மங்கைக்கு அத்தனை ஆவேசம் வந்தது..
“பாருண்ணா உன் மகன் எப்படி பேசுறான்னு.. அவன் தான் என் வீட்டு மருகன்னு நினைச்சு ஊர் பூரா தண்டோரா போடாத குறையா சொல்லி வச்சு இருக்கேன். இப்ப வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல இப்படி பானையை போட்டு உடைச்ச கணக்கா வேணான்னு சொல்றான்.. இதெல்லாம் என்னன்னு கேட்க மாட்டியா” என்று தன் பெரிய அண்ணனிடம் முறையிட்டார்.
“நீ என்ன வேணா செஞ்சுக்க” என்கிற ரீதியில் தான் அமர்ந்து இருந்தான் கதிரவன்.
பொன்னன் எதுவும் பேசவில்லை. அவருக்கு மகன் கேட்ட கேள்வியிலே பல நூறாக உடைந்து சிதறி இருந்தார். அதுவும் மனைவியை அடித்தது எல்லாம் அவர் கண் முன் ரீவைண்டாக வந்து வந்து செல்ல, அவரை அவராலே மன்னிக்க முடியவில்லை.
என்ன காரணமாக இருந்த பொழுதும் மனைவியை கை நீட்டுவது சரியில்லையே.. அந்த உரிமை யார் எனக்கு கொடுத்தது.. தனக்குள் குற்ற உணர்வில் கூனி குறுகிப் போய் நின்றார். அந்த நேரம் மங்கை அவரிடம் பேச, அவருக்கு காதில் எதுவுமே விழவில்லை. மனம் முழுக்க மனைவியிடம் தான் இருந்தது.
சிறிய பெண்ணின் கல்யாணம் இப்பொழுது தான் கூடி வந்துள்ளது. அதை அச்சாநியாமாக பேசி வைத்த தங்கையை அடக்க முடியாமல் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் அவர் தடுமாறிய நேரம்,
இந்த பேச்சு வருவதற்கு காமாட்சி தானே காரணம் என்று தன் கோவத்தை எல்லாம் அவரிடம் ஒரே அறையில் காட்டிவிட்டார். ஆனால் அது தவறு என்று அவரின் மகன் கேட்ட கேள்வியிலே புரிந்துக் கொண்டவர் தலையை நிமிர்த்தவே இல்லை.
உள்ளுக்குள் அத்தனை குமுறல் தன் மீதே.. இதில் தங்கை பேசிய ஒரு வார்த்தை கூட அவரின் காதை சென்று சேரவே இல்லை.
“அண்ணா உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.. நீ இப்படி இடிச்ச புளியாட்டாம் இருக்க.. உன் மகன் என்னை மன்னிப்பு கேட்க சொல்றான்.. நீ என்னன்னு கேட்க மாட்டியா?” என்று அவரை உலுக்க, அப்பொழுது தான் அவருக்கு உயிர்ப்பே வந்தது போல இருக்க, வேகமாய் தன் உடலை உதறிக் கொண்டு பள்ளம் கண்ட வெள்ளமாய் தன் மனைவியை தேடி ஓடினார்.
அவர் இப்படி பிச்சுக்கிட்டு போவதை புரியாமல் திகைத்து போய் பார்த்த மங்கை, எங்கே போகிறார் என்று பின்னாடியே போக, அவரின் அறைக்குள் இருந்த காமாட்சியிடம் போய் நின்றார்.
காமாட்சி படுக்கையில் தலையை பிடித்துக் கொண்டு ஓரத்தில் அமர்ந்து இருந்தார். அவரின் முன்பு சிறு பிள்ளையாய் போய் நின்றவர், பட்டென்று மண்டி இட்டு அவரின் கைகளை பற்றி,
“சாரிடி காமாட்சி” என்று கண்கள் கலங்க சொன்னவரை கண்டு மங்கை நெஞ்சை பிடிக்காத குறையாக அதிர்ந்து நின்றார். அவரின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்த அனைவரும் பின்னாடி வந்து பார்க்க அத்தனை பேரும் திகைத்துப் போனார்கள்.
கதிரவனுக்கு இது தான் நடக்கும் என்று தெரியுமே அதனால் அவன் இடத்தை விட்டு கொஞ்சமும் அசையவில்லை. தந்தையின் குற்ற குறுகுறுப்பை தூண்டி விட்டது இதுக்கு தானே.. அது திவ்யமாக நடக்க, அலட்டிக் கொள்ளவே இல்லை.
“பெரிய மாமாவா இது.. அக்காக்கு முன்னாடி மண்டி போட்டு பாவ மன்னிப்பு கேட்கிற மாதிரி கேட்கிறாரு” கலா வாயை விட,
“உன் அண்ணனுக்கு போனை போட்டுட்டேன்.. வந்துட்டு இருக்காராம். நீ உன் மூட்டையை காட்டு” என்றார் தேவன்.
“ஹாங்” என்று அதிர்ந்துப் போனவர்,
“நான் அக்கா கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்” என்றார் உடனடியாக.
“நீ அவங்கள மட்டுமா தப்பா பேசுன.. கதிரவனையும் தானே.. கூடவே அந்த பெண்ணையும் சேர்த்து தானே பேசுன.. அதனால மன்னிப்பு கேட்கிறதா இருந்தா மூணு பேர் கிட்டயும் கேளு... இல்லன்னா இப்பவே கிளம்பு” என்று விட்டார் தேவன்.
கலாவுக்கு உள்ளுக்குள் அத்தனை எரிச்சல்.. ஆனால் கேட்டு தானே ஆகமுடியும். இத்தனை வருடங்கள் கழித்து வாழா வெட்டியாக போக முடியாதே பிறந்த வீட்டுக்கு. இந்த பெரிய வீட்டு மருமகள் என்கிற பெயரில் இருக்கும் மதிப்பும் மரியாதையும் ஒட்டு மொத்தமாக போய் விடுமே என்று பயந்துப் போனார்.
அதோடு பிறந்த வீட்டில் புகுந்த வீட்டை பத்தி அடிக்கும் பெருமைக்கு அளவேது. புகுந்த வீட்டை பற்றி டமாரம் அடித்து அவரின் அண்ணியை எவ்வளவு தூரம் வெறுப்பேற்ற முடியுமோ அந்த அளவுக்கு வெறுப்பேற்றி இருக்கிறார். இப்பொழுது அதை எல்லாம் விடுத்து வாழா வெட்டியாக போனால் தனக்கு என்ன மரியாதை கிடைக்கும்.
“கொஞ்சம் ஆட்டாமாடி ஆடுன.. வச்சானா ஆப்பு. அதுக்கு தான் ரொம்ப ஆடக் கூடாதுன்னு சொல்றது.. எதுக்கு ஆட்டுக்கு வாலை அளந்து வச்சு இருக்கானுங்க, உன்னை மாதிரி அரைகுறை எல்லாம் ரொம்பவும் ஆட்டம் போடாம இருக்கத்தான்” என்று அவரின் அண்ணி காரி முகத்திலே உமிழ மாட்டாரா என்ன..
அதை நினைக்கும் பொழுதே உள்ளுக்குள் பெரும் கலவாரம் சூழ்ந்தது. அதுக்கு பேசாம நான் இவங்க கிட்டயே மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்ற முடிவுக்கு வந்த சமயம் கதிரவனை பார்த்தார்.
கதிரவன் இன்னும் அதே தோரணையில் தான் அமர்ந்து இருந்தான். அவனுக்கு அருகில் பனியும் துளசியும் நின்று இருந்தார்கள் கண்ணீருடன்.
மங்கை ஸ்தம்பித்த நிலையை பார்த்த விசாலம், “இங்க இருந்து நகரு” என்று சொன்னவர் மகனின் கதவை அழுந்த சாற்றி விட்டு கூடத்தில் போய் அமர்ந்துக் கொண்டார். தாத்தா வெகு அமைதியுடன் இருந்துக் கொண்டார். யாரிடமும் ஒத்த வார்த்தை பேசவில்லை.
அவரின் இந்த அழுத்தம் மங்கையையும் கலாவையும் வெகுவாக பயம் காட்டியது. சிங்காரத்துக்கு கோவம் என்றால் கோவம் அப்படி ஒரு கோவம்.
“தன்னை விட வயதில் மிகவும் சின்னவன். ஆனால் அவன் இந்த வீட்டை அவன் விருப்பம் போல ஆட்டி படைக்கிறானே.. அப்போ இந்த வீட்டுல பொண்ணு எடுத்து மாப்பிள்ளையாகி இருக்கனே எனக்கு என்ன உரிமை இருக்கு.. மரியாதை இருக்கு. யார் எனக்கு எந்த மரியாதையை குடுத்தாங்க” என்று உள்ளுக்குள்ளே கொந்தளித்துக் கொண்டு இருந்தார்.
அதோடு தன் மனைவியும் மன்னிப்பு கேட்க வேண்டுமாமே.. வயதில் பெரியவள் நாலு வார்த்தை பேச தான் செய்வாள். ஆற்றாமைக்கு கொட்டி தீர்க்க தான் செய்வாள் என்று விடாமல் அதை பெரிது பண்ணி மன்னிப்பு கேட்க வைப்பது எல்லாம் சரியா மேலும் மேலும் அவரின் மனம் தன் ஆற்றாமையை கொட்டிக் கொண்டு இருந்தது.
கலா தயக்கத்துடன் கதிரவன் அருகே வந்து மன்னிப்பு கேட்க, அலட்டிக் கொள்ளவே இல்லை.
“நிலா கிட்டயும் மன்னிப்பு கேளுங்க” என்று அவளை வேறு கைக்காட்ட உள்ளுக்குள் அவமானத்தில் சுருண்டு விட்டார்.
“இல்ல அதெல்லாம் எதுவும் வேணாம்” என்று நிலா பதற,
“இருக்கட்டும் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்றவர், “இனி இப்படி பேச மாட்டேன். பேசுனதுக்கு என்னை மன்னிச்சிடு” என்று சொன்னவர் வயதில் சின்னவர்களிடம் கேட்ட மன்னிப்பில் அவமானம் தாங்க முடியாமல் தன் அறைக்கு ஓடிவிட்டார்.
கதிரவன் அமர்த்தலாக மங்கையை பார்த்தான். அவனது பார்வையின் பொருள் நீ மன்னிப்பு கேட்டு தான் ஆகனும் என்று இருந்தது.





