“நான் சொன்னா சொன்னது தான். மரியாதையா உன் கையாலேயே பிள்ளையை தர்றியா? இல்ல நானே பிடுங்கிக்கவா?” என்றவன் இருக்கையில் இருந்து எழுந்து விருட்டென்று அவளிடம் வந்தவன், அவள் சுதாரிக்கும் முன்பே அவளின் கையில் இருந்த பிள்ளையை வாங்கி தன் தோளில் போட்டுக் கொண்டவன்,
“கெட்வுட்” என்று கர்ஜித்தான்.
“சார்.. ப்ளீஸ்.. சார்... அவன் இல்லாம என்னால இருக்கவே முடியாது சார்.. அவனுக்கு வேற உடம்பு சரியில்ல. இந்த நேரம் அவனை என் கிட்ட இருந்து பிரிச்சிடாதீங்க சார்.. அவன் அழுதா மறுபடியும் பிக்ஸ் வந்துடும்.. ப்ளீஸ் ப்ளீஸ்” என்று அவனின் காலில் விழாத குறையாக அவள் கெஞ்ச, தீரனோ கொஞ்சமும் அசையவே இல்லை.
“இப்ப நீயா இந்த இடத்தை விட்டு போறியா இல்ல செயூரிட்டியை பிடிச்சு வெளியே தள்ளவா?” அதிகாரத்தின் உச்சத்தில் அவனது வார்த்தைகள் வர துடிதுடித்துப் போனாள்.
தன் அண்ணன் கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் இவ்வளவு தூரம் இறங்கி அடிக்கிறாரே என்று வெற்றி திகைத்துப் போய் அண்ணனை தடுக்க வர,
“இது எனக்கும் அவளுக்கும் உண்டான டீல். இதுல நீ தலையிடாத?” என்றவன், லேடீஸ் செக்யூரிட்டிக்கு போன் போட்டு அதிரலை கைக்காட்ட, அவர்கள் அவளை பிடித்து நிறுவனத்தின் வெளியே கொண்டு போய் விட்டார்கள்.
அக்காவை செக்யூரிட்டி இழுத்துக் கொண்டு போகும் விசயம் கேள்விப்பட்டு அடித்துப் பிடித்துக் கொண்டு நேத்ரா வர, அவளையும் பிடித்து வெளியே துரத்தி விட்டார்கள்.
அக்கா தங்கை இருவரும் ஆதரவு இல்லாமல், அதிகாரம் செய்யும் வர்க்கத்தை தட்டி கேட்க ஆளில்லாமல் அந்த நிறுவனத்தின் முன்பு பிச்சைக்காரிப் போல நின்றிருந்தார்கள்.
--
“அக்கா என்ன ஆச்சு? ஏன் இப்படி இவங்க எல்லாம் பிகேவ் பண்றாங்க? எதுக்காக நம்மளை இப்படி வெளில துரத்தி விடுறாங்க?” ஒன்றும் புரியாமல் செக்யூரிட்டியிடம் இழுபட்டு அந்த நிறுவனத்தின் வாயிலில் நின்று இருந்த அதிரலிடம் கேட்டாள்.
அதிரலுக்கு சிந்தையே இங்கு இல்லை. காலையில் இருந்து தன் தோளிலே சுமந்து இருந்த பிள்ளையின் கணம் இப்பொழுது இல்லாமல் வெற்று தோளாய் இருக்க பிரம்மை பிடித்து விட்டது போல இருந்தாள். அவளின் இந்த தோற்றம் கண்டு விக்கித்துப் போன நேத்ரா, “அக்கா.. அக்கா” என்று அவளை பிடித்து உலுக்கி எடுக்க சுயம் அடைந்த அதிரலுக்கு கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
“அக்கா என்ன தான் ஆச்சு? ஏன் இப்படி நம்மளை துரத்துறாங்க.. பிள்ளை எங்க போனான்?” என்ற நேத்ராவை துக்கம் தாளாது கட்டிக் கொண்டு கத்தி கதறினாள் அதிரல்.
அவளின் அழுகையை பார்த்த நேத்ராவுக்கு அடி நெஞ்சு பயத்தில் பிசைந்தது. இதுநாள் வரை எதற்கும் கலங்காத அக்கா இப்படி கத்தி கதறுவதை கண்டு தாங்க முடியாமல் தானும் அவளை கட்டிக் கொண்டு அழுதாள்.
அதிரலின் கண்ணீர் இவளுக்கும் கண்ணீரை வரவைத்தது.
“அழாதக்கா என்ன நடந்துச்சு? ஏன் இப்படி நடக்குது எனக்கு ஒண்ணுமே புரியலையே.. ஏதாச்சும் சொல்லுக்கா. ஒண்ணுமே புரியாம பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு” என்று அவள் கேட்க,
“இந்த நிறுவனத்தோட எம்டி மிஸ்டர் தீத்திரள் தீரன் தான் நம்ம தீராவோட அப்பா டி” என்று சொல்லி இன்னும் கத்தி அழ நேத்ராவுக்கு எல்லாம் விளங்கி விட்டது.
“தம்பியை வாங்கிக்கிட்டாங்களா க்கா” உயிர் துடிக்க கேட்டாள் தங்கை. அதிரல் வேலைக்கு செல்லும் பொழுது எல்லாம் இவளின் நெஞ்சை அல்லவா தொட்டிலாக கட்டி பிள்ளையை வளர்த்து வந்து இருந்தாள். அதனால் பிள்ளை தங்களிடம் இல்லை என்று அறிந்த உடனே இவளுக்கும் உயிர் துடித்துப் போனது.
“அக்கா அவன் நம்ம பிள்ளை. அவங்க எப்படி அவனை பிடுங்கிக்க முடியும். அவங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” என்று சொன்னவளின் கூற்று மெய் என்ற பொழுதும் ‘அந்த பிள்ளைக்கு உண்டான பணத்தை வைத்து தானே உன் மருத்துவ செலவை சரி கட்டினேன். இப்பொழுது எந்த உரிமையில் நான் அவரிடம் பிள்ளையை கேட்க முடியும்’ எண்ணிய அதிரல் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்த துக்கத்தை தாள முடியாமல் அப்படியே மடிந்து அமர்ந்து விட்டாள்.. அதை சொன்னாள் தங்கையால் தாங்கிக்கொள்ளவே முடியாது. எனவே மௌனமாகி விட்டாள்.
அவளின் கட்டுப்படுத்த முடியாத அழுகை ஏங்களாக மாறியது. விக்கி விக்கி அவள் அழுத அழுகையை மேலே இருந்து பார்த்துக் கொண்டு இருந்த தீரனுக்கு நெஞ்சை என்னவோ செய்தது.
அதிரலை அவன் பார்க்கும் பொழுது எல்லாம் குரங்கு குட்டியை சுமப்பது போல தன் தோளிலும் மார்பிலும் பிள்ளையை வைத்துக் கொண்டு தானே இருந்தாள். அவனோடு அவள் ஒட்டி இணைந்து பிணைந்துக் கொண்டு அவளின் ஒட்டு மொத்த பாசத்தையும் கொட்டி அல்லவா அவனை வளர்கிறாள்.
ஏன் இன்றைக்கு காலையில் இருந்து உடம்புக்கு முடியாத பிள்ளையை ஒரு முறை கூட கீழே இறக்கி விடாமல் இடுப்பில் சுமந்து தோளில் சுமந்து மார்பில் போட்டு தட்டிக் கொடுத்து என் அவள் நின்ற நிலை எல்லாம் கண் முன் வந்தது. அதுவும் மூன்று வயது பிள்ளை என்ன கணம் கணக்கும் என்று அவனுக்கும் தெரியும் தானே.
ஆனால் கொஞ்சமும் சலிக்காமல் பிள்ளை அனத்திக் கொண்டே இருந்த பொழுதும் முகத்தை சுருக்காமல் பிள்ளையை தட்டிக் கொடுத்துக் கொண்டே அவனோடு கதை பேசிக் கொண்டே தானே இருந்தாள். அதை எல்லாம் உள்ளிருந்தபடி கேமராவின் வழியே பார்த்துக் கொண்டு தானே இருந்தான்.
தன் கையில் இருந்த பிள்ளையை பார்த்தான். “பிக் மேன்” என்று அரிசி பற்கள் நாலு தெரிய அவன் சோர்வுடன் சிரித்த சிரிப்பு நெஞ்சை அள்ளியது.
“சொல்லுங்க ஸ்மால் மேன்.. உடம்பு எப்படி இருக்கு?” அவனின் நெற்றியோடு நெற்றி முட்டி தீரன் கொஞ்சினான்.
உதட்டை பிதுக்கி “காச்சி.. காச்சி” என்று கழுத்தை தொட்டு காட்டி சொன்னவனின் மழலைச்சொல் அவனின் அப்பனுக்கு புரிய,
“ஸ்மால் மேனுக்கு காய்ச்சல் இன்னும் அடிக்கிதா?” என்று அவனின் கழுத்தை தொட்டுப் பார்த்து கேட்டவனிடம் “ம்மா யேனும்” என்றான்.
“அம்மா வேணுமா தம்பிக்கு?” என்று கேட்ட தீரன் செக்யூர்ட்டியை அழைத்து அதிரலை வர சொன்னான்.
உயிர் போய் உடல் மட்டும் இருப்பது போன்ற நிலையில் இருந்தாள் அதிரல். நேத்ரா தான் அவளை இழுத்துக் கொண்டு வழிந்த கண்ணீருடன் தீரனின் அறை நோக்கி சென்றாள்.
அதிரல் ஏன் என்று கேட்கும் நிலையில் கூட இல்லை. அவளுக்கு உயிர் மூச்சே அவளின் குழந்தை தான். அந்த மழலையை பார்த்தால் மட்டுமே அவளுக்கு சுயம் திரும்பும்.
தீரனின் அறைக்குள் நுழைந்த அதிரலுக்கு அங்கே அவளின் மகன் தீரனின் கையில் இருந்தபடி விளையாடிக் கொண்டு இருந்தது கண்ணில் பட வெடித்துக் கொண்டு விம்மல் தெரித்தது. சட்டென்று முந்தானையை வாயில் வைத்து அடக்கிக் கொண்டு மகனை பார்த்தாள்.




