அந்த மிகப்பெரிய ஆடம்பர மருத்துவமனையின் தனி அலுவலக அறையின் உள்ளே அமர்ந்து இருந்தாள் அதிரல். உடலை துளைக்கும் குளிர் அந்த அறையில் வீசியது என்றாலும் அவளுக்கோ பொடி வைரங்களை அள்ளி தெளித்தது போல முகமெங்கும் வியர்வை துளிகள் பூத்து இருந்தது..
கைகள் நடுங்கியது. தேகம் கனமாகிப் போனது. பயந்து அஞ்சிக் கொண்டு இருந்த இதயமோ அதிவேகமாக அடித்துக் கொண்டது.
இத்தனை இருந்த பொழுதும் அதை மறைத்துக் கொண்டு அவளுக்கு எதிரில் அமர்ந்து இருந்த வெற்றியை பார்த்தாள்.
“சொல்லுங்க உங்களுக்கு ஓகேன்னா நாம மேற்கொண்டு பேசலாம். இல்லன்னா இப்பவே நீங்க வெளில போகலாம்” வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசியவனின் பேச்சில் எந்த ஒரு குலைவும் இல்லை. நேர்க்கொண்ட பார்வை தான். அந்த நேர்கொண்ட பார்வை எல்லாம் அவனின் அண்ணனிடம் இருந்து கற்றுக் கொண்டது தான். ஆனால் அவனின் அண்ணன் இப்பொழுது இதே மருத்துவ மனையில் தன் சுய நினைவை இழந்து கோமா ஸ்டேஜில் இருக்கிறான்.
அவனுக்காக தான் அதிரலை அழைத்து பேசிக் கொண்டு இருக்கிறான் வெற்றி.
அவனது கண்களில் கரைக்காணாத சோகம் அப்பி இருப்பது எல்லாம் அவளுக்கு விளங்கவில்லை. புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமும் அவளுக்கு எதுவும் இல்லை.
“நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் சார்” என்றாள் கமரிய குரலில்.
அவ்வளின் குன்றலான குரல் வெற்றிக்கு கட்டலை (கஸ்ட்டத்தை) குடுத்தாலும் அவனால் என்ன செய்ய இயலும். அவன் தாயின் மன்றாடலின் முன்பு அவனால் எதிர்த்து நிற்க முடியவில்லை.
இறந்து விடும் நிலையில் இருக்கும் அண்ணனுக்கு வாரிசு வரப்போகிறது என்றால் அவனுக்கு மட்டும் மறுக்கத் தோன்றுமா? வேண்டும் அண்ணன் இல்லதா வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும் பொழுதே மொத்த தேகமும் செந்தீயில் விழுந்தது போல தகித்துப் போய்விடுகிறது.
அவனின் மொத்த வேண்டுதலும் அவனின் அண்ணன் ஒருவனுக்காக மட்டுமே. அண்ணனின் நிழலில் இதுநாள் வரை ப்ளே பாயாக எந்த கவலையும் இல்லாமல் இருந்து விட்டான். இப்பொழுது நிலைமை அப்படி இல்லையே.. மிகப்பெரும் பாரத்தை தலையில் சுமந்து இருக்கிறான்.
அதை எல்லாம் எண்ணி கவலை படும் நிலையில் அவன் இல்லை. அவனின் முதல் கவலையாக அண்ணனின் உடல் நிலை ஆக்கிரமித்துக் கொள்ள, மற்ற கவலை எல்லாம் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை.
தேர் போல கம்பீரமாய் இருந்த அண்ணன் இப்பொழுது படுக்கையில் இருப்பதிலே பாதி உடைந்துப் போய் விட்டான்.
தீத்திரள் தீரன்.. பெயருக்கு ஏற்ப தீ போல இருப்பவன் வெற்றியின் அண்ணன். அத்தனை கோவம் வரும். ஆனால் அதையும் மீறி அவனிடம் இருக்கும் நல்ல குணம் அவனின் குடும்பத்துக்கு மட்டுமே தெரியும்.
பார்ப்பவரின் கண்ணுக்கு நிறைவாக, கம்பீரமாக, பேச்சிலே ஆளுமையை காட்டி அனைவரையும் பணிய வைத்து, நேர்க்கொண்ட பார்வையில் எல்லோரையும் வசியம் செய்து விடும் அண்ணன் இன்று அத்தனையையும் தொலைத்து விட்டு வெறும் உடலாக படுத்து இருக்கிறான்.
அவன் ஒருவன் சபையில் நின்றாலே சபையே நிறைந்து விடும். அந்த அளவுக்கு கம்பீரமாக இருப்பான். ஆளுமை என்றால் ஆளுமை அப்படி ஒரு ஆளுமை.
அவன் தலை எடுத்த பிறகு அவர்களின் தொழில் அத்தனையிலும் ஏறுமுகம் தான். விரல் விட்டு எண்ணினாலும் முடியாத அளவுக்கு பிசினெஸில் கொடி கட்டி பறந்தான்.
எவ்வளவு தான் தொழிலில் முனைப்பாக இருந்தாலும் வீட்டிலும் அவனது கவனம் குறையாது. எல்லாவற்றையும் எல்லோரையும் அவனின் கையில் வைத்து இருந்தான்.
காலை ஒரு நேரம் கண்டிப்பாக அவனின் அம்மா கையில் சாப்பிட்டு தான் வெளியவே போவான். அதில் அவனின் அம்மா தேவகிக்கு அவ்வளவு பெருமையாக இருக்கும். பெருமையை தாண்டி மகிழ்ச்சியாக இருக்கும்.
“உன் பெரிய மகன் ஒரு வார்த்தை சொன்னா போதுமே.. அப்படியே பெட்டி பம்பா அடங்கிடுவியே..” என்று ஆளவந்தான் கூட அவ்வளவு கிண்டல் பண்ணுவார்.
“அதெல்லாம் உங்களுக்கு தெரியாது.. பெத்தவளுக்கு பெரிய மகன் மீது எப்பவுமே தனி பிரியம் இருக்கும்” என்று சிலாகித்துக் கொள்வார்.
“இரு உன் மத்த மூணு பிள்ளைங்க கிட்டையும் சொல்றேன்” என்று சொன்னாலும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ள மாட்டார் தேவகி.
“யாரு கிட்ட வேணாலும் சொல்லுங்க.. எனக்கு என் மூத்த பிள்ளை தான் எல்லாமே. அவன் அரட்டினாலும் எனக்கு கோவமே வராது..” சிலுப்பிக் கொண்ட தாயை இப்பொழுது தேற்ற முடியாமல் மொத்த குடும்பமே கண்ணீர் விட்டுக் கொண்டு இருக்கிறது.
அம்மாவுக்கு மட்டும் இல்லாது வீட்டில் உள்ள அத்தனை பேரின் அன்புக்கும் மரியாதையுக்கும் உரியவன் ஒரே ஒரு ஆக்சிடெண்டில் மொத்தமாக உருக்குலைந்து போய் கிடக்கிறான். அவனோடு மொத்த குடும்பமும் அல்லவா உருகுலைந்துப் போய் கிடக்கிறது.
எல்லாவற்றையும் ஒரு நொடியில் எண்ணிப் பார்த்தவனுக்கு விழிகளில் நீர் கோர்த்தது. அதை முயன்று அடக்கிக் கொண்டு,
“குட்.. நாளைக்கு உங்களுக்கு புல் செக்கப் இருக்கும். அதுக்கு ஏத்த மாதிரி வந்திடனும். இனி மீட் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லை. உங்க அக்கவுன்ட்டுக்கு பணம் வந்திடும். உங்க தங்கச்சி ஆப்ரேஷனுக்கு பணம் கட்டியாச்சு” என்றான்.
தலையை ஆட்டியவளுக்கு உள்ளுக்குள் பெரும் பயம் சூழ்ந்தது. தான் எவ்வளவு பெரிய காரியத்தை செய்ய போகிறோம் எண்ணிய பொழுதே அடி நெஞ்சில் கோடரி தைத்தது அதிரலுக்கு. ஆனால் இதை செய்ய வில்லை என்றால் அவளின் ஒரே தங்கையின் உயிர் போய் விடும் நிலையில் வேறு என்ன செய்வாள் பாவம்.
அவளுக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை. வாடகை தாயக வேண்டும் என்பது மட்டுமே சொல்லப்பட்டது. டோனர் யார், யாருடைய வாரிசு என எதுவுமே அறிவிக்கப்படவில்லை. அந்த தகவலை கேட்டு அறியக்கூடிய சூலில் அவளும் இல்லை.
அதே நேரம் அதே மருத்துவமனையில் உயர் தர சிகிச்சை எல்லாம் பயனில்லாமல் போய் வெறும் உடம்பாக படுத்து இருந்தான் அவளின் வயிற்றில் உண்டாகும் கருவிற்கு சொந்தக்காரன். பிறக்க போகும் குழந்தையின் தகப்பன்.
அவனின் அருகில் கண்ணீர் உகுத்துக் கொண்டு, உயிரே இல்லாமல், மனமெல்லாம் கலங்கிப் போய், நெஞ்சு அடைக்க அவனையே விழி எடுக்காது பார்த்துக் கொண்டு இருந்தார் தேவகி.
“ம்மா இன்னும் எவ்வளவு நாள் இப்பாடி சாப்பிடாம இருப்ப.. கொஞ்சமாச்சும் சாப்பிடும்மா” என்று மூத்த மகள் உணவை கையில் வைத்துக் கொண்டு நெஞ்சு கலங்க கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.
ம்ஹும் தேவகியிடம் சிறு மாற்றம் கூட இல்லை. மகனை விட்டு அவரால் விழிகளை நகர்த்தவே முடியவில்லை. அவரின் உயிரே அவர் மூத்த மகன் தான். அவனே இப்படி இருக்க அவரால் எதை பற்றியும் சிந்திக்க முடியவில்லை.
ஆளவந்தானும் கெஞ்சி பார்த்து விட்டார் தேவகியை அசைக்கவே முடியவில்லை. சின்ன பெண், சின்ன மகன் வெற்றியும் வந்து பேசி பார்த்து கெஞ்சி பார்த்து உருட்டி பார்த்தும் தேவகியை அசைக்க முடியவில்லை.
அதன் பிறகே இந்த முடிவுக்கு வந்து இருந்தான் வெற்றி தன் தகப்பனின் சம்மதத்துடன்.
தீரனை திருமணம் செய்துக் கொள்ள சொல்ல, அவன் மறுத்து விட்டான். வயதும் ஆகிக்கொண்டு இருக்க, பிள்ளை பேரு இல்லாமல் போய் விட போகிறது தம்பி என்று தேவகி கவலையுடன் சொல்ல, தன் இருபத்தி ஏழாவது வயதிலே தன் உயிர் அணுவை எடுத்து ஸ்டோரேஜ் செய்து விட்டான் தீரன். மருத்துவமனையே இவர்களது என்பதால் ஸ்டோரேஜ் செய்ய எளிதாகிப் போனது.
இப்பொழுது வாடகை தாய் மூலமாக அண்ணனின் உயிர் அணுவை எடுத்து பிள்ளை உண்டாக்க முடிவு எடுத்து விட்டான் தாயின் கோரிக்கையை மனதில் வைத்து.
அடுத்த நாள் அதிரலை முழு செக்கப் செய்து எந்த குறையும் இல்லை என்று உறுதி செய்துக் கொண்டு, டாக்குமெண்டில் எழுதி கை எழுத்து வாங்கிக் கொண்ட வெற்றி,
“குழந்தை பிறக்கிற வரை நீங்களும் உங்க தங்கச்சியும் என் பார்வையில் தான் இருக்கணும். உங்களுக்கு தனியா ஒரு வீடும், இரு பணியாளர்களும் இருப்பார்கள். மாச செலவுக்கு உங்க அக்கவுண்ட்ல பணம் வந்திடும்” என்று சொல்ல, எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாள்.
“பாப்பாவுக்கு ஆபரேஷன் முடிஞ்ச பிறகு நான் வந்திடட்டுமா?” தயக்கமாக கேட்டாள். பெருமூச்சு விட்ட வெற்றி,
“உங்களுக்கு வேற யாரும் இல்லையா?” கேட்டான்.
“ம்ஹும்.. நானும் தங்கச்சி மட்டும் தான்.. அப்பா இப்ப தான் சமீபமா இறந்தாரு. அம்மா முன்னாடியே..” நிறுத்துக் கொண்டாள்.
“ஓ.. சொந்தக்கறாங்க”
“ரெண்டு பொண்ணுங்கன்னு யாரும் கண்டுக்கல.. ஒரு குட்டி வீடு மட்டும் தான் சொந்தமா இருக்கு இப்போதைக்கு” என்றவளை பார்த்தவன்,
“ஓகே.. நர்ஸ் ஒன்னு ஏற்பாடு பண்றேன். உங்க தங்கச்சி முழுசா குணமாகுற வரை அவங்க பார்த்துப்பாங்க. நீங்க குழந்தையை மட்டும் கவனமா பார்த்துக்கோங்க. நீங்க சுமக்கிற வாரிசு எங்களோட உயிர் மூச்சு.. சோ எவ்வளவு கேர்புல்லா இருக்கணுமோ அவ்வளவு கேர்புல்லா இருக்கணும். இன்னும் வேற எந்த வசதி வேணாலும் கேளுங்க நான் ஏற்பாடு பண்றேன்” என்றான்.
“இல்ல இதுவே போதும்..” என்றவள் தங்கையின் ஆப்ரேஷனுக்கு நேரம் சொல்ல, இதோ அவளின் ஒரே தங்கையான நேத்ராவுக்கு ஆபரேஷன் தொடங்கியது.
உயிரை கையில் பிடித்துக் கொண்டு நின்றாள் அதிரல். அவளை தேற்றக் கூட யாரும் அருகில் இல்லை. ஒற்றையாக அந்த கதவின் முன்பு நின்றுக் கொண்டு இருந்தாள்.
--
S.Rami





