அதிகாலைக் கதிரவன் மெல்ல புலர்ந்துக்கொண்டு இருந்த காலை நேரத்தில், ஆடம்பரமும், உலகத்தின் மொத்த கலைகளையையும், வசதிகளையும் தன்னிடத்தே கொண்டு இருந்த அந்த இல்லம், அமைதியாக கம்பீரமாக வீற்றிருக்க... அதில் இருக்கும் மனிதர்கள் பரபரப்புடன் இயங்கிக்கொண்டு இருந்தார்கள்.
இன்றைக்கு அந்த வீட்டின் இந்த தலை முறையின் முதல் வாரிசின் கல்யாண பத்திரிக்கையைக் கோவிலில் வைத்து பூஜை செய்து பொங்கல் இட்டு வழிபடிவதற்க்காகக் கிளம்பிக்கொண்டு இருந்தார்கள்.
அனைவரும் கிளம்பி இருக்க, தனக்கென்று இருந்த அறையில் மயூ மட்டும் தன் முன் இருந்த பட்டு புடவையை வேதனையோடு பார்த்து,
“ப்ளீஸ் அத்த... எனக்கு இது வேணாம்.” என்றாள்.
அவளது மறுப்பை கண்ட அவளுடைய அத்தை சீதா, “அவன் எடுத்து தருவான்னு நீ நினைச்சிக்கிட்டு இருக்கியா மயூ...?” சற்று கோவமாகவே கேட்டார்.
“அவரு எடுத்து தருவாரு, தர மாட்டரு, எனக்கு அத பத்தி கவலையே இல்லத்த. ஆனா, இப்போ எனக்கு இந்த புடவை வேணாம்.” என்றாள் உறுதியாக.
“நீ இப்படி அடம் பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லடா. இப்படி ரெண்டு பேரும் ரெண்டு விதமா இருந்து நினைச்சத சாதிக்கணும்னு நிக்கிறீங்க. அவன் பிடுச்சா பிடுச்ச பிடில நிக்கிறான். நீ அவனுக்கு மேல இருக்க... எப்படி தான் உங்களை வழிக்கு கொண்டு வரப்போறனோ தெரியல..”
“ப்ளீஸ் அத்த புருஞ்சுக்கோங்க.”
“புருஞ்சதுனலதான் எடுத்துட்டு வந்தேன். கண்டிப்பா ஆதி எடுத்து தர மாட்டன் கண்ணம்மா, நீ புதுசு கட்டாட்டி நானும் கட்ட மாட்டேன்.” என்று உறுதியுடன் சீதா கூற,
கண்களில் நீர் திரண்டது. அதை மறைத்து, “இருக்கும் வேதனை போதாதா அத்த, இன்னும் நீங்களும் கஸ்டப்படுத்தணுமா...? என்னால முடியல அத்த, ப்ளீஸ்...” கை எடுத்து கும்பிட,
“நீ நினைச்சத சாதிக்கணும்னு நினைக்கிற. சரி... உன் விருப்பம் போல என்ன வேணாலும் பண்ணிக்கோ. ஆனா நான் எதுக்கும் உனக்கு துணை இருக்க மாட்டேன்...” என்றவர் மனம் உடைந்தது கீழே போய்விட்டார்.
அத்தையின் வார்த்தையில் இன்னும் துக்கம் பெருக அதை அடக்கிக்கொண்டாள். ஆனால் அதை விட அதிகமாக மனம் துன்பம் அடைந்தார் சீதா...
வீட்டில் உள்ள அனைவரும் கோயில் பொங்கலுக்காக புது உடை அணிந்திருக்க, இவள் மட்டும் கட்டாமல் இருப்பது வேதனையைக் கொடுத்தது அவருக்கு. எவ்வளவோ வாதாடி பார்த்தார். ஆனால் அவள் மசிவதாக இல்லை. நடப்பு அவருக்கு புரிந்தது என்றாலும் ஏனோ ஏற்க மனம் வரவில்லை.
மயூவின் மனதில் ஆதியின் செயல்கள் வளம் வர, பெருமூச்சு விட்டு அதை அடக்கிவிட்டு, அவன் முன்பொரு முறை எடுத்துக்கொடுத்த பட்டு புடவையை கட்டிக்கொண்டு கீழே வர, எதிரே ஆதி வந்துக்கொண்டிருந்தான்.
தலையை கீழே போட்டுக்கொண்டு மிக உறுதியான கண்ணாடியிலான படிகளில் இறங்கியவளின் வழியை மறைத்துக்கொண்டு நின்றன். வழி மறைக்கவும் நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவனின் கண்களில் அப்பட்டமான கொலைவெறி தெறிக்க, கூடவே சிவந்து போய் இருந்தது. அதில் உள்ளம் உடைந்தவள் மீண்டும் குனிந்துக்கொண்டாள்.
இதழில் ஒரு குருர புன்னகையுடன் தன் கைகளில் இருந்தவற்றை அவளின் முகத்தில் வீசி அடித்தான்.
ஒரு கணம் திகைத்து, பின் கண்கள் கலங்க சட்டென்று பக்கவாட்டில் திரும்பிக்கொண்டாள். அது அவமானமாய் இருந்தாலும் அவனது செயலில் உள்ள நியாயம் புரிய, தன் வேதனையை அடக்கிக்கொண்டாள் மயூ. கண்கள் கலங்கிவிட்டது அவளுக்கு அவனது உதாசீனத்தில்.
ஆனால் அதை அவனிடம் காட்டிக்கொள்ளாமல், அவளது அழுகை எங்கே அவனை தாக்கிவிடுமோ என்று பயந்து உள்ளுக்குள் இழுத்துக்கொண்டாள். ஆனாலும் அவன் கண்களுக்கு தப்பவில்லை அவளது கண்ணீர்...
“நடக்கும் அத்தனைக்கும் காரணம் நீ மட்டும் தான்...” மனதிற்குள் பொருமியவன் விலகிப்போக, கீழே நின்ற மொத்த குடும்பமும் அதை பார்த்து திகைத்தது. அத்தனை பேரின் மத்தியிலும் அவனது அடாதசெயல் அவளை அதிகமாக அவமானம் கொள்ள வைத்தது. ஆனால் அதை பற்றிய கவலை சிறிதும் இன்றி தன் போக்கில் ஆதி மேலே செல்ல...
“ஆதி, உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்க.” கேசவன் கர்ஜனையாக சத்தம் போட்டார்.
“மாமா ப்ளீஸ்...” எதுவும் சொல்லாதிங்களேன் கண்களில் கெஞ்ச அவளை தாண்டி அவரால் எதுவும் பேச முடியவில்லை. ஆனாலும் மனம் கொதித்துக்கொண்டிருந்தது அவருக்கு. சீதாவுக்கு சொல்லவே வேணாம்.
தன் காலடியில் விழுந்து கிடந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அறைக்கு சென்றாள் விரைந்து. பச்சை வண்ண பட்டுபுடவையும் அதற்கு தோதான நகைகளும் அவளுடைய அளவுக்கு தைத்திருந்த ரவிக்கையும் எப்பொழுதும் போல அவளுடைய மனதை கொள்ளை கொண்டது.
ஆனால் ஆதியை நினைக்கயில் உள்ளம் நொறுங்கியது. இந்த செயலை செய்ய அவன் எவ்வளவு துடித்திருப்பான் என்று அவள் அறியாதாதா...?
அவனின் நேசம் என்றுமே பொய்த்து போவதில்லை என்பதற்கு சாட்சியாய் இதோ இந்த பொருட்கள். எவ்வளவு கோவம் என்ற போதிலும் அவளுக்கு செய்வதில் அவன் யாரையும் அனுமதித்ததுயில்லை.
அது தன் பெற்றோர் என்ற போதிலும். அவளுமே அந்த உரிமையை யாருக்கும் கொடுப்பதில்லை. இதிலிருந்தே அவர்களின் அன்பையும் காதலையும் புரிந்துக்கொள்ளலாம்.
பெருமூச்சுடன் அவற்றை அணிந்து கீழே வர, அனைவரும் கிளம்பி குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். ஆதியின் தங்கை, தம்பி ரேணுவும், முகிலும், மயூவின் தம்பி, தங்கை ரோகினியும், மனுவும் பின் பக்கம் அமர்ந்து தங்கள் சித்தி அத்தை பசங்களோடு கும்மாளம் போட்டபடி வர, மயூ அமைதியாக அமர்ந்திருந்தாள் ஆதியின் அருகே.
சிறு வயதிலே பெற்றோரை இழந்த மயூவின் குடும்பம் தன் தாய் மாமன் கேசவனின் பாதுகாப்பில் வளர்ந்தது. சீதா தன் மூன்று பிள்ளைகளோடு ஆறு பிள்ளைகலாய் பார்த்துக்கொண்டார். மும்பையில் தன் தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தி சிறப்புடன் அதை தன் மகன் ஆதியோடு சேர்த்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
கேசவன் தொழில் துறையின் மிகப்பெரிய ஜாம்பவான். இந்திய பொருளாதார ஏற்றத்திலும், முனேற்றத்திலும் மிக முக்கிய பங்கு அவருக்கு உண்டு.
வரவுக்கு ஏற்ற மிகச்சரியாக வரி கட்டி, அனைவருக்கும் முன் உதாரணமாய் இருப்பவர்.
கனிமவளங்களை தோண்டி எடுப்பதில் ஆரம்பித்து பின்னூசி செய்வது வரை அனைத்து வகையான தொழிற்ச்சாலையும் திறம்பட நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு தான் பூர்விகம் என்றாலும் அவரது ஜாகை எல்லாம் மும்பையில் தான். மிக பெரிய அளவிலான வர்த்தகம் செய்துக்கொண்டு இருக்கிறார். அதில் பெரும் பங்கு ஆதிக்கு உண்டு.
மருத்துவ உபகரணங்கள் முதல் புதிய வகை மருந்துக்கள் வரை எல்லாமே அவன் வசம் தான்.
தரத்திற்கு முதலிடம் கொடுத்து மிகச்சிறந்த மருத்துவ சாதனங்களை தாயரித்து அதை சந்தை படுத்தி நற் பெயரை வாங்கி இருக்கிறான். அதோடு சத்தமே இல்லாமல் பல ஆராய்ச்சிகளும் மேற்கொண்டு இருக்கிறான் ஆதி.
மருத்துவ துறை மட்டுமல்லாது, கனிமவளங்களை சேகரித்து அதை இன்வேஸ்மென்ட் செய்து பல உயர் சாதனங்களை தரத்துடன் உறுதியாக செய்துக்கொண்டு வருகிறான்.
மனிதன் பிறப்பிலிருந்து இறுதி சடங்கு வரை, தூங்கி எழுந்து கண்ணாடி பார்ப்பதிலிருந்து தொடங்கி, இரவு தூங்க போகும் மெத்தை வரை அவனது நிறுவனத்தின் தயாரிப்புகளை ஒரு நாளில் ஒரு முறையாவது கடந்து வந்து தான் ஆகவேண்டும் என்பது போல அவனது எல்லா தயாரிப்புகளும் மனிதனோடு கூடவே பயணித்துக்கொண்டு இருக்கிறது.
பள்ளி குழந்தைளிலிருந்து ஜனாதிபதி, பிரதமர் வரை பயன்படுத்தும் சின்ன ரப்பர் முதல் உணவு உண்ணும் உணவு பொருட்களின் வகைகளிருந்து எல்லாமே அவனது நிறுவனத்தின் தயாரிப்புகள் தான். அப்படி வடித்து இருந்தான் ஆதி தன் நிறுவங்களை.
அவனது தயாரிப்பு மனிதர்களை தொடர்ந்து வருவது போல வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், விளையாட்டு கூடங்கள், ஓய்வெடுக்கும் ரெஸ்டாரன்ட், கோயில் என்று எதையும் விட்டு வைத்தது இல்லை அவனது நிறுவனம். இது இந்தியாவில் மட்டுமல்லாது உலகத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் அவனது நிறுவனம் ஏதாவது ஒரு சின்ன புள்ளியிளாவது நிலை நிறுத்தி வைத்து இருந்தான் ஆதி...
அனைத்திலும் தன் முத்திரையை பதித்து இருந்தது கேசவனின் வழி வந்த நிறுவனம். அந்த பெருமை ஆதியையே சேரும்.
தொழில் துறையில் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை நிலை நிறுத்தி வைத்திருக்கிறானோ அதை விட அதிகமாக தன்னவளின் இதயத்தில் ஆதிக்கம் செலுத்தி கவர்ந்து வைத்திருக்கிறான்.
சிறுவயதிலே மயூ ஆதியின் கட்டுப்பாட்டில் தான் இருந்தாள். அவனுடைய அத்தையும் மாமாவும் இறந்து போகவும் மயூவுக்கு எல்லாமும் நான் தான் என்ற எண்ணம் வந்துவிட்டது அவனுக்கு.
அப்போதிருந்து அவளுக்கு ஒண்ணு ஒண்ணையும் அவன் தான் பார்த்து பார்த்து செய்வான்.
அது இப்போது வரை தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கிறது. அதற்கு மயூ எதுவும் மறுப்பு சொல்லாமல் அவனை அங்கீகரிக்க பெரும் வியப்பு அவனுக்கு. அதே போல ஒரு கருவமும் அவனுக்கு உண்டு. அது போக போக இன்னும் அதிகமாக வளர்ந்தது. மயூவும் அதை விரும்பியே ஏற்றாள்.
அவனின் ஆளுமை தனி சுகத்தைக் கொடுத்தது அவளுக்கு. என்னதான் அவளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அவளின் கைக்குள்ளதான் அவன் இருந்தான். வெளியே நின்று பார்பவர்களுக்கு அவன் தான் அவளை கட்டுப்படுத்துவது போல் தோன்றும்.
ஆனால் உண்மையில் மயூவின் கண்ணசைவில் தான் அவனின் உலகமே இயங்குகிறது. அதை நன்கு உணர்ந்துகொண்ட மயூவுக்கு ஆதியின் மீது காதல் இன்னுமின்னும் பெருகியது.





