“தூங்காம இந்த நேரம் இங்க என்ன பண்ற? அதுவும் தனியா?” திடுமென்று ஒரு குரல் கேட்க தூக்கி வாரிப்போட்டது பனிநிலவுக்கு.
“ப்ச் எதுக்கு இப்படி எல்லாத்துக்கும் பயப்படுற? நான் தான்” என்றான் கதிரவன்.
அவனது உருவம் சிறிய வெளிச்சத்தில் தெரிந்த பிறகே அடைத்த நெஞ்சு சற்ற இலகுவாக்கியது.
“ஏன் இப்படி திடும்னு வந்து பயம் காட்டுறீங்க?” நெஞ்சை நீவி விட்டுக் கொண்டாள். பின்ன இரவு நடு சாமத்தில் ஊரே அடங்கிப் போய் இருந்தது. ஏன் இந்த வீடும் முழுமையாக அடங்கி இருந்த நேரம் திடுமென்று வந்து நின்றால் யாருக்கு தான் பயம் வராது. இவளுக்கு நெஞ்சே அடைத்துப் போனது.
“ப்ச் நார்மலா பேசுனாலே உனக்கு பயம் காட்ற மாதிரியா இருக்கு..” முறைத்தவன்,
“கேட்டனே..” என்றான் மீண்டும்.
“நீங்க செஞ்சு வச்ச காரியத்துக்கு தூக்கம் தான் குறை” என்றாள். அவளின் குரலில் இருந்த கோவம் கண்டு நெற்றி சுறுக்கியவன்,
“என்ன ஆச்சு..?” கேட்டான்.
“ஒன்னும் தெரியாத மாதிரி கேட்காதீங்க..”
“ப்ச் மொட்டையா பேசதன்னு சொன்னேன். முன்ன மாமா சொன்னல்ல அப்படியே கூப்பிடு” என்றான். முன்பு ஆதங்கத்தில் அவள் வெடிக்கும் பொழுது அவளையும் அறியாமல் மாமா என்று இருந்தாள். அதை அவள் உணர்ந்தாளோ இல்லையோ இவன் நன்றாக உணர்ந்து இருந்தான். அதை அவன் இப்பொழுது நினைவுப்படுத்தி கேட்டான்.
“எனக்கு ஞாபகம் இல்ல.. அதோட இப்ப அது பிரச்சனை இல்லை” என்றாள்.
“பின்ன வேற என்ன பிரச்சனை” இருக்கையில் போய் அமர்ந்துக் கொண்டான்.
“வா வந்து உட்காரு.. எவ்வளவு நேரம் நடந்துட்டே இருப்ப”
“ப்ச் கொஞ்சமாச்சும் சீரீயஸா இருங்க”
“உட்காருன்னு சொன்னது தப்பா” முறைத்தான்.
இவன் இப்பொழுது அடங்க மாட்டான் என்று உணர்ந்து,
“மாமா ப்ளீஸ்” கெஞ்சியவள்,
“சித்தியை சம்மந்தம் பேசிய வீட்டுல இருந்து இன்னைக்கு வந்து இருந்தாங்க” என்றாள்.
“அதுக்கு?”
“புரியாம இருக்கீங்களே மாமா.. அவங்க என்னை பிரச்சனைன்னு கை காட்டுறாங்க.. இதுக்கு தான் சொன்னேன். நான் இந்த வீட்டுக்கு வரலன்னு சொன்னா கேட்டீங்களா?” ஆத்திரத்துடன் அவள் சொல்ல,
கதிரவன் நெற்றியை நீவி விட்டான்.
“மாப்பிள்ளை கிட்ட நான் முன்னாடியே பேசிட்டேன்டி. அவரு நான் பார்த்துக்குறேன்னு சொன்ன பிறகு தான் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். இப்ப என்ன மறுபடியும் ஆரம்பிச்சு இருக்காங்க” சிந்தனை வயப்பட,
அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தவள்,
“இதுக்கு தான் நான் சொன்னேன் மாமா.. எல்லாரோட தாட்டும் ஒரே மாதிரியா இருக்காது.. அவங்கங்கவங்க எண்ணங்கள் மாறுபடும். வேற ஒரு நாள் வந்து நான் தங்கி இருந்தா கூட இந்த அளவுக்கு எபெக்ட் இருக்காது. பட் ஒரு கல்யாணத்தை வச்சுக்கிட்டு வயசு பெண்ணை இப்படி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா எல்லோருக்கும் குழப்பமும் சந்தேகமும் வரும்” என்றாள் நிதானமாக.
தலையை ஆட்டியவன்,
“அதுக்காக எல்லாம் உன்னை விட முடியாதுடி” என்றான் அழுத்தமாய்.
“ஐயோ மாமா உங்களுக்கு புரியுதா புரிலையா.. துளசி வாழ்க்கை அந்தரத்துல நிக்கிது” என்றாள் வேதனையுடன்.
“இது நாள் வரை உன் வாழ்க்கை அப்படி தானே இருந்தது”
“அதுக்காக துளசி வாழ்க்கையை கெடுக்க சொல்றீங்களா?” விழிகளில் கண்ணீர் மின்னியது அவளுக்கு.
“ப்ச் அவ வாழ்க்கையை பார்த்துக்க அவன் அண்ணன் நான் இருக்கேன்” என்றான் அழுத்தமாய்.
“நான் இருக்கும் பொழுது என் தங்கச்சிக்கு ஒரு இக்கட்டான நிலையை வர விட மாட்டேன்” என்றான் மேலும்.
“எனக்கும் இப்படி ஒரு அண்ணன் இருந்து இருக்கலாம்” என்றாள் பனி.
“தேவையில்ல.. உனக்கு நான் இருக்கேன்.. உனக்கு நான் போதும்” என்றவனை அதிர்ந்துப் பார்த்தவள்,
“நான் என்னோட தாட்ஸ சொன்னேன்” என்றாள் கீழிறங்கிய குரலில்.
“அப்போ உன் தாட்ஸ மாத்து. எப்பவும் நான் கூட இருக்கும் பொழுது அவங்க இருந்தா நல்லா இருக்கும், இவங்க இருந்தா நல்லா இருக்கும்னு யோசிக்காத” என்றவன்,
“எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்.. நீ கவலை படாம போய் தூங்கு.. என்னை மீறி இங்க எதுவும் நடக்காது.. துளசி கல்யாணம் நல்ல படியா நடக்கும்” அவளை அனுப்பி வைத்து விட்டு இவனும் வந்து படுத்தான்.
அடுத்த நாள் காலையில் டைனிங் டேபிளில் இவனது குடும்பம் மட்டும் தான் இருந்தார்கள். ரேவதி, மற்றும் மங்கை குடும்பம் அவர்களின் வீட்டுக்கு சென்று இருந்தார்கள்.
மங்கை போகும் பொழுது மறக்காமல் காமாட்சியிடம் மன்னிப்பு கேட்டு விட்டே சென்று இருந்தார். போன் போட்டு ரேவதிக்கு எல்லாவற்றையும் சொல்லிய காமாட்சிக்கு மனமே ஆறவில்லை.
“ம்மா நீ கவலை படாத.. தம்பி எல்லாத்தையும் பார்த்துக்குவான்” ஆறுதல் சொன்னவர் கணவனிடமும் போன் போட்டு கேட்டுக் கொண்டார்.
அவரும் எல்லாவற்றையும் சொல்லி விட்டு, கூடவே இன்னைக்கு கதிரவனோடு நடக்கும் மீட்டிங்கையும் சொல்லி வைத்து விட்டார்.
அது வெறும் பேச்சு வார்த்தை என்று தான் ரேவதிக்கு இது நாள் வரை தெரிந்து இருந்தது. ஆனால் அது வேற மீட்டிங் என்று எப்பொழுது தெரியப் போகுதோ தெரியவில்லை.
காமாட்சி நேற்று மாலை வீட்டுக்கு வந்த சம்மந்தி ஆட்களை பற்றியும் அவர்கள் பேசிய பேச்சுகளை பற்றியும் சொல்ல, கவனமுடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டான்.
துளசிக்கு கண்கள் கலங்கி இருந்தது. அதை யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் தலையை குனிந்து அமர்ந்து உணவு உண்ணும் சாக்கில் மறைத்துக் கொண்டாள்.
அவளின் வேதனையை கண்ட பனிக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது. அழுதால் இவன் திட்டுவானே.. முயன்று தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
“என்ன தம்பி செய்யலாம்” என்று கேட்டார் தேவன். பொன்னன் பார்வையை மகனிடம் செலுத்தி அமர்ந்து இருந்தார். மகன் என்ன சொன்னாலும் கேட்கும் பாவத்துடன்.
பாட்டிக்கும் தாத்தாவுக்கும் மனது பாரமாய் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டில் முதல் முறை சுபக்காரியம் நிகழப்போகிறது. இந்த நேரம் பார்த்து இப்படி பிரச்னைக்கு மேல் பிராச்சனையாக வருகிறதே என்று நொந்துப் போனார்கள்.
தேவன் கேட்ட கேள்விக்கு நீண்ட மூச்சை எடுத்து விட்ட கதிரவன்,
“நான் மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு பிறகு என்ன பண்ணலாம்னு சொல்றேன் சித்தப்பா.. அதுக்கு பிறகு ஏதும் செய்யிரதுன்னா செய்யலாம்” என்றவன் பனி சாப்பிடாமல் அமர்ந்து இருப்பதை பார்த்து, அவளின் பக்கமாக குனிந்து,
“சீக்கிரம் சாப்பிடு.. ஒரு இடத்துக்கு போகணும்” என்றான்.
“நான் எங்கும் வரல” அவசரமாய் அவள் சொல்ல, முறைத்தவன்,
“திரும்ப திரும்ப சொல்ல வைக்காத.. இங்க இருக்குறவரையும் நீ என் விருப்பபடி தான் நடக்கணும். சோ சீக்கிரம் சாப்பிட்டு எழு.. போகலாம்” என்று அவளை சாப்பிட வைத்து வெளியே அழைத்து வந்தவன்,
“கார்ல உட்காரு வரேன்” என்று சொல்லி விட்டு மீண்டும் வீட்டுக்குள் வந்து தங்கையை பார்க்க சென்றான்.
அவள் அறையில் குறுங்கண் ஓரம் சோகமாக நின்று இருந்தவளை கண்டு மனம் பாரமாகிப் போனது அவனுக்கு.
“துளசி” என்றான்.
அண்ணனின் குரலை கேட்டு திகைத்துப் போனவள்,
“ண்ணா” என்று பதறி திரும்பினாள்.
“கோபால் எதுவும் பேசுனாரா?” விசாரித்தான்.
“இல்லன்னா அவர் அவுட்டாப் நெட் ஒர்க்ல இருக்காரு.. கண்டாக்ட்ட் பண்ண முடியல”
“அதனால தான் சோகமா இருக்கியா?” கேட்டவன், அவளின் கையை அழுத்தமாக பற்றி, ஆறுதலாக நீவி விட்டவன்,
“அண்ணன் இருக்கேன்ல” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே, அவனது நெஞ்சில் வந்து சாய்ந்துக் கொண்டவள்,





