Notifications
Clear all

அத்தியாயம் 34

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ஓகே.. உங்க மாமா போட்டோவை பார்க்கணும். காண்பி” என்று அவளது செல்போனை பார்த்தபடி அழுத்தமாக கேட்டான்.

அவன் அப்படி கேட்கவும் பதறிப் போனவள், வேண்டும் என்றே போனை கீழே போட்டுவிட்டு,

“சாரி சார் டிஸ்ப்ளே போயிடுச்சு..” என்று சமாளித்தாள்.

“ஓகே நீ போகலாம்” என்றவனுக்குள் ஏதோ லேசாக தீப்பற்றியது போல தோன்றியது. ஆனால் அது எந்த அளவுக்கு சரி என்று புரியவில்லை.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அதிரல் அவனின் அறைக்குள் நுழைந்தாள்.

“என்ன மேடம் முடிவு பண்ணி இருக்கீங்க?” கேட்டவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,

“நானே சென்னைக்கு வரேன் சார்” என்றாள்.

“ஓகே குட் டெஷிஷன்.. சைன் பண்ணு” என்றவன் தான் மட்டுமே பயன்படுத்தும் பேனாவை அவளிடம் நீட்டினான்.

அதை வாங்கி கை எழுத்துப் போட்டவள்,

“என் பிள்ளை கிட்ட இருந்து நீங்க விலகி இருக்கணும்” என்றாள்.

அவளை ஏளனமாக பார்த்தவன், “புரியலையே” என்றான் நக்கலாக.

“சார் ப்ளீஸ்.. எங்களுக்குன்னு ஒரு கெளரவம் இருக்கு. நாங்க மிடில் கிளாஸ் பேமிலி. நீங்க என் பிள்ளைக்கிட்ட பழகுறதை பார்த்தா நாலு பேர் தப்பா நினைப்பாங்க” என்ற நேரமே, கண்கள் சிவக்க,

“என்னை என்ன பொம்பளை பின்னாடி அலையிறவன்னு சொல்றியா?” கர்ஜனையாக கேட்டவனின் குரலில் இவளுக்கு பயம் வந்துவிட்டது.

“சார் நான் அப்படி சொல்லல.. ஆனா நீங்க நடந்துக்குற விதம் என்னை நெருங்கி வர மாதிரி மத்தவங்களுக்கு தோணும். அதை தான் சொல்றேன். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனா இதையே சாக்கா வச்சு நாளைக்கு என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை அமையாம போயிட்டா நான் என்ன பண்ணுவேன் சொல்லுங்க. ஒரு பெண்ணா இருந்து பாருங்க” என்று அவள் சொல்ல, அவளின் வியாக்கியானம் எதுவும் அவனது காதில் விழவில்லை.

“சோ என்னை பொம்பளை பொறுக்கின்னு முத்திரை குத்திட்ட இல்லையா?” என்று மீண்டும் கேட்டதையே அவன் கேட்க, இவளுக்கு பெரிய தலைவலியாய் போனது.

“ஏன் சார் நான் சொன்னதையே நீங்க புருஞ்சுக்க மாட்டேன்றீங்க..?” கெஞ்சியவளை கண்கள் இடுங்க பார்த்தவன்,

“உன் ஹஸ்பென்ட வர சொல்லு நான் அவர் கிட்டயே பேசிக்கிறேன்” என்று அறுதியிட்டு சொன்னவனை கண்டு மலைத்து நின்றாள்.

இல்லாத புருசனுக்கு அவள் எங்கு போவாள்.. நேரம் பார்த்து இவன் வேற கழுத்தை அறுக்கிறானே என்று எண்ணியவள், பொறுத்தது போதும் என்று பொங்கி விட்டாள்.

“என் புருசன் கிட்ட பேச நீங்க யாரு? அவரு எல்லாம் இங்க வர மாட்டாரு.. நீங்க என் பிள்ளையை” என்று முடிக்கும் முன்பே இருக்கையில் இருந்து எழுந்தவன் அவளை நெருங்கி வந்து அவளின் தோளில் இருந்த பிள்ளையை பிடுங்கிக் கொண்டு,

“உன் புருசன் இப்பவே இங்க வந்தாகணும். நான் அவன் கிட்ட பேசனும். அவன் வந்து என் கிட்ட பேசிட்டு உன் பிள்ளையை வாங்கிட்டு போகட்டும்” என்று அழிச்சாட்டியம் செய்தவனை கண்டு உள்ளம் குமுறியவள்,

“இல்லாத புருசனுக்கு நான் எங்க போறது?” வெடித்து சிதறியே விட்டாள் அதிரல்.

தீரன் நிதானமாக அவளை பார்த்தான்.

“எனக்கு புருசன் இருந்து இருந்தா நான் ஏன் உங்களோட மல்லுக்கு இப்படி நிற்க போறேன். நீங்க பண்ற அழிச்சாட்டியத்துக்கு அவரை விட்டு இந்நேரம் உங்ககிட்ட பேசி இருந்து இருக்கா மாட்டனா?” என்று ஆவேசத்துடன் பேசியவள்,

“தனியா இருக்குற பொண்ணுக்கு எவ்வளவு ஆபத்து வரும்னு தெரிஞ்சு தான் புருசன் இருக்கிறதா பொய் சொன்னேன். ஆனா நீங்க புருசன் இருக்கிறது தெரிஞ்சும் என்கிட்டே வம்புக்கு நிக்கிறீங்க. நான் என்ன தான் செய்யட்டும்?” கேட்டவள்,

“நானும் என் தங்கச்சியும் தனியா தான் இருக்கோம். அதனால தான் படிச்சு படிச்சு சொல்றேன். எங்களை நீங்க நெருங்காதீங்கன்னு.. உங்க மேல யாரும் பழிச் சொல் வீச மாட்டாங்க. அக்கா தங்கச்சி எங்க மேல தான் அத்தனை பழிச்சொல்லும் விழும். என்னை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல. நான் பட்டுப்போன மரம். ஆனா என் தங்கச்சி அப்படி இல்ல.. அவளாவது நல்லா வாழணும்னு நினைக்கிறேன். தயவு செஞ்சு எங்களை எங்க போக்குல வாழ விடுங்க சார்” என்று ஆத்திரத்துடன் கத்தி அவனை கையெடுத்து கும்பிட்டாள் அதிரல்.

அதிராமல் அவளை பார்த்தவனின் விழிகளில் என்ன இருந்தது என்று கூட பார்க்காமல் பிள்ளையை அவன் கையில் இருந்து வாங்கிக் கொண்டு விறுவிறுவென்று வெளியே போகப் பார்க்க,

அந்த நேரம் “மல்லிகை” என்று தீரனின் குரல் அத்தனை அதிர்வுடன் அந்த அறையில் ஒலித்தது. அந்த பெயரில் விழிகள் தெறிக்க அவனை திரும்பிப் பார்த்தாள் அதிரல். அவளுக்கு மூச்சே எடுக்க முடியவில்லை.

பேதலித்துப் போய் அவனை பார்த்துக் கொண்டு இருந்த நேரம் அந்த அறையின் கதவு திறக்கப் பட வேகமாய் இந்த புறம் திரும்பி பார்த்தாள். பார்த்தவளின் காலில் நிலம் நழுவியது. தள்ளாடிப் போய் மூச்சுக்கு ஏங்கிப் போனாள் அங்கு வந்து நின்ற வெற்றியை கண்டு.

--

தீரனின் மல்லிகை என்ற அழைப்பிலே பெண்ணவளுக்கு இதயம் நின்று இருந்தது.. இதில் அங்கு வந்து நின்ற வெற்றியை கண்டு உயிரே போனது போல இருந்தது.

வேகமாய் தன் தோளில் தூங்கிக்கொண்டு இருந்த பிள்ளையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அவளின் முகத்தில் குவியும் ஒவ்வொரு உணர்வுகளையும் விழி எடுக்காது பார்த்துக் கொண்டு இருந்தான் தீத்திரள் தீரன்.

வெற்றிக்கோ இந்த பெண்ணை இங்கே சந்திப்போம் என்று கொஞ்சமும் எண்ணி இருக்காததால் அதிரலை பார்த்து அதிர்ந்து நின்றான். அதுவும் அவளின் கையில் இருந்த பிள்ளையை கண்டு. கூடவே தன் அண்ணனின் அலுவலகத்திலே இவள் பார்ப்போம் என்று.

அதிரலை பார்த்த தம்பியின் முகத்தில் வந்து போன அதிர்வை கண்டவனுக்கு மிக எளிதாக எல்லாமே புரிபட்டு விட்டது. வெற்றி  ஏதோ சொல்ல வர, எதுவும் சொல்லாதே என்று கண்ணை காட்டியவன் பெருமூச்சுடன் இருக்கையில் போய் அமர்ந்தவன் அதிரலை கூர்மையான விழிகளால் துளைத்தான்.

“சோ உன் தங்கைக்கு ஹார்ட் ஆப்ரேஷன் பண்ணி இருக்கதால அவளால சென்னைக்கு போக முடியாது. ரைட்” என்று தீரன் கேட்க,

“ஆ.. ஆ... மாங்க சார்” என்று திக்கி திணறிப் போனாள். அவளால் பதிலே சொல்ல முடியவில்லை. அவளின் பார்வை மொத்தமும் வெற்றியிடம் தான் இருந்தது. எங்கே அவனுக்கு தெரிந்து விடுமோ. அவன் ஏற்பாடு செய்த ப்ராஸசில் பிறந்த பிள்ளை என்று பிடுங்கிக் கொள்வானோ என்று பயந்துப் போனாள். அதை விட தீரனுக்கு எப்படி மல்லிகை என்ற பெயர் தெரியும் என்று குழம்பிப் போனாள். அதனாலே அவளின் பேச்சில் அதிக தடுமாற்றம் ஏற்பட்டது.

“ஓகே அப்போ உனக்கு சென்னை வர ஓகே தானே” கையில் இருந்த அக்ரிமென்ட் டாக்குமென்ட்டை எடுத்து கேட்டான்.

வெற்றியை பயந்த பார்வை பார்த்தவள், “ஓ...கே சா...ர்” என்றாள்.

“குட்..” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருக்க,

“நான் கிளம்புறேன் சார்” என்று அவசரமாய் அங்கிருந்து போக பார்த்தாள்.

அவள் போவதை பார்த்த வெற்றி “அண்ணா” என்று அவசரமாய் அழைத்தான்.

“பொறு” என்பது போல அவனுக்கு சைகை செய்தவன் வேகமாய் எட்டு வைத்து போகும் பெண்ணவளை பார்த்தவன் சரியாய் அவள் கதவில் கை வைத்து திறக்கும் நேரம்,

“மிஸ் அதிரல்.. ஒரு நிமிடம்” என்றான் மரியாதையாய்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 15, 2026 10:01 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top