அவனின் அகங்காரம் கூட அவளுக்கு பிடித்தமானதாக போய் விடுமோ என்று உள்ளுக்குள் ஒரு பயம் உருள்கிறதே.. அதை யாரிடம் சொல்லி விளக்கம் பெறுவது..
நீண்ட மூச்சை இழுத்து விட்டவள் குழந்தை தனியாக படுத்து இருப்பது உணர்ந்து எழுந்துக் கொண்டாள். கீழே போய் விட்டாள்.
அவளின் அண்ணன் அறையை எட்டிப் பார்த்தாள். அவன் நன்றாக தூங்கி இருந்தான். குழந்தை இருக்கும் தன்னுடைய அறைக்கு வந்தாள். அவள் போர்த்தி விட்ட பெரிய போர்வைக்குள் பஞ்சு குவியலாய் பிள்ளை தூங்குவதை காணும் பொழுது அன்பின் ஊற்று உள்ளுக்குள் சுரந்தது.
அவனை நெருங்கி அவனின் தலையை வருடி விட்டவள் குனிந்து அவனின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.
பிள்ளை அதை உணர்ந்தானோ என்னவோ இதழோரம் சின்ன புன்னகையை சிந்தினான்.
அந்த சின்ன சிரிப்பில் தன் மனதை இழந்தவள், “கண்ணா”
என்று கொஞ்சி மீண்டும் ஒரு முத்தத்தை வழங்கினாள் பிள்ளைக்கு.
அவன் முழிப்பது போல தெரிய, குளிருக்கு தோதாக போர்வையை இன்னும் நன்கு இழுத்து போர்த்தி விட்டவள், அவனுக்கு அருகில் அணைவாக தலையணையை வைத்து விட்டு வேறு ஒரு போர்வை தலையணையை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள்.
வெறும் தரையில் படுத்து இருந்தவனை காணுகையில் கீழே சின்னவன் தூங்குவது போல இருக்க, அவனை நெருங்கி அவனின் தலையை அசையாமல் தூக்கி தலையணைக்கு அடியில் வைப்பதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. அத்தனை பாரமாக இருந்தான்.
பின் அவனுக்கு தோதாக கழுத்து வரை கொண்டு வந்த போர்வையை போர்த்தி விட்டு எழுந்துக் கொள்ள பார்த்தவளுக்கு மனம் தடுமாற, அவளையும் அறியாமல் அவனின் நெற்றியில் படர்ந்து இருந்த முடியை ஒதுக்கி விட்டு தன் இதழ்களை அவ்விடம் புதைத்தாள்.
தெரிந்தே தான் அவனுக்கு முத்தம் கொடுத்தாள். இது தவறு என்று தெரிந்த பொழுதும் ஏனோ அவளால் தடுக்கவே முடியவில்லை. சாமுக்கும் இவனுக்கும் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை. இவன் வளர்ந்து இருக்கிறான் அவ்வளவு தானே தவிர, அந்த பிள்ளை எப்படி இவளுடன் ஒண்டிக் கொள்ளுமோ அது போல தானே இவனும்.
ஒவ்வொரு நாள் இரவும் தனிமயின் சுமை தாங்க முடியாமல் இவளுக்கு போன் போட்டு பேசுவான் பேசுவான் பேசிக் கொண்டே இருப்பான். ஆனால் பகலில் அவளிடம் அவன் காட்டும் கண்ணியமும் கோவமும் அவனின் முக மூடியை சொல்லுமே..
அவனின் இருவேறு குணங்களையும் அறிந்தவளுக்கு மெல்ல மெல்ல அவனின் பால் சாய தொடங்கினாள். ஆனால் கங்குவன் அப்படி சாய்வானா என்று கேட்டால் அவளின் மனமே இல்லை என்று தான் சொல்லும்.
என்னெனில் அவன் யாரையும் அருகில் சேர்த்துக் கொள்ள மாட்டான். அதுவும் அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் தன்னை அவன் ஏற்றுக் கொள்வது எல்லாம் குதிரை கொம்பு தான். தன் வீட்டிலும் இந்த திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று புரிந்தவளுக்கு உள்ளுக்குள் எழுந்த காதலின் உயிர் வலி மிகவும் அதிகம்.
காதல் என்று உணர ஆரம்பித்த நொடியிலே அது கருகிப் போய் விடும் என்று உணர்ந்தும் இருந்தாள். ஆனாலும் இந்த கங்குவன் மீதான காதல் அவளை பித்து பிடிக்கவே செய்கிறது.
விழியோரம் ஒற்றை கண்ணீர் துளி அவளின் மன வேதனையை காட்டி கொடுக்க, எங்கே அந்த துளி அவன் மீது பட்டு தூக்கத்தை கெடுத்து விடுமோ என்று அஞ்சி வேகமாய் கண்ணீரை துடைத்துக் கொண்டவள்,
மீண்டும் அவனின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்து விட்டு கீழிறங்க பார்க்க, மொட்டை மாடி வாயிற் படியில் கைகளை கட்டிக் கொண்டு அலுத்தமாக நின்று இருந்தான் இளந்திரையன்.
அவனை அங்கு எதிர் பார்க்காத வேரல் அதிர்ந்துப் போய் விட்டாள்.
“அண்ணா” என்று அவள் தடுமாற,
“எத்தனை நாளா இது நடந்துக்கிட்டு இருக்கு?” குரலில் அத்தனை சீற்றம் நிறைந்து இருந்தது.
“அண்ணா ப்ளீஸ் நான் சொல்றதை ஒரு நிமிடம் கேளேன்...” என்றவளை கீழே அழைத்துக் கொண்டு போனவன்,
“சொல்லு வேரல் எத்தனை நாளா இந்த மாதிரி செய்துட்டு இருக்க.. ஒரு குழந்தைக்கு தகப்பனான அவனை போய், அதுவும் அவனை மறந்து அவன் தூங்கிட்டு இருக்குற சமயத்துல அவனுக்கு முத்தம் குடுக்குறியே.. இது தான் நாங்க வளர்த்த வளர்ப்பா.. நண்பன்னு தானே அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். ஆனா நீ இப்படி நடந்துக்குறியே..” அத்தனை ஆதங்கத்துடன் கேட்டவனை பார்த்து உள்ளம் துடித்துப் போனவளுக்கு நெஞ்சே வெடித்து விடும் போல ஆனது.
“உன்கிட்ட இருந்து இப்படியாப்பட்ட செயலை நான் கொஞ்சமும் எதிர் பார்க்கல.. நீ என் தங்கச்சின்னு சொல்லிக்கவே ...” என்று அவன் முடிக்கும் முன்பே
“அண்ணா ப்ளீஸ் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசிடாதண்ணா.. செத்து போயிடுவேன்” என்றவளின் கண்கள் கண்ணீரில் நிறைந்துப் போனது. வாய் வார்த்தைகள் திக்கி கதறல்களாக வெளியே வந்தன.. முகம் மொத்தமும் அழுகையில் சிவந்துப் போய் விட்டது.
அண்ணன் பேசியதில் ஏகத்துக்கும் அவமானம் அவளை சூழ்ந்துக் கொள்ள, மடிந்து அமர்ந்து விட்டாள். திரையனை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல், இரு கையையும் எடுத்து கும்பிட்டவள்,
“சாரிண்ணா” என்று மட்டும் கேட்டவளுக்கு அவன் முன்னால் இருக்க முடியவில்லை. கூனி குறுகி போனவள் வேகமாய் தன் அறைக்கு போய் கதவை அடைத்துக் கொண்டு சத்தம் வராமல் கதறி தீர்த்தாள்.
தங்கையின் கண்ணீரை கண்டு நெஞ்சு துடித்துப் போனது இளந்திரையனுக்கு. ஆனாலும் அவன் அசையவே இல்லை.
“நீ பொக்கிஷம்டா.. விலை மதிப்பில்லாத பொக்கிஷம்.. அந்த பொக்கிஷத்தை காலால் உதைச்சு தள்ளிட்டு இருக்கான் கங்குவன். அவனா வந்து உன்னை பெண் கேட்கட்டும்.. நீயா போனா உன்னை நோகடிச்சு ரொம்பவும் வலிக்க வைப்பான். ஏன்னா அவன் முன்னால் காயத்தையே இன்னும் நக்கி நக்கி ருசி பார்த்துட்டு இருக்கான். உன்னோட அன்பு அவனுக்கு புரியாது.. நீயா வழிக்க கொண்டு போய் உன் அன்பை கொடுத்தாலும் அவன் உதாசீனம் தான் செய்வான்..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் தங்கையை பேசிய விதத்துக்காக தன்னை தானே கடிந்துக் கொண்டவன் தூங்க போய் விட்டான்.
அடுத்த நாள் காலையில் தூக்கம் விழித்தவனுக்கு தன் மீது இருந்த மொத்த போர்வையையும் தலைக்கு அடியில் இருந்த தலையணையும் கண்டு இது யார் வேலை என்று சடுதியில் புரிந்துப் போனது.
உதட்டை பிதுக்கிக் கொண்டு எழுந்து கீழே வர, அவனின் மகன் அழுதுக்கொண்டு இருந்தான்.
“ஆமா ஏன்டா இவன் அழுதுட்டு இருக்கான்..? உன் தங்கச்சி எங்க.. இவனை தூக்கி சமாதனம் செய்ய வேண்டியது தானே.. அதை விட்டுட்டு எங்க போனா..” திரையன் அவனை சமாதனம் செய்துக் கொண்டு இருக்க கேட்டான்.
“ம்கும்.. அப்படியே பொண்டாட்டியை திட்டுற மாதிரியே திட்டு.. ஏன்னா அவ தானே வலிக்க வலிக்க இவனை பெத்து எடுத்தா” தனக்குள் முணகிக் கொண்ட திரையன்,
“அவ வீட்டுக்கு போயிட்டா..” என்றான்.
“ஏன்?” அத்தனை வேகமாக அவனின் கேள்வி வந்தது உடனே.
“என்னவோ வேலை இருக்காம்.. காலையிலையே கிளம்பி போயிட்டா” என்றவன்,
“சரி நான் சாமுக்கு விளையாட்டு காட்டிட்டு கூட்டிட்டு வரேன்.. நீ பிரெஷ் ஆகு” என்று விட்டு அவன் வெளியே போக, வேகமாய் தன் போனை எடுத்து வேரலுக்கு கூப்பிட்டான்.
அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தோழமைகளே..




