“ஹலோ ஸ்மால் மென்” தீரன் குரல் கொடுக்க, தூக்கக் கலக்கத்தில் இருந்தவன் கண்களை கசக்கிக் கொண்டு இருந்த கையை விலக்கி விட்டு விழிகளை அதிகமாக விரித்து குரல் வந்த திசையை பார்த்தான்.
பார்த்த உடன்,
“அய்... பிக் மேன்” சிரித்தான். அந்த மழலையின் சிரிப்பில் அங்கிருந்த அத்தனை பேரின் மனதும் நெகிழ்ந்து தான் போனது.
“இங்க வா” என்று அவனை தன் அருகில் அழைத்து அவனை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான். ஆளவந்தானும் தாராவும் அதை இயல்பாக எடுத்துக் கொள்ள, தேவகிக்கு தான் இதை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
தன் மகன் யாரோ ஒருத்தரின் பிள்ளையிடம் நெருங்கிப் பழகுவது சுத்தமாக பிடிக்கவில்லை.
“பிக் மேன்” என்று அவன் மீண்டும் அழைத்து உறுதி படுத்திக் கொள்ள பார்த்தவனின் செய்கையில் இதழோரம் சின்னதாக சிரித்த தீரன்,
“உன்னோட பிக் மேன் தான்” என்று சொன்னவன்,
“தூங்குனியா?” என்று கேட்டான்.
“ம்ம்” தலையை அட்டியவன், “ம்மா” என்று அதிரல் இருந்த அடுப்படியை கை காட்டினான்.
“அங்க போகனுமா?” கேட்டான்.
“ம்ம்” என்றான்.
“சரி வா நான் தூக்கிட்டுப் போறேன்” என்று அவனை கையில் வைத்துக் கொண்டு அடுப்படிக்கு போக தேவகி நெஞ்சை பிடித்துக் கொண்டார் அதிர்ந்துப் போய்.
--
“என்னப்பா நடக்குது இங்க?” தகப்பனின் நிலையை கருத்தில் கொண்டாலும் தன் அண்ணனின் செயலை நம்ப முடியாமல் அதிர்ந்து போய் ஆளவந்தானிடம் கேட்டாள் தாரா.
“என்னவோ நடக்குது.. அதை விடு.. முதல்ல உன் அம்மா ரொம்ப அதிர்ந்து போய் இருக்கா அவளை மலை இறக்கு” என்றார் சற்றே சிரமப்பட்டு.
“ரொம்ப வலிக்கிறதா ப்பா.. ஹாஸ்பிட்டல் போகலாமா?” பரிதவித்துப் போனாள்.
“ஹாஸ்பிட்டல் போகலாம். ஆனா அதுக்கு முன்னாடி கொஞ்சம் உடம்புக்கு தெம்பு வேணும் இல்லையா?”
“அதுவும் சரி தான் ப்பா” என்றவள், “கொஞ்ச நேரம் வேணா படுத்துக்குறீங்களா?” கேட்டாள்.
“படுத்தா நல்லா தான் இருக்கும். ஆனா உன் அம்மா பஜாரியாடுவாளே” தளர்ந்துப் போன குரலில் சொன்ன தந்தையை கண்டு மனம் வருந்தினாள்.
அவர்களின் வீட்டில் எல்லோரும் ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் என்றாலும் சில நேரம் மனித நேயங்களுக்கும் முக்கியத்துவம் குடுப்பார்கள். அதுவும் தந்தைக்கு என்று வரும் பொழுது என்ன பெரிய ஸ்டேட்டஸ் கொஞ்சம் நேரம் படுக்க இடம் கிடைத்தால் போதும் என்று தோன்றியது.
இவர்கள் கார் நிறுத்தி இருக்கும் இடத்துக்கு எப்படியும் கொஞ்ச தூரமாவது நடக்க வேண்டியது வரும். அண்ணன் காரை இங்கே கொண்டு வந்தாலும் கூட நடுக்கம் குறையாமல் மறுபடியும் காரில் பயணம் செய்ய போய் மருபடியும் தந்தைக்கு ஏதாவது ஏற்பட்டால் என்ன செய்வது என்று எண்ணி சிறிது நேரம் ஓய்வு எடுக்கட்டும் இங்கயே என்று எண்ணினாள்.
அதோடு வீட்டை சுத்திப் பார்த்தாள் தாரா. வீட்டை சுத்தமாக தான் வைத்திருந்தாள் அதிரல். அதிக பொருள்கள் இல்லை. மேசை, கணக்கச்சிதமாக சோபா, சுவற்றில் மாட்டிய டிவி, குறுங்கண் அனைத்துக்கும் சீரான வண்ணத்தில் திரை, ஹால் ஹீட்டர் என இருந்தது.
இரண்டு அரை கொண்ட வீடு போலும். குழந்தை எழுந்து வந்த அறையின் கதவு திறந்து இருக்க இன்னொருத்தர் யாரோ உள்ளே தூங்கிக் கொண்டு இருந்தது தெரிந்தது.
இங்கிருந்து பார்க்கும் பொழுது அந்த அறையில் சுவற்றோடு பதித்த மர அலமாரியும் கட்டிலும் தான். அதை தவிர வேறு எதுவும் புலப்படவில்லை.
“ம்ம் பரவாயில்ல வீடு நல்லா தான் இருக்கு” எண்ணிக் கொண்ட தாரா அடுப்படிக்கு போக எழுந்தாள்.
குழந்தையை தூக்கிக்கொண்டு அந்த சின்ன அடுப்படிக்குள் நுழைந்த தீரனை கொஞ்சமும் எதிர்பார்க்காத அதிரல்,
“அச்சோ நீங்க ஏன் சார் இவ்வளவு தூரம்.. நீங்க குழந்தையை விட்டுட்டு ஹால்ல போய் இருங்க.. இதோ பால் காஞ்சிடுச்சு.. காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று பதட்டப் பட்டாள்.
ஏனெனில் இதுநாள் வரை இந்த வீட்டில் எந்த ஆண்களின் கால்களும் படவில்லை. முதல் முறையாக இவனின் வருகையில் அதுவும் அந்த குட்டி இடத்தில் இருவரும் சற்று நெருக்கமாக நிற்பது போல இருக்க, பதறிப் போனாள்.
“ஹேய் பதறாத.. உன் மகன் தான் உன்னை கேட்டான். அதனால தான் உன் கிட்ட கூட்டிட்டு வந்தேன்” என்றவன் குழந்தையை அவளிடம் கொடுக்காமல்,
“ஆமா இன்னைக்கு ஆபிஸ் போகலையா?” குரலை தாழ்த்திக் கேட்டான்.
“இல்ல போனேன்” என்றவள், அவனை நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லாமல், தலையை குனிந்துக் கொண்டு “வேலையை ரிசைன் பண்ணிட்டேன்” என்றாள்.
“இருந்த ஒரு வேலையையும் விட்டுட்டு மேடம் என்ன பண்ண போறீங்கலாம்?” ஏகத்துக்கும் நக்கல் வழிந்தது அவனது குரலில்.
அந்த நக்கலில் இவளுக்கு உள்ளம் துடித்தது.
“அது என்னோட பிரச்சனை சார். நான் பார்த்துக்குறேன்” என்றவள்,
“காபி ரெடி.. ஹாலுக்கு போகலாம்” என்று கப்பில் ஊற்றி ட்ரேயில் வைத்து கையில் எடுத்துக் கொண்டாள்.
அவளிடம் அவளின் மகன் தாவ,
“அம்மா கையில சூடா காபி இருக்கு தங்கம்.. இத குடுத்துட்டு வந்து தம்பியை தூக்கிக்கிறேன் ஓகே” என்று மகனிடம் சொன்னவள்,
“ஹால்ல போய் உட்காருங்க சார்” என்றாள்.
“போகலன்னா என்ன பண்ணுவ..? என்னவோ ரொம்ப தான் அதிகாரம் பண்ற? நான் இங்க தான் நிற்பேன்” ஏனோ அவளது சொற்கள் அவனை அதிகாரம் செய்வது போல அவனுக்கு தோன்றியது. அதனால் சட்டென்று தன் பழைய குணத்துக்கு மாறிவிட்டான்.
அவனது இந்த கோவத்தில் தேகம் தூக்கிவாரிப் போட்டது அதிரலுக்கு.
“அய்யோ... இல்ல சார்... நான் எந்த அதிகாரம் செய்யல்லாம் இல்ல.. வழில நீங்க இருந்ததுனால தான் சொன்னேன். உங்களை தாண்டி போக முடியாது. வழி இல்ல. இந்த சின்ன இடத்துல நின்னு குடிக்கவும் முடியாது. அது தான் சொன்னேன்” என்று அந்த குறுகலான இடத்தை சுட்டி காண்பித்தாள். அதில் தெளிந்த தீரன்,
“ம்ம்.. ஒழுங்கா மரியாதையா பேசி பழகு” என்று அதட்டியவன், திரும்பி வாசல் பக்கம் போக, அவனின் பின்னோடு அடியை பற்றிக் கொண்டு வந்தாள் அதிரல். சரியாக இருவரும் வாசல்படி அருகே வரும் பொழுது தாரா அடுப்படிக்குள் நுழைய வந்தாள்.
மோதாமல் சுதாரித்தது மூவரும் தேங்கி நின்று விட்டார்கள் ஒரு அடி இடைவெளியில்.
“உப்.. நீ எதுக்கு தாரா இங்க வந்த..?” கேட்டான்.
“இல்லண்ணா” என்று குரலை தாழ்த்தியவள், கூடத்தில் அமர்ந்து இருக்கும் தாய்க்கு கேட்கா வண்ணம்,
“அப்பாவுக்கு இன்னும் நடுக்கம் போகலண்ணா.. ஒரு மாதிரி படபடன்னே இருக்காரு. கொஞ்சம் படுத்தா நல்லா இருக்கும் போல தோணுதுண்ணா. ஆனா அம்மா தான்” என்று அவள் தயங்க,
“இதனால என்ன இருக்கு. கொஞ்சம் படுத்தே எழுந்துக்கட்டும்..” என்றவன் திரும்பி அதிரலை பார்த்தான்.
“வேற ரூம் இருக்கா?” கேட்டான்.
“இருக்கு சார்..” என்றாள். அவளிடம் அனுமதி எல்லாம் கேட்கவில்லை.
“ரெடி பண்ணு” என்றவன்,
“அவ கையில இருக்க ட்ரேயை வாங்கிக்க.. அவ ரூமை ரெடி பண்ணட்டும்” என்று சொன்னான் தங்கையிடம்.
“நானா?” என்று ஒரு கணம் அதிர்ந்துப் போனாள். அவளின் அதிர்வை பார்த்த தீரன்,
“நம்ம பேமிலிக்காக தான் அவ காபி போட்டா. சோ வாங்கிக்க” என்றான்.
“சரிண்ணா” என்று தலையை ஆட்டியவள் அதிரலின் கையில் இருந்ததை வாங்கிக் கொண்டாள் தாரா.
“குழந்தை” தீரனிடம் அதிரல் கேட்க,
“இவனை வச்சுக்கிட்டு எப்படி ரெடி பண்ணுவ?” முறைத்தான். அவனது முறைப்பில் எதுவும் பேசாமல் தங்கை தூங்கும் அறையை விடுத்து அதன் அருகில் இருந்த இன்னொரு அறையை ரெடி செய்தாள்.




