அவள் யார் எங்கிருந்து வந்தாள், எப்படி பட்டவள் என்ற எந்த தகவலும் வாங்கிக் கொள்ளவில்லை வெற்றி. அதிரலின் சூழ்நிலையை மட்டுமே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு அவளின் பின் புலன்களை எல்லாம் விசாரிக்காமல் விட்டு விட்டான். அதிரல் தங்கையான நேத்ராவின் ஆப்ரேஷனுக்கு எல்லா ஏற்பாடும் செய்து விட்டதோடு கடமையை முடித்துக் கொண்டான்.
ஒற்றையாக அந்த காரிடாரில் நின்றுக் கொண்டு இருந்தவளுக்கு தோள் சாய்த்து ஆறுதல் கூற கூட ஒருவரும் இல்லை.
கண்களில் ஏகத்துக்கும் கண்ணீர். அந்த கண்ணீரோடு கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டு இருந்தாள்.
“என் கிட்ட இருக்குறது என் தங்கச்சி மட்டும் தான். அவளை மட்டும் எனக்கு விட்டு குடுத்துடு இறைவா. வேற எதுவும் எனக்கு வேண்டாம்” உருகி கரைந்து வேண்டிக் கொண்டு இருந்தாள். தவம் போல நின்று இருந்தவளை கண்ட அத்தனை பேருக்கும் மனம் இரங்கியது.
“பாவம் ஒற்றையா இருந்து தங்கச்சிக்காக போராடிக்கிட்டு இருக்கு.. இது கண்ணீரை பார்த்து அந்த ஆண்டவன் மனசு இறங்கி அந்த பொண்ணை மறுபடியும் அது அக்காக்கிட்டையே சேர்த்தா பரவாயில்லை” என்று பேசிக் கொண்டார்கள்.
இறக்கம் கொண்ட ஒரு நேர்ஸ்,
“சாப்பிடாம இப்படியே இருந்தா எப்படி ம்மா.. உன் தங்கச்சிக்கு ஆபரேஷன் முடிய இன்னும் மூணு மணி நேரம் ஆகும். அதுக்குள்ள போ போய் ஏதாவது நாலு வாய் சாப்பிட்டுட்டு வந்திடு” என்றார்.
“இல்லங்க வேணாம்” என்று கண்ணீருடன் மறுத்தவளுக்கு தண்ணீரை குடுத்து குடிக்க வைத்தார்.
“நன்றிங்க” என்றவளின் கரத்தை பற்றிக் கொண்டவர்,
“சரியா போயிடும் உன் தங்கச்சி உன்னை விட்டு எங்கயும் போக மாட்டா.. இது ரொம்ப பேமஸான ஹாஸ்பிட்டல். இங்க முடியாதுன்னு யாரையும் திருப்பி அனுப்பினதே இல்லை. இறப்பு சதவீதம் எப்பொழுதுமே ஜீரோ தான். அதனால கவலை படாத.. ஆனா எல்லோரையும் காப்பாற்ற இந்த மருத்துவமனையை உருவாக்குனாரு எங்க சார். ஆனா இப்போ எங்க சாரையே காப்பாற்ற முடியாத நிலை ஆகிடுச்சு” என்று வருத்தத்துடன் சொன்னார்.
ஏன் என்ன ஆச்சு என்று கேட்கும் நிலையில் அவள் இல்லாததால்,
“அப்படி எல்லாம் எதுவும் ஆகாது சிஸ்டர்.. நல்லது செஞ்சா நல்லது தான் நடக்கும். எத்தனையோ பேரோட உயிரை அவர் காப்பாற்ற காரணியா இருக்குறப்போ நிச்சயம் கடவுள் அவரை கை விட மாட்டார்.. உங்க சார் கண்டிப்பா பிழைப்பார். முன்பை விட அதிகமா எல்லோருக்கும் நல்லது செய்வர்” என்றவளின் பண்பான பேச்சில் மனம் நிறைந்த அந்த நர்ஸ்,
“எங்க வேண்டுதலும் அது தான் ம்மா. அவரு பிழைச்சு வந்தா தான் எங்களுக்கும் உயிர் வரும்” என்று நகர்ந்தார்.
தன் தங்கைக்கு சேர்த்து வேண்டுவதோடு முகம் தெரியாத அந்த ஆளுக்கும் சேர்த்து வேண்டினாள் அதிரல்.
அப்படி இப்படி என்று மூன்று மணி நேரம் கடந்து இருந்தது. ஆனாலும் அறுவைசிகிச்சை அறையில் இருந்து வெளியில் யாரும் வராமல் போக பயந்துப் போனாள்.
கண்களில் முன்பை விட அதிகமாக கண்ணீர் தேங்கியது. மேலும் அரை மணி நேரம் கடந்த பிறகே மருத்துவர்கள் வெளியே வந்தார்கள்.
“டாக்டர்” என்று கதறலுடன் அவர்களின் முகத்தைப் பார்த்த அதிரலுக்கு, நம்பிக்கை குடுக்க கூடிய புன்னகையை கொடுத்தவர்,
“சக்சஸ்.. இனி உங்க தங்கச்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. சேப் ஜோனர்.. இனி அவங்க ஆடலாம், படலாம், குதிக்கலாம் என்ன வேணாலும் செய்யலாம்” என்று சொன்னார்.
மகிழ்ச்சியில் நெஞ்சு அடைக்க, அவர்களை பார்த்து கை எடுத்து கும்பிட்டவள், தலையை ஆட்டி கேட்டுக் கொண்டாள்.
“டாக்டர் அவ கல்யாண வாழ்க்கை வாழலாமா?” என்று தயக்கத்துடன் கேட்டவளை கண்டு இன்னும் சிரித்தவர்,
“நிச்சயமா.. எந்த பிரச்சனையும் வராது.. எந்த பிது ப்ராப்ளமும் வராது. அவங்க ரொம்ப நார்மல் பெர்சனாகிட்டாங்க.. யூ டோன்ட் ஒரி. டஸ்ட் மட்டும் பார்த்து இருங்க. அதிகமா டஸ்ட் ஆகுற இடத்துல இருக்காதீங்க” என்று சொன்ன பிறகே அவளின் வயிற்றில் பால் வார்த்தது.
கலங்கிய கண்களுடன், “தேங்கஸ் தேங்க்ஸ்.. டாக்டர்” நன்றியில் நெகிழ்ந்து நின்றாள்.
“டேக் கேர்” என்று விட்டு அவர்கள் போக, நர்ஸ் வந்து இன்ஸ்ட்ரக்ஷன் எல்லாம் சொல்ல கவனமுடன் கேட்டுக் கொண்டாள். முழுதாக அரை நாள் கழித்த பிறகே மயக்கம் தெளிந்தாள் நேத்திரா.
அவளின் கையை ஆதூரமாக பற்றிக் கொண்டு இருந்த அக்காவை கண்டு,
“ரொம்ப பயமுறுத்திட்டனா க்கா” என்றவளின் தலையை வருடி விட்ட அதிரல்,
“அதெல்லாம் ஒன்னும் இல்லடி.. நீ இவ்வளவு பெரிய கண்டத்துல இருந்து தப்பி வந்ததே பெருசு... எனக்கு இப்ப தான் உயிரே வந்து இருக்கு. நீ கண்டதையும் போட்டு உழப்பிக்காத” என்றாள். அதிரலை பார்த்து கண்கள் கலங்கிய நேத்திரா அக்காவின் கையிலே மீண்டும் தூங்கிப் போனாள்.
அடுத்து வந்த பொழுதுகள் எல்லாம் பாதி மயக்கத்துடனும் தூக்கதுடனுமே நேத்ராவின் பொழுதுகள் கழிந்தது. அவளை கண்ணை போல பார்த்துக் கொண்டே அதிரலின் பொழுதுகள் கழிந்தது.
மருத்துவமனையிலே இன்னும் பத்து பதினைந்து நாள்கள் இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். அதனால் மருந்து வாங்க கீழே சென்ற பொழுது பெரிய ஹாலில் நிறைய பேர் கூடி இருந்து அகல் விளக்கும், மெழுகுவர்த்தியும் வைத்து மௌனமாக நின்றுக் கொண்டு இருந்தார்கள். வெளியே இருவர் மெழுகுத்திரியை குடுத்துக் கொண்டு இருக்க,
“என்ன விசயம்?” என்று கேட்டாள் அதிரல்.
“எங்க எம்டி இறுதி கட்டத்துல இருக்காரு அவருக்காக மௌனமா வேண்டிக்கிட்டு இருக்கோம் மேம்” அவர்கள் சொல்ல, என்னவோ மனசு பிசைய,
“எனக்கும் ஒன்னு குடுங்க” என்று சொல்லி கேண்டிலை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
மௌனமாக பின்னால் வரிசையில் நின்றுக் கொண்டவளின் உள்ளம் அந்த முகம் தெரியாத, பெயர் தெரியாத மனிதனுக்காக வேண்டியது. கேண்டில் உருகி வழிவது போல அவளின் உள்ளமும் அந்த மனிதனுக்காக உருகி வழிந்தது.
“தினமும் நடக்கும் மேம்.. நீங்க விருப்பம் இருந்தா இங்க இருக்குற வரை கலந்துக்கோங்க..” என்று கேண்டில் தந்தவர் சொல்ல, தலையை ஆட்டிக் கொண்டாள். அதன் படி தினமும் காலை மாலை இரண்டு நேரமும் நடக்கும் வேண்டுதலின் போது கலந்துக்கொண்டாள் அதிரல்.
வேண்டி முடித்து விட்டு எரியும் மெழுகை அதற்குரிய ஸ்டேண்டில் பொருத்தி விட்டு வந்து விடுவாள்.
யாருக்காக வேண்டுகிறோமே அவனின் மகவை தான் தான் சுமக்க போகிறோம் என்று புரியாமல் மனமுருக வேண்டினாள்.
அதே நேரம் ஒரு தனி மனிதனுக்காக இத்தனை பேர் மனம் உருக வேண்டுவதை பார்த்து மிகவும் வியப்பாக இருந்தது.
“இத்தனை பேரின் மனதிலும் இடம் பிடித்து இருக்கிறாரே அப்பன்னா இந்த மனிதன் எவ்வளவு நல்லவராக இருக்கணும். எவ்வளவு உதவி செய்து இருக்கணும்” என்று ஆச்சரியமுடன் எண்ணிக் கொண்டவள்,
“கடவுளே இவங்களுக்காகவாவது அவரை திருப்பி கொடுத்து விடு. அவர் நலமுடன் வாழணும்.. எங்களது எல்லோரின் கோரிக்கையையும் ஏற்றுக் கொள் இறைவா” மனமார வேண்டிக் கொண்டாள்.
மெல்ல மெல்ல நேத்ரா ரெக்கவர் ஆக, நேர்ஸ் உதவியுடன் அவளை நன்றாக பார்த்துக் கொண்ட அதிரலுக்கும் டேட் சொல்லி அவளை தயார் படுத்தினார்கள் மருத்துவர்கள்.
“எப்ப அக்கா நாம வீட்டுக்கு போவோம். எனக்கு இங்க இருக்கவே புடிக்கல” என்று சிணுங்கும் தங்கச்சியை பார்த்து சிரித்த அதிரல்,
“இன்னும் ஒரே ஒரு வாரம் தான் பாப்பா.. நாம கிளம்பிடலாம். அதுக்கு முன்னாடி எனாக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதை பினிஷ் பண்ணிட்டு நாம கிளம்பிடலாம்” சமாதனம் செய்து வைத்தாள்.
ஐவிஎப் ஒரு நாள் ப்ராசஸ் தான். சோ கவலை கொள்ளும் படி ஒன்னும் இல்லை. ஆனால் அதற்கு முன்பு அவளுக்கு ட்யூப் டெஸ்ட் எடுக்க சொல்ல, அதை செய்த பொழுது வலியில் புழுவாய் துடித்துப் போய் விட்டாள்.
கண்களில் இருந்து வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு நடக்க முடியாமல், ஒழுங்காக படுக்க முடியாமல் அவள் பட்ட அவஸ்த்தை அதிகம்.
அப்பொழுதும் அவளை தாங்கிப் பிடித்து ஆறுதல் குடுக்க யாரும் இல்லை. தங்கைக்கு இந்த விசயத்தை எல்லாம் அவள் சொல்லவே இல்லை. அதனால் நேத்திராவுக்கு இதை பற்றி எதுவும் தெரியாமல் போனது.
தன் மகவை சுமக்க போகும் பெண்ணவளின் வலியை பற்றி அறியாமல் மரணத்தின் இறுதியில் இருந்தான் தீத்திரள் தீரன்.
அவனை எண்ணி எண்ணி கலங்கிப் போய் இருந்தார்கள் அவனின் பெற்றவர்கள் உடன் பிறந்தவர்கள்.





