Notifications
Clear all

அத்தியாயம் 25

 
Admin
(@ramya-devi)
Member Admin

“இங்க என்ன நடக்குது?” கர்ஜனையுடன் வீட்டுக்கு உள்ளே நுழைந்தான் கதிரவன் கூடவே பனிநிலவும். அவளின் முகம் அழுததில் சிவந்து வீங்கி போய் இருந்தது.

இவ்வளவு சீக்கிரத்தில் கதிரவன் இப்படி வந்து நிற்பான் என்று தெரியாத எல்லோரும் ஆடிப்போய் விட்டார்கள்.

“இப்ப சந்தோசமா இருக்குமேடி உனக்கு..” என்று மகளிடம் எகிறினார் விசாலம்.

“எனக்கு என்ன சந்தோஷம்” மங்கை வெடுக்கென்று பேச,

“பின்ன ஒன்னு மண்ணா இருந்தா வீட்டுல வந்து கும்மி அடிச்கிட்டல்ல.. பாரு எப்பவும் எதுக்குமே வாய் திறந்து பேசாத காமாட்சியையே பேச வச்சுட்ட.. அவ உனக்கு என்ன குறை வச்சு இருக்கா  இதுவரை. அவளை பேசி பேசியே அடி வாங்க வச்கிட்டல்ல.. இப்ப உனக்கு நிம்மதியா இருக்குமே.. அவ பெத்த புள்ளையை நாலு பேருக்கு மத்தியில குறை சொல்லி, அவனின் நடத்தையை அசிங்கமா பேசி இருக்க.. அதுக்கு அவ ஒரு வார்த்தை சொன்னா உங்களால எல்லாம் பொறுக்க முடியல இல்ல..” என்று விசாலம் ஒரு பக்கம் பேச,

“ஆமாம உள்ளதை பேசுனா நான் இட்டுக் கட்டி பேசுறதா அர்த்தமா? இங்க யாரும் தேவையில்லாம பேசல.. அவன் அந்த பெண்ணை கூட்டிக்கிட்டு சுத்தவும் தானே பேசுனேன். அவன் அந்த பொண்ணை தள்ளி வச்சு பழகட்டுமே.. அதை தானே சொல்றேன்” என்று விடாமல் மங்கை அப்பொழுதும் பேச,

“ச்சீ நீயெல்லாம் என்ன ஜென்மமோடி.. உன்னை எல்லாம் திருத்த முடியாது..” ஆயாசமாக அமர்ந்துக் கொண்டார். அவருக்கு மனமே ஆறவில்லை.

தன் கணவரை பார்த்தார். தாத்தா நாற்காலியில் அமர்ந்து இருந்தார். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவரின் கண்கள் எல்லாம் சிவந்துப் போய் இருந்தது. அவர் வீட்டில் இருந்தால் ஒருவர் கூட வாய் திறக்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு சந்தை கடை போல ஆகி இருந்த வீட்டை பார்த்து அத்தனை ஆற்றாமை அவருக்கு வந்தது.

முகமெல்லாம் ஜிவு ஜிவு என்று இருந்தது.

அந்த நேரம் தான் உள்ளே நுழைந்தான் கதிரவன். வரும் பொழுதே அவனது முகம் அத்தனை ரெளத்திரத்தை பூசி இருந்தது..

“இங்க என்ன நடக்குது?” கேள்வி கத்தியின் கூர்மையுடன் வர, மங்கைக்கும் கலாவுக்கும் உடல் உதறியது. காமாட்சியிடம் காட்டிய வார்த்தையின் வீரியத்தை இவனிடம் காட்ட முடியாதே.. தங்களை ஆய்ந்து தள்ளி விடுவானே.. உள்ளுக்குள் பயந்து போய் நின்று இருந்தார்கள்.

“இவனுக்கு எப்படி தகவல் போனது..? இப்படி ஐயனார் சாமியாட்டாம் வந்து நிக்கிறானே.. இவனை எப்படி மலை இறக்க” மங்கை பெரிதும் கலவரத்துடன் இருந்தார்.

“பேசிக்கலாம் உள்ள வாப்பா” என்று அவனை அழைக்க,

யாரையும் சட்டை செய்யாமல் “அப்பா உங்களை தான் கேட்கிறேன்.. இங்க என்ன நடக்குது” என்று தன் தந்தையை பார்த்து கேட்க, துளசி வேகமாய் ஓடி வந்து அண்ணனை கட்டிக் கொண்டு அப்படி ஒரு அழுகை.

அப்பொழுது தான் அவனுக்கு எப்படி தகவல் போனது என்று அனைவருக்கும் புரிந்தது.

தன்னை கட்டிக் கொண்டு அழுத தங்கையை தன் தோளோடு பிடித்துக் கொண்டவன், ஒரு கையால் பனியை இறுக்கி பிடித்துக் கொண்டான்.

“ப்ளீஸ் விடுங்க நான் போறேன்.. என்னால இதுக்கு மேல இங்க இருக்க முடியாது” என்றவளை சிறிதும் கண்டுக் கொள்ளாமல் அவளின் கையை மேலும் இறுக்கிப் பிடித்தவன்,

“அழாத துளசி அது தான் வந்துட்டேன்ல” என்று தங்கையிடம் சொன்னவன், தன் கையில் இருந்து உருவிக் கொள்ள பார்த்த பனியை ஒரு முறை முறைத்தான்.

அவனது பார்வையில் இவளுக்கு உடல் தூக்கி வாரிப் போட விக்கித்து நின்றாள். தன் ஒரு பார்வைக்கு அடங்கி நின்றவளை திருப்தியாக பார்த்தவன், தன் பார்வையை மற்றவர்களிடம் திருப்பி அத்தனை பேரையும் பார்வையால் சுட்டு பொசுக்கி,

“உங்களை தான் கேட்கிறேன் ப்பா.. இங்க என்ன நடந்தது.. நீங்க எதுக்காக அம்மாவை அடிச்சீங்க?” குரலில் அவ்வளவு கோவத்தை அடக்கி வைத்து இருந்தான். அவனது பார்வையில் பேச்சுக்கு நிகரான வெப்பம் வெளிப்பட்டது.

தலைக்கு மேல் வளர்ந்த பிள்ளை கேள்வி கேட்கும் அளவுக்கு தன் நடத்தை போய் விட்டதே என்று கூனி குறுகிப் போனார். அந்த நேரம் தான் தேவன் உள்ளே நுழைந்தார்.

காமாட்சி ஜீப்பை விட்டு இறங்கி உள்ளே வரும் பொழுது இருந்த தேவன், மங்கை பேச ஆரம்பிக்கும் முன்பே போன் வந்து விட அவசரமாக வேலை என்பதால் கிளம்பி வெளியே சென்று இருந்தார் வெளியே. இப்பொழுது தான் வருகிறார்.

தன் அண்ணன் இப்படி மருகி நிற்பதை பார்த்த தேவன் யோசனையுடன் சுற்றி பார்க்க அத்தனை பேரும் ஒரு வித சுழலில் சிக்கி இருப்பதை பார்த்தவருக்கு என்னவோ போல தோன்ற,

“என்ன ஆச்சு ண்ணா..” என்று அண்ணனிடமே கேட்டார். அவர் வாயையே திறக்கவில்லை. அதுவும் கதிரவன் ரௌத்திரமாக இருந்த தோற்றம் கண்டு திகைத்துப் போனவர்,

“கதிரவனை எதுக்கு டென்ஷன் பண்ணி இருக்காங்க” என்று யோசித்தார். அதுவும் கூட இருந்த பெண்ணின் முகம் ஏகத்துக்கும் அழுகையில் சிவந்து வீங்கி இருப்பதை பார்த்து கலக்கமாக,

“உங்கக்கிட்ட தான் ப்பா கேட்கிறேன்.. எதுக்காக அம்மாவை அடிச்சீங்க. அடிக்கிற உரிமையை உங்களுக்கு யார் குடுத்தா?” என்று அவன் மேலும் கேள்வி கேட்க, விக்கித்துப் போனார் தேவன்.

“என்ன அண்ணியை அடிச்சீங்களா?” பொன்னனிடமே கேட்டார்.

“இவரு ஒருத்தர்.. இடையில வந்து காந்தி செத்துட்டாரான்னுக்கிட்டு” என்று முணகினார் கலா.

“எதுக்குண்ணா அண்ணியை அடிச்சீங்க?” அவரும் கேள்வி கேட்க, பொன்னன் இன்னும் நிலை குலைந்துப் போனார்.

“பதில் சொல்லுங்க.. என்ன காரணத்துக்காக அம்மாவை அடிச்சீங்க.. அவங்க மகனோட கேரக்டரை தப்பா பேசுனவங்களை எதிர்த்து கேள்வி கேட்டதுக்காகவா.. இல்லை உங்க தங்கச்சி மகளை மருமகளா ஆக்கிக்க மாட்டேன்னு சொன்னதுக்காகவா சொல்லுங்க ப்பா” கேள்வி மேல் கேட்டு அவரை நிலைக் குலைய வைத்தான்.

பொன்னன் தலையை நிமிர்த்தவே இல்லை. கலங்கிய கண்களுடன் நின்று இருந்தவரின் மீது கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் தன் ஒட்டு மொத்த ஆத்திரத்தையும் தந்தையிடம் காட்டினான்.

“இத்தனை பேர் இருந்தும் எங்க அம்மா அடி வாங்குனதை ஒருத்தரும் வந்து தடுக்கல இல்லையா? அப்போ உங்க மனசுல இருக்கிறது எல்லாம் இது தான். எதிர்த்து கேள்வி கேட்ட எங்க அம்மாவை அடிச்சு நொறுக்கணும் அதை தானே எதிர் பார்த்து இருந்தீங்க..” மற்றவரிடம் கேள்வி கேட்டவன், தந்தை புறம் திரும்பி,

“அவங்க எதிர்பார்ப்பை கொஞ்சமும் பிசகாம நிறைவேற்றி வச்சுட்டீங்க இல்லையா? ஏன்னா நீங்க எங்க அம்மாவுக்கு கணவன்றதை விட உங்க தங்கச்சிக்கு அண்ணனா இருக்க தான் ஆசை படுறீங்க இல்லையா..” கேட்டவன்,

“ரைட்.. இனி அப்படியே இருந்துக்கோங்க..” ஆற்றாமையுடன் பேசியவனை நிமிர்ந்து பார்த்த பொன்னனின் கண்கள் கலங்கி இருந்தது.

தந்தையை வெளுத்து வாங்கியவன் மங்கை புறம் நிதானமாக திரும்பினான்.

அவன் தன் புறம் திரும்பியதிலே வெடவெடத்துப் போனார் மங்கை.

இரு கால்களையும் அகண்டு ஊன்றி நின்றவன்,

“சொல்லுங்க அத்தை.. என்னவோ என் அம்மாக்கிட்ட சொன்னீங்களாம்.. இப்போ இங்க உங்க கண்ணு முன்னாடி நான் நிக்கிறேன்.. என்ன கேட்கணுமோ என் கிட்ட கேளுங்க.. என்ன சொல்லணுமோ என் கிட்ட சொல்லுங்க” என்று ஆலமரமாய் வேரூன்றி நின்றவனை கண்டு ஈரக்குழையே நடுங்கிப் போனது அவருக்கு.

“கதிரவா.. எதுக்கு இப்படி பயம் காட்டுற மாதிரி பேசுற?” சிங்காரம் மனைவிக்கு பரிந்துக் கொண்டு வர,

“நான் எங்க மாமா பயம் காட்டுறேன்.. நான் நிதானமா தான் அத்தைக்கிட்ட கேட்டுட்டு இருக்கேன். என் நடத்தையை பத்தி எதுக்கு என் முதுகுக்கு பின்னாடி பேசணும்.. இங்க அவங்க கண் முன்னாடி நிக்கிறேன்.. இப்ப சொல்லட்டும். என் நடத்தையை பற்றி.. நானும் தெருஞ்சுக்குவேன் இல்லையா என் நடத்தை எந்த மாதிரின்னு?” என்றவனின் நிதானத்தில் மங்கையோடு சேர்ந்து கலாவுக்கும் பீதியானது.

“என் கேரக்டரை பத்தி ரொம்ப தெளிவா அனலைஸ் பண்ணி வச்சு இருக்கீங்க. அதை அப்படியே காது குளிர கேட்கலாம்னு வந்தேன்.. சொல்லுங்க அத்தை.. நான் கேட்கிறேன். எனக்கு இப்போதைக்கு வேற வேலை எதுவும் இல்ல.. ப்ரீ பண்ணிட்டு வந்துட்டேன்..” என்றவன் எல்லோரும் நின்று இருக்க, இவன் மட்டும் ஒற்றை சோபாவில் கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்து விட்டான்.

ஆனால் பார்வை மொத்தமும் மங்கையிடம் தான். அவனது பார்வை துளைப்பிலே இவருக்கு சர்வாங்கமும் நடுங்கிப் போனது.

Loading spinner

Quote
Topic starter Posted : May 5, 2026 6:12 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top