Notifications
Clear all

அத்தியாயம் 70

 
Admin
(@ramya-devi)
Member Admin

“தேடிக்கிட்டே இருந்தான். அதுக்கும் சேகரனின் அப்பா எங்க தாத்தா மூலமும் அப்பா மூலமும் அத்தனை முட்டுக் கட்டை போட்டார். பத்து வயசுல அவனுக்கு ஒன்னும் தெரியாது தான். ஆனா நீ பிறந்த ஹாஸ்பிட்டலயே சுத்தி சுத்தி வந்தான். நீ எங்க போன எப்படி போனன்ற விவரத்தை கொஞ்சம் கொஞ்சமா கரந்து நூல் பிடிச்ச மாதிரி தேடித் போனான்.

ஆனா முழு விவரமும் கிடைக்கல.. மிஸ்டர் சதாசிவம் தன் பண பலத்தால் அத்தனை பேரையும் விலைக்கு வாங்கி விட்டார்.

ஆனாலும் கதிரவன் என் தம்பி சோர்ந்துப் போகவே இல்லையே.. எத்தனை பேரிடம் கேட்டான் தெரியுமா உன்னை பத்தி.. ஏதோ ஒரு புண்ணியவான் தான் உன்னை பற்றி ஒரு துப்பு சொன்னான். அதுவும் எப்ப மூணு வருசம் கழிச்சு கிடைச்சது.. சரியா அவனோட பப்ளிக் எக்ஸாம் அப்போ..

பரிச்சை முக்கியமா இல்ல நீ முக்கியமான்னு ஒரு கணம் கூட யோசிக்கல.. தேர்வை தூக்கி போட்டுட்டு கையில இருக்குற காசை எடுத்துக் கொண்டு அவர் சொன்ன இடத்துக்கு ஓடினான். முழுதா இரண்டு நாள் ஆச்சு அவன் வீடு திரும்ப..

அதுவும் வெறும் கையோட தான் வந்தான். உன்னை அந்த ஹோம்ல இருந்து வேற எங்கையோ மாத்திட்டாங்களாம்.. அந்த இடம் என்ன எதுன்னு சொல்லல.. கையில காசும் இல்ல.. அதனாலா ஏதோ ஒரு லாரியை பிடிச்சு வீட்டுக்கு வந்துட்டான் காசு எடுத்துட்டு போக.

வந்தவனை அடின்னா அடி அப்படி ஒரு அடி எங்கப்பா அடிச்சாரு. அவன் முதுகு எல்லாம் காயமா போச்சு. ரத்தம் வடிஞ்சது.. ஆனா அவன் கேட்கவே இல்லையே..

நீங்க போய் தேடுனா நான் ஏன் தேடிப்போக போறேன். எனக்கு என் அக்கா மக வேணும்.. அவளை நீங்க கண்டு பிடிச்சு குடுங்க நான் ஒதுங்கிக்கிறேன். அப்படி இல்லன்னா என் விசயத்துல இனி யாரும் தலையிடாதீங்க.. ஏற்கனவே பெரியவங்க நீங்க செஞ்சு வச்ச வேலையால என் அக்காவும் மாமாவும் ரொம்ப வேதனையை அனுபவிச்சுக்கிட்டு இருக்காங்க.. அவங்க ரணத்தை எப்படியாவது குறைக்க நான் பார்க்கிறேன். ஆனா நீங்க அந்த பெரிய மனுசன் பேச்சை கேட்டு அமைதியா இருக்கீங்க.. நீங்க இதுல தலையிட்டா குறைஞ்ச நேரத்துலையே அவளை கண்டு பிடிச்சுடலாம். ஆனா உங்களுக்கு மனசு இறங்க மாட்டிக்கிது.. பரவாயில்ல.. ஆனா இனி என் விசயத்துல யாரும் தலையிடக் கூடாது.. தலையிட நான் அனுமதிக்கவும் மாட்டேன்.. என்றவன் தான் அதன் பிறகு எல்லோரிடம் இருந்தும் ஒதுங்கிக் கொண்டான்.

அப்பவே என் தம்பி இரும்பா மாறிட்டான். யாராலையும் அவனை அசைக்க முடியல.. யார் கிட்டயும் ஒத்தை காசு எதிர் பார்க்கல.. பள்ளிக்கூடம் முடிச்சுட்டு வந்த உடனே டெப்போவுக்கு வந்து வண்டியை கழுவுவான். ஆனா ஒரு கட்டத்துக்கு மேல அதுல வருமானம் வரலன்னு ஒரு ஆடிடர் ஆபிசர் கிட்ட பார்ட் டைம் வேலை பார்த்து தொழில் கத்துக்கிட்டவன் நம்ம டெப்போவுல கணக்கு வழக்குகளை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

யாராலும் அவனை தடுக்க முடியல.. ஏன்னா அவன் படிச்சுட்டு வந்து தான் அந்த வேலை பார்த்தான். ஒரு வேலை பார்க்கணும்னா அதை பத்தி முழுசா கத்துக்கிட்டு வந்த பிறகு தான் பார்க்கணும்னு அப்பவே அவ்வளவு தெளிவா இருந்தான்.

அதனால தான் யாராலையும் அவனை அசைக்க முடியல.. அந்த பணத்தை வச்சு தான் உன்னை தெரு தெருவா தேடினான். ஊர் ஊரா தேடினான். கல்லூரி படிப்பையும் விடல.. படுச்சுக்கிட்டே உன்னை தேடுற செலவுக்கு வேலையும் பார்த்தான்.

ஆனா எப்போ கண்டு பிடிச்சான்னு எங்க கிட்ட சொல்லவே இல்ல..

கேட்டா தேடிட்டே இருக்கேன்னு மட்டும் சொல்லுவான்.. இப்போ என் கண் முன்னாடி உன்னை கொண்டு வந்து நிறுத்திட்டான் தன் தம்பி.. என்ற தாயின் வயிறோடு முகத்தை புதைத்துக் கொண்டு அனைத்தையும் கேட்டாள். அவளின் கண்கள் கலங்கி இருந்தது. ஆனால் அதை யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை.

“போதுமா இல்ல இன்னும் வேணுமா?” என்று கேட்ட தாயை இன்னும் இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

அவளின் தலையை ஆறுதலாக வருடிக் கொடுத்தார் ரேவதி.

“உன் மாமன் மட்டும் இல்லன்னா நானும் சரி ரேவதியும் சரி இருந்து இருக்க மாட்டோம்.. ஏன் நீயும் எங்களுக்கு கிடைச்சு இருக்க மாட்டடா.. நம்ம குல சாமி கதிரவன் தான்” என்ற சேகரனுக்கு தலை அசைத்தவள், தகப்பனையும் கட்டிக் கொண்டாள். அவரின் நெஞ்சில் சிறிது நேரம் சாய்ந்து இருந்தாள் பனி.

“சரி சரி பனி கொட்டுது.. கீழே போகலாம்..” ரேவதி சொல்ல, நால்வரும் கீழே இறங்கி சென்றார்கள்.

அவரவர் அறைக்குள் நுழைந்துக் கொண்டார்கள். மனம் அவ்வளவு கணத்துப் போய் இருந்தது. இருபத்தி இரண்டு வருட வேதனை அல்லவா அது. மௌனமாக படுத்துக் கொண்டார்கள்.

பனி எப்பொழுதும் போல தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். சேகரனும் ரேவதியும் அவர்களின் அறைக்கு சென்று விட, கதிரவன் தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

பனியின் அமைதி அவனை சற்றே தடுமாற செய்தது. இத்தனை கதையும் இன்றைக்கே அவளுக்கு தெரிய வேண்டுமா? என்று எண்ணினாலும் ஒரே சிட்டிங்கில் இந்த வேதனையை முடித்து விடலாமே என்றும் தோன்றியது.

தூக்கம் வாராமல் குறுங்கண் ஓரம் நின்று இருந்தவனின் அறைக் கதவு படபடவென்று தட்டப்பட வேகமாய் வந்து கதவை திறந்தான்.

அங்கே அழுது சிவந்த முகத்துடன் பனி நின்றிருந்தாள்.

--

“என்னடி ஆச்சு.. ஏன் இப்படி அழுது சிவந்து போய் வந்து இருக்க?” கேட்டவனை சட்டை செய்யாமல் அவனை தள்ளிக் கொண்டு அறையின் உள்ளே வந்து கதவை அழுத்தமாக சாற்றி தாழ் போட்டவள் அவனின் முன்பு அத்தனை ஆவேசமாக வந்து நின்றவள் பரபரவென்று அவனின் சட்டையை அவிழ்த்தாள்.

“அடியேய்.. என்னடி பண்றா?” என்று அவளின் கையை தடுத்து பிடித்தான் கதிரவன்.

“இப்போ மட்டும் நீங்க கையை எடுக்கல.. உண்மையா சட்டையை கிழிச்சிடுவேன்” அத்தனை கோவத்தோடு சொன்னவளை கண்டு குழப்பமாக தன் கையை விலக்கிக் கொண்டவன்,

“எதுக்குடி ரேப் எதுவும் பண்ண போறியா?” நக்கலாக கேட்டவனை நிமிர்ந்துப் பார்த்து அழுகையுடன் முறைத்தவள்,

“இப்ப அது ஒன்னு தான் கேடு..” என்றவளை முறைத்தான் கதிரவன். அவனது முறைப்பை கண்டுக் கொள்ளாமல் அவனின் சட்டையை முழுமையாக அவிழ்த்தவள், அவன் அணிந்து இருந்த பனியனையும் அவிழ்க்கப் பார்க்க,

“அதை எதுக்குடி அவிழ்க்குற”

“எல்லாத்துக்கும் விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது” கடுப்படித்தவள்,

“கையை தூக்குங்க” அவனை மிரட்டி பனியனையும் அவிழ்த்தவள் அவனின் முதுகு புறமாக போய் நின்றவள் அவனின் முதுகை தொட்டு தடவி விட ஆரம்பிக்க, கதிரவன் உச்சுக் கொட்டினான்.  

“இதுக்கு தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா?” கேட்டவன், அவளிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள பார்த்தவனின் வயிறோடு இடது கையை வைத்து அழுத்தமாக தன்னோடு அணைத்துக் கொண்டவள், வலது கையால் அவனின் தழும்பாகி இருந்த வெற்று முதுகை வருடி விட்டாள். அவன் முதுகோடு சாய்ந்து இருந்ததால் அவளின் கண்ணீர் அவனது முதுகை சூடாக நனைத்தது.

“கண்ணாம்மா” என்றான் அதட்டலாக.

“நீங்க பேசாதீங்க..” அழுகையுடன் அவனது முதுகில் முட்டியவள், ஒரு கையால் அவனின் முதுகை குத்தினாள்.

“என்னடி கண்ணம்மா” என்று தவித்துப் போனான்.

அவனின் முதுகோடு இன்னும் ஒன்றிப் போனாளே தவிர அவனை விட்டு இம்மியும் விலகவில்லை. அவளை தன் முன்னாடி கொண்டு வர அவன் முயற்சி செய்ய, அவனது கைகளை தட்டி விட்டுக் கொண்டே அவனின் முதுகோடு இன்னும் கண்ணீருடன் ஒன்றிக் கொண்டாள்.

“ப்ச்.. கண்ணம்மா.. அழாதா..” அவன் சொல்லிப் பார்க்க அவள் கொஞ்சமும் கேட்கவே இல்லை. 

“இப்ப நீ அழுத.. உன்னை கொன்னுடுவேன்டி” வெடித்தான் கதிரவன்.

Loading spinner

Quote
Topic starter Posted : July 19, 2026 11:05 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top