Notifications
Clear all

அத்தியாயம் 17

 
Admin
(@ramya-devi)
Member Admin

மது பிரியனை போல விடாமல் மூக்கு முட்ட குடித்தவன் வேரலை எண்ணி எண்ணி குமைந்துக் கொண்டு இருந்தான். அவளுக்கு போன் போட்டான்.

ரிங் போய் கொண்டே இருந்தது.

யாரும் எடுக்கவே இல்லை. அதில் இன்னும் அதிக கடுப்பானவன் விடாமல் போதையில் போன் அடித்த வண்ணமாகவே இருந்தான் அவளுக்கு.

அவள் அப்பொழுது தான் குளித்து தூங்கலாம் என்று வந்தாள். வந்தவளை அவளின் போன் அழைக்க எடுத்து காதில் வைத்தாள்.

அடுத்த நொடி ஊசி பட்டாசாய் வெடித்தான் கங்குவன்.

“நீ எப்படிடி என்னை கார்னெற் பண்ணலாம்? உனக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது.. கிள்ளு கீரைன்னு நினைச்சியா? ஆலமரம்டி.. சாதாரணமா என்னை யாராலையும் நெருங்க முடியாது தெரியுமா? கங்குவன் ன்னா எப்படின்னு வெளில கேட்டுப் பாரு.. சிங்கம் மாதிரி இருப்பேன்டி. என்னை போய் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளி விட்டுட்டுல்ல.. என் மகனையே எனக்கு எதிரா திருப்புற இல்ல” என்று அவன் கத்த, காதை விட்டு தள்ளி வைத்துக் கொண்டாள் போனை.

“ப்பா என்னா சத்தம்.. இதுக்கு இவர் போன் பண்ணாம அங்க இருந்த வாக்கிலே பேசி இருக்கலாம். நேர்ல பேசுன சவுண்ட் அப்படியே இருக்கும்” முணகிக் கொண்டாள்.

“ஏய் லைன்ல இருக்கியாடி?”

“ம்ம் இருக்கேன்” என்றாள். அவன் சொல்லுக்கு ஏன் மறுமொழி பேசுகிறோம் என்று தெரியாமலே இவள் பதில் கொடுத்தாள்.

“தண்ணி போட்டு இருக்கீங்களா?”

“உனக்கு எதுக்கு தேவை இல்லாத ஆணி”

“இல்ல மூக்கு முட்ட இப்படி தண்ணி போட்டுட்டு வந்து ஒரு பொண்ணு கிட்ட பேசுறீங்களே.. அதுக்கு தான் கேட்டேன்” என்றாள்.

“ஏன் தண்ணி போட்டா இந்த மகாராணி கிட்ட யாரும் பேசக்கூடதோ..” போனிலே முறைத்தவன்,

“நான் அப்படி தான்டி பேசுவேன்.. நீ கேட்டு தான் ஆகணும். நான் எந்த நிலையில் இருந்து பேசுனாலும் நீ கேட்கணும்” என்று ஆடர் போட்டான்.

“எனக்கு என்ன தலை எழுத்தாம்” என்றாள்.

“நீ தானே என்னை சீண்டி விட்டுக்கிட்டே இருக்க.. அப்ப என் குமுறலை நீ தான் கேட்டு தான் ஆகணும்” முடிவாக சொன்னவன்,

“ஆங் எங்க விட்டேன்...” என்றவன் மீண்டும் ஆரம்பித்தான்.

“மிஸ்டர் கங்குவன்.. எப்படி வாழ்ந்தான் தெரியுமா? எப்படி வாழ்றவன் தெரியுமா? தெரியுமாடி?” அதட்டி உருட்டினான் அவளை.

அவள் மௌனமாக இருந்தாள்.

“சொல்லுடி பதில் சொல்லு” அதட்டினான்.

“எனக்கு எதுவும் தெரியாது” என்றாள் ஆர்ப்பாட்டம் இல்லாத குரலில். உண்மைக்கும் அவனை பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரியாது தானே..

அதை உணர்ந்தானா இல்லையா என்று கூட தெரியவில்லை.

“என்னை பத்தி எதுவுமே தெரியாம எப்படிடி நீ என்னை பழி வாங்கலாம்”

“பழிவாங்க உங்களை பத்தி தெரிஞ்சுக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. நீங்க எனக்கு செய்த அவமானம் ஒன்னு போதும்” என்றாள்.

“என்ன பெருசா பண்ணிட்டேன் உன்னை. சொல்லுடி அப்படி என்ன உனக்கு அவமானத்தை குடுத்தேன்” காய்ந்தான்.

“என்னை நீல்டவுன் போட சொன்னது தப்பு இல்லையா?”

“என்ன புடலங்கா நீல்டவுன்” கொதித்தவன்,

“ஏன்டி ஒரு கரஸ்பாண்டன்ட் ரூமை நாக் பண்ணிட்டு வரணும்ன்ற பேசிக் மேனர்ஸ் கூட இல்லாம உள்ள வந்த நீ பெரிய புடுங்கியா?”

“ச்சீ கெட்ட வார்த்தை பேசுறீங்க”

“புடுங்குறது கெட்ட வார்த்தையா?”

“என்னை பொறுத்தவரை அது கெட்ட வார்த்தை தான்” அழுத்தமாக சொன்னாள்.

“ப்ச் போடி.. நான் எது பண்ணாலும் உனக்கு தப்பா தான் தெரியுது”

“நீங்க தப்பா செஞ்சா தப்பா தான் தெரியும் மிஸ்டர் கங்குவன்” இடுப்பு வலி எடுத்தது அவளுக்கு. காலையில் இருந்து நிகழ்ச்சியில் பிசியாக இருந்ததில் இடுப்பு வலியோடு கால் வலியும் வந்தது.

எனவே படுக்கையில் போய் படுத்து விட்டாள். ஒன்றும் முடியவில்லை அவளுக்கு

“என்னடி தப்பா செஞ்சேன்.. ஒற்றை ஆளா இருந்து என் பிள்ளையை வளர்த்து இருக்கேன். யார்க்கிட்டையும் கையேந்தி என் பிள்ளையை வளர்க்க சொல்லி கெஞ்சல.. திடமா என் ஏமாற்றங்களை எல்லாம் மறைச்சுக்கிட்டு இந்த சமுகத்துக்கு முன்னாடி தலை நிமிர்ந்து நிக்கிறேன். என் பிள்ளையையும் அப்படி தான் வளர்க்கிறேன். அவனும் நான் ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குறேன்னு போக போக புரிஞ்சுக்குவான்” என்றான்.

அந்த பக்கம் எந்த சப்தமும் வராமல் போக,

“கேக்குறியாடி” காட்டமான குரல் வந்தது.

“ம்ம்ம் கேக்குறேன்” என்றாள்.

“எங்க ரெண்டு பேருக்குள்ள நீ வராத” என்றான்.

“அது முடியாது” என்றாள் பட்டென்று.

“உன்னை கொன்னுடுவேன்டி”

“கொன்னுக்கோங்க. நோ ப்ராப்ளம். பட் அவன் கிட்ட பேசாம என்னால இருக்க முடியாது”

“என்னவோ நீ தான் அவனை வலிக்க பெத்தவ மாதிரி சீன போடுற..”

“பெத்தா தான் பிள்ளையா?” என கேட்டவள்,

“அன்பு காட்ட பத்து மாசம் சுமந்து பெக்கனும்னு எந்த அவசியமும் இல்ல மிஸ்டர் கங்குவன்” என்றாள்.

“மண்ணாங்கட்டி.. அவனை பத்து மாசம் தூக்கி சுமந்தவளே இவனை குப்பையில வீசிட்டு போயிட்டாடி. நீயெல்லாம் எம்மாத்திரம்” போதை என்றாலும் மிக தெளிவாக அவளிடம் எல்லாவற்றையும் சொன்னான்.

“வாட்?” இவள் அதிர்ந்து படுக்கையில் விட்டு எழுந்து விட்டாள்.

“என்ன வாத்து.. இந்த ஷாக்குக்கு எல்லாம் இங்க வேலையே இல்ல.. பிள்ளை மேல கொஞ்சமும் பாசம் இல்லாமல் என்கிட்ட டைவேர்ஸ் கேட்டு ஜீவனாம்சமா பல கோடிகளை வாங்கிட்டு பெத்தவ ஓடிப் போயிட்டா.. அப்போ இருந்து இவனும் நானும் மட்டும் தான். எனக்கு அவன் துணை. அவனுக்கு நான் துணை. இது தான் எங்க வாழ்க்கை” என்றான்.

“ஆனா இதுல நீ நுழையப் பார்க்குற.. எனக்கு உன்னை கண்டாலே ஆக மாட்டிக்கிது.. உன்னை பார்த்தாலே எரிச்சலா வருது.. உன் மூஞ்சி மேலையே நாலு குத்து குத்தனும் போல வெறியா வருது.. பெட்டர் நீ எங்க ரெண்டு பேருக்குள்ள வராம இருந்தா உனக்கு நல்லது இல்லன்னா உன் பாடு தான் ரொம்ப கஷ்ட்டம்” என்றான் எச்சரிக்கை குரலில்.

அவன் சொல்லிய சொல்லில் வேரலின் மனம் கனத்துப் போனது. ஆனா அவளுக்கு அவனின் மகன் மீது ஏன் அன்பு சுரக்கிறது என்றே புரியவில்லை. காரணமின்றி அந்த பிள்ளை மீது உயிரை வைக்கிறாள்.

அதை பார்த்து தான் இவனுக்கு காண்டாகிறது. இதில் அவனை எதிர்த்துப் பேசி அவனுக்கு கொம்பு சீவி விட்டது போல ஆகிறது. அவனும் இவளிடம் வந்து முட்டுகிறான்.

இருவரின் வாழ்க்கையும் எதை நோக்கி போகிறது என்றே தெரியவில்லை. ஆனால் இருவருக்கும் இடையே பிள்ளை பாலமாகப் போகிறான் என்பது மட்டும் உறுதி.

Loading spinner

Quote
Topic starter Posted : September 9, 2026 4:38 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top