான் தன் பிடித்த பிடியிலே நின்றாள். அவளை சமாளிக்க முடியாமலும், அவளை பிரிய முடியாமலும் சீதாவை மட்டும் சாட்சியாயக வைத்து ஆதி மயூவின் கழுத்தில் தாலி கட்டினான்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன் மயூவை பார்த்து ரஞ்சனி தன் குழந்தையை காப்பாற்றும் படி சொல்ல... அதன் படி மயூ ஆதியை ரஞ்சனிக்கு முடிக்கலாம் என்று கேசவனிடமும் சீதாவிடமும் சொல்ல.. கேசவனுக்கு பெரிதாய் எந்த மறுப்பும் இல்லை. ஆனால் சீதா தான் ஆட்டமாய் ஆடினார்.
யாரைக் கேட்டு இந்த முடிவு பண்ணின... எனக்கு வர போற மருமகளை நான் தான் முடிவு செய்வேன். என்று அவர் ஒரு பக்கம் கத்திக்கொண்டு இருக்க. கேசவனோ தன் தொழிலில் எதாவது தடங்கல் வந்தால் தொழில் துறை அமைச்சர் வழியாக சரி செய்துக்கொள்ளலாம்... நம்ம கைபிடியில் தொழில் துறை அமைச்சர் இருந்தால் நல்லது தானே... என்று எண்ணி மயூராவிற்கு சம்மதம் தர...
அதற்க்கு அடுத்த நாளே மயூ களத்தில் இறங்கிவிட்டாள். ஆனால் ஆதிக்கு அதில் துளி கூட விருப்பமில்லை. அவளது வேகத்தை கணக்கிட்டவன் இவளை விட வேகமாய் சென்றாள் தான் தன்னிடம் இவளை தக்க வைக்க முடியும் என்று எண்ணி நாள் பார்த்துக்கொண்டு இருந்தான்.
இதனிடையில் கேசவன் ஒரு புது மிசின் ப்ராடெக்ட் பண்ற விசயமா வெளிநாடு சென்று இருக்க.. ஆதி தன் தாய் சீதாவிடம் மொட்டையாக
“வா” என்றான்.
அவரோ அவனது அவசரத்தை புரிந்துக்கொள்ளாமல் ஹோம் தியேட்டரில் அவர்கள் தயாரிப்பில் வெளி வந்த ப்ளாக் பஸ்டர் திரைப்படத்தை சுவாரஸ்யமே இன்றி பார்ப்பது போல பார்த்துக்கொண்டே “எங்கடா...” என்று கேட்டார்.
அவரது அலட்சியத்தில் கோவம் கொண்டவன் வேகமாய் அவர் உண்டுக்கொண்டு இருந்த ஸ்வீட் பாப்கான் மற்றும் பெப்பர் க்ரில்டு சிக்கனை பிடுங்கி காற்றில் பறக்கவிட்டான்.
“ஏண்டா வேணும்னு கேட்டா தந்து இருக்க மாட்டனா... அதுக்கெதுக்குடா இவ்வளவு வேகமா பிடுங்குன... பாரு எல்லாம் கீழே கொட்டி கிடக்கு...” என்றவர்,
“டேய் கொஞ்சம் ஏசியை குறைச்சி வைடா... இருபது பேர் உட்கார்ந்து பார்க்கிற இடத்துல நான் மட்டும் உக்காந்து பார்க்குறதுனால ஏசி மொத்தமும் என் மேலயே வீசுது...” என்றவர் தொடர்ந்து,
“ஸ்ஸ்ஸ் என்னா குளிரு..” என்று இருகைகளையும் தேய்த்து விட்டுக்கொண்டே படத்தை மேற்கொண்டு பார்த்தார்.
“ம்மா... நான் உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்...”
“ஆமா, பாரு மறந்துட்டேன்... ஏண்டா சினிமா எடுக்குறதுன்னு முடிவாயிடுச்சு... அத நல்லா படமா பாத்து எடுக்க கூடாது... பாரு மொக்கை படத்துக்கு போய் ஆயிரத்தி ஐநூறு கோடி குடுத்து இருக்க...”
“அவனனவன் ஒரு கோடியில கூட நல்லா படம் எடுக்குறான்... தெரியுமா”
“ஐந்நூறு கோடி குடுத்தும் ஒரு சீனாச்சும் நல்ல சீனா இருக்கா... எல்லாம் மொக்க சீனா இருக்கு.” என்று மேலும் கழுவி கழுவி ஊத்தினார் சீதா...
“நீ பார்த்துக்கிட்டு இருக்குறது இந்த வருசத்தோட மிக பெரிய அளவில் வெளி வந்த மோஸ்ட் ப்ளாக் பஸ்டர் மூவி...” என்றான் பல்லை கடித்துக்கொண்டு.
“அதுக்கு நான் என்னடா பண்றது... பாரு ஒரு சீன் கூட நல்லாவே இல்ல... அத்தனையும் காபி கட் சீனா இருக்கு..”
“ம்மா... நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேச வந்தேன்...”
“சொல்லு காது கேட்டுகிட்டு தான் இருக்கு...” என்று படத்தை பார்த்துக்கொண்டு இருந்தாரே தவிர அவனை திரும்பியே பார்க்கவில்லை..
“இந்த படத்தை தான் இப்போ வரை நீ மொக்க படமுன்னு சொன்ன...” என்றான் அவர் உத்து படம் பார்த்துக்கொண்டு இருப்பதை பார்த்து.
“நான் ஒண்ணும் இல்லன்னு சொல்லலையே... ஏதோ கஷ்ட்டப்பட்டு முக்கால்வாசி படம் பார்த்துட்டேன். சரி ஏன் மீதம் உள்ளதையும் விட்டு வைப்பானேன்னு ஒரு நல்ல எண்ணத்துல தாண்டா பார்க்கிறேன். அதோட இல்லாம இந்திய டுடே என்கிட்டே இந்த படத்தை பத்தி விமர்சனம் சொல்ல சொன்னானுங்க. அதுக்கு தான் வேலை மெனக்கெட்டு இந்த படத்தை பார்த்துக்கிட்டு இருக்கேன்... இல்லன்னா நானாவது இந்த மொக்க படத்தை பார்க்கிரதாவது..” என்று சீன் போட்டவர், தொடர்ந்து பெருந்தன்மை வாய்ந்தவர் போல...
“அதோட இல்லாம நம்ம எடுத்த படம்... நாமலே பார்க்கலன்னா நல்லா இருக்காது இல்லையா அதான்.. முடிஞ்சதே முடிஞ்சிடுச்சு... இந்த இன்னும் கொஞ்சம் தான் அப்புறம் வந்து பேசு...” என்றவர் எவ்வளவு நக்கல் பண்ண முடியுமோ அவ்வளவு நக்கல் பண்ணிவிட்டு, ஆர்வத்துடன் படத்தை பார்த்தார் அடுத்து என்ன நடக்க போகுதோன்னு...
“உனக்கு சீடி குடுத்தவனை போய் உதைக்கணும் நல்லா...” என்றான் கடுப்புடன்.
“அப்போ உன் பியேவை தான் உதைக்கணும்...” கவுண்டர் கொடுத்தவரை கண்டு பல்லை கடித்தவன்,
“உன் மருமகளுக்கு தாலிக்கட்ட போறேன்... வர்றதுன்னா வா... இல்லன்னா எப்படியோ போ..” என்று சொல்ல அதுவரை இருந்த விளையாட்டை விட்டுவிட்டு,
“நிஜமாவாடா சொல்ற... மயூ ஒத்துகிட்டாளா...?” ஆர்வமாய் விசாரித்தார்.
“ம்கும்... அவளாவது ஒத்துக்குறதாவது... வலுக்கட்டாயமா தாலி கட்ட போறேன்... அது உன் முன்னிலையில நடந்தா...” என்று சொல்லியவன் ‘சிறப்பா இருக்கும்’ என்பதை மட்டும் வாயோடு முணகிக்கொண்டு, வேண்டுமென்றே வெளியே “ஒரு சாட்சி வேணும் இல்லையா... அதுக்கு தான்..” என்று திமிர் காண்பிக்க அதில் சீதா அவனை முறைத்தார்.




