அன்று மட்டும் இல்லை.. தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவிலும் இவளுக்கு அழைக்க ஆரம்பித்து இருந்தான்.
“உங்களோட ரோதனையா போச்சு. முதல்ல உங்க நம்பரை ப்ளாக்ல போடுறனா இல்லையான்னு பாருங்க” என்று சொன்னவள் ஒரு நாள் கூட அதை செய்யவில்லை.
“உனக்கு இனி கூப்பிட்டா என்னை என்னன்னு கேளுடி.. உன்கிட்ட போய் பேசுனேன் பாரு.. உன்னை பார்த்தாலே எனக்கு கடுப்பு தான் வருது. இதுல உன்கிட்ட பேசிட்டாலும் கிரகத்துல விடிஞ்சிடும்” என்று இரண்டு மணி நேரம் அவளிடம் போன் பேசி விட்டு வைக்கும் பொழுது எல்லாம் மறக்காமல் இந்த டைலாக்கை விடுவான்.
ஆனால் அடுத்த நாள் ஒன்பது மணிக்கே அவளுக்கு கூப்பிட்டு விடுவான்.
ப்ளாக்ல போடுறேன் என்றவளோ முதல் ரிங்கிலே எடுத்து காதில் வைத்து விடுவாள்.
“இன்னைக்கு என்ன ஆச்சு?” என்று இவளே முதலில் தொடங்குவாள்.
“அதை ஏன்டி கேட்கிற இன்னைக்கு இருந்த கடுப்புக்கு என் எதிர்ல யார் வந்து இருந்தாலும் நாலு அரை விட்டு இருப்பேன்” என்று ஆரம்பித்து இரண்டு மணி நேரம் பேசி இறுதியில் இவளை நாலு திட்டு திட்டிவிட்டு வைத்து விடுவான்.
பகல் பொழுதில் எல்லாம் அவளிடம் பேச மாட்டான். உள்ளே ஆல்கஹால் போன உடனே அவனது மகனின் அறையில் போய் அந்த குட்டி வாண்டிடம் நாலு அளப்பரையை கூட்டிவிட்டு தன் அறைக்கு வந்து போனை எடுத்து வேரலுக்கு கூப்பிடு அவளிடம் இரண்டு மணி நேரம் சலம்பி விட்டு தூங்கிப் போவான்.
அடுத்த நாள் காலையில் என்னை போல யோக்கியாவன் இந்த உலகில் யாருமே இல்லை என்பது போல கோட் சூட்டில் மிடுக்காக கிளம்பி ஒவ்வொரு ஸ்கூலையும் ஆராய்ந்து விட்டு வருவான். அப்படி வரும் பொழுது எத்திற்படும் வேரலின் ஸ்கூலுக்கு அவளை நேரடியாக போய் வம்பிழுத்து திமிர் தனம் காட்டிவிட்டு வருவான்.
இவளுக்கு அவனை பார்த்தாள் ஒரு பக்கம் கடுப்பாக வந்தாலும் இரவு அவன் தன்னுடைய மனக்காயங்களை எந்த முலாமும் இல்லாமல் அவளிடம் கொட்டும் பொழுது ஐயோ பாவம் என்று தோன்றி தொலையும்.
அதுவும் மாலை நான்கு மணிக்கு மேல் இன்னொரு போன் கால் வரும்.
அதில் அந்த குட்டி வாண்டு பேசுவான்.
“ஹலோ ஆன்டி” என்று அவன் ஆரம்பித்து ஒரு மணி நேரம் பேசுவான் தகப்பனுக்கு தெரியமால். தகப்பனுக்கு தெரிந்தால் சாமி ஆடி விடுவானே. எனவே தகப்பனுக்கு தெரியாமல் தான் பேசுவான்.
அன்றைக்கு திறப்பு விழாவுக்கு வந்த பொழுது அவனிடம் தன் போன் நம்பரை கொடுத்து பேச சொல்லி சொல்லி இருந்தாள் வேரல்.
குட்டி சமரனும் அவள் கொடுத்த விசிட்டிங் கார்டை மிக பத்திரமாக சட்டை பையில் வைத்துக் கொண்டு அப்பனுக்கு தெரியாமல் வேலைக்காரர்கள் உதவியுடன் பேச தொடங்கி இருந்தான்.
அப்பனுக்கும் மகனுக்கும் இவள் ஒருத்தி தான் பிரெண்ட் போல தங்களின் எண்ணங்களை எல்லாம் இவளிடம் கொட்டிக் கொண்டு இருப்பார்கள் மாற்றி மாற்றி. இவள் பேசுவதை விட கேட்பது தான் அதிகம். அவர்கள் என்ன சொன்னாலும் தலை ஆட்டி விடுவாள்.
அன்றைக்கு அப்படி தான் கரஸ்பாண்டன்ட் மீட்டிங்குக்கு போய் கொண்டு இருந்தாள். போகும் பொழுதே குட்டி வாண்டு சமரன் அழைத்து விட்டான்.
இப்பொழுது எல்லாம் காரில் தான் போகிறாள் வருகிறாள். ட்ரைவர் ஓட்டிக் கொண்டு வர, இவள் பின்னாடி அமர்ந்து போனை எடுத்து காதில் வைத்தாள்.
“ஹலோ கண்ணா” என்றாள்.
“ஆன்டி” என்று பிள்ளையின் அழுக்குரல் கேட்க,
“ஆன்டி வீடியோ கால் வரேன்.. எடு தங்கம்” என்றவள், உடனே அழைப்பை வீடியோவுக்கு மாற்றி பிள்ளையை பார்த்தாள்.
“என்னடா தங்கம் ஆச்சு.. ஏன் இப்படி அழற?” அவனின் அழுகையை பார்த்து இவள் பதறிப்போனாள்.
“இங்க இங்க...” என்று அவன் என்ன பேசுவது என்று புரியாமல் நடுங்கிக்கொண்டு இருந்தான். அவனின் நடுக்கத்தில் இவளுக்கு உயிர் போனது போல ஆனது.
“அப்பா எங்க தங்கம்?” என்றாள்.
“அப்பாவுக்கு போன் பண்ணேன்.. எடுக்கல” என்று உதடு பிதுக்கி பிள்ளை அழ,
“நீ அழாத கண்ணா இதோ ஆன்டி உங்க அப்பாவுக்கு கூப்பிட்டு பார்க்கிறேன்” என்று இன்னொரு காலில் அவனை அழைக்க, அவன் அழைப்பை ஏற்கவே இல்லை. இரண்டு முறை முயன்றவள், அதற்கு மேல் தாமதிக்காமல் மீண்டும் பிள்ளைக்கு கனெக்ட் பண்ணிக் கொண்டாள்.
“என்னாச்சு கண்ணா.. ஆன்டிக்கு பதறாம என்ன நடந்ததுன்னு சொல்லு” என்றாள்.
“அது அது.. ஒரு செர்வென்ட் லேடி” அவனுக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை.
“சரி நீ எதுவும் சொல்ல வேண்டாம் இதோ ஆன்டி வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன். நீ பயப்படாத” என்று சொன்னவள், ட்ரைவரிடம் வேகமாக கங்குவனின் வீட்டுக்கு போக சொன்னாள்.
“ஆனா மேடம் மீட்டிங் இருக்கே”
“அதை அப்புறம் பார்த்துக்கலாம் அண்ணா.. நீங்க இப்போ அங்க போங்க” என்றவளுக்கு கங்குவன் மீது அத்தனை கோவம் கோவமாக வந்தது.
நொடி நேரமெல்லாம் பல யுகமாய் மாறீயது போல அவளுக்குள் தோன்றியது.
“ஐயோ பிள்ளை என்ன பாடு பட்டுட்டு இருக்குமோ தெரியலையே” உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டு இருந்தவள் ட்ரைவரை சீக்கிரமாக போக சொல்லி உந்திக் கொண்டே இருந்தாள்.
“டூ மினிட்ஸ் மேடம்” என்று அவரும் எவ்வளவு வேகமாக போக முடியுமோ அந்த அளவுக்கு வேகமாக ஓட்டினார். அப்படியும் பத்து நிமிடங்களுக்கு மேல ஆகி இருந்தது.
காரை விட்டு இறங்கி வேகமாக உள்ளே ஓடி வந்தவள் பிள்ளையை தேட, அவனோ மாடியில் ஒரு மூலையில் நடுங்கிப் போய் நின்று இருந்தான்.
“கண்ணா” என்ற நேரம் ஏதோ ஒரு அறையில் இருந்து முணகல் சத்தம் கேட்க பிள்ளையை தூக்கிக் கொண்டு அந்த அறைக்கு சென்று கதவை திறந்துப் பார்த்தாள்.
அங்கே காணக் கூடாத காட்சி கண்ணில் பட, வேகமாய் பிள்ளையின் முகத்தை தன் கழுத்தோடு சேர்த்து புதைத்துக் கொண்டாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு,
“டேய் உன்னை தான் இங்க வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனா இல்லையா?” என்று ஒருவன் கட்டிலில் இருந்து எழுந்து வர, அவனுக்கு கீழ் படுத்து இருந்தவளோ
“இந்த சனியனுக்கு இதே வேலையா போச்சு..” என்று அவள் ஒரு போர்வையை சுற்றிக் கொண்டு எழ அங்கே நின்று இருந்த வேரலை கண்டு இருவரும் வெலவெலத்துப் போனார்கள்.
எல்லாம் ஒரு நிமிடம் தான்.
“ஏய் யார் நீ.. இங்க என்ன பண்ற?” என்றவள் அந்த பெண் சத்தம் போட,
“அப்போ இவ இந்த வீட்டு எஜமானி இல்லையா?” அதுவரை பயந்துக் கொண்டு இருந்த ஆடவன் அந்த பெண்ணிடம் கேட்டுவிட்டு,
“ஏய் வெளில போ” என்று அதட்டினான்.
வேரலோ கொஞ்சமும் அசையவில்லை.
“ஏய் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். சொல்றது காதுல விழல. இங்க இருந்து போ” என்றபடி வேரலை நெருங்கி வர, பொலிறேன்று அவனின் கன்னத்திலே ஓங்கி ஒரு அரை விட்டாள் வேரல்.





