“உங்களை எல்லாம் சொந்தமா நினைச்சதுக்கு ரொம்ப நல்லா கைமாறு செய்துட்டீங்க.. ரொம்ப நன்றி” சொல்லி விட்டு தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டார். அவருக்கு மனமே ஆறவில்லை.
தூய நெஞ்சம் கொண்ட மகன் மீது அனைவரும் சேர்ந்து சேற்றையும் சகதியையும் பூசி விட்டு விட்டார்களே என்று ஆற்றாமையோ ஆற்றாமை.
“ஒருவர் கூட என்ன ஏது என்று கேட்கவில்லையே.. அப்போ என் மகனை பத்தி எல்லோரும் அப்படி தானே நினைச்சு இருக்காங்க.. பெத்த அப்பா கூட பரிஞ்சுக்கிட்டு வரலையே.. ஏன் மாமியார் மாமனார் ஒருத்தர் கூட வரலையே..” என்றவருக்கு கண்களில் இருந்து அருவியாய் கொட்டியது கண்ணீர்.
திருவிழா தேர் போல மதிப்பும் மரியாதையுமா கம்பீரமாக இருந்தவனை நொடியில் சாய்த்து விட்டார்களே அவனின் நடத்தையை குற்றம் சொல்லி.
“இவர்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது.. அதது பிள்ளைங்க சின்ன வயசுலயே எவ்வளாவு கெட்டு ஒண்ணுத்துக்கும் ஆவாம குட்டி செவுரா போறாங்க.. ஆனா என் பிள்ளை சின்ன வயசுல இருந்தே யாருடைய தலையீடும் இல்லாமல், யாரும் வந்து புத்தி சொல்லாத அளவுக்கு தன்னை தானே செதுக்கிக் கொண்டு இவ்வளவு தூரம் வளர்ந்தது நிற்கிறான். ஒரே நொடியில் அவனை இப்படி கீழ சரிச்சுட்டாங்களே” என்று மனதுக்குள் புழுங்கிப் போனார்.
அவரின் மன வேதனையை தனியாக கொட்டி அழ, வெளியே பொன்னனிடம் அவ்வளவு சண்டை பிடித்தார் மங்கை.
“நீ பேசுனதும் தவறு தான் மங்கை” அவர் சொல்லி விட,
“நான் பேசுனதுல நீ என்னண்ணா தப்பை கண்டு பிடிச்ச.. கண்ணை மூடிக்கிட்டு உன் பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணாத.. கொஞ்ச நேரத்துல என்ன ஆட்டம் ஆடிட்டு போயிட்டாங்க பார்த்தியா.. என் பொண்ணை உன் வீட்டுக்கு மருமகளா ஆக்கிக்க மாட்டாங்களாமா.. அவ்வளவு தைரியம் யார் கொடுத்தது..” ஆங்காரமாய் அவர் கேள்வி மேல் கேள்வி கேட்க, கூடவே சிங்காரமும் சேர்ந்துக் கொள்ள, பொன்னனுக்கு பெரும் தலைவலியாய் போனது.
“மங்கை நீ கொஞ்சம் பொறுமையா தான் போயேன்” என்று விசாலம் சொல்ல, மங்கைக்கு இன்னும் சலங்கை கட்டிய குறையாக போக, ஒரே ஆட்டமாக ஆடிவிட்டார்.
“என் பொண்ணுக்கு ஆனா நிலைமை இதே இது நாளைக்கு துளசிக்கு ஆகாதா.. பேசுன இடத்துல இருந்து பொண்ணு வேணான்னு சொல்ற நிலைமை வராதா..?” மங்கை வார்த்தையை விட,
“மங்கை” என்று அந்த வீடே அதிர கர்ஜித்தார் பொன்னன்.
“இப்ப உன் பொண்ணுக்கு வெறும் வாய் வார்த்தியா சொன்னதை கூட தாங்க முடியாம இப்படி வரிஞ்சி கட்டிக்கிட்டு வர்றியே.. இதே இது இத்தனை வருடமா என் பொண்ணு பிறந்ததுல இருந்து இந்த வீட்டுக்கு மருமகன்னு சொல்லி சொல்லி வளர்த்ததை இல்லாம செஞ்சுட்டாங்களே அண்ணி. அதை என்னன்னு கேட்க மாட்டியா?”
“உனக்குன்னா ஒரு நியாயம் எனக்குன்னா ஒரு நியாயமா.. நெருப்புன்னா சுட்டுடாது ண்ணா” என்று டைலாக் வேறு சொல்ல, அத்தனையையும் உள்ளுக்குள் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த துளசிக்கு கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிவிட்டது.
வேகமாய் தன் அண்ணனுக்கு போனை போட்டு எல்லாவற்றையும் சொல்ல, அந்த பக்கம் டெப்போ அலுவலகத்தில் அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்த பனிக்கு நெஞ்செல்லாம் அப்படி ஒரு வலி.
“இதுக்கு தான் சொன்னேன் நான் வரலன்னு.. கேட்டாரா இந்த மனுசன்.. போச்சு இப்போ என்னால சித்தி கல்யாணம் நிக்க போகுது” என்று கண்ணீருடன் புலம்பிக் கொண்டு இருந்தவளை பார்த்துக் கொண்டே உள்ள வந்தான் கதிரவன்.
பேருந்தை பார்வை இட சென்று இருந்தான். போன் வந்தா அட்டென் பண்ணு பத்து நிமிடத்துல வந்திடுவேன் என்று விட்டு போனான். அதே போல வந்தும் விட்டான். ஆனால் வீட்டில் நடந்த குட்டி கலாட்டாவை எல்லாம் அண்ணனிடம் சொல்கிறேன் என்றா பெயரில் பனியிடம் சொல்லி இருந்தாள் துளசி.
போனை கையில் வைத்து அழுதுக் கொண்டு இருந்த பனியை புருவம் சுருக்கிப் பார்த்தவன் அவளை சட்டை செய்யாமல் போனை ஆராய, கடைசி அழைப்பு துளசியிடம் இருந்து வந்து இருக்க மீண்டும் அவளுக்கு அழைத்தான்.
எடுத்த உடனே அவளின் விசும்பல் சத்தம் கேட்க,
“துளசி” அதட்டலுடன் அழைத்தான்.
“அண்ணா கிளம்பி முதல்ல வீட்டுக்கு வாண்ணா அப்பா அம்மாவை அடிச்சுட்டாங்க” என்று அழுதுக் கொண்டே சொல்ல,
“வாட்” என்று எழுந்து நின்று விட்டான்.
“ஆம்மாண்ணா..” என்று அவள் இன்னும் விசும்ப,
“அடிக்கிற அளவுக்கு என்ன நடந்தது?” கேட்டுக் கொண்டே ஜீப் சாவியை கையில் எடுத்துக் கொண்டவன், ஒரு கையால் பனியை பிடித்து எழுப்பி அவளையும் கூட்டிக் கொண்டு நடக்க,
“நான் வரல” என்று தலையை அசைத்தாள் கண்ணீருடன். அவன் திரும்பி அவளை ஒரு முறை முறைக்க பலியாடு போல அவனுடன் போக வேண்டிய நிலை.
“என்னண்ணா மறுபடியும் கேட்கிற?” என்றம் துளசி ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் சொல்ல, கேட்டுக் கொண்டு இருந்தவனுக்கு சினம் நொடியில் பெருகியது.
அவனது கையில் ஜீப் பறந்தது.
தன் கூடப் பிறந்த தங்கையே தன் மகளின் வாழ்க்கையை அச்சாநியமாக பேசி வைத்ததை தாங்க முடியாமல் “காமாட்சி கதவை திற” என்று பொன்னன் மனைவிடம் எகிற,
அவரும் வெளியே நடந்தது எதுவும் தெரியாமல் கதவை திறந்த அடுத்த நொடி பொன்னன் அவரை ஓங்கி ஒரு அரை விட்டார்.
அதில் விக்கித்துப் போன காமாட்சி, கன்னத்தை ஒரு கையால் பற்றிக் கொண்டு அடித்த கணவனை மலங்க மலங்க விழித்தார்.
“என்னை எதுக்கு அடிச்சீங்க” என்று கூட அவரால் கேட்க முடியவில்லை. இத்தனை வருடம் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு பொழுது கூட பொன்னன் அவரை முறைத்துக் கூட பார்த்தது இல்லை. அப்படி இருக்க முதல் முறையாக அடித்து இருக்கவும் அவரால் இதை எப்படி எடுத்துக் கொள்ள என்று கூட தெரியவில்லை. மலங்க மலங்க விழித்து நின்றார்.
மனைவி அப்படி விழித்து நிற்பதை பார்த்த பொன்னனுக்கு ஐயோ.. என்று வந்தது. ஆனால் மங்கை பேசிய பேச்சில் கோவம் சுல்லேன்று வந்து இருக்க, அதை அப்படியே காமாட்சியிடம் காட்டி விட்டார். ஒரு பக்க கன்னம் புஸ்சென்று வீங்க ஆரம்பிக்க,
“மாமா என்ன காரியம் பண்ணி இருக்கீங்க? அத்தையை எதுக்கு அடிச்சீங்க” சேகரன் வந்து தடுக்க பார்ப்பதற்குள் மனைவியை இன்னொரு அறை அறைந்து இருந்தார் பொன்னன்.
“நீங்க தள்ளுங்க மாப்பிள்ளை.. எல்லாம் இவளால தான். நீங்களே பார்த்தீங்க தானே மங்கை என்ன பேச்சு பேச்சுனான்னு..”
“அதுக்காக அத்தையை அடிப்பீங்களா? இதெல்லாம் கொஞ்சமும் சரியில்ல மாமா.. கதிரவனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? ஏன் மாமா அவசரப்பட்டீங்க.. அத்தை மேல என்ன தவறு இருக்கு. கதிரவனின் நடத்தையை தப்பா பேசுனதுனால தானே அதை பொறுக்க முடியாம பேசுனாங்க.. இந்த இடத்துல நீங்களும் உங்க தங்கையை பேசி இருக்கணும். ஆனா நீங்க பேசல.. பேசுன அத்தையையும் அடிச்சுட்டீங்க..” சேகரன் சொல்ல சொல்ல பொன்னன் தலை குனிந்தார்.
மங்கையை அடக்க அவரால் முடியவில்லை. மேற்கொண்டு மேற்கொண்டு அவர் பேசிக் கொண்டே போக, அவரை அடக்க தன் மனைவி காமாட்சியை அடித்து விட்டார். இப்பொழுது மகளின் கணவன் பேச பேச உள்ளுக்குள் பெரும் குற்ற உணர்வு சூழ்ந்தது.
மனைவியை ஏறெடுத்துக் கூட பார்க்க முடியவில்லை. காமாட்சி எந்த தவறும் செய்யவில்லை என்பது அவருக்கு தெரியும் தான். ஆனால் மங்கையை அடக்க வேறு வழியில்லையே.. குற்ற உணர்வில் குறுகுறுத்துக் கொண்டு இருந்தவரிடம்,
“இங்க என்ன நடக்குது?” கர்ஜனையுடன் வீட்டுக்கு உள்ளே நுழைந்தான் கதிரவன் கூடவே பனிநிலவும். அவளின் முகம் அழுததில் சிவந்து வீங்கி போய் இருந்தது.





