Notifications
Clear all

அத்தியாயம் 26

 
Admin
(@ramya-devi)
Member Admin

“என் கேரக்டரை பத்தி ரொம்ப தெளிவா அனலைஸ் பண்ணி வச்சு இருக்கீங்க. அதை அப்படியே காது குளிர கேட்கலாம்னு வந்தேன்.. சொல்லுங்க அத்தை.. நான் கேட்கிறேன். எனக்கு இப்போதைக்கு வேற வேலை எதுவும் இல்ல.. ப்ரீ பண்ணிட்டு வந்துட்டேன்..” என்றவன் எல்லோரும் நின்று இருக்க, இவன் மட்டும் ஒற்றை சோபாவில் கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்து விட்டான்.

ஆனால் பார்வை மொத்தமும் மங்கையிடம் தான். அவனது பார்வை துளைப்பிலே இவருக்கு சர்வாங்கமும் நடுங்கிப் போனது.

“அய்யா.. என்ன இது.. இப்படி பேசிக்கிட்டு.. அவ தான் கூரு இல்லாம நடந்துக்கிட்டான்னா நீயும் அதை பெருசு பண்றியே ய்யா” என்று விசாலம் மேற்கொண்டு பிரச்சனை வேண்டாம் என்கிற நினைப்பில் பேச வர,

“எது நான் பெருசு பண்றனா.. என்ன பாட்டி சொல்ற.. யாரு என்னன்னே தெரியாத பெண்ணை என் கூட சேர்த்து வச்சு பேசி, அவ கேரக்டரை அசிங்கப்படுத்தி, என் கேரக்டரை தப்பா பேசி, என் அம்மாவை அடி வாங்க வச்சு, என் தங்கச்சி வாழ்க்கை இன்னும் ஆரம்பிக்க கூட இல்ல.. ஆனா அதுக்குள்ள அவ வாழ்க்கை பாதியில நின்னு போயிடாதன்னு சாபம் விடுற மாதிரி பேசி இருக்காங்க. இத்தனையும் கேட்டுட்டு நான் பேசலன்னா நான் என்ன மகன், நான் என்ன அண்ணன். நான் என்ன தாய் மா” என்று சொல்ல வந்தவன் அப்படியே வார்த்தையை முழுங்கி விட்டு,

“என்னை நம்பி வந்த பொண்ணுக்கு நான் எப்படி நல்ல உறவா இருக்க முடியும். என் மேல அவ வச்சு இருந்த நம்பிக்கைக்கு நான் எப்படி பாத்திரமாக முடியும். என்னை சேர்ந்த இந்த மூணு பெண்களும் என்னை வச்சு பாதிக்கப்பட்டு இருக்காங்க..” என்றவனை யாராலும் அடக்க முடியவில்லை.

“சோ நான் பேச தான் செய்வேன். நீங்க கேட்டு தான் ஆகணும். என்னை அடக்கணும்னு நினைக்கிறவங்க முதல்ல பேசினவங்களை அடக்கி இருக்கணும். அப்ப எதுவும் பேசாதவங்க இப்பவும் எதுவும் பேசக் கூடாது.. நான் மட்டும் தான் பேசுவேன்.. நான் பேசுற எல்லாத்தையும் எல்லோரும் கேட்டு தான் ஆகனும்” என்று சலங்கை கட்டாத குறையாக ஆடி தீர்த்தான்.

“சொல்லுங்க அத்தை.. என்கிட்டே என்ன குண கேட்டை கண்டீங்க.. எதுக்காக அந்த பொண்ணோட என்னை இணைச்சு பேசுனீங்க.. நானும் அவளும் ஒண்ணா இருந்ததை நீங்க பார்த்தீங்களா? இல்ல எங்க அம்மா எங்களுக்கு துணை போனதை பார்த்தீங்களா?” கேள்வி மேல் கேட்டு திணறடித்தான்.

“இல்ல கதிரவா அது வந்து” என்று மங்கை பேச வர, அவரை பேசவே விடவில்லை கதிரவன்.

“எப்படி உங்களால அவ்வளவு ஈசியா என்னை குற்றம் சொல்ல முடிஞ்சுது.. நான் எப்பவாவது உங்க மகளை கட்டிக்கிறேன்னு சொன்னனா? இல்ல.. உங்க மகக்கிட்ட தப்பா பழகி இருக்கேனா..? அவக்கிட்ட என்ன படிக்கிறன்னு கூட கேட்டது இல்ல.. ஏன்னா அவக்கிட்ட ரொம்ப சாதாரணமா பேசுனா கூட நீங்க அதையே பிடிச்சுக்கிட்டு கல்யாண பேச்சு பேச ஆரம்பிச்சுடுவீங்கன்னு அவளை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன். இன்னைக்குன்னு இல்ல எப்பவும் மகா மேல எனக்கு எந்த ஈர்ப்பும் வந்து இல்ல. இனிமேலும் வரவும் வராது..” பொட்டில் அறைந்தது போல பேசிய கதிரவனின் வார்த்தயில் மங்கை மட்டும் இல்லாது சிங்காரமும் ஆடி தான் போனார்.

சேகரன் மட்டும் இன்னும் நல்லா வாங்கட்டும் என்ற தோரணையில் நின்றார்.

தேவன் கூட இடையில் அவனை மலை இறக்கப் பார்க்க அவன் அடங்கினால் தானே.. அவன் தான் வீருக் கொண்டு நிற்கிறானே.. எங்கிருந்து அவனை மலை இறக்க…

“எந்த காரணம் கொண்டும் உங்க மருமகனா நான் ஆகவே மாட்டேன்.. எனக்கு அந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல.. உங்க நினைப்புல இருந்து கொஞ்சம் வெளிய வந்து எங்க அம்மாவையும் நிலாவையும் தப்பா பேசுனதுக்கு நீங்க ரெண்டு பேர் கிட்டயும் மன்னிப்பு கேட்டு தான் ஆகணும்.. அதுவும்” என்று சொல்லி கலாவை ஒரு பார்வை பார்த்தான்.

அவனது பார்வையில் உயிரே போய் விட்டது கலாவுக்கு. தேவன் புருவம் சுருக்கி தன் மனைவியை பார்த்தார் கதிரவனின் பார்வையில்.

“நீங்க” என்று கலாவை சுட்டி காட்டியவன்,

“எங்க அம்மாவை தேவையில்லாம பேசுனதுக்கும் நிலாவின் மதிப்பை குறைச்சு அவளை அசிங்கமா பேசுனதுக்கும் மன்னிப்பு கேட்கணும்” என்றான்.

“என்ன சொல்ற தம்பி?” என்று கேட்ட தேவன் புருவம் சுருக்கி தன் மனைவியை கூர்ந்து பார்த்தார். அவரின் பார்வையில் உடலெல்லாம் வெடவெடவென்று வந்தது.

“அண்ணியையும் அந்த பொண்ணையும் தவறா பேசுனியா?” கேட்டுக் கொண்டே அவரை நெருங்கி வந்ததார்.

“இல்லங்க அது வந்து..” என்று முடிக்கும் முன்பே கலாவின் இரு கன்னத்திலும் மாறிமாறி அறைந்து தள்ளினார் தேவன்.

“என்ன தைரியம் இருந்தா நீ இப்படி பேசி இருப்ப” என்று சொல்லி மேலும் அறைந்து தள்ள,

“நான் மட்டுமா பேசுனேன்.. உங்க தங்கச்சியும் தானே பேசுனா..” முடிக்கும் முன்பே,

“இப்ப அவ எங்க வீட்டு பொண்ணு இல்ல.. இன்னொரு வீட்டு மருமக.. அதனால தான் நான் அடிக்காம விட்டேன். இல்லன்னா இந்நேரம் உனக்கு விழுந்தது போல பல மடங்கு அவளுக்கு விழும்” என்ற இரண்டாவது அண்ணனை வெறித்துப் பார்த்த மங்கை,

“ரொம்ப நல்லா இருக்கு அண்ணா நீ பேசுறது” என்று மங்கை மீண்டும் வார்த்தையை விட,

“சிங்காரம் முதல்ல இவளை இங்க இருந்து கூட்டிட்டு போங்க.. இன்னும் கொஞ்ச நேரம் இவ இங்க இருந்தாலும் இந்த அடி எல்லாம் அவ மேலயும் விழும்..” என்றார் தேவ்வன்.

“என்ன மச்சான் நீங்களும் கதிரவனோட சேர்ந்து இப்படி பேசுறீங்க..” சிங்காரம் கொதித்து பேச,

“இங்க பாருங்க மாப்பிள்ளை.. தங்க ஊசின்னு எடுத்து கண்ணுல குத்திக்க முடியாது.. நீங்க எல்லோரும் குறை சொல்லி இருக்கது இந்த வீட்டோட முதல் வாரிசை.. அவன் யாரு எப்படி பட்டவன்னு கூட இருந்து பார்த்த மங்கைக்கே தெரியலன்னா நானா என்ன சொல்ல.. எங்களுக்கு எங்க வீட்டு மகன் தான் முக்கியம். அவனோட நடத்தையை தப்பா பேசுற யாரும் இங்க இருக்க வேண்டாம்..” என்றவர்,

“உன் அண்ணனை வர சொல்றேன்.. கிளம்பி உன் அம்மா வீட்டுக்கு போ” என்று கலாவிடம் சொன்னவர்,

“அவளுக்காக நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் தம்பி. அவ மனம் திருந்தி உங்க மூணு பேருக்கிட்டையும் மன்னிப்பு கேட்டா இந்த வீட்டுல இருப்பா.. இல்லன்னா அவ அண்ணனுக்கு போன் போட்டு வந்து கூட்டிட்டு போக சொல்றேன்” என்று அவர் சொல்ல,

கதிரவன் ஒரு பேச்சுக்கு கூட வேண்டாம் என்று சொல்லவில்லை. அமர்த்தலாக அப்படியே நின்று இருந்தான். அதிலே தெரிந்துப் போனது அவன் அதை தான் எதிர் பார்க்கிறான் என்று.. கொஞ்சமும் அசையாமல் நின்றவனின் தோரணையில் பனிக்கு அத்தனை ஆயாசமாக வந்தது.

நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிக்க அவன் கொண்ட உறுதி தெரிய முதல் முறை இவரை ரொம்ப எளிதாக கணக்கிட்டு விட்டமோ என்று பயந்துப் போனாள். இவ்வளவு நடந்த பிறகும் அவனின் கைப்பிடியில் தான் அவள் நிற்கிறாள். நிற்க வைத்து விட்டான் கதிரவன்.

Loading spinner

Quote
Topic starter Posted : May 5, 2026 6:14 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top