அவர்களின் லூட்டியை சின்ன இதழ் சிரிப்புடன் பார்த்துக் கொண்ட கதிரவன் இப்பொழுதும் அமைதியாகவே இருந்தான்.
“டேய் மச்சான்.. உன் மாமா என்னை கொலை பண்ண பார்க்கிறாருடா.. வந்து காப்பாத்துடா.. இப்படின் கல்லு மாதிரி உட்கார்ந்து இருக்கியே.. என் மேல இறக்கம் இல்லையா எசமான்” என்றவனின் பேச்சில் முறைத்த சேகரன்,
“அப்போ ஏன்டா என்கிட்டே நம்ம குடோன்ல கஞ்சா வந்த விசயத்தை மறைச்ச?” அவனின் கழுத்தை இன்னும் நெருக்கிப் பிடித்தார்.
“யோவ் மாமா உன் மருமவன் தான் உன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொன்னாப்ல.. நீங்க சட்டையை பிடிச்சு கேள்வி கேட்கணும்னா அவனை தான் கேட்கணும். அதை விட்டுட்டு பால் வடியும் என்னைய பிடுச்சு உலுக்கக் கூடாது” அவரின் முரட்டு தனமான பிடியில் இருந்து நழுவி நெளிந்துக் கொண்டே சொன்னான்.
“அதை தான் கேட்கிறேன்.. ஏன் என்கிட்டே சொல்லல... அப்போ நான் வேற யாரோ தானே.. பதில் சொல்லுடா” மாதவனை பிடித்து உலுக்கினார்.
“உங்க மாமன் மச்சான் உறவுக்குள்ள தலையை விட்ட என்னை தான் சொல்லணும். எய்தவன் அங்க இருக்க அம்பை நொந்துக் கொள்கிறாரே இவர்...” பெரிதாய் டைலாக் சொன்னவனை முறைத்தவர்,
“ஏன் என்கிட்டே சொல்லல” சேகரன் மறுபடியும் ஆரம்பிக்க,
“மாமா நீங்க இன்னும் சரக்கே அடிக்கல.. அதுக்குள்ளயே லம்ப ஆரம்பிச்சுட்டீங்களா?” என்ற மாதவனை கொலை வெறியுடன் பார்த்தார். அவரின் பார்வையில் பம்மியவன்,
“இல்ல மாமா.. சொன்னதையே சொல்லிட்டு இருக்கீங்களே.. அது தான்” என்றவன் வேகமாய் அவரிடம் இருந்து தப்பித்து கதிரவன் பின்னாடி வந்து நின்றுக் கொண்டான்.
“விளையாட்டு எல்லாம் போதும் கதிரவா.. சொல்லு யாரு அவன், என்ன மோட்டிவ்க்கு பண்ணி இருக்கான்” தன் மச்சானிடமே நேரடியாக கேட்டார்.
“முதல்ல இதை குடிங்க மாமா” என்று அதிக வீரியம் இல்லாத, போதை ஏறாத மது வகையை அவருக்கு குடுத்தான் கதிரவன்.
ஆறு மாதத்துக்கு ஒரு முறை இந்த மீட்டிங் நடக்கும். வீட்டில் ஒருவருக்கு கூட தெரியாது இந்த மீட்டிங் பத்தி. சேகரன் ரொம்ப டிப்ரஷன்ல இருந்தப்ப, அவரை சமாளிக்கவே முடியாத பட்சத்துல வேறு வழியில்லாது கதிரவன் அவருக்கு பழக்கி விட்டது.
அதன் பிறகு அதை அவர் பற்றிக் கொண்டு விட, கதிரவன் அதற்கும் ஒரு லிம்ட்டேஷன் போட்டு விட்டான்.
“என் கண்ணு முன்னாடி குடிக்கணும், அதுவும் வருசத்துக்கு ஒரு முறை மட்டும் தான்” என்று விட்டான்.
“அநியாயம் டா” வயதை மீறி சிணுங்கினார்.
“அதெல்லாம் ஒரு அநியாயமும் இல்ல.. இது தான் டீல். இதுக்கு ஓகேன்னா ஓகே.. இல்லன்னா மொத்தமும் கிடையாது”
“நீ என்னை விட சின்னவன்டா.. என் ஸ்ட்ரேஸ் உனக்கு தெரியாது..” பீலா விட்டார். ஆனால் கதிரவனிடம் பப்பு வேகவில்லை.
“எனக்கு உங்களை விட ஸ்ட்ரெஸ் அதிகம். சோ நானும் குடிக்கிறேன்” என்று அவன் கோப்பையை கையில் எடுக்க, வேகமாய் வந்து தட்டி விட்டவர்,
“எனக்கு வேண்டாம்.. நான் குடிக்கல” என்றார் சிறு பிள்ளையாய். அதில் சிரிப்பு வந்து விட்டது அவனுக்கு. “சரி வேணா இப்படி பண்ணிக்கலாம்.. ஆறு மாசத்துக்கு ஒரு முறை.. அதை தாண்ட கூடாது”
“நீ சொன்னா சரியா தான் மச்சான் இருக்கும்” என்று சேகரன் பச்சை கொடி காட்டி விட, அன்றிலிருந்து இனிதாக இந்த மீட்டிங் சென்றது.
வெளியே கதிரவன் கரடு முரடாக இருந்தாலும் அக்கா மாமா என்று வரும் பொழுது அவனால் அவ்வளவு உறுதியோடு இருக்க முடியாது. உள்ளுக்குள்ளே மெல்ட் ஆகிவிடுவான்.
அது சேகரனுக்கு நன்றாகவே தெரியும். பல நேரங்களில் சேகரனுக்கு நண்பனாக இருந்து இருக்கிறான் கதிரவன்.
“எனக்கு பெருசா எந்த நட்பும் வச்சுக்க தொணுனதே இல்லடா..” என்றார் சேகரன் ஒரு கையில் கிளாசை வைத்துக் கொண்டு.
கதிரவனும் மாதவனும் அமைதியாக இருக்க, மாதவனின் பின்னந்தலையில் லேசாக தட்டி,
“இந்த இடத்துல ஏன் மாமான்னு கேட்கணும்டா வெண்ண” என்று அலம்ப ஆரம்பித்து விட்டார்.
“அது தான் எனக்கே தெரியுமே.. எத்தனை முறை தான் அந்த புளிச்சு போன விசயத்தை கேட்கிறது..” நொந்துக் கொண்டவன்,
“ஒரு கிளாஸ் பீருக்கு ஆசை பட்டு வந்தேன் இல்லையா என்ன சொல்லணும்” என்று கண்ணீர் வராத குறையாக அழுதவனை பார்த்து கதிரவன் சிரித்தான்.
சேகரன் இன்றைக்கு முழுதாக அவனை வைத்து செய்து விடுவார் என்று தான் அவனுக்கு தெரியுமே.. அதனால் விளைந்த சிரிப்பு தான் இது. அதற்கு ஒரு எடுத்துக் காட்டு தான் இவர்களின் அலப்பறை..
“சொல்லுங்க மாமா” தலையை தடவி விட்டுக் கொண்டே கேட்டான் பாவமாய்.
“ஏன்னா எனக்கு தான் என் மச்சான் இருக்கானே..” என்றார் சேகரன்.
“என் மச்சான் தான் என் நண்பன்.. என் நண்பன் தான் என் மச்சான்..” என்றவர்,
“இல்ல மச்சான்” என்று கதிரவனிடம் அவர் கேட்க, அவன் சிரிப்புடன் தலையை ஆட்டினான்.
“மச்சான்” என்று அவர் மீண்டும் ஆரம்பிக்க, இனி விடிய விடிய இந்த மச்சான் மட்டும் ஓயவே ஓயாது.
“யாருடா மச்சான் அவன்.. நீ சொல்லு நான் அவனை கையை காலை முறிச்சு போட்டுடுறேன்” அலப்பரையை மேலும் கூட்டினார் சேகரன்.
கதிரவனின் மீது அவ்வளவு அன்பும் பாசமும் வைத்து இருந்தார் சேகரன். அதற்கு காரணம் கேட்டால் சேகரன் எந்த நிலையில் இருந்தாலும் அவரை அதே சேகரனாக பாத்தவன் தான் இந்த கதிரவன். யார் என்ன சொன்னாலும் செய்தாலும் அவன் நிலையில் இருந்து இன்று வரை மாறியதே இல்லை. அவர் என் மாமா.. அவருக்காக நான் எப்பவும் நிற்பேன்.. என்று அவனின் சின்ன வயதிலே அவ்வளவு திடமாக நின்றவன் அவன்.
அவன் மீது அளப்பரிய மரியாதையை வைத்து இருந்தார் சேகரன். ஆனால் வெளிப்படையாக அதிகம் காட்டிக் கொண்டது இல்லை. கதிரவனும் அதே போல தான். வெளிப்படையாக எதையும் காட்டிக் கொள்ளவே மாட்டான். ஆனால் உள்ளுக்குள் அவனின் உணர்வுகள் எல்லாம் பெரும் ஆர்பாட்டத்துடன் தான் இருக்கும். அந்த உணர்வுகளை மற்றவர்களிடம் காட்டாமல் அந்த கொந்தளிப்புக்கு உரியவர்களை ஆட்டிப் படைத்தது விடுவான்.
இன்றைக்கு மத்தியம் நடந்ததே அது போல.. ஆட்டி வைத்து விடுவான்.
சேகரனை சமாதனம் செய்து நடு இரவுக்கு மேல் அவரின் வீட்டில் கொண்டு போய் விட்டவன், மாதுவையும் வீட்டுக்கு போக சொல்லி விட்டு தன் வீட்டுக்கு வந்தான்.
அந்த நடு சாமத்தில் மொட்டைமாடியில் ஒரு உருவம் தென்பட்டது கதிரவனின் கூர்மையான கண்ணில்.
பனி தான் தூக்கம் வராமல் அவதியுற்றுக் கொண்டு இருந்தாள்.





