“அப்புறம் என்ன எடுத்துட்டு வந்து குடுக்க வேண்டியது தானே” என்றவன், மருத்துவரிடம் திரும்பி,
“சாப்பிட்டுட்டு போங்க..” என்றான். பின்பு அதிரல் புறம் திரும்பி, “காபி போடு” என்றான். “அதுக்கு முன்னாடி ப்லேட்டிங் பண்ணி குடு” என்றான்.
தலையை ஆட்டியவள் மருத்துவருக்கு மட்டும் ஒரு தட்டில் போட்டு வந்து குடுக்க,
“ஏன் எனக்கு எல்லாம் தரமாட்டியா? என் ஆபிஸ்ல வேலையை விட்டுட்டா உனக்கு நான் எம்டி இல்லையா?” குதர்க்கமாக கேட்டான்.
“ஐயோ அப்படி எல்லாம் எதுவும் இல்ல சார். சூடா அடுப்புல இருக்கு.. இருங்க ஒரு நிமிடத்துல எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி அடுப்படிக்குள் நுழைந்துக் கொண்டாள்.
“அப்படியே ஒரு தட்டை அப்பாவுக்கும் கொண்டு போய் குடு” என்றான்.
“சரிங்கா சார்” என்று உள்ளிருந்தே குரல் குடுத்தாள் அதிரல்.
“தம்பி என்ன இது? நீ ரொம்ப கீழ இறங்குற மாதிரி இருக்கு ப்பா” தேவகி மனம் தாளமுடியாமல் சொல்ல,
“அப்பா சரியா சாப்பிடாததுனால தான் இன்னும் அவருக்கு நடுக்கம் குறையல ம்மா.. சோ ப்ளீஸ்” சொன்னவன் குட்டி தீரன் சமத்தாக சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை பார்த்தவன் அவனுடன் தரையில் அமர்ந்துக் கொண்டான்.
“தீரா..” என்று தேவகி கத்திய விட, இரண்டு தீராவும் தலையை நிமிர்த்தி அவரை பார்த்தார்கள்.
சட்டென்று தாயிடம் இருந்து பார்வையை விலக்கிய தீரன்,
“உன் பேரு தீரா வா?” என்று கேட்டான்.
“ம்ம்ம்” என்று பெரிதாக உம் போட்டவன்,
“ம்மா எக்கி வச்சு இக்கா” என்று தீத்திரள் தீரனின் மார்பை தொட்டுக் காட்டினான். அவன் என்ன சொல்கிறான் என்று புரிந்துக் கொண்ட தீரனுக்கு, என்னவோ போல் ஆனது.
தலையை வெறுமென ஆட்டிக் கொண்டவன், குழந்தையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டான்.
அவனது செயல்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த தேவகிக்கு அடிநெஞ்சில் பிசைய ஆரம்பித்தது.
ஒருவேளை மகனுக்கு பிள்ளை ஆசை வந்து விட்டதோ.. அதனால் தான் இப்படி இந்த பிள்ளையோடு ஒட்டி உறவாடுகிறானோ என்று தோன்றியது.
ஊருக்கு போன உடனே முதல் வேலை மகனுக்கு ஒரு நல்ல பெண்ணாய் பார்த்து திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டார்.
அடுத்த ஈடு வெந்து விட அதை தீரனுக்கும் அவனின் அப்பாவுக்கும் கொடுக்க அவர்கள் எதுவும் சொல்லாமல் வாங்கி உண்டார்கள்.
“தாரா நீ சாப்பிடலையா?” கேட்ட அண்ணனை ஒரு பார்வை பார்த்தவள், அன்னையை கண்ணால் காட்டினாள்.
“அதிரல் தாராவுக்கும் அம்மாவுக்கும் ஒரு ப்ளேட் குடு” என்றான். அவள் தயக்கமாக அவனை பார்க்க,
“குடு சாப்பிடுவாங்க” என்றான் அழுத்தமாக. அவனது சொல்லில் இருந்த அழுத்தத்தில் தேவகிக்கு தலையிறக்கமாய் போனது. ஆனாலும் மகன் பேச்சை அவரால் என்றைக்கும் மீற முடியாதே.
அதிரல் நீட்டிய பணியாரத்தை வாங்கி உண்டார். அந்த பணியாரம் மிகவும் ருசியாக இருந்தது. வாயில் வைத்தவுடன் கரைய, இன்னொரு ப்ளேட் கேட்க ஆசையாக இருந்தது தேவகிக்கு.
அதிரல் அடுத்த ஈட்டை எடுத்து வந்து ஆளவந்தானுக்கும் தீரனுக்கும் பரிமாற அவர்கள் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்கள்.
தேவகியை பார்த்தாள். அவர் ஒன்றும் சொல்லாமல் இருக்க,
“இன்னும் ரெண்டு வச்சுக்கோங்க மேடம்” என்று சொல்லி வைக்க அவளை தடுக்கவில்லை. தாராவும் கேட்டு வாங்கிக் கொண்டாள். மருத்துவரும் விடை பெற்றுக் கொண்டார் பணியாரம் காபியை குடித்து விட்டு.
உள்ளே படுத்து இருந்த நேத்ரா தூக்கம் கலைந்து வெளியே வர, வீட்டில் இருந்த மனிதர்களை கண்டு திகைத்துப் போனாள்.
வந்தவளிடம்,
“இவங்க என்னோட எம்டி. மத்தவங்க அவரோட பேமிலி நேத்ரா.. நீ போய் முகம் கழுவிட்டு வா.. சாப்பிடலாம்” என்று சொல்லி அவளை மீண்டும் உள்ளே அனுப்பி வைத்தாள் அதிரல்.
அனைவரும் சாப்பிட்டு எழ, ஆளவந்தான் அதிரலின் அருகில் வந்து,
“ரொம்ப நன்றி ம்மா.. ரொம்ப பதறிப் போயிட்டேன். நீ மட்டும் உதவி செய்யலன்னா இன்னுமே என் பதற்றம் தீர்ந்து இருக்காது. பசியறிஞ்சு சாப்பிட குடுத்த நீ என்றைக்கும் நல்லா இருக்கணும்” என்று அவர் வாழ்த்தினார்.
“நன்றி சார்” என்று தலையை தாழ்த்தி ஏற்றுக் கொண்டாள் அதிரல்.
“உன் மகன் செம்ம சுட்டி” என்று அவன் கையில் பணத்தை கொடுத்தார். அதை எதிர் பார்க்காத அதிரல்,
“உங்களுக்கு மனமார தான் உதவி செஞ்சேன் சார். ஆனா அதை இப்படி காசு குடுத்து அசிங்கப்படுத்திடீங்களே” வேதனையுடன் சொன்னவளின் பேச்சை கேட்ட ஆளவந்தான்,
“அம்மாடி இது நீ செஞ்ச சேவைக்காக இல்லம்மா.. எந்த வீட்டுக்கு போனாலும் பழம் ஸ்வீட் வாங்கிட்டு போறது வழக்கம். சப்போஸ் அப்படி வாங்கிட்டு போகலன்னா அந்த வீட்டு சின்ன பசங்க கையில காசு குடுக்குறது வழக்கம். இது எதிர்பாராம நிகழ்ந்த நிகழ்வு. அதனால தான் உன் பையன் கையில காசு குடுத்தேன்” என்றார்.
“இருக்கட்டும் சார்..” என்றவள் மகனை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டவள், அவன் கையில் இருந்த பணத்தை வாங்கி மீண்டும் ஆளவந்தானிடமே குடுத்தாள்.
தீத்திரள் தீரன் எதிலும் தலையிட்டுக் கொள்ளவே இல்லை. வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்தான்.
அவளின் தன்மானத்துக்கு மதிப்புக் கொடுத்து ஆளவந்தான் பணத்தை வாங்கிக் கொண்டார்.
“சரிம்மா நாங்க கிளம்புறோம்” என்று எல்லோரும் வெளியே போக,
“இல்ல சார் கொஞ்ச நேரம் இருங்க.. சார் போய் கார் எடுத்துட்டு வரட்டும். அப்புறமா கிளம்புங்க. பனி கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. இப்போ வெளில போய் நின்னா மறுபடியும் உடம்புக்கு ஏதாவது வந்திடும்” என்று சொன்னாள்.
“ஆமாம் ப்பா.. நீங்க இருங்க. நான் போய் கார் எடுத்துட்டு வரேன்” என்று தீரன் காரை எடுத்து வர செல்ல,
மீண்டும் இருக்கையில் அமர்ந்த ஆளவந்தான்,
“நீ எங்க கம்பெனியில தான் வேலை பார்க்குறியா ம்மா?” என்று கேட்டார் அவளை பற்றி தெரிந்துக் கொள்ள எண்ணி.
“ஆமாங்க சார்..” என்றாள். அவரிடம் ஏனோ வேலையை ராஜினாமா செய்து விட்டேன் என்று சொல்லவில்லை. தேவையில்லாமல் அவர்களின் இரக்கத்தை சம்பாதித்துக் கொள்ள அவள் விரும்பவில்லை.
“இன்னைக்கு ஆபிஸ் போகலையா?”
“இல்ல லீவ் போட்டு இருக்கேன் சார்” என்றாள்.
“அப்படியா ஊட்டில எந்த பிரான்ச் ம்மா?” கேட்டார். இவளும் சொல்ல கேட்டுக் கொண்டார். தேவகி எதுவும் பேசவில்லை.
“ஒரு நாள் எங்க வீட்டுக்கு நீ வரணும். உங்க பேமிலிக்கு ஒற்று நாள் விருந்து வைக்க ஆசை படுறேன் ம்மா” என்றார் உண்மையான அன்போடு. அதை புரிந்துக் கொண்டவள்,
“கண்டிப்பா வரேன் சார்” என்று வெளியே சொன்னவள் மனதுக்குள்ளோ “கண்டிப்பா வர மாட்டோம் சார். எங்க தகுதி என்னன்னு உங்க மேடம் இன்னைக்கு காட்டிட்டாங்க.. சோ நாங்க எங்க இருக்கணுமோ அங்கயே இருந்துக்குறேன்” என்று எண்ணிக் கொண்டாள்.
சிறிது நேரத்திலே தீரன் வந்து விட்டான் காரோடு. அதிரலிடம் ஒரு தலையசைப்புடன் விடை பெற்றுக் கொண்டான். தாராவும் தேவகியும் அப்படியே விடைபெற்றுக் கொள்ள, ஆளவந்தான் தான் வாய் திறந்து “போயிட்டு வரேன் ம்மா” என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டார்.




