Notifications
Clear all

அத்தியாயம் 29

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவனை எவ்வளவு மறுத்தாலும் கேட்காமல் திரியும் அவனின் உதவி அதிரலுக்கு மிக மிக வேண்டியதாய் இருந்தது என்பதே உண்மை. ஆனால் அதற்காக அவனை தங்களுக்குள் அனுமதிக்க அவளுக்கு மனம் வரவில்லை. மௌனமாக மகனோடு அமர்ந்துக் கொண்டாள்.

“அப்போ இவ்வளவு தூரம் எங்களை பாலோ பண்ணி வந்திருக்கிறாரா?” நெஞ்சுக்குள் பயம் வந்தது.

“ஆனா எதுக்காக எங்களை பாலோ பண்ணனும்.. நாங்க யாரு அவருக்கு. ஒன்றும் புரியவில்லையே..” கேள்வி அவளுக்குள் எழுந்தது. அவனை அவளின் எல்லைக்குள் அனுமதிப்பது தவறாக பட்டது. இனி வந்தால் கண்டிப்பாக சொல்லிடணும் என்று இருந்த நேரம்,

பிளட் ரிப்போர்ட் வாங்கிவிட்டு, நர்ஸ் சொன்ன மெடிசினையும் வாங்கிக்கொண்டு, ரிஷப்ஷனில் பில் பே பண்ணி விட்டு வந்தான் தீரன்.

அதற்கு உண்டான காசை அவனிடம் கொடுத்தவள்,

“தேங்க்ஸ் சார். டைம்லி ஹெல்ப் பண்ணி இருக்கீங்க.. ஆனா இனிமேல் உங்க உதவி வேணாம். ப்ளீஸ் நானே பார்த்துக்குறேன். எங்க குடும்பத்துக்குள்ள நீங்க வரவேண்டாம்” சொன்னவள் அவனிடம் வாசல் பக்கம் கையை காட்டினாள். அதில் தீரனின் முகம் நொடியில் சிவந்து கருத்துப் போய் விட்டது.

“ஏய்..” அவன் அடக்கப்பட்ட கோவத்துடன் கர்ஜிக்க,

“ப்ளீஸ் சார்.. உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நம்மக்குள்ள எந்த உறவும் கிடையாது. அப்படி இருக்கும் பொழுது நீங்க என் மகனோட ஒட்டி உறவாட நினைக்கிறது தப்பு. பார்க்கிற யாருக்கும் நீங்க பிள்ளையோட பழகுறது தெரியாது. என்னோட பழகுற மாதிரி தான் தெரியும்.”

“உங்களுக்கு வேணா இதெல்லாம் ரொம்ப ஈசியா இருக்கும். ஏன்னா நீங்க எல்லாம் வசதி படைச்சவங்க. ஆனா நாங்க அப்படி இல்ல.. அடிமட்ட மக்களோட தான் சேர்ந்து வாழ்ந்தாகனும். அவங்க முதுகுக்கு பின்னாடி பேசுற பேச்சை தாங்கிக்கொள்ள கூடிய சக்தி எனக்கு இல்லை. இதோட உங்க எல்லையை நிறுத்திக்கோங்க. என் மகனை நெருங்க நினைக்காதீங்க.. அதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன். இதோட உங்களை பார்க்கிறது நான் கடைசி முறையா இருக்கணும்” அறுதியிட்டு சொன்னவள் குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவரை பார்க்க சென்று விட்டாள்.

என்னவோ மகனை அவன் பங்குப் போட்டு கொள்ள வருவது போலவே அவளுக்கு தோன்றியது. இத்தனை நாளாக ஒற்றை ஆளாக அவனை பெற்று வளர்த்து ஆளாக்கி வைத்து இருக்கும் நேரம் யார் யவர் என்றே தெரியாதவன் பிள்ளையை பார்க்கணும் என்று வந்து நின்றால் ஒரு தாயாய் அவளுக்குள் ஒரு பதட்டம் வராதா.. அந்த பதட்டத்தில் தீத்திரள் தீரனை ஓதுக்கி வைக்கப் பார்த்தாள்.

ஆனால் அவன் ஒதுக்கி வைக்கும் எல்லையை தாண்டி குழந்தையின் மீது அவனுக்கு மட்டுமே முழு உரிமை கொண்டவன் என்றைக்கு அவளுக்கு தெரியப் போகிறதோ.. அது தெரிந்த பிறகு அதிரலின் நிலை என்னவோ..

தான் அவனை அவமானப்படுத்தி பிள்ளையை விட்டு ஒதுக்கி வைக்கும் ஒவ்வொரு செயலுக்கும் பின்னாடி நன்றாக அனுபவிக்க போகிறோம் என்று தெரியாமல் தீத்திரள் தீரனை ஒதுக்கி வைத்துக் கொண்டு இருக்கிறாள்.

அதிரல் பேசியது எல்லாமே நியாயம் தான். ஆனால் அதை தீரன் ஏற்றுக் கொள்ள வேண்டுமே.. யாருக்காக சென்னையில் இருந்து அவ்வளவு மெனக்கெட்டு இரவோடு இரவாக வந்தானோ அந்த குழந்தையை பார்க்க அவனை அனுமதிக்கவில்லை அதிரல்.

அனுமதிக்காத அவளின் மீது கொலை வெறி எழுந்தது இவனுக்கு. எத்தனை தூரம் அவமானப்படுத்துக்கிறாள் என்று ஆங்காரமாய் வந்தது.

ஆனால் பிள்ளை அவளுடையது ஆகிற்றே.. அந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே அமைதியாக போகிறான். இல்லை என்றால் வருகிற கோவத்துக்கு அதிரலை  உண்டு இல்லை என்று ஆக்கி இருப்பான்.

இவக்கிட்ட கேட்டா தானே ரொம்ப ஓவரா பண்றா.. பேசாம அவ புருசன் காரன் கிட்ட கேட்டு பார்க்கலாம் என்று எண்ணியவன்,

“அதை அப்புறம் செய்யலாம்..” என்றவன் அதிரலின் பின்னாடி சென்றான் நெடிய நடை இட்டு.

குழந்தைக்கு என்ன சொல்ல போகிறார்களோ என்று உள்ளுக்குள் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது அவனுக்கு.

உள்ளே போகாமல் வரிசையில் அமர்ந்து இருந்தவளை கண்டு புருவம் சுறுக்கியவன், அந்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலின் டீனுக்கு போன் போடச்சொல்லி தன் பியேவுக்கு போனில் கட்டளை போட்டான். அடுத்த கொஞ்ச நேரத்திலே அதிரலை நேர்ஸ் அழைக்க,

“என்னோட டோக்கேன் டென்” என்று அவள் தயங்க,

“பரவாயில்ல வாங்க மேடம்” சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டார்.

எழுந்து குழந்தையோடு உள்ளே நுழைந்தாள். அவளுடன் இவனும் நுழைய, தன் பின்னாடி ஏதோ அரவம் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தவள் அங்கு தீரன் வருவதை பார்த்து திகைத்துப் போனாள்.

“இங்க என்ன பண்றீங்க?”

“இங்கயே ஆர்க்யூ பண்ண எனக்கு ஓகே தான். பட் டாக்டர் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க பாரு” என்று மருத்துவரை சுட்டிக் காட்ட, அவளால் வேறு எதுவும் பேச முடியாமல் போனது.

பிளட் ரிப்போர்ட்டை வாங்கி செக் பண்ணிய மருத்துவர்,

“அந்த பெட்ல பேபியை படுக்க வச்சுட்டு நீங்க வெளியே நில்லுங்க” என்று மருத்துவர் சொல்ல, தலையை ஆடியவள் குழந்தையை ஸ்க்ரீனுக்கு உள்ளே படுக்க வைக்க, அவன் மிரண்டுப் போய் தாயின் மாராப்பை இருக்கப் பற்றிக் கொண்டான்.

“ஸ்மால் மேன் ரொம்ப பிரேவ் தானே.. சும்மா பெட்ல படுக்குறதுக்கு எதுக்கு பயமாம். உன்னோட பிக் மேன் உன் கூட இருக்கேன். சோ நோ பியர்” என்று குழந்தையிடம் தன்மையாக பேசி அவனின் கையில் இருந்த அதிரலின் மாராப்பை விலக்கி விட்ட நேரம் தீரனின் கை அவளின் நெஞ்சில் லேசாக பதிந்தது. அதில் விதிர்விதிர்த்துப் போய் விட்டாள்.

ஆனால் தீரனுக்கு அந்த உணர்வு எல்லாம் கொஞ்சமும் இல்லை. அவனின் முழு கவனமும் குழந்தையிடம் மட்டுமே இருந்தது.

“ஸ்மால் மேனுக்கு என்ன வேணும். இங்க இருந்து போன பிறகு ஷாப்பிங் போகலாமா? ஷாப்பிங் போனா எந்த பொம்மை வாங்குவ.. ரோபோட்டிக் மேனா இல்ல காரா.. குட்டிக்கு எது  ரொம்ப பிடிக்கும்?” குழந்தையிடம் கேட்டுக் கொண்டே மருத்துவருக்கு அவன் கண்ணை காட்ட, வேகமாய் உள்ளே வந்து குழந்தையை பரிசோதித்தார்.

அதிரல் தான் வெளியே வர வேண்டி இருந்தது. மகனிடம் உரிமையாய் தீரன் நின்றுக் கொள்ள இவளுக்கு தான்  அடிநெஞ்சில் பயத்தின் சாயல் வேர் விட ஆரம்பித்தது.

அவளின் வாழ்க்கையில் ஒரு ஆணின் வருகையை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தனக்கு என்று ஒரு நாள் கூட அவள் வாழ்ந்ததாக நினைவில் இல்லை. பிள்ளை வரும் வரை தங்கைக்காக வாழ்ந்தாள். பிள்ளை வந்த உடன் இந்த நான்கு வருடங்களாக அவனுக்காக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 10, 2026 11:20 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top